Published : 29 Sep 2016 10:22 AM
Last Updated : 29 Sep 2016 10:22 AM
அடிக்கடி பார்த்து, பேசிக் கொள்ள வில்லை என்றாலும், நமக்கு மிகவும் வேண்டிய ஒருவருக்கு உடல்நலக் குறைவு என்றால் எவ்வளவு கவலைப்படுவோம்...?
உலகின் மிகப் பெரிய பெட்ரோலியப் பொருள் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா, பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது என்று அறிகிறபோது, ஏறத்தாழ அத்தகைய மனநிலைதான் இந்தியர்கள் அனைவருக்கும்.
என்னதான் `அமெரிக்கா.. அமெரிக்கா' என்று கூக்குரலிட்டாலும், இந்தியாவில் உள்ள திறன்சாரா அல்லது முழு அளவு திறன்சாரா (Unskilled or semi-skilled) பணியாளர்களுக்கு, அரேபிய நாடுகள்தாம் வேலைவாய்ப்புக்கான நம்பிக்கை ரேகைகள். அதனால்தான், அரேபிய நாடுகளில் முக்கிய இடம் வகிக்கும் சவுதி அரேபியாவில் பொருளாதார நெருக்கடி எனக் கேள்விப்படும்போது, மனம் துணுக்குறுகிறது.
இரு நாட்களுக்கு முன்பு சவுதி அரேபிய அரசு, தனது ஊழியர்கள், அலுவலர்களின் மாத ஊதியத்தை தடாலடியாக 20% குறைத்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், கச்சா எண்ணெய் விலை பாதிக்கும் கீழே குறைந்ததால், ‘பட்ஜெட்'டில் 100 பில்லியன் டாலர் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. வளம் கொழிக்கும் நாடாக நாம் அறிந்த சவுதியிலா பற்றாக்குறை...?
அமைச்சர்களின் சம்பளம் தொடங்கி, உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் படிகள் (அலவன்ஸ்) வரை, அனைத்தும் குறைப்பு நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கிறது. சவுதி அரேபியாவில் உள்ள பணியாளர்களில் மூன்றில் இரண்டு பேர், அரசு, பொதுத் துறைப் பணியாளர்கள்தாம். அரசின் மொத்த செலவில், இவர்களின் சம்பளம், படிகள் மட்டுமே, ஏறத்தாழ பாதி அளவுக்கு வந்து விடுகிறது. செலவுகளைக் குறைத்தே ஆக வேண்டிய கட்டாயம், நெருக்கடிக்கு தள்ளப்பட்டு, வேறு வழியின்றி சம்பளக் குறைப்பு நடவடிக்கையில் இறங்கி விட்டது சவுதி அரேபியா.
நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்தும் விதமாக, ‘தொலைநோக்கு 2030' என்கிற மிகப் பெரிய திட்டத்தை,சில நாட்களுக்கு முன்பு முன் வைத்து இருந்தது சவுதி அரசு.
ஏப்ரல் மாதத்திலேயே, சவுதி இளவரசர் (பாதுகாப்பு அமைச்சர்) முகமது பின் சல்மான், செலவுகளைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளில் முழு வீச்சில் இறங்கப் போவதாகத் தெரிவித்து இருந்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சம்பளக் குறைப்பு நடவடிக்கைகள்.
உயர் அதிகாரிகளின் ‘போனஸ்' ரத்து, ஆண்டு விடுமுறை காலத்துக்கு 30 நாள் உச்சவரம்பு.... என நடவடிக்கைப் பட்டியல் நீள்கிறது. ஆண்டுதோறும் மூன்று லட்சம் இளைஞர்கள் வேலை வேண்டி சந்தைக்கு வருகிற நிலையில், இன்னும் பல கடுமையான நடவடிக்கைகள் மூலமே அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக்க முடியும் என்று நம்புகிறது சவுதி அரேபியா.
அரசின் மொத்த வருமானத்தில் 70%-க்கும் மேல், கச்சா எண்ணெய் மூலமே கிடைக்கிறது. இந்த நிலையில், எண்ணெய் விலையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சரிவு, மிக மோசமாக ‘பட்ஜெட்'டைப் பதம் பார்க்கிறது. இதிலிருந்து மீள்வதற்காக, பட்ஜெட் தொகையில் 40% வரை மிச்சம் பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது மட்டுமல்ல, அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான ‘அரம்கோ'வின் பங்குகளை விற்பது என்றும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தனக்கு வேண்டிய அளவு, முதலீட்டு செலவுகளுக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டிக் கொள்ள முடிவு செய்து இருக்கிறது.
ஆமாம்.... எதற்காக இத்தனை பெரிய முதலீட்டுத் தொகை...? முகமது பின் சல்மான், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்:
“எண்ணெய்க்கு அடிமையாகி இருக்கிற இந்த நாடு, 2020-ல், எண்ணெய் (தயவு) இல்லாமல், வாழ முடியும் என்ற நிலையை எட்டும். தாதுப்பொருள் உற்பத்தி, ஆயுத உற்பத்தி போன்றவற்றில் முழு கவனம் செலுத்தப் போகிறோம்" என்றார்.
அதாவது இனி எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பிக் கொண்டு இருக்கப் போவதில்லை; பல்வேறு துறைகளில், முன்னேறுவதற்கு எங்களை தயார் படுத்திக் கொள்கிறோம் என்று பொருள்.
இதற்கும் மேலாக சில அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டு இருக்கிறார் சல்மான்.
“பெண் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்; வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நீண்ட காலம் சவுதியில் பணிபுரியும் வகையில் விசா முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்” உள்ளிட்டவை அவற்றுள் முக்கியமானவை.
பாதிப்புக்குள்ளான சவுதி மக்களில் பெரும்பாலானோர், இந்த சிக்கன நடவடிக்கையை வரவேற்று இருக்கிறார்கள் என்பது ஆறுதலான செய்தி. நாட்டு மக்களின் முழுமையான ஆதரவு இருக்கிற காரணத்தினால், சவுதி அரசு தனது சீர்திருத்த நடவடிக்கைகளில் இருந்து பின் வாங்காது என்று உறுதியாக நம்பலாம். இதன் விளைவாக, பல புதிய வரிகள் அறிமுகம் செய்யப்படலாம்.
இத்தனை நெருக்கடியிலும், சர்வதேச நிதியத்தை நாடிச் செல்லவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய மிக நல்ல செய்தி. தம்மைத் தாமே சீர்படுத்திக் கொள்ள முடியும் என்று திடமாக நம்புகிறது சவுதி அரசு.
கடந்த ஒரு மாதத்தில் (ஆகஸ்ட் 2016) மட்டும், சவுதி உள்ளிட்ட பெட்ரோலிய ஏற்றுமதி அரபு நாடுகள், 33 பில்லியன் பீப்பாய் அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து இருக்கின்றன.
இதை எல்லாம் சரி செய்து, எண்ணெய் உற்பத்தியைக் கட்டுக் குள் கொண்டு வந்து, அதன் மூலம் எண்ணெய் விலையை உயர்த்தினா லும் கூட, ஓரளவுக்கு மேல் உயர்த்த முடியாது. காரணம், அமெரிக்காவின் 'ஷேல்' எண்ணெய், அதைவிட குறைந்த விலையில் சந்தையில் இறங்கத் தயாராக இருக்கிறது.
உலக நாடுகள் அந்தப் பக்கம் திரும்பி விட்டால், முதலுக்கே மோசம் ஆகி விடும் அபாயம் இருக்கிறது. ஆகவே, வேறு ஏதேனும் செய்துதான் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்.
கிரீஸ் நாட்டுக்கு ஏற்பட்ட கதி, தனக்கு நேரக் கூடாது என்பதனால், முன்கூட்டியே நன்கு திட்டமிட்டுக் காய்களை நகர்த்தி வருகிறது சவுதி. எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் நிலைக்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கிறது சவுதி.
இதன் ஒரு பகுதியாகத்தான், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளும், ‘எண்ணெய் இல்லா' பொருளாதாரம் என்கிற முழக்கமும். சவுதியின் பொருளாதார முனைப்புகள், உலகின் பல முனைகளில் கூர்ந்து கவனிக்கப்படும்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் சவுதி அரேபியா பெறும் வெற்றி, பலருக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு, மிக நல்ல செய்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT