Last Updated : 03 May, 2016 10:32 AM

 

Published : 03 May 2016 10:32 AM
Last Updated : 03 May 2016 10:32 AM

வெடித்துக் கிளம்பும் வெஸ்ட்லேண்ட்

இத்தாலி தீர்ப்புக்குப் பின்னர் ஹெலிகாப்டர் பேர விவகாரம் உச்சமடைந்திருக்கிறது

வரலாறு காணாத வறட்சி, 5 மாநிலங்களில் சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் என்று பரபரப்பான நிகழ்வுகளுக்கு இடையே வெடித்துக் கிளம்பியிருக்கிறது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் கொள்முதல் ஊழல். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது உதவியாளர் அகமது படேல், ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அரசியல் ரீதியான பழிவாங்கல் என்று முறுக்கிக்கொண்டு நிற்கிறது காங்கிரஸ் தரப்பு. திடீரென வெடித்திருக்கும் இந்த வெஸ்ட்லேண்ட் விவகாரத்தின் பின்னணி என்ன?

பிரிட்டன் நிறுவனம்

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பிரமுகர்களின் உள்நாட்டுப் பயணங்களுக்கு சோவியத் யூனியனில் தயாரான ‘எம்.ஐ.-8’ ரக ஹெலிகாப்டர்கள்தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றின் தொழில்நுட்ப ஆயுட்காலம் முடிந்துவிட்டதாலும், உயரமான மலைப் பகுதிகளில் பறக்க இவை பாதுகாப்பானவை அல்ல என்பதாலும் நவீன வசதிகளுடன் கூடிய ஹெலிகாப்டர்களை வாங்க வேண்டும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முடிவுசெய்தது. பிரிட்டனைத் தாயகமாகக் கொண்ட வெஸ்ட்லேண்ட் நிறுவனமும் அமெரிக்காவின் சிகோர்ஸ்கி நிறுவனமும் இதற்கான பொது ஏலத்தில் பங்கேற்றன. அமெரிக்க நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ‘எஸ்-92’ ரகம். அதை ‘சூப்பர் ஹாக்’ என்று அழைப்பார்கள். ஆனால், மத்திய அரசு வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தைத் தேர்வுசெய்தது. அதன் ‘ஏ.டபிள்யு.-101’ ரக ஹெலிகாப்டர்களில் 12 வாங்க முடிவெடுக்கப்பட்டு, 2010 பிப்ரவரியில் ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகர்கள் கூடாது என்ற வாக்கியமும் சேர்க்கப்பட்டிருந்தது. பொது ஏலம் கோரியபோது, அந்த ஹெலிகாப்டர்கள் 6,000 மீட்டர் உயரம் வரை பறக்க வேண்டும் என்று முதலில் கூறியிருந்தது. ஆனால், வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் ஹெலிகாப்டருக்கு அந்தத் திறன் இல்லை. எனவே, 4,500 மீட்டர் உயரம் வரை பறந்தால் போதும் என்று இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதியாக இருந்த எஸ்.பி.தியாகி சம்மதித்ததால் வெஸ்ட்லேண்டுடன் பேரத்தை முடிக்க முடிந்தது. ஒப்பந்தத் தொகையில் 45% ஆன ரூ.1,620 கோடியை இந்திய அரசு வழங்கியது. வெஸ்ட்லேண்ட் நிறுவனமும் 3 ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தது.

ஒப்பந்தம் நிறுத்திவைப்பு

ஹெலிகாப்டர்களை விற்க இந்திய அதிகாரிகள் சிலருக்கு லஞ்சம் தரப்பட்டதாகவும் கமிஷன் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக விலையையும் செலவுகளையும் அதிகப்படுத்திவிட்டதாகவும் இத்தாலியைச் சில செய்திகள் எட்டின. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி புரூனோ ஸ்பாக்னோலின், இத்தாலியைச் சேர்ந்த அதன் தாய் நிறுவனமான ஃபின்மெக்கானிகாவின் தலைவர் கிஸெப்பி ஓர்சி ஆகியோரை இத்தாலியப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து, ஒப்பந்த அமலை இந்திய அரசு நிறுத்திவைத்தது. இந்தியப் பாதுகாப்பு அமைச்சராக அப்போது பதவி வகித்த ஏ.கே.அந்தோனி, இதைப் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த 25.2.2013-ல் உத்தரவிட்டார். லஞ்சம் தொடர்பாக 11 பேர் மீதும் 4 நிறுவனங்கள் மீதும் சி.பி.ஐ. பூர்வாங்க விசாரணை அறிக்கையைப் பதிவுசெய்தது.

இத்தாலியைச் சேர்ந்த ஃபின்மெக்கானிக்கா, பிரிட்டனின் வெஸ்ட்லேண்ட் ஆகிய நிறுவனங்கள் மட்டுமின்றி, சண்டிகரைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்ட ஐ.டி.எஸ். இன்ஃபோடெக், ஏரோமேட்ரிக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் இதில் தொடர்பு உண்டு. பணம் ரொக்கமாகவும், வெளிநாட்டு வங்கிகள் வழியாகவும், ‘வேறு வழியிலும்’ கைமாறியிருக்கிறது.

‘குறைக்கப்பட்ட’ உயரம்!

இந்தியாவின் தேவைக்கேற்ப 6,000 மீட்டர் உயரத்தில் வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டரால் பறக்க முடியாது என்பதால், இந்திய விமானப் படைத் தலைமைத் தளபதி எஸ்.பி.தியாகியைச் சந்தித்துப் பேசிய பிறகு, 4,500 மீட்டர் உயரம் வரை பறந்தால் போதும் என்று நிபந்தனை தளர்த்தப்பட்டதாக, இடைத்தரகராகச் செயல்பட்டவர்களில் ஒருவரான கிடோ ஹஸ்ஸி வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதன் பிறகுதான் எஸ்.பி.தியாகியின் பெயர் இதில் சேர்க்கப்பட்டது.

ஆயுதத் தரகர்கள், டெல்லியில் அதிகார வட்டாரங்களுக்கு நெருங்கிய சிலரைச் சந்தித்து இந்த பேரம் தொடர்பாகப் பேசியிருக்கிறார்கள் என்பது கையால் எழுதப்பட்ட ஒரு காகிதக் குறிப்பிலிருந்து தெரியவருகிறது. ஆனால், அந்தக் குறிப்பை ஆதார ஆவணமாகக் கருத, மிலன் மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார். அதை மதிப்பீட்டுச் சீட்டாக (எஸ்டிமேட்) மட்டுமே கருத முடியும் என்றார். அதில் ‘திருமதி காந்தி’ என்றொரு வார்த்தையும் ‘ஏ.பி.’ என்ற வார்த்தையும் இருந்ததாம். அந்த ‘ஏ.பி.’ சோனியாவின் உதவியாளர் அகமது படேல் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். சோனியாவின் இன்னொரு சகா ஆஸ்கர் பெர்னாண்டஸ் பெயர்கூட இதில் சேர்த்துப் பேசப்படுகிறது. ஆனால், இவற்றுக்குத் திட்டவட்டமாக ஆதாரம் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. தவிர, வருவாய்ப் புலனாய்வுத் துறையின் அமல்பிரிவு இயக்குநரகமும் விசாரித்தது. லஞ்சப் பணம் கருப்பிலிருந்து வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கிறது என்று அது தெரிவிக்கிறது. ஆயுதத் தரகர்களும் இந்தியாவில் அவர்களுக்கு உதவியவர்களும் தொலைபேசிகளில் பேசியதன் ஒலிப்பதிவு அடிப்படையில் இத்தாலியில் வழக்கு நடந்தது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக வழங்கப்பட்ட முதல் தவணைத் தொகை ரூ.1,620 கோடியும், உத்தரவாதத் தொகை ரூ.250 கோடியும் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. அதன் பிறகு ரூ.1,818 கோடி மேலும் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.

கீழமை நீதிமன்றத் தீர்ப்பு

இத்தாலியில் முதலில் கீழமை நீதிமன்றம் விசாரித்து, 2014 அக்டோபரில் தீர்ப்பளித்தது. தீர்ப்பு மொத்தம் 145 பக்கங்கள். இந்திய விமானப் படைத் தலைமைத் தளபதி எஸ்.பி.தியாகி மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரம் இல்லையென்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் ஓர்சி, ஸ்பாக்னோலின் தண்டிக்கப்பட்டனர். அவர்கள்கூட ‘சர்வதேச ஊழல்’ என்ற கடுமையான குற்றச்சாட்டிலிருந்து விலக்கப்பட்டு, ‘தவறான விலைப்பட்டியல்’ அளித்ததாக, சாதாரண குற்றச்சாட்டின்பேரில் விசாரிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சாதாரணத் தண்டனைக்கு உள்ளாக் கப்பட்டனர்.

இந்த விசாரணையையும் தீர்ப்பையும் கவனித்த மிலன் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழக்கை மறு விசாரணை செய்தது. ஓர்சியும் ஸ்பாக்னோலினும் லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள், எஸ்.பி.தியாகியும் அவருடைய உறவினர்களான 3 தியாகிகளும் வாங்கியிருக்கிறார்கள் என்று தீர்ப்பை மாற்றியது. ஓர்சிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஓர்சிக்கும் ஸ்பாக்னோலினுக்கும் 75 லட்சம் யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு, இந்த ஆண்டு ஏப்ரலில்தான் வழங்கப்பட்டது. எனவே, இந்த விவகாரம் இப்போது புத்துயிர் பெற்றிருக்கிறது.

ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் நடந்துகொண்டிருப்பதால், காங்கிரஸுக்கு எதிரான கட்சிகள், வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரத்தைத் தேர்தல் களத்தில் பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றன!

பலிவாங்கிய ஹெலிகாப்டர்!

1985-லேயே வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை வாங்கிக்கொள்ளுமாறு பிரதமர் ராஜீவ் காந்தியிடம் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் வற்புறுத்தினார்.

‘‘நிபுணர்கள் சொல்வதைக் கேட்க வேண்டாம்; எனக்காக வாங்கிக்கொள்ளுங்கள்’’ என்று கேட்டார். 650 லட்சம் பவுண்டுகளுக்கு 21 ஹெலிகாப்டர்களை வாங்கியது இந்தியா. 1988 ஆகஸ்ட்டிலும் 1989 பிப்ரவரியிலும் இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்தைச் சந்தித்தன. அதில் 10 பேர் இறந்தனர். பறக்க லாயக்கற்றவை என்ற சான்றுடன் அவை தரையில் நிரந்தரமாக நிறுத்திவைக்கப்பட்டன.

1991-ல் அவற்றைக் காயலாங்கடையில் போடும் பழைய இரும்பைப் போல அதே பிரிட்டிஷ் நிறுவனத்துக்கு வெறும் 9 லட்சம் பவுண்டுகளுக்கு இந்தியா விற்றது. இந்த ஹெலிகாப்டர்களை எப்படியாவது ஓட்ட முடியுமா என்று பவன் ஹன்ஸ் என்ற இந்திய அரசுத் துறை நிறுவனம் இடைக்காலத்தில் பாடுபட்டது. இதற்காக ரூ.95.67 கோடி செலவிடப்பட்டது.

1998-ல் பிரிட்டனின் ஜி.கே.என். நிறுவனம் வெஸ்ட்லேண்டை வாங்கியது. இத்தாலியின் ஃபின்மெகானிக்கா நிறுவனத்துடன் 2000-ல் இணைக்கப்பட்டது.

2004-ல் ஃபின்மெகானிக்கா, ஜி.கே.என். நிறுவனப் பங்குகளையும் வாங்கியது தனிக் கதை!

இடைத்தரகர்களின் இருட்டு உலகம்

இடைத்தரகர்கள் இல்லாமல் ஆயுத நிறுவனங்களும், நாடுகளும் நேருக்கு நேர் பேசிக் கொள்முதல் செய்துகொள்ள முடியாதா? நிச்சயம் முடியாது. எந்த நாடுமே தங்களுக்குத் தேவைப்படும் ஆயுத பேரங்களை ரகசியமாகவே செய்து முடிக்க விரும்பும். அதைச் செவ்வனே செய்துதருவார்கள் இடைத்தரகர்கள்!

வாங்கப்போகும் விமானங்கள், கப்பல்கள், தளவாடங்கள் எவ்வளவு திறன் வாய்ந்தவை என்பன போன்ற பரிசோதனைகளைத் தங்கள் சொந்தச் செலவில் செய்துதருவார்கள். பணப்பட்டுவாடாவையும், அதற்கு உதவும் அதிகாரிகள் - அரசியல் தலைவர்களுக்கான லஞ்சப் பண விநியோகத்தையும் கனகச்சிதமாகச் செய்து முடிப்பதில் வல்லவர்கள்.

மர்மங்கள் நிறைந்த உலகம் இவர்களுடையது. தாங்கள் விற்கப்போகும் நாடு அல்லது குழுக்கள் பற்றி வெளியுலகம் தெரிந்துகொள்ளக் கூடாது என்பது முதல் காரணம். பிற தரகர்கள் குறுக்கே புகுந்து கெடுத்துவிடக் கூடாது என்பது மற்றொரு காரணம்.

போஃபர்ஸ் பீரங்கி பேரம்

சுவீடனின் போஃபர்ஸ் பீரங்கி நிறுவனத்திடமிருந்து 410 பீரங்கிகள் வாங்க 1986-ல் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.1,500 கோடி. பீரங்கி பேரத்தை முடிக்க போஃபர்ஸ் நிறுவனம் கமிஷன் தந்தது என்ற தகவலை சுவீடன் வானொலி தெரிவித்தது.

ஸ்னாம்புரொஜெட்டி என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஆட்டோவியோ குவாத்ரோச்சி என்ற இத்தாலியர் இதில் முக்கியமானவர்.

குவாத்ரோச்சி, வின்சட்டா, ராஜீவ் காந்தி, பாதுகாப்புத் துறைச் செயலர் எஸ்.கே.பட்நாகர் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையிலிருந்து ராஜீவ் காந்தி விடுவிக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x