Last Updated : 16 May, 2016 07:45 AM

 

Published : 16 May 2016 07:45 AM
Last Updated : 16 May 2016 07:45 AM

ஒரு ஓட்டு எல்லாவற்றையும் மாற்றிவிடுமா?

வீட்டிலிருந்து புறப்பட்டபோது, மேலே மோதுவதுபோலக் கடந்தது தண்ணீர் லாரி. அடையாறு கரையிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ள தெரு. ஆறு மாதத்துக்கு முன், இதே ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டபோது, சென்னையின் பெரும் பகுதி மிதந்தது. தெரு அப்போது மூழ்கியது. ஆறு எது, தெரு எது என்று பிரிக்க முடியாதபடி ஓடிய வெள்ளத்தில், தரைத்தளத்திலிருந்த வீடுகள் யாவும் மூழ்கின. அரசாங்கம் அந்த மழையை நூறாண்டு காணாத வெள்ளம் என்று குறிப்பிட்டது. அடுத்த வாரமே வெள்ளம் வடிய அடையாறு வறண்டு மீண்டும் சாக்கடைப் பாதையானது. தண்ணீரை எப்போது திறக்க வேண்டுமோ, அப்போது திறக்கவில்லை; தண்ணீரை எப்போது தேக்க வேண்டுமோ அப்போது தேக்கவுமில்லை. இன்னும் கோடை உச்சம் தொடவில்லை. அதற்குள் மீண்டும் காசு கொடுத்துத் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை.

தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருப்பதாக அரசின் பழைய புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இவற்றில் எத்தனை இன்றைக்கும் ஏரிகளாக இருக்கின்றன என்பது யாரும் அறியாதது. பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன அல்லது தூர்ந்து சுருங்கியிருக்கின்றன. 25 ஆண்டுகளுக்கு முன் நீரியல் நிபுணர் பழ.கோமதிநாயகம் ஓர் ஆய்வு மேற்கொண்டார். சென்னைக்குத் தண்ணீர் கொடுக்கும் வீராணம் ஏரியின் கொள்ளளவு 1923-ல் 41 மில்லியன் கன மீட்டராக இருந்தது, 1991-ல் 28 மில்லியன் கன மீட்டராகக் குறைந்துவிட்டதை அந்த ஆய்வின்போது அவர் கண்டறிந்தார். சென்னைக்குத் தண்ணீர் கொடுக்கும் இன்னொரு நீர்நிலையான பூண்டி ஏரியை ஒட்டியுள்ள குள்ளம்பாக்கம் ஏரி இன்றைக்கு ஆக்கிரமிப்பில் சிக்கி விளைநிலமாகக் காட்சியளிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் அணைக்குச் சென்றிருந்தபோது அங்கு உருப்படியாகத் தூர்வாரி கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது என்று அங்கிருப்பவர்கள் சொன்னார்கள். தமிழ்நாட்டுக்குச் சோறிடும் காவிரியின் பிரதான அணைகளில் ஒன்று அது.

சென்னையின் சராசரி மழையளவு ஆண்டுக்கு 1300 மி.மீ. அடையாற்றில் மழைக்காலத்தில் செல்வது கிட்டத்தட்ட 100 ஏரிகளின் உபரிநீர். சென்னைக்குள்ளேயே 142 குளங்கள் இருந்தன. சென்னை நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவு 2.45 டிஎம்சி என்று குறிப்பிடுவார் பேராசிரியர் ஜனகராஜன். தண்ணீருக்கு அலைய வேண்டிய நகரம் அல்ல இது. பெரும்பாலான சென்னைவாசிகள் எல்லாப் பருவத்திலும் குடிநீரை 25 லிட்டர் கேன் ரூ.30 எனும் விலையில் காசு கொடுத்து வாங்கியே குடிக்கின்றனர். கோடையிலோ பயன்பாட்டிற்கான தண்ணீரையும் விலைக்கு வாங்குகிறார்கள். ஒரு லாரி தண்ணீர் விலை சுமார் ரூ.3,000. செல்பேசி, மடிக்கணினி, ஸ்கூட்டர் வாங்க பாதிக் காசு என்றெல்லாம் கவர்ச்சிகர அறிவிப்புகளை வாரி வீசும் கட்சிகள் எதுவும் தண்ணீர் பிரச்சினையை விவாதிக்கவில்லை. இந்தத் தேர்தல் காலத்திலும்கூட தமிழகத்தில் இது மக்கள் பிரச்சினையாகவில்லை. நேற்றிரவு மின்சாரம் நின்றபோது பக்கத்து வீட்டுக்காரர், “சார், நம்ம தெருவுலேயும் பணப்பட்டுவாடா ஆரம்பிச்சுடுச்சு” என்றார் குஷியாக.

இந்த ஊரில் ரத்தக்கொதிப்பு வராமலிருக்க தினமும் தியானம் செய்ய வேண்டும். தண்ணீரை ரூ.3 ஆயிரம் விலை கொடுத்து வாங்கும் ஒரு சமூகத்துக்கு அரசியல்வாதிகளிடம் அதுபற்றிக் கேட்க ஏதும் இல்லை; ஓட்டுப் போட ஐநூறு கிடைக்குமா, ஆயிரம் கிடைக்குமா என்று அலைகிறது என்றால், இந்த அற்பத்தனத்தை வேறு எப்படிச் சகித்துக்கொள்வது?

காமராஜரின் 9 ஆண்டு கால ஆட்சிக் காலகட்டத்தில் மட்டும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் இவை: மேட்டூர் கால்வாய்த் திட்டம், காவிரிப் படுகை வடிகால் விரிவாக்கத் திட்டம், கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம், விளாத்துறை திட்டம், புள்ளம்பாடி திட்டம், வீடுர் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்.

காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற 1954-55-ல் தமிழகத்தின் பட்ஜெட் மதிப்பு ரூ.47.18 கோடி. அவர் பதவி விலகிய 1962-63-ல் பட்ஜெட் மதிப்பு ரூ.121.81 கோடி. தமிழகத்தின் இன்றைய பட்ஜெட் மதிப்பு ரூ.1.25 லட்சம் கோடி. பிரச்சினை நிதி அல்ல. தலைவர்களின் பொறுப்பின்மை. மக்களின் விழிப்புணர்வின்மை.

நம்மூரில் இன்னும் ஒரு கவுன்சிலருக்கான தகுதி - பொறுப்புகள் என்ன, ஒரு சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினருக்கான தகுதி பொறுப்புகள் என்ன என்பதையே பலர் உள்வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. கிராமப்புறங்களில் பயணிக்கும்போது, நல்லவர் என்று மக்கள் சுட்டிக்காட்டும் பிரதிநிதிகளின் தகுதியாக பலர் சொல்லும் காரணம், வீட்டு விசேஷம் எதுவாக இருந்தாலும் அவர் வந்து செல்வார் என்பது. இதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள், தங்கள் பகுதிக்கான சாலைகள், குடிநீர் இன்னபிற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பவரையே நல்ல சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் குறிப்பிடுகிறார்கள். நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சட்டமியற்றும் இடங்களில் அமருவதற்கான தகுதிகளா இவையெல்லாம்?

இன்னும் பலருக்குத் தங்கள் ஓட்டு ஜெயிக்க வேண்டும் என்பதில் அலாதியான ஆர்வம் இருக்கிறது. “இவர் ஜெயிப்பாரா? அவர் ஜெயிப்பாரா?” என்று விவாதத்தில் இருவரை மட்டும் பேசுபொருளாக்கி ஏனைய ஜனநாயக சக்திகளைத் தனக்கே தெரியாமல் சாகடிக்கும் செயல் இது. ஜெயிக்கும் குதிரையின் மீது பந்தயம் கட்டி ஆடுவது சூதாட்டம். ஒரு பொறுப்புணர்வுமிக்க வாக்காளர் சூதாடிபோலச் செயல்படக் கூடாது. ‘உன்னதமான நோக்கங்களுக்காக இந்த மனிதர் நிற்கிறார்; அவர் ஒரேயொரு ஓட்டு வாங்கினாலும் சரி; அவரை ஆதரிப்பது என் தார்மிகக் கடமை’ என்று அளிக்கப்படும் ஓட்டே ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்தும்.

ஒரு குடிமைச் சமூகம் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ளும்போது, அங்குள்ள அரசியல் சூழல் எத்தனை மாறும் என்பதற்கு நமக்கு மிக அருகிலிருக்கும் உதாரணம் கேரளம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாட்டிலேயே முதல் முறையாக ‘ஆன்டிபயாடிக் ரெஸிஸ்டென்ட் பாலிசி’யைக் கொண்டுவந்திருக்கிறது கேரள அரசு. ‘இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தல்’ என்று அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த பிரச்சினை இது. இந்தியாவின் ரூ.50 ஆயிரம் கோடி மருந்துச் சந்தையில் தேவையற்ற அல்லது அதீதமாகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் 60%-க்கும் அதிகம். குறிப்பாக 80% ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தேவையற்ற வகையிலேயே பரிந்துரைக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 1,300 கோடி அலகுகள் அளவுக்கு நோய்முறி இங்கு உட்கொள்ளப்படுவதாகச் சொல்கிறது ‘லான்செட்’ ஆய்வு. உலகிலேயே அதிகபட்ச அளவு இது. கடந்த 5 ஆண்டுகளில் மேலும் 40% நுகர்வு அதிகரித்திருக்கிறது. தேவையில்லாமல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதை, பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தும் கேரள அரசின் இந்த முடிவு நாட்டுக்கே முன்னோடி.

தீவிரமான பாதிப்புகளை உண்டாக்கும் புற்றுநோய், எச்ஐவி நோய்த்தொற்று, பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வலியோடு மரணத்தை எதிர்கொண்டிருக்கும் நோயாளிகளுக்கான ‘வலி மருத்துவச் சிகிச்சை’யில் உலகில் மோசமான நிலையிலுள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. கேரளம் விதிவிலக்கு. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு ‘மார்ஃபின்’ மாத்திரை கிடைக்காமல் வலியோடு துடிதுடித்துச் சாகும் ஏழைகள் பலர் உண்டு. கேரளம் அற்புதமாகச் செயலாற்றுகிறது. நாட்டின் ஏனைய எல்லா மாநிலங்களிலும் உள்ள மொத்த வலித் தணிப்பு மையங்களின் கூட்டுத்தொகையைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான வலித் தணிப்பு மையங்களை கேரளம் கொண்டிருக்கிறது.

முதல்வர் உம்மன் சாண்டி இந்தத் தேர்தலையொட்டி வெளியிட்ட 63 பக்க அறிக்கையின் மிக முக்கியமான முழக்கம் ‘அனைவருக்கும் உணவு, அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மருத்துவ வசதி!’

அருகருகே இருக்கும் இரு மாநிலங்கள் இடையே எப்படி இவ்வளவு மாறுபட்ட கலாச்சாரச் சூழல்கள் நிலவுகின்றன? கேரளர்களை எது முன்னோக்கி செலுத்துகிறது? அவர்களுடைய மேம்பட்ட அரசியலுணர்வே அடிப்படையான காரணம். ஒரு எழுத்தாளனாக வாசிப்புக்கு மலையாளச் சமூகம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அங்குள்ள அரசியல் விழிப்புணர்வுக்கான மிக முக்கியமான காரணமாகக் கருதுகிறேன். தொடர்ந்து கற்றுக்கொள்வதிலும், தம்மை மேம்படுத்திக்கொள்வதிலும் கேரளர்கள் காட்டும் அக்கறையின் வெளிப்பாடாகவே அவர்களுடைய வாசிப்பைப் பார்க்கிறேன்.

தமிழகத்தின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி அளவே கொண்ட சின்ன மாநிலம் கேரளம். இந்தியாவில் இந்தி நீங்கலாக ஏனைய பிராந்திய மொழிகளில் அதிகம் மலையாளப் பத்திரிகைகளே விற்கின்றன. கேரளத்தின் இரு பிரதான பத்திரிகைகளான ‘மலையாள மனோரமா’, ‘மாத்ருபூமி’இரண்டும் முறையே 22.5 லட்சம், 14.6 லட்சம் பிரதிகள் விற்கின்றன. பொதுவான பத்திரிகைகளோடு கூடவே அவரவர் சமூகம் சார்ந்த, கட்சி சார்ந்த பத்திரிகைகள் வாசிக்கும் பழக்கமும் மலையாளிகளிடம் இருக்கிறது. காங்கிரஸ் பத்திரிகையான ‘வீக்‌ஷணம்’, கம்யூனிஸ்ட்டுகளின் பத்திரிகையான ‘தேசாபிமானி’ இரண்டும் குறைந்தது சில லட்சங்கள் விற்கின்றன.

கேரளத்தில் சிறு கிராமங்களில்கூட ஒன்றுக்கும் மேற்பட்ட படிப்பகங்கள் உண்டு; அரசியல் கட்சிகள் நடத்தும் இந்தப் படிப்பகங்களே கிராமப்புற அரசியல் வகுப்பறைகள் என்று சொன்னார் ஒரு நண்பர். ஜெயமோகன் தமிழில் எழுதிய ‘நூறு நாற்காலிகள்’ சிறுகதையை மலையாளத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். இதுவரை 2 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. தமிழகத்தில் ஒரு நாவல் அல்லது சிறுகதைத் தொகுப்பை 500 பிரதிகள் விற்க இங்கே பதிப்பாளர்கள் படும் பாடு சொல்லி மாளாது.

என்னளவில், சமகாலத்தில் வாசிப்பை ஒரு சமூகத்தின் பண்பாட்டு மதிப்பீடுகளில் ஒன்றாகவே பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்துடனும் உலகத்துடனும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு உயிர்ப்போடு கை கோத்துக்கொள்வதற்கான அடிப்படைச் செயல்பாடுகளில் ஒன்று இன்றைக்குப் பத்திரிகை வாசிப்பது. வாசிப்புக்கும் நவீன வாழ்க்கைக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஒரு கல்லூரி மாணவரால், அவருடைய தாய்மொழியில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை அரை மணி நேரம் நிதானமாக வாசிக்க முடியாமல்போவது வெறும் வாசிப்பு சார்ந்த பிரச்சினை அல்ல. நிதான வாசிப்புக்கும் நிதான வாழ்க்கைக்கும் தொடர்பிருக்கிறது. நிதான வாழ்க்கைக்கும் தொலைநோக்கு அரசியலுக்கும் தொடர்பிருக்கிறது. ரசனைகளே மதிப்பீடுகளாகின்றன. மதிப்பீடுகளே தேர்வுகளைத் தீர்மானிக்கின்றன!

என் ஒரு ஓட்டால் மாற்றம் உண்டாகிவிடுமா என்ற கேள்விக்கு ஜனநாயகம் எப்போதும் பதில் வைத்திருக்கிறது. ராஜஸ்தானில் 2008 தேர்தலில் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர் மாநில காங்கிரஸ் தலைவர் சி.பி.ஜோஷி. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப்போனார். கர்நாடகத்தில் 2004 தேர்தலில் சந்தேமரஹளி தொகுதியில் ஏ.ஆர். கிருஷ்ணமூர்த்தி இப்படி ஒரே ஒரு ஓட்டில் தோற்றுப்போனார். ஒவ்வொரு ஓட்டும் முடிவுகளைத் தீர்மானிக்கும்; அது தேசத்தின் தலையெழுத்தையும் மாற்றுவதாக ஆக வேண்டும் என்றால், வாக்களிக்கும் சமூகம் முதலில் தொலைநோக்கு கொண்டதாக மாற வேண்டும். நாம் நம்மை மேம்படுத்திக்கொள்ளாமல் எந்தச் சமூக மாற்றமும் சாத்தியமே இல்லை!

சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
(நிறைந்தது)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x