Last Updated : 30 Sep, 2016 09:38 AM

 

Published : 30 Sep 2016 09:38 AM
Last Updated : 30 Sep 2016 09:38 AM

ஐயனார் குதிரையும் அழகுணர்ச்சியும்

நல்ல கலைப் படைப்புகள் தங்களுக்கு வேண்டிய ரசிகர்களைத் தானே உருவாக்கும்



யதார்த்தத்தின் மீது நமக்கு வந்த மோகம் கெடுத்ததுபோல் வேறெதுவும் நமது ரசனையைக் கெடுத்திருக்க முடியாது. இந்த ரசனைக் கேட்டுக்கு ஐயனார் கோயிலின் அண்மைக் காலத்துக் குதிரைக்கு இணையாக வேறொன்றை அடையாளம் காணவும் முடியாது. சிவன் கோயில் நந்தி அசல் மாடாகப் படுத்திருக்க வேண்டும். தெய்வங்களெல்லாம் ஆணையும் பெண்ணையும் எதிரே பார்ப்பதுபோலவே இருக்க வேண்டும். இப்படியாக, யதார்த்தப் பித்து எங்கெங்கோ ஊடுருவி, எதையெதையோ ஆக்கிரமித்துக்கொண்டது.

நிஜ உலகின் சள்ளை

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஐயனார் கோயிலைப் பார்த்திருக்கிறேன். மனிதர்கள் கை பட்டு ஒரு சுள்ளியும் ஒடியாத காடு. தானே வளர்ந்து, நெருங்கி முறுக்கிக் கிடந்த மரங்களும் கொடிகளும். வண்டிச்சோடு அகலத்துக்கு ஒதுக்கிவிட்ட பாதை நீண்டு நீண்டு, கோயில் வாசலில் முட்டி நிற்கும். கோயிலுக்குப் பின்னால் குளமோ குட்டையோ என்று சொல்லின் துல்லியத்தை மீறிய நீர்நிலை. பாதையின் இடத்திலும் வலத்திலும் பத்திபிடித்து நிறுத்தியிருந்த நூறு நூறு மண் குதிரைகள். காட்டுக்குள்ளிருந்து முண்டி நெருக்கிக்கொண்டு எட்டிப் பார்த்தன. விறைத்த காதுகளோடு, நிமிர்ந்த கழுத்தை வளைத்து நெஞ்சடியைப் பார்த்தவாறு, பல் தெரியக் கனைத்துக்கொண்டு நின்றன. காலத்தில் உறைந்துபோன ஓசைபோல கற்பனையாக மட்டுமே காதுக்கு எட்டும் கனைப்பு. அரவமில்லாமல் மொசுமொசுவென்று ரகசியம் பரிமாறும் அவற்றின் கண்களைக் கடந்து நடக்க, நடக்க ஒரு அச்சம் நம்மைக் கவ்விக்கொள்ளும். ஆறு மாதங்களுக்கு முன்பு அதே கோயிலுக்குச் சென்றிருந்தேன். கம்பி வைத்துக் கட்டிய கால்களோடு கான்கிரீட் குதிரைகளை நிறுத்தியிருந்தார்கள். நிஜமான குதிரையின் பரிமாணங்களோடு, கால் குளம்பும் புடைத்துக் கிளைத்த நரம்புமாக, வெண் புரவியின் வண்ணத்தோடு நின்றன. அசலான குதிரையாக இருக்க முயல்வது சகித்துக்கொள்ள முடியாத பசப்பாகப் பட்டது. ஐயனாரின் வேற்று உலகத்தில் நிஜ உலகின் சள்ளையாக யதார்த்தக் குதிரைகள் புகுந்திருந்தன.

குதிரை அப்படியிருந்தால் உங்களுக்கு ஏன் ஆகாமல் போகிறது என்று கேட்கலாம். அசல் என்று நம்பும்படி கண்கட்டி வித்தை செய்வது கலை ஆகாது. இந்த யதார்த்த மையல் எல்லாக் கலைகளுக்குமே கோமாளித்தனமான லட்சியம் ஒன்றைக் கற்பித்து வைத்துள்ளது. நிஜத்தின் நிழலே படாமல் உன்னதத்தைத் தொட்டுவிடுகிற கலைகளை ரசிக்க முடியாமல் செய்கிறது.

கும்பகோணம் குருசாமி

அழுகையும் சோகமும் அசலாக இருந்தால் ரசிக்க முடியுமா? அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் குருசாமி என்று ஒருவர். இட்டுக்கட்டிப் பெருங்கூட்டங்கள் ரசிக்கும்படியான பாட்டுகளைப் பாடுவார். ‘கும்பகோணம் குருசாமி கையில் டேப்புடன் பாடும் மோட்டார் ஒப்பாரி’என்று அச்சிட்ட புத்தகங்கள் குஜிலி இலக்கியம்போல் விற்றன. அவருக்கு அசலைக் கலையாக்கும் ரசவாதம் தெரிந்திருந்தது. ‘கணவனே கண்கண்ட தெய்வம்’என்று ஒரு திரைப்படம். பார்க்கச் செல்லும் பெண்கள் படம் முடிந்ததும் அரங்கிலிருந்து அழுதுகொண்டே வருவார்கள். மறுநாளே அந்தப் படத்தை மீண்டும் பார்ப்பார்கள். கதையில் அசலாக இருந்தவையெல்லாம் சோக ரசமாக மாறியிருந்ததுதான் அந்த ஈர்ப்புக்குக் காரணம். பல்லவர் காலத்துத் தூண்களின் சிம்ம பீடத்தையும், காளியம்மனின் இன்றைய சிம்மங்களையும் ஒன்றாகப் பார்த்தால் இந்த ரசவாதம் புரியும். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சிம்மங்கள் பல்லவர் கால சிம்மங்களாகவே செய்யப்பட்டன. யதார்த்தம் வந்து அவற்றைப் பாடப் புத்தகத்தின் சொல் விளக்கப் படங்கள் போல மாற்றியது.

இல்லாத மானைப் பார்த்தோம்

கருணையினால் தெய்வங்கள் மனிதச் சாயலில் சிலைகளாகின்றன என்பார்கள். அவற்றை அசல் மனிதர்களாக அலங்கரித்து நிஜ உலகின் அங்கமாக்குகிறோம். மனிதர்களின் சுயமோகத்துக்கு வேறு சாட்சியமே வேண்டாம்! வேதாரண்யம் துர்க்கைக்கு மஞ்சள் காப்போ சந்தனக் காப்போ செய்திருந்ததைப் பார்த்தேன். என்னென்னவோ செய்து துர்க்கையை ஒரு பெண்ணாகவே மாற்றியிருந்தார்கள். யதார்த்த மையல் ஒரு அற்புதமான கற்சிலையை மெழுகிப் பூசி மறைத்திருந்தது. கணப்பொழுது நிகழ்வுக்குள் முழுக் கதையைப் புகட்டியிருப்பது வழுவூர் கஜசம்காரமூர்த்தியின் சிலை. எள்ளளவு யதார்த்தமும் இல்லாததுதான் அதன் புகழுக்குக் காரணம். எப்போதோ தில்லைவிளாகம் ராமர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். ராமர் சிலையின் அழகை விளக்கிய பட்டர், காலில் நரம்பு தெரிவதைப் பாருங்கள் என்றார். உலகப் புகழ்பெற்ற சிலைகளையும் காரணமல்லாத காரணத்துக்காக ரசிக்கிறோம்.

சிறுவனாக இருந்தபோது கிராமத்தில் ராம நாடகம் பார்த்தேன். மாரீசன் மாய மானாக வரும் காட்சி. பார்வையாளர் பக்கம் சீதை கையை நீட்டி, “அதோ மான்” என்றார். நமக்குப் பின்னால்தான் மான் இருக்கிறதோ என்று திரும்பினேன். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர், “ நாடகத்தில் வருகிற மான் நிஜமா வராதுடா” என்று தலையில் குட்டினார். யதார்த்தப் பித்து இப்போது எல்லாவற்றையும் நிஜப்படுத்திக் கேட்கும் அறியாக் குழந்தைகளாக்கிவிட்டது நம்மை.

பிறந்த மண்ணுக்குப் பொருந்துவது

கிடைக்கும் பொருளில் நினைக்கும் சிலைகளைப் படைக்க முடியாது. தான் ஆன மண்ணுக்கு உகந்த உருவம் ஐயனார் குதிரைக்கு. இந்தப் பொருத்தத்தைப் பார்த்துப் பார்த்து ரசிக்கலாம். சுட்ட மண் குதிரைகள் வண்ணம் வைத்து, கண் திறந்து, வாரை கட்டி, வேளார் வீட்டிலிருந்து தாரை தப்பட்டையோடு கோயிலுக்குப் போகும். காலில் சிலம்பும், கையில் அரிவாள் சுக்குமத்தடியோடும், முன்னடியானாகவே ஊர்வலத்துக்கு முன்னே ஒருவர். பத்து இருபது குதிரைகள் புறப்படும். தன்னை அழகென்றே அறியாமல் சிலைகளோடு ஒட்டிக்கொள்ளும் அழகு! யதார்த்தத்தையே இலக்காகக் கொண்டவற்றோடு இவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள். சிவபுரம் நடராஜர், பத்தூர் நடராஜருக்கெல்லாம் சற்றும் குறைந்தவையல்ல இந்த மண் குதிரைகள்!

நமது கலை மரபு யதார்த்தத்தின் எதிர்முனை. யதார்த்தத்தைத் தவிர வேறு எதற்கும் பழகாத கண்கள் எப்போதுமே காண இயலாத அழகு இந்த மரபில் எத்தனை எத்தனையோ! கடவுள் நம்பிக்கை, நம்பிக்கையின்மை போன்றவற்றைத் தாண்டி இது ஒரு கலை மரபு. ஐயனார் குதிரைகள் அழிந்துபோவது ஒரு அடர்வான கலை மரபு இற்றுப்போவதன் அடையாளம்.

திரைப்படங்களில், பேனா முனையின் கீறலாகத் தொட்டுக் காட்டுவதை கலப்பை உழுத சாலாகக் கோலிவிடுகிறார்கள். யதார்த்தமான திரைப்படங்களைவிட நாடகத்தனமானவை என்று நாம் ஒதுக்கியவையே மேல் என்று தோன்றும். இயற்கையான நடிப்பு என்பது யதார்த்தத்தின் சுத்தமான பித்தலாட்டம். கல்விக்கூடங்களில் இலக்கியங்கள் பலவற்றைச் சொல்லிக்கொடுத்தாலும் ரசனையை வளர்த்ததற்கான அடையாளமே இல்லை. நல்ல கலைப் படைப்புகள் தங்களுக்கு வேண்டிய ரசிகர்களைத் தானே உருவாக்கும் என்பார்கள். ஐயனார் கோயில் மண் குதிரைகள் மட்டும் தோற்றுப்போகுமா?

- தங்க. ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர், ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’ நூலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார், தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x