Published : 21 Jul 2022 07:50 AM
Last Updated : 21 Jul 2022 07:50 AM

தற்கொலை எண்ணத்திலிருந்து மீள்வது எப்படி?

ப.சந்திரசேகர்

கடந்த ஒரு சில நாட்களில் நிகழ்ந்துள்ள சம்பவங்கள் இவை: சேலம் மாவட்ட அரசுப் பள்ளி மாணவி ஒருவர் பள்ளியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மற்றொரு மாணவி விஷம் குடித்துவிட்டு, பள்ளி வளாகத்துக்குள் வந்து இறந்திருக்கிறார். இது போன்ற செய்திகள், பெரியவர்களை மட்டுமின்றி பள்ளிக் குழந்தைகளையும் தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டிய உடனடி அவசியத்தை உணர்த்துகின்றன.

இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்.சி.ஆர்.பி.) அறிக்கையின்படி, 2020-ல் இந்தியாவில் தற்கொலையால் 1,53,052 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது 2019-ல் தற்கொலையால் இறந்த 1,39,123 என்ற எண்ணிக்கையைவிட 10% அதிகம். 2020-ல், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 419 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதில் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 34%, 30-45 வயதுக்கு உட்பட்ட நபர்கள் 31.4%. 2020-ல், 12,526 மாணவர்கள் தற்கொலைகள் இறந்துள்ளனர்.

2019-ன் 10,335 இறப்புகளுடன் ஒப்பிடும்போது, மாணவர்களிடையே தற்கொலைகள் எண்ணம் 21% அதிகரித்துள்ளது. 15-39 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் இறப்புக்குத் தற்கொலையே முதன்மைக் காரணம். இந்தியாவில் நிகழும் ஒட்டுமொத்தத் தற்கொலைகளில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

வாழ்க்கை குறித்த தவறான புரிதல், கணிப்புகளே தற்கொலைக்கு வழிவகுக்கின்றன. காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, மகன்/மகளின் காதல் திருமணங்கள், வாழ்க்கையில் ஏற்படும் தொடர் தோல்விகள், தகுதியான வேலை கிடைக்காதபோது ஏற்படும் விரக்தி போன்றவை முக்கியக் காரணங்கள்.

இந்தியப் பெண்களின் தற்கொலை விகிதம் உலக விகிதத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இந்த மரணங்கள் பெரும்பாலும் வரதட்சிணை சார்ந்த சித்ரவதை, கட்டாயத் திருமணம், குடும்ப வன்முறையால் ஏற்படுகின்றன.

தற்கொலை எண்ணத்துக்கு அறிகுறிகள் உண்டு. மனச்சோர்வுதான் தற்கொலைக்கு அடிப்படை. ஒரு நபர் மனச்சோர்வு அடைந்தால், அவரால் தர்க்கரீதியாகச் சிந்திக்க முடியாது. இயல்புக்கு மாறாக நடந்துகொள்வது, சோகமாக இருப்பது, யாருடனும் சரியாகப் பேசாமல் தனிமையை நாடுவது, திடீரென அமைதியாக இருப்பது, நம்பிக்கை இல்லாமல் வெறுத்துப்போய்ப் பேசுவது, மிக அதிகமாகவோ மிகக் குறைவாகவோ தூங்குவது, பிடித்த செயல்களில்கூட ஈடுபாடு காட்டாமல் இருப்பது, இறப்பு சார்ந்து அதிகமாகப் பேசுவது, பொருத்தமில்லாமல் பிரியாவிடை சொல்வது ஆகியவை தற்கொலையின் அறிகுறிகள்.

தற்கொலைக்கு முயலும் ஒருவரின் மனநிலை மூன்று வகைப்படும். (1) செய்யலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் மனநிலை. (2) உணர்வுகளைப் பாதிக்கும் செயல் ஒன்று நடக்கும்போது, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கும் உணர்ச்சிப் பெருக்கு மனநிலை. தேர்வு முடிவு வெளியாகும் நாளில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலைக்கு முயன்றால், அந்த நேரம் அதைத் தடுத்துவிட்டால், பின்னர் அம்முயற்சியில் ஈடுபடமாட்டார்.

ஏனென்றால், தோல்வியை அறிந்த நாளில் இருக்கும் உணர்ச்சிப் பெருக்கு, பின்னர் குறைந்துவிடும் அல்லது இல்லாமல் போய்விடும். (3) நான் நினைப்பதுதான் சரி, அதுவே நடக்க வேண்டும் என்ற இறுக்கமான மனநிலை. நினைப்பதற்கு மாறாகவும் நடக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையும் இதில் அடங்கும்.

ஒரு மனிதன் தன்னைத்தானே அழித்துக்கொள்ள முடியும் எனும்போது, அம்மனிதனால் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளவும் முடியும். எனவே, உணர்ச்சிப் பெருக்கு மனநிலை உடையவர்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, தியானம், யோகா ஆகியவற்றின் மூலம் மனநிலையைச் சமநிலைப்படுத்தலாம்.

நம்பிக்கையூட்டும் சொற்பொழிவுகளைக் கேட்பது, மகிழ்ச்சி தரும் நூல்களைப் படிப்பது, மனதுக்குப் பிடித்த இசையைக் கேட்பது, நேர்மறை எண்ணம் கொண்டவர்களோடு மனம்விட்டுப் பேசுவது, பிரார்த்தனை செய்வது என மனதைத் திசைதிருப்ப வேண்டும். முக்கியமாக, தனிமையைத் தவிர்ப்பது அவசியம்.

அடிக்கடி தற்கொலை எண்ணம் எழுந்தால் ஒரு நிமிடம்கூடத் தாமதிக்காமல் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என யாரிடமாவது கூற வேண்டும். பின்பு மனநல மருத்துவர், மனநல சமூகப் பணியாளர், மனநல ஆலோசகர், மருத்துவ உளவியலாளர் ஆகியோரில் ஒருவரைப் பார்த்து சிகிச்சையும் ஆலோசனையும் பெறுதல் நலம்.

நம்பிக்கையூட்டும் பேச்சு

ஒருவர் தற்கொலையைப் பற்றிப் பேசினால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. உன்னோடு நான் இருக்கிறேன்/ இருப்பேன் என நம்பிக்கையூட்டும் வகையில் பேசுவது நன்மையளிக்கும். அவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவரை மனம்விட்டுப் பேசச் சொல்லி, மனவலியைக் குறைக்க வேண்டும்.

அவர் அழுதால், அழுகையை நிறுத்த முயல வேண்டாம். தற்கொலை செய்துகொள்பவரின் மனக்குமுறல் அப்போது வெளிப்படும். பின்னர், அதிலிருந்து அவரை மீட்கலாம். தற்கொலை செய்தே தீர வேண்டும் என்ற தீவிர எண்ணத்துடன் ஒருவர் இருந்தால், அந்நபரைச் சிறிது நேரம்கூடத் தனிமையில் விடக் கூடாது. உடனே, மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும்.

தற்கொலை எண்ணம் உள்ளவரிடம் மிகக் கவனமாகப் பேச வேண்டும். ‘உன்னால்தான் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் நிம்மதியே போச்சு’ எனப் பேசக் கூடாது. ‘எனக்கு செத்துப் போய்விடலாம் எனத் தோன்றுகிறது’ என்று சொல்லும் ஒருவரிடம் ‘சும்மா காமெடி பண்ணாதே, அதுக்கெல்லாம் உனக்குத் தைரியம் பத்தாது’ என்கிற வகையில் பேசுவதும் ஆபத்து.

இறுக்க மனநிலையில் உள்ளவர்களிடம் இவ்வாறு பேசினால், தான் சொன்னதை உண்மையாக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும். தடுமாறும் மனநிலை உள்ளவர்கள், முடிவெடுக்க மற்றவர்களின் உதவியை நாடுவார்கள். ஒரு பிரச்சினைக்குத் தீர்வு கேட்கும்போது ‘எனக்கு இருக்கிற வேலையில, இதையெல்லாம் கேட்க நேரம் இல்லை’ என்பது போன்ற வார்த்தைகள் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

மாணவர் மனநலம்

இந்தியாவில் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம், பெரும்பாலும் எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் முதல் மதிப்பெண் பெறுவதைக் காட்டிலும் வாழ்க்கைத் திறன் கல்வி, சிக்கல்களைத் தீர்க்கும் திறன், பிரச்சினைகளைக் கையாளும் திறமை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

மாணவர்களின் பொதுவான உணர்ச்சிச் சிக்கல்களைப் பற்றியும், குடும்பநிலை பற்றியும் ஆசிரியர்கள் கவனம்செலுத்துதல் நலம். தேர்வுக்கு எப்படித் தயாராவது, எதிர்கொள்வது என்ற வழிகாட்டுதல் மட்டுமின்றி, தோல்வியை எப்படி ஏற்றுக்கொள்வது, அதிலிருந்து எப்படி மீள்வது எனக் கற்றுத்தருவதும் நன்மையளிக்கும்.

தேர்வில் வெற்றிபெற முடியாவிட்டால், அடுத்த இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்று மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். தற்கொலைகளுக்குப் பிறகு கண்ணீர் சிந்துவதை விட்டுவிட்டு, அத்தகு சூழல்களை முன்கூட்டியே உணர்ந்து அவற்றைத் தவிர்க்க முனைய வேண்டும்.

- ப.சந்திரசேகர், உதவிப் பேராசிரியர், உளநோயியல் துறை, தொடர்புக்கு: pjcsekar@gmail,com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x