Last Updated : 04 May, 2016 09:53 AM

 

Published : 04 May 2016 09:53 AM
Last Updated : 04 May 2016 09:53 AM

பெண்கள் வாக்கு

பெண்கள் அதிக அளவில் அரசியலில் ஈடுபடும்போதுதான் சமுதாயம் உண்மையான மாற்றத்தைச் சந்திக்கும்



மாமியாரும் கணவரும் பூனைக்கு வாக்களிக்கச் சொல்கிறார்கள். அவளுக்கோ கிளிக்கு வாக்குப் போட வேண்டும் என்று விருப்பம். ஆனால், மாமியார், கணவர் சொல்வதை எப்படி மீறுவது? பிடிக்காத பூனைக்குப் போடுவதை விட, பிடித்த கிளிக்கு வாக்குப் போட்டுவிடலாம். யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்தாள். மனத்துக்குள் ஆயிரம் கேள்விகள். ஒத்திகைகள். வாக்குச் சாவடிக்குள் நுழைந்தாள். கிளி மீது முத்திரை வைக்கும் நேரத்தில், யாரோ ஒரு பெண்ணின் கை வந்து, அவளின் கையைப் பிடித்து பூனையில் குத்திவிட்டது!

1974-ல் வெளியான ‘மருமகள் வாக்கு’ கதை. கிருஷ்ணன் நம்பியின் இந்தக் கதை இன்றும் பெரும்பாலான பெண்களுக்குப் பொருந்தும்.

இந்தியாவில் சட்டப்படி 18 வயதான அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த உரிமையைப் பெண்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள்?

அப்பாவுக்காக ஓட்டு

பெண்கள் பொதுவாகத் தங்களுக்கு என்று அரசியலை வரையறுத்துக்கொள்வதில்லை. திருமணம் ஆகும் வரை அப்பா எந்தக் கட்சியை ஆதரிக்கிறாரோ, அந்தக் கட்சியைத்தான் அம்மாவும் ஆதரிக்க வேண்டும். மகளும் ஆதரிக்க வேண்டும். அதுவரை அப்பா காங்கிரஸ்காரராக இருந்திருப்பார். அதனால், அந்தக் கட்சிக்கு வாக்குப் போட்டிருப்பார் பெண். திருமணம் ஆன பிறகு கணவன் காங்கிரஸை ஆதரித்தால் பிரச்சினை இல்லை. ஆனால், அவர் ஒரு தி.மு.க. ஆதரவாளர் என்றால், சட்டென்று தன்னுடைய விருப்பத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும். தனக்கென வழங்கப்பட்ட வாக்குரிமையை யாருக்காகவும் விட்டுத் தர வேண்டியதில்லை என்று பெண்களே நினைப்பதில்லை. யாருக்கோ போடுவதற்குப் பதில் நம் அப்பா, கணவர், மகன் சொல்பவருக்கே போட்டால் நம்மை அரவணைப்பவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இருக்குமே என்பது பலரின் எண்ணமாக இருக்கிறது.

சில பெண்களுக்கு அப்பா, கணவர், மகன் நிர்ப்பந்தம் இல்லாமல் சுயமாக முடிவெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களும் எப்படி முடிவெடுக்கிறார்கள்?

சூரியனுக்காக ஓட்டு

ராணியம்மாள் பள்ளி செல்லாதவர். தன்னுடைய ஆர்வத்தின் பேரில் வகுப்பறைக்கு வெளியே நின்று, வேடிக்கை பார்த்து எழுத, படிக்கக் கற்றுக்கொண்டவர். தினமும் செய்தித்தாள் படிப்பார். அரசியலை அலசுவார். எப்போதும் ஒரு கட்சியைத் திட்டிக்கொண்டே இருப்பார். தேர்தல் அன்று வாக்குப் போட்டுவிட்டு வந்தார். யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டபோது,

‘‘உதய சூரியனுக்கு’’ என்றார்.

‘‘எப்பப் பார்த்தாலும் அந்தக் கட்சியைத் திட்டிட்டே இருப்பீங்க… இப்ப அவங்களுக்கு வாக்குப் போட்டிருக்கீங்க!’’

‘‘இப்பவும் திட்டத்தான் செய்றேன். அது வேற, இது வேற. சூரியன் இல்லைன்னா உலகமே இல்லை. தினமும் காலையில் அந்தச் சூரியனைத்தானேம்மா கும்பிட்டுட்டு, வேலையை ஆரம்பிக்கிறோம்… அப்புறம் அந்தச் சின்னத்துக்குப் போடாமல் வேறு எதுக்குப் போடறது?’’

வாத்யாருக்காக ஓட்டு

வாசுகி, ‘‘எங்க அப்பா, அம்மா, அண்ணா, நான் எல்லோருமே வாத்யார் ஃபேன். அதனால, அவர் ஆரம்பிச்ச கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவோம்’’ என்றார்.

‘‘நீங்க பிறக்கிறதுக்கு முன்னாலயே எம்.ஜி.ஆர். இறந்துட்டார். எப்படி அவர் மேல இவ்வளவு அன்பு வெச்சிருக்கீங்க? அதுவும் அவர் இல்லாத, அவருடைய கட்சிக்கு வாக்குப்போடறீங்க?’’

‘‘காந்தி மேல நமக்கு அன்பு இல்லையா? அதே மாதிரிதான். மற்ற கட்சிகளில் எனக்கு யாரையும் தெரியாது… வாத்யார் படத்தைப் பார்த்து வளர்ந்ததால் அவர் கட்சிக்கு ஓட்டுப்போடறது, அவருக்கு என்னால செய்ய முடிந்த ஒரு மரியாதை. மத்தபடி அந்தக் கட்சிக்கு யார் தலைவரா இருந்தால் என்ன? ஆட்சிக்கு வந்தால் எனக்கென்ன?’’ என்றார்.

யாருக்கும் ஓட்டு இல்லை

60 வயது ருக்மணி, ‘‘ஒருத்தருக்கு ஓட்டுப் போட்டு, இன்னொருத்தருக்கு ஓட்டுப் போடாமல் இருந்தால் நமக்கு எதுவும் பிரச்சினை வரும்னு, நான் எல்லா சின்னத்திலும் குத்திட்டு இருந்தேன். இப்படிப் பண்ணினா போலீஸ் வரும்னு என் பேரன் சொன்னான். ஓட்டுப் போட்டால்தானே பிரச்சினைன்னு, ஓட்டுப் போடறதையே விட்டுட்டேன்’’ என்றார்.

வேட்டு வெச்ச ஓட்டு

மீனா படித்தவர். அரசாங்கத்தில் வேலை. ‘‘எங்க அப்பா வீடு மட்டுமில்லை, எங்க சொந்தக்காரர்களே ஒரு கட்சிக்குத்தான் ஓட்டுப்போடுவாங்க. அந்தக் கட்சியின் தலைவர் எங்க சாதிக்காரர். இதுவரை யாரும் அந்தக் கட்டுப்பாட்டை மீறியதில்லை. என் கணவர் இடதுசாரி. அவர் கட்சி யாருடன் கூட்டணி வச்சிருக்கோ அதுக்குத்தான் ஓட்டுப்போடச் சொல்வார். போன தடவைதான் அவர் சொல்லாத கட்சிக்குப் போடலாம் என்று முடிவுசெய்தேன். அதே மாதிரி ஓட்டைப் போட்டுட்டு வந்தேன். கணவர் யாருக்கு ஓட்டு போட்டே என்று கேட்டார். உண்மையைச் சொன்னேன். 3 மாதங்கள் அவர் என்னுடன் பேசவே இல்லை. ஒரு ஓட்டு நம்ம இல்லறத்துக்கே வேட்டு வெச்சிருச்சேன்னு எனக்கு வருத்தமாகிவிட்டது. நான் ஏதோ தப்பு செய்ததுபோல குற்ற உணர்வாக இருந்தது’’ என்றார்.

இன்று பெண்கள் எல்லோருக்கும் வாக்குரிமை இருந்தும் அதை முறையாகப் பயன்படுத்துகிறோமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள், கிராமம், நகரம் என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. வாக்கு என்பது அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லை என்றே நினைக்கிறார்கள்.

தியாகத்தால் வந்த உரிமை

இந்த வாக்குரிமை கிடைப்பதற்கு உலகம் முழுவதும் எவ்வளவோ பெண்கள் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள், உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள்!

இந்தியாவில் தேர்தல்களில் கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்து வந்த பெண்களின் பங்களிப்பு சமீப ஆண்டுகளில் குறைந்துவருகிறது.

பெண்கள் அமைதியை விரும்புகிறவர்கள். சுற்றுச்சூழலைக் காப்பதில் அக்கறை உள்ளவர்கள். மனிதனைச் சீரழிக்கும் மது ஒழிப்பில் ஆர்வம் உள்ளவர்கள். பெண் கல்வியைப் பரவலாக்குவதற்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் களைந்து, பாலியல் சமத்துவம் பெறுவதற்கும் பெண்கள் அரசியலில் ஈடுபடுவது அவசியம். பெண்கள் அதிக அளவில் அரசியலில் ஈடுபடும்போதுதான் சமுதாயம் உண்மையான மாற்றத்தைச் சந்திக்கும்.

அதற்கு முதல் அடி, நம் வாக்குரிமையை நாம் உண்மையாக, நேர்மையாக, சுய விருப்பத்தோடு, நல்லது கெட்டது ஆராய்ந்து பயன்படுத்துவதுதான். சாதாரணமாகக் கிடைத்த உரிமையல்ல இது. நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்த பல ஆயிரம் பெண்களின் போராட்டங்களால், தியாகங்களால் கிடைத்த மகத்தான பொக்கிஷம்!

தொடர்புக்கு: sujatha.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x