Published : 10 May 2016 09:32 AM
Last Updated : 10 May 2016 09:32 AM
தேர்தல் மாநிலங்களில் ஒரு கழுகுப் பார்வை
நமது நாட்டின் கடந்த காலத்தை வரலாறு மற்றும் தொன்மம் என்ற இரு பாதைகளில் நடந்தே அறிகிறோம். கேரளத்தை பொறுத்தவரை தொன்மங்கள்தான் ராஜபாட்டை. வரலாறு குறுகலான மண்பாதை.
பரசுராமர் தனது கோடரியின் வலிமையால் கடலைச் சுருக்கி நிலத்தைப் பெருக்கினார் என்று ஒரு புராணம் சொன்னால், கிறிஸ்துவின் சீடரான தாமஸ் கி.பி. 52-ல் முசிறியில் இறங்கினார் என்கிறது திட்டவட்டமாக மற்றொரு பரம்பரை. இதே போன்று கொடுங்களூர் சேரமான் ஜும்மா மசூதி இறைத்தூதரின் காலத்திலேயே கட்டப்பட்டது என்று இஸ்லாமியர் உறுதியாக நம்புகிறார்கள். கடல் வாணிகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் கேரளத்தில் நடைபெற்று வந்தது என்பது தெளிவு. ‘‘பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி’’ என்கிறது அகநாநூறு. கறி என்றால் மிளகு.
ஆங்கிலேயர் கால இந்தியாவில் கேரளாவின் மலபார் பகுதி அன்றைய மதராஸ் ராஜதானியில் இருந்தது. தெற்கில் திருவிதாங்கூர் சமஸ்தானமும் மேற்கில் கொச்சி சமஸ்தானமும் இருந்தது. மகாத்மா காந்தி தலைமையில் சுதந்திரப் போராட்டம் நடந்தபோது கேரள மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். 1921 ல் கிலாஃபத் இயக்கம் மும்முரமாக நடந்தபோது, மலப்புரம் பகுதியின் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டார்கள். அது பின்னால் நிலச்சுவான்தார்களுக்கு எதிரான போராட்டமாக வெடித்தது. மதக்கலவரமாக மறு உருவம் எடுத்தது. இந்துக்கள் கொல்லப்பட்டார்கள். கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார்கள். ஆங்கிலேயர்களால் கலவரம் மிகவும் கடுமையாக ஒடுக்கப்பட்டது. இஸ்லாமியர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.
நம்பூதிரிபாட் ஆட்சி
மன்னர் ஆட்சி மீதிருந்த வெறுப்பு பல போராட்ட வடிவங்கள் எடுத்தது. அவற்றில் குறிப்பிடத்தக்கது பெரியார் கலந்து கொண்ட வைக்கம் போராட்டம். அது சமூகச் சீர்திருத்தத்துக்காக நடத்தப்பட்டது. மறுபக்கம் நிலச் சீர்த்திருத்தத்தை வலியுறுத்தி விவசாயிகளையும் உரிமைகளைக் கோரி தொழிலாளர்களையும் திரட்டும் பணி தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் 1930களின் இறுதி வரை கம்யூனிஸ்டுகள் காங்கிரஸோடு இணைந்துதான் போராடினார்கள். பின்வரும் காலத்தில் சுதந்திர இந்தியாவோடு இணைவோம் என்ற கனவோடுதான் போராடினார்கள். நம்பூதிரிபாட், ஏ. கே. கோபாலன் போன்ற தலைவர்கள் இந்தக் காலகட்டத்தில்தான் மக்கள் தலைவர்களாக அறியப்பட்டார்கள். காங்கிரஸின் குழந்தையாகவே கம்யூனிஸ்ட் கட்சி அன்று அறியப்பட்டது. ஆனால், 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் எடுத்த நிலைப்பாட்டினால் காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே பெரிய பிளவு ஏற்பட்டது. ஏறத்தாழ 75 வருடங்களுக்கு பின்னும் அந்தப் பிளவு தொடர்கிறது.
மக்களின் பெருவாரியான ஆதரவை கம்யூனிஸ்ட்டுகள் பெற்றது அவர்கள் திவான் சி.பி.ராமசாமி ஐயருக்கு எதிராக 1946-ல் நிகழ்த்திய புன்னப்புரா, வயலார் போராட்டங்களுக்குப் பிறகுதான். நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்போராட்டங்களில் சுட்டுக் கொல்லப் பட்டார்கள். 1952 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி அன்றைய திருவிதாங்கூர் கொச்சி பகுதியில் தடைசெய்யப்பட்டிருந்ததால் தனது வேட்பாளர்களை சுயேச்சைகளாக நிறுத்தி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு 44 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. 1957-ல் 60 தொகுதிகளில் வெற்றி பெற்று இந்தியாவில் முதல்முறையாக மக்களாட்சி முறைப்படி கம்யூனிஸ்ட் கட்சி நம்பூதிரிபாட் தலைமையில் அரசு அமைத்தது. 1959-ல் அவரது ஆட்சி மத்திய அரசினால் கலைக்கப் பட்டது. அன்று தொடங்கிய இழுபறி இன்றுவரை தொடர்கிறது.
சாதிகளும் கட்சிகளும்
கேரள மக்கள்தொகையில் ஈழவர்கள் சுமார் 23% இருப்பார்கள். நாயர்கள் 14%. கிறிஸ்தவர்கள் 27%. இஸ்லாமியர் 18%. மற்றவர்கள் 18%. இதில் கிறிஸ்தவர்கள் கேரளக் காங்கிரஸிலும் இஸ்லாமியர் முஸ்லிம் லீகிற்கும் பெரும்பாலும் வாக்களிப்பார்கள். ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஈழவர்களின் கட்சி என்றும், காங்கிரஸ் நாயர் மேல்சாதியினர், தலித்துகளின் கட்சி என்றும் அறியப்பட்டன. இப்போது பாஜகவின் வருகையினால் நாயர்கள் பாஜக பக்கம் போகத் தொடங்கியிருக்கிறார்கள். ஈழவர்கள் நிறுவனத்தின் செயலாளரான நடேசன் பாஜகவுடன் இணைந்திருக்கிறார். ஈழவர்களும் இழுக்கப்படுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் தமிழகத்தில் இருப்பதுபோல சாதிக் கட்சிகள் தனி அடையாளம் பெற்று சாதிக் கட்சிகளாகவே இயங்குவது மிகவும் கடினம்.
கேரளத்தில் மதக் கலவரங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியாவிலேயே மதக் கலவரங்கள் அதிகமாக நடக்கும் எட்டு மாநிலங்களில் கேரளம் ஒன்றாகக் கருதப்படுகிறது. மலப்புரம் ஒரு குட்டி பாகிஸ்தான் என்று சில இந்துத்துவ ஊடகங்கள் அலறுகின்றன. ஆனால் மலப்புரத்தில் திருநாவாய் தலத்தில் இருக்கும், நம்மாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் பாடப்பெற்ற முகுந்தன் கோயிலுக்கு நான் 2014-ல் போயிருந்தேன். பொன்னானி வழியாகத்தான் சென்றேன். அது இந்தியாவின் மற்றைய பகுதிகளைப் போலத்தான் எனக்குத் தெரிந்தது. யார் இங்கு சட்டமன்ற உறுப்பினர் என்று கேட்டேன். ராமகிருஷ்ணன் என்றார்கள். எந்தக் கட்சி என்று கேட்டேன், மார்க்ஸிஸ்ட் கட்சி என்று பதில் வந்தது.
இந்தியா எந்தப் பிரச்சினைக்கும் ஒரு பதில் வைத்திருக்கும் என்று தோன்றியது.
பி.ஏ. கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர். தொடர்புக்கு: tigerclaw@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT