Published : 16 Jan 2014 11:17 AM
Last Updated : 16 Jan 2014 11:17 AM

குறைவாக ட்விட்டுவோம், அதிகமாக வாசிப்போம்

என் அம்மா எப்போதும் அறிவுரையாகப் பொழிந்துகொண்டே இருப்பார். “எதைப் பேசுவதற்கும் முன் 10 வரை எண்ணிக்கொள்” என்பது என் அம்மா அடிக்கடி சொல்லும் அறிவுரைகளுள் ஒன்று. பேச்சுக்கு நடுவே விடும் இடைவெளியால் அதீத உணர்ச்சிகளின் தீவிரம் குறையும், நாகரிகம் மூச்சுவிடும், அறிவு சிறகடித்துப் பறக்கும் என்பதற்காகத்தான் அம்மா அப்படிச் சொன்னார். நிதானம்தான் பெரும்பாலும் விஷயங்களை மேம்படுத்துகிறது என்பது அதன் அர்த்தம்.

அவர் இறந்து பல காலம் கழித்து உருவான சமூக ஊடகங்களைப் பற்றி அவர் என்ன சொல்லியிருப்பார்?

உடனடியாக நம் கருத்தை வெளியிடுவதற்கும் அதற்கு உடனடி ரசிகர்கள் திரள்வதற்கும் கிடைத்த வாய்ப்பினால், நம்மில் பெரும்பாலானோர் சமூக ஊடகங்களில் நுழைந்து அரைகுறை எண்ணங்களையும், அரைவேக்காட்டுத்தனமான அறிவையும் மூர்க்கமான எதிர்வினைகளையும், குறைந்த பட்சம் மூன்றுவரை எண்ணுவதற்குள் வெளியிட்டுவிடுகிறோமே, இதைப் பற்றி யெல்லாம் அவர் என்ன சொல்லியிருப்பார்?

அறிவை முந்தும் வேகம்

சிந்தனை என்பது காறி உமிழலுக்கு வழிவிட்டு ஒதுங்கிவிட்டதோ என்றும், அறிவை வேகம் முந்திக்கொண்டுவிட்டதோ என்றும் நுட்பம் இந்தச் சமன்பாட்டிலிருந்து வெளியேறிவிட்டதோ என்றும் பல முறை நினைக்கத் தோன்றுகிறது. 140 அல்லது அதற்கும் குறைந்த எழுத்துக்களுக்காக தங்கள் பேரையும் புகழையும் பதவி களையும் இழந்தவர்களைப் பற்றித்தான் நான் அதிகம் பேசுகிறேன். சமீபத்தில்கூட நியூயார்க்கில் உள்ள விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த முன்னணி விளம்பரவியலாளர் பெண்மணி ஒருவரின் ட்விட்டர் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி யிருக்கிறது. ‘‘ஆப்பிரிக்காவில் இருப்பதால் தனக்கு எய்ட்ஸ் வந்துவிடுமோ என்ற அச்சம் தனக்கு இல்லை, ஏனென்றால் நான்தான் வெள்ளைக்காரியாயிற்றே” என்று ட்விட்டி யிருக்கிறார் அவர்.

அதிவேகத்தில் முடுக்கிவிடப்பட்ட ஜீரண சக்தியையும் கரடுமுரடாக்கப்பட்ட நாகரிகத்தையும் பற்றித்தான் நான் பேசுகிறேன்.

நமது நேரத்தை நாம் அதிக அளவில் செலவிடக்கூடிய இணையத்தில் நமது நாகரிக நடத்தை குறித்து சமீபத்தில் கல்வியாளர்கள் மத்தியில் விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. ‘தகவல் பலகை’யிலும் ஃபேஸ்புக்கின் சரடுகளிலும் இங்கிதமின்மை எப்படி மூக்கை நுழைத்திருக்கிறது என்பதைக் குறித்தும், இணையதளங்கள் எவ்வளவு அருவருப்புக்குரியவையாக மாறிவிட்டன என்பது பற்றியும் இந்த விவாதங்கள் சரியாகவே குறிப்பிடுகின்றன.

உயிரற்ற பரிமாற்றங்கள்

பரிமாற்றங்கள் யாவும் உயிரற்று இருப்பதே இது நடப்பதற்குக் காரணம்: நாம் யார் மீது தாக்குதல் நடத்துகிறோமோ அவர்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தேவையில்லை. ஒரு வேகத்தில் செய்யப்படுவதால்தான் அப்படி. இந்தப் பரிமாற்றங்களின் தொனி அவற்றின் வேகத்தோடு ஒத்துப்போகிறது. தொனி, வேகம் இரண்டுமே மோசம்.

புனைவிலக்கியம் எதற்காக?

குறுஞ்செய்திகள் அனுப்புதல், தட் தட் தட என்ற தாளகதியில் ட்விட்டுகளைத் தட்டி அனுப்புதல் போன்றவற்றுக்கு நேர்எதிரான ஒரு செயலைப் பற்றிய உரையாடல் கடந்த ஆண்டு இருந்தது. புனைவிலக்கியம் படிப்பதைப் பற்றியதுதான் அந்த உரையாடல். புனைவிலக்கியம் படிப்பவர்கள் பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் என்றும், தங்களைச் சுற்றி இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளக்கூடியவர்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். புனைவிலக்கியம் படிக்காதவர்களுக்கு இந்தப் பண்புகள் குறைவு.

இதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் கலாச்சாரப் பாசாங்கின் அடிப்படையிலோ, நான் தொழில்நுட்ப எதிர்ப்பாளன் என்ற அடிப்படையிலோ அல்ல நான் ஒத்துக் கொள்வது. நான் சொல்வதை நம்புங்கள், நான் எக்கச்சக்கமாக டி.வி. பார்ப்பவன், நான் பார்ப்பதில் பெரும்பாலானது கச்சடா ரகம்தான். பெரும்பாலான செய்தித்தாள்களையும் பத்திரிகைகளையும் நான் இணையத்தின் மூலமாகவே படிக்கிறேன், புத்தகங்களையெல்லாம் எனது ஐ-பேடிலிருந்து படிக்கிறேன். எனது நட்புகளையெல்லாம் பராமரிக்க மின்னஞ்சலையும் உடனடி செய்தியனுப்பும் சாதனங்களையுமே பெரிதும் நம்பியிருக்கிறேன், இவை இல்லையென்றால் நண்பர்களெல்லாம் உதிர்ந்துபோயிருக்கக்கூடும் இல்லையா?

இருந்தும், வாசிப்பையே (அது புனைவிலக்கியமோ, புனைவு அல்லாத இலக்கியமோ) நான் முக்கியம் என்று கருதுகிறேன், பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள அது வழிவகை செய்கிறது. இன்னும் நிறைய விஷயங்களும் கூட: நிதான குணம், திறந்த மனப்பான்மை, தீர்க்கம், இவையெல்லாமும்தான். வாசிப்பு என்பது தொடர்ச்சியான உங்கள் ‘சுயத்தின்’ குறுக்கீடுகளை அனுமதிக்காத வண்ணம் பிறருடைய கண்ணோட்டங்களை நீங்கள் அசைபோடும் வகையில் வெறுமனே உங்களை உங்களிடமிருந்து உருவி வெளியில் போடுவது மட்டுமல்ல; அது வேகத்தைக் குறைக்கிறது. இடைவெளி எடுத்துக்கொள்ள வற்புறுத்துகிறது.

உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையிலான உறவு

கடந்த வாரம் அற்புதமான ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன், ‘தி ரைட்ஷஸ் மைண்ட்: ஒய் குட் பீப்பிள் ஆர் டிவைடெட் பை பாலிட்டிக்ஸ் அண்ட் ரிலிஜன்,” என்பது அதன் தலைப்பு. ஜொனாதன் ஹைட் எழுதியது. உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையிலான உறவை இந்தப் புத்தகம் மதிப்பீடு செய்கிறது.

ஒரு விவாதத்தின் இறுதிப் பகுதியில் தங்கள் கருத்தை ஆணித்தரமாகச் சொல்வதை விட்டுவிட்டு விவாதத்தின் ஆரம்பத்திலேயே தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்று சொல்பவர்களின் காலம் இது. இந்தத் தருணத்தில் இந்த நூலில் ஹைட் சொன்ன கருத்துகளில் ஒன்றை உற்றுநோக்க வேண்டும்: ஒருவருக்கு ஒன்றைப் பற்றித் தப்பெண்ணம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தத் தப்பெண்ணத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தகவல்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்வோம். இந்தச் சூழலில் அவர்களுடைய அபிப்பிராயங்கள் உடனடியாக வெளியிட முடியாத வகையில் தடுக்கப்பட்டு மேற்குறிப்பிட்ட தகவல்கள் அவர்களுக்குள் காலப்போக்கில் மெல்ல மெல்ல உள்வாங்கப்படும் என்றால், அவர்களுக்குள் அந்தத் தகவல்கள் அசைவை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார் அவர்.

இந்தக் காலத்தில் நமக்கு இப்படியெல்லாம் நேரம் இருக்கிறதா? தற்போது ட்விட்டரிலும் இணைய உலகத்திலும் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தால் நேரத்துக்கு ஏதும் மதிப்பு இருக்கிறதா?

2014-ன் சவால்

சமூக ஊடகங்களின் எதிர்மறை அம்சங்களை, அதாவது அவசரப் பிரகடனங்கள் போன்றவற்றையெல்லாம் உதறித் தள்ளி விட்டு சாதகமான அம்சங்களை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பதுதான் 2014-ம் ஆண்டிலும் அதற்கு அப்புறமும், நம் முன்னால் இருக்கும் சவால்களுள் ஒன்று.

சமூக ஊடகங்களிலும் நிறைய வலைப்பூக்களிலும் இணையத்தின் மற்ற பிரதேசங்களிலும் நீங்கள் உடன்படாத ஒரு நபர் உங்களைப் பொறுத்தவரை தப்புந்தவறுமாக உளறுபவர்கள் மட்டுமல்ல, முட்டாள்கள், ஊழல்பேர்வழிகள், தீயவர்களும்கூட. முறையீடுகள் ஆவேசக் கூச்சல்களாக மாறுகின்றன. ஆவேசக்கூச்சல்கள், வன்மம் மிகுந்த சாடல்களாக மாறுகின்றன. இது தொலைக்காட்சிகளில் எதிரொலிக்கிறது; நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கிறது, ஏனென்றால் அங்கேதான் போர்வீரர்கள் முதலில் கூச்சலிட்டுவிட்டுப் பிறகு கேள்வி கேட்பார்கள்.

நிதான உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதைப் போற்றிவருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக நிதான டி.வி.க்களையும்கூட நாம் வரவேற்றிருக்கிறோம். இப்போது நமக்கு உண்மையில் தேவை நிதான விவாதம். ஏனென்றால் அதுதான் ஆவேச உணவுக்கு மாற்றாக சரிவிகித உணவைக் கொண்டுவரும். நாமும் ஆரோக்கியமானவர்களாக மாறுவோம். மகிழ்ச்சியானவர்களாகவும்கூட.

© நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x