Published : 12 Jul 2022 07:20 AM
Last Updated : 12 Jul 2022 07:20 AM
ஆறு, குளம் எனப் பூமிக்கு மேலே இருந்த நீர்ப் பயன்பாடு காலப்போக்கில் உற்பத்தி சார்ந்த அறிவியல் மாற்றங்கள், பருவகால மாற்றங்கள் போன்றவற்றால் நிலத்தடி நீர் பயன்பாடாக மாறியுள்ளது.
தற்போது உலகளவில் அதன் சராசரிப் பயன்பாடு 40% ஆக உள்ளது. நமது நாட்டின் சராசரி, உலக சராசரியைவிட சற்றே கூடுதல். உலக அளவில் தண்ணீர் ஒரு மாபெரும் விற்பனைப் பொருளாக மாறியுள்ள நிலையில், நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கு நியாயமாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதன் தேவை உணரப்படுகிறது. அதே நேரத்தில், நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நடவடிக்கைகள் தேவை.
சுமார் 30 பில்லியன் டாலர் செலவில் நிலத்தடி நீரை ஆறாக மாற்றிய பெருமை வடஆப்பிரிக்க நாடான லிபியாவுக்கு உண்டு. ஆறுகள் எதுவும் இல்லாத லிபியாவில் ஒரு சில பரந்த ஏரிகள் மட்டுமே உள்ளன. தெற்கு லிபியாவின் சஹாரா பாலைவனத்தில் கச்சா எண்ணெய் எடுப்பதற்காக 1953 இல் எண்ணெய்த் தேட்டப் பணிகள் நடைபெற்றன.
சுமார் 2 மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவில் அந்தப் பாலைவனத்தின் கீழ் உள்ள நீர்நிலைகளில் சிக்கியிருக்கும் பரந்த அளவிலான நன்னீர் கண்டறியப்பட்டது. உலகின் மிகப் பெரிய Nubian Sandstone Aquifer அமைப்பான அதில் 3,73,000 பில்லியன் கன மீட்டர் தண்ணீர் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்கக் கடல்நீரை உப்புநீக்கம் செய்வது அல்லது ஐரோப்பாவிலிருந்து குழாய் அல்லது கப்பல்கள் மூலம் தண்ணீரை இறக்குமதி செய்வது உள்ளிட்ட பல்வேறு வழிகளைத் தேடிக்கொண்டிருந்த லிபிய அரசுக்கு, இது ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது.
சர்வாதிகாரியாகப் பார்க்கப்பட்ட அன்றைய ஆட்சியாளர் கடாபிக்கு ‘மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப் பெரும் நதி’க்கான (Great Man Made River – GMMR) எண்ணம் பிறந்தது. குடிநீருக்காக மட்டுமல்லாமல், வடலிபியாவின் வறண்ட பகுதியில் வேளாண்மை செய்யவும், அதன் மூலம் உள்நாட்டு உணவு உற்பத்தியை அதிகப்படுத்தவும் திட்டமிடப்பட்டு 28.08.1984 அன்று திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
உலகின் பெரிய திட்டம்
பாலைவனத்தில் நான்கு நிலத்தடி நீராதாரப் பகுதிகளில் 1,350 கிணறுகள் தோண்டப்பட்டுத் தற்போது இயங்கிவருகின்றன. பெரும்பாலானவை 500 மீட்டருக்கு மேல் ஆழமானவை.
கிணற்றில் மின்மோட்டார் மூலம் எடுக்கப்படும் நீரை, ஏழு மீட்டர் நீளம், நான்கு மீட்டர் விட்டம் கொண்ட குழாய்கள் மூலம் 4,000 கி.மீ.க்குக் கொண்டுசெல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவை நாளொன்றுக்கு 60 லட்சம் கன மீட்டர் தண்ணீரை வழங்குகின்றன.
1,55,000 ஹெக்டேர் நிலத்தில் விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. லிபியாவின் நிலத்தடி நீர் 650 ஆண்டுகள் நீடிக்கும் என்று அந்நாட்டு நிபுணர்களும் 250 ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் என்று வெளிநாட்டு நிபுணர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். எதுவாயினும் ஜி.எம்.எம்.ஆர். என்பது உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டமாகும்.
1999-ல், பாலைவனப் பகுதிகளில் தண்ணீரைப் பயன்படுத்துவது தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிக்காக லிபியாவுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டியது யுனெஸ்கோ.
நிலத்தடி நீரைப் பாதுகாப்பதும், முறையாகப் பயன்படுத்துவதும் அவசியம். நிலத்தடி நீரின் முதன்மைப் பயனாகக் குடிநீரும் பாசன நீருமே இருக்க வேண்டும். லிபியா போன்ற கடும் நெருக்கடியை நாம் எதிர்கொள்ளவில்லை. தற்போது உள்ள நிலத்தடி நீர் வளத்தைச் சரியான திட்டமிடலுடன் மேம்படுத்தினாலே பாசனம் உட்பட அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தைக் குறித்தும் அப்படிப்பட்ட ஒரு எதிர்பார்ப்பே உள்ளது. ஆனால், அதன் அறிவிப்புகள் நிலத்தடி நீரைப் பாதுகாப்பது, மேம்படுத்துவது என்பதையெல்லாம் தாண்டி, அதை விற்பனைப் பண்டமாக மாற்றுவதிலேயே ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.
29.06.2022 அன்று மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் தலைவர் பெயரில் ஓர் அறிவிப்பு தமிழ் நாளிதழ்களில் வெளியானது. அதில் ‘எதிர்வரும் 30.09.2022-க்குள் ரூ.10,000 செலுத்தி, ஏற்கெனவே நிலத்தடி நீரைப் பயன்படுத்துபவர்கள் பதிவுசெய்துகொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்படிப் பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி வீடு, விவசாயம் தவிர்த்து மற்ற அனைத்துப் பயன்பாடுகளுக்கும் பொருந்தக்கூடிய இந்த அறிவிப்பு, மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நீர் பாதுகாப்பு வழிமுறைகள்
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் விரிவான அரசிதழ் அறிவிக்கை மத்திய அரசால் 24.09.2020 அன்று வெளியிடப்பட்டது. அரசிதழின் 32ஆவது பக்கத்தின் 2ஆவது பத்தியின்படி, மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் தடையில்லாச் சான்று பெறுவது என்பது நாட்டின் 22 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
தமிழகம் உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் நிலத்தடி நீர் கட்டுப்பாட்டு வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் அது பொருந்தாது. ஆனால், அதே சமயம் 34 ஆம் பக்கத்தில் நோக்கம், பின்னணி குறித்த தலைப்பின் 6 ஆவது பத்தியில், தமிழகம் போன்ற மாநிலங்களின் நிலத்தடி நீர் பாதுகாப்பு வழிமுறைகள் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் வழிமுறைகளோடு பொருந்தாத பட்சத்தில், மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் அறிவிப்பே பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அரசிதழில் 17 தலைப்புகளில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் 1.0 இன்படி கிராம, நகரப் பகுதிகளில் தனிநபர் வீடுகளுக்கும், கிராமக் குடிநீர் திட்டங்களுக்கும், ராணுவம், மத்திய ஆயுதப் படையினர், விவசாயம், நாளொன்றுக்கு 10,000 லிட்டர் வரை பயன்படுத்தும் சிறு, குறு தொழிற்சாலைகளுக்குத் தடையில்லாச் சான்று பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் அச்சம்
வழிமுறை 3.0 இல் விவசாயத் துறை குறித்துக் கூறியுள்ளபோது, வேளாண்மை நாட்டின் முதுகெலும்பு என்று கூறி, சிறிய பாசனதாரர் குறித்த 2013 - 14 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பை மேற்கோள்காட்டி 4 ஹெக்டேர் வரை உள்ள சிறு, குறு உழவர்கள் 87.86%, 4-10 ஹெக்டேர் வரை உள்ள நடுத்தர உழவர்கள் 9.18%, 10 ஹெக்டேருக்கு மேல் உள்ளவர்கள் 2.96% உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உழவர்கள் நிலத்தடி நீர்ப் பயன்பாட்டைக் கணக்கீடு செய்வது கடினமான பணியாகக் குறிப்பிட்டுள்ள அதே வேளையில், மானிய விலையில் வழங்கப்படும் மின்சாரம், நிலத்தடி நீருக்கான சரியான விலையை நிர்ணயிப்பது குறித்துப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது உழவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளிட்டுள்ள பொது அறிவிப்பு, தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது எனவும், இது தொடர்பான மறு அறிவிப்பு வரும்வரை ஏற்கெனவே உள்ள நடைமுறையே தொடரும் எனவும் தமிழ்நாடு நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. வேளாண்மைக்குக் கட்டணமில்லா மின்சாரம், கட்டணமில்லாத் தண்ணீர் என்கிற முறை தொடர்வதே சரியானது.
தமிழ்நாட்டின் ஆறு, ஏரி - குளங்களில் நீர் செறிவூட்டும் மையங்களை முறையாகச் செயல்படுத்தும்போது முழுமையாக ஈடுசெய்ய முடியாவிட்டாலும் கணிசமான அளவுக்கு நிலத்தடி நீரை மறு உற்பத்தி செய்ய முடியும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதைத் தவிர்த்துவிட்டு, தொழில் துறைப் பயன்பாடுகள்போல, பாசனத்துக்குப் பயன்படும் நிலத்தடி நீருக்கும் விலை நிர்ணயிக்கக் கூடாது. நீரின்றி அமையாது வேளாண்மை!
- வ.சேதுராமன், துணைத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம். தொடர்புக்கு: mannaisethu1@gmail.com
To Read this in English: No pricing of irrigational water, please!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT