Published : 06 May 2016 09:22 AM
Last Updated : 06 May 2016 09:22 AM
போன வாரம் பிரம்மபுத்திரா கரைபுரண்டு ஓடியதில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். சென்னை வெள்ளத் தைவிட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரியது அசாமின் வெள்ளம். ஒவ்வொரு வருடமும் வந்துகொண்டிருக்கிறது. கரைகளில் இருப்பவர்கள் மிகவும் ஏழைகள். நம்மவர்களைவிட ஏழைகள். எனவே கவனிக்கப்படாதவர்கள். வெள்ளம் நதியின் பிழையன்று. நமது பிழை. அதை எதிர்கொள்ள வழிமுறைகளை அமைத்துக்கொடுக்க முடியாத அரசின் பிழை. பெருகிக்கொண்டிருக்கும் மக்கள் தொகையின் பிழை. வடகிழக்குப் பிரதேசத்தின் இயற்கை வன்முறையை, அறிவியல் புரிதல் இன்றி அரசுகளால் கையாளப்படுகிறது. ஆனாலும் நம்மைப் போல வடகிழக்கு மக்களும் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். திரும்பத் திரும்ப ஏமாற்றப்பட்டும், மக்களாட்சி முறைதான் நல்வாழ்வுக்கு வழி திறக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களிக்கிறார்கள்.
மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த கட்சிகளில் முதன்மையானது, அசாம் கண பரிஷத். அவர்களை மிகவும் ஏமாற்றம் கொள்ள வைத்ததும் இதுவே. அசாமின் அசைக்க முடியாத அடையாளம் என்று அறியப்பட்ட கட்சியாக அது ஒரு காலத்தில் இருந்தது. எனக்கு நினைவு இருக்கிறது. கட்சியின் தலைவரான பிரஃபுல்ல மொஹந்தாவை நான் சந்தித்திருக்கிறேன். அதிகம் பேசாதவர். அதிகம் ஒன்றும் தங்களுக்குச் செய்யாதவர் என்று மக்கள் நினைத்ததால் இப்போது செல்வாக்கு இழந்த தலைவராகிவிட்டார். 2014-ல் கட்சி வாங்கிய ஓட்டுகளின் சதவீதம் 3.8. நமது தமிழக காங்கிரஸைவிடக் கேவலம். நடந்து முடிந்த தேர்தலில் பாஜக இந்தக் கட்சிக்கு 24 தொகுதிகளை மட்டும் அளித்தது. இதாவது கிடைத்ததே என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டிய நிலைமை.
வெற்றிப் பாதையில் பாஜக?
அசாமில் பாஜகவின் முன்னேற்றத்துக்கு முக்கியமான காரணம், தாங்கள் சிறுபான்மை ஆகிவிடுவோமோ என்று இந்துக்களுக்கு இருக்கும் அச்சம்தான். மாநிலக் கட்சிகள் தேசிய அளவில் ஒன்றும் செய்ய முடியாது என்றால், பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவருகிறது காங்கிரஸ் என்று இந்துக்கள் நினைத்ததால் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டார்கள். சங்கப் பரிவாரம் பல வருடங்கள் வேலை செய்ததால் பாஜக அங்கு வேரூன்ற முடிந்தது. 1991-ல் பத்து தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி 2011 தேர்தல் வரை இந்த எண்ணிக்கையைத் தாண்ட முடியவில்லை. ஆனால், மோடி அலையில் 2014-ல் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது.
இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி தனது இந்து அடையாளத்தை வலியுறுத்தத் தயங்கவில்லை. இந்தியாவின் சக்தி பீடங்களில் ஒன்றான காமாக்யா அன்னையின் கோயில் கௌஹாத்தியில் இருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் அன்னையின் பெயர் சொல்லி வழிபட்டுவிட்டுத்தான் பேச்சைத் தொடங்கினார்.
பாஜக வெற்றி உறுதி என்று சில வல்லுநர்கள் கருதுகிறார்கள். வெற்றி கிடைத்தால் அதன் நாயகர்கள் இருவர். ஒருவர் சோனோவால். இவர் வலிமை மிக்க மாணவர் தலைவராக இருந்தவர். கொலை வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டு விடுதலையானவர். மத்தியில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் இவரைத்தான் வருங்கால முதலமைச்சர் என்று பாஜக அறிவித்திருக்கிறது. நிர்வாக அனுபவம் அறவே இல்லாத இவர், பிரச்சினைகள் மிகுந்த மாநிலமான அசாமை எப்படி ஆட்சி செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவருக்கு இப்போது பெரிய பிரச்சினை காங்கிரஸிலிருந்து தாவியிருக்கும் ஹிமந்த சர்மா. கோகோய் அமைச்சரவையில் பதவி வகித்தவர். சிறந்த பேச்சாளி. சிறந்த நிர்வாகி என்றும் சொல்கிறார்கள். கோகோய் தன்னை வளரவிட மறுக்கிறார் என்று குற்றம்சாட்டி, பாஜகவுக்குக் கடந்த வருடம் வந்தவர். ‘நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்படாதவன்’ என்று அவர் சொன்னாலும் உள்ளறுப்பு வேலைகள் ஆரம்பித்துவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள்.
கருத்துக் கணிப்புகள்
ஒரு கணிப்பு பாஜக கூட்டணி 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும் என்று உறுதியாகச் சொல்கிறது. ஆனால், பெரும்பான்மையான கணிப்புகள் கூட்டணிக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைப்பது கடினம் என்கின்றன. எனவே, யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை நிர்ணயிக்கப்போவது அஜ்மலின் அணியாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அவர் காங்கிரஸுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்பியவர். ஆனால், காஷ்மீரில் நடந்தது அசாமில் நடக்காது என்று சொல்ல முடியாது. எனவே, பாஜக - அஜ்மல் கூட்டணி அரசு 2016-ன் அதிசயங்களில் ஒன்றாக அமையலாம்.
அப்படி அமைந்தால் நல்லது என்று ஒரு வேளை தோன்றுகிறது. இந்தக் கூட்டணி அமைந்தால் சண்டையிடாமல் சமாதானம் செய்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். இது பொஹாக் மாதம். கவிஞர் பூபென் ஹசாரிகா வார்த்தைகளில் ‘பொஹாக் வாழ்க்கைச் சரடு. பொஹாக் மக்களுக்குப் புது உறுதியைக் கொடுக்கும் மாதம்.’ மக்களுக்குப் புது உறுதி கிடைக்க வேண்டும் என்று நாமும் வாழ்த்துவோம்.
(தொடரும்)
- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT