Published : 20 May 2016 09:16 AM
Last Updated : 20 May 2016 09:16 AM
வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அதிமுக முன்னிலை பெறத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைகோ மீம்ஸ்கள் பின்னியெடுக்கத் தொடங்கிவிட்டன. மக்கள் நலக் கூட்டணியின் தோல்விக்கு அவர்தான் காரணம் என்றும், திமுகவின் வாக்குகள் சிதறி, அதன் பலன் அதிமுகவுக்குச் செல்லக் காரணமாக இருந்தார் என்றும் பொருள்படும் வகையில் அமைந்த மீம்ஸ்கள் அவை.
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று ஒரு அணியைத் தொடங்கும் முயற்சியில் இறங்கியபோதே, அதில் வைகோ கைகோத்ததைச் சங்கடமாகப் பார்த்தவர்கள் உண்டு.
தகர்ந்த நம்பிக்கை
மூன்றாவது அணி உருவாக்கும் முயற்சிகள் தொடங்குவதற்கு முன்பு, வைகோ திமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமாவளவனும் அந்த நிலைப்பாட்டில்தான் இருந்திருக்கிறார். எனினும், திமுகவில் கிடைத்த ‘வரவேற்பு’ இருவரையும் தனிக் கூட்டணி முடிவுக்குத் தள்ளிவிட்டது. கூடவே, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்துகொள்ள மக்கள் நலக் கூட்டியக்கம் உருவாகி, பிற்பாடு அது கூட்டணியாக உருவெடுத்தது. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நிதானமாகவும், கவனமாகவும் செயல்பட்டிருக்க வேண்டிய பொறுப்பு வைகோ வசம் இருந்தது. ஆனால், அதை அவர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று பலரும் கூறினர். எதிலும் உணர்ச்சிவசப்படுபவரான வைகோ, தன் ஆளுமையைப் பயன்படுத்தி மநகூவின் எல்லா முடிவுகளையும் தீர்மானிப்பவராக / முடிவுகளை நோக்கி ஏனையோரைத் தள்ளுபவராக மாறினார். அந்த முடிவுகள் மநகூ மீதான நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் இழக்க அவரே காரணமானார்.
மதுவிலக்கு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளுக்காக இணைந்து போராடிய அந்தக் கூட்டணிக்கு, அரசியல் நடுநிலையாளர்கள், அறிவுஜீவிகள், சமூகச் செயல்பாட்டாளர்களின் ஆதரவும் கிடைத்தது. ஒருவேளை தேர்தலில் வெற்றி கிடைக்காவிட்டாலும், இரு பெரும் கட்சிகளுக்கு எதிரான மாற்றுச் சக்தியை எதிர்காலத்தில் வளர்த்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கை தரும் விதத்தில் இக்கூட்டணி தொடரும் என்று நம்பியவர்கள் பலர். கவுரவமான தோல்வியே போதும்; எதிர்காலத்துக்கான விதையாக அது இருக்கும் என்றும் பலர் கருதினர். ஆனால், தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி இணைந்தபோது அக்கூட்டணி மீது நம்பிக்கை வைத்திருந்த பலர் நம்பிக்கை இழந்து நின்றது வெளிப்படையாகத் தெரிந்தது.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.வில் நடந்த பெண்கள் தின விழாவில், “விஜயகாந்த் தனியாகத்தான் நிற்கப்போகிறான்” என்று அதீத நம்பிக்கையுடன் விஜயகாந்த் பேசியதும், அடுத்த சில நாட்களிலேயே மநகூவுடன் கூட்டணி என்று அவர் அறிவித்ததும் அவர் மீதான நம்பகத்தன்மையைப் பெரிய அளவில் சிதைத்தது. ஏற்கெனவே ஒரு எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படா மனிதர் என்று பெயர் பெற்ற, பொறுப்பற்ற பேச்சுகளுக்காகச் சுட்டப்பட்ட விஜயகாந்தை மநகூவுக்குக் கொண்டுவர வைகோ பெரும் பங்காற்றினார். அதுவரை ‘மநகூவின் முதல்வர் வேட்பாளர் யார்?’ என்ற கேள்வி எழுந்தபோதெல்லாம், ‘முதல்வர் வேட்பாளர் ஜனநாயக விரோதம்’ என்று கூறிய வைகோ, விஜயகாந்த் மந கூட்டணியோடு கைகோத்ததும், ‘விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்’என்றும் ‘கேப்டன் கூட்டணி’ என்றும் கூச்சமே இல்லாமல் சொன்னது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
சீற்றமும் சாடலும்
ஆரம்பத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாகப் பார்க்கப்பட்ட மநகூவை ஒருகட்டத்தில் திமுகவுக்கு எதிரான தன்னுடைய தனிப்பட்ட ஆயுதம்போலக் கையாளத் தொடங்கினார் வைகோ. மநகூவில் உள்ள தலைவர்கள் பலரே நெளிய ஆரம்பித்தனர். இரு கட்சிகளுக்கும் எதிரான கூட்டம் என்று சொல்லப்பட்டாலும் ‘அதிமுகவின் பி அணி’ என்ற குற்றச்சாட்டு மநகூ மீது விழ வைகோவின் திமுகவுக்கு எதிரான ஆவேசப் பேச்சுகளே முக்கியக் காரணமாக அமைந்தது. தேமுதிகவிலிருந்து சந்திரகுமார் உள்ளிட்ட அதிருப்தித் தலைவர்கள் வெளியேறியபோது விஜயகாந்த், பிரேமலதாவை விட அதிகமாகக் கொந்தளித்தது வைகோதான். அது திமுகவின் சதி என்று கடுமையாகக் குற்றம்சாட்டினார். பல கோடிகள் கைமாறின என்று சீற்றம் காட்டினார். உச்சத்தில் திமுக தலைவர் கருணாநிதியைச் சாதியரீதியாகச் சாடினார்.
திமுக, அதிமுக தலைவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் ஊடகங்களும் தங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாததுபோல் நடந்துகொள்வதாகப் பேசினார். ஊடகங்கள் பணம் வாங்கிக்கொண்டு ஒருதலைபட்சமாகச் செயல்படுகின்றன என்றும் குறைபட்டுக்கொண்டார். குறிப்பிட்ட சில ஊடகங்களைப் பகிரங்கமாகவே விமர்சித்தார். கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த வைகோ, அங்கு ஏற்பட்ட சின்ன பிரச்சினையைக் காரணம் காட்டி, ‘சாதி மோதலுக்குத் திமுக தீட்டியிருந்த சதித்திட்டத்தை அறிந்ததால்’போட்டியிடாமல் தவிர்ப்பதாகக் கூறியபோது ஒட்டுமொத்த மநகூவும் ஏமாற்றமடைந்தது வெளிப்படையாகத் தெரிந்தது.
திமுகவுக்கு எதிரான ஆவேசம்
தனது தோல்வி உறுதி என்று முன்கூட்டியே தெரிந்துகொண்டதால் அப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று விமர்சனங்கள் எழுந்தன. ஏதேதோ விளக்கங்கள் மூலம் தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க முயன்றாரே ஒழிய, தனது முடிவை மறுபரிசீலனை செய்ய முன்வரவில்லை. ஆனால், நாடக பாணியிலான தனது பேச்சுக்கள், முகபாவனைகள், உடல்மொழிகள் இளம் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் கிண்டலுக்குள்ளானதை அவர் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. பொது இடங்களில் கோபப்படுவது, மேடைகளில் பழைய கதைகளைப் பற்றி நீண்ட நேரம் பேசுவது என்று தவிர்த்திருக்க வேண்டிய பல விஷயங்களைத் தயக்கமின்றிச் செய்தார். ஒருகட்டத்தில் மநகூவின் வெற்றி சம்பந்தமாக வைகோவுக்கு நிஜமாகவே அக்கறை இருக்கிறதா என்று சந்தேகம் எழும் அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்தன. ஒருபக்கம் விஜயகாந்த், இன்னொரு பக்கம் வைகோ.. ‘இருவரும் என்ன பேசுவார்களோ!’ என்று பதறும் சூழல் மநகூ தலைவர்களுக்கே ஏற்பட்டது. தேர்தல் மேடைகளை நாடக மேடைகளாக மாற்றிக்கொண்ட வைகோவோ எதையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தாம் வெல்வதைவிடவும் திமுக வென்றுவிடக் கூடாது எனும் ஆவேசமே அவரிடம் வெளிப்பட்டதாகத் தெரிந்தது.
இதோ, இப்போது ‘இனி இந்தக் கூட்டணி தொடருமா, எதிர்காலத்தில் மூன்றாவது அணிக்கான உரையாடலே இல்லாமல் போய்விடுமா?’ என்றெல்லாம் சந்தேகம் எழும் அளவுக்குப் பெரும் தோல்வி அடைந்திருக்கிறது மநகூ.
சமூக வலைதளங்களில் பலரும் அதிமுக வெற்றி / திமுகவின் தோல்வியின் தொடர்ச்சியாக ‘வாழ்த்துகள் வைகோ!’ என்று பதிவுகள் போட்டுவருகிறார்கள். ஒருவர் வைகோவின் படத்தைப் போட்டு ‘குயின் மேக்கர்’என்று கீழே குறிப்பு கொடுத்திருந்தார். நேரடியாகப் பார்த்தால், இவற்றுக்கு எந்த அர்த்தமும் இல்லை; அரசியல் புரிந்தால் நேர் அர்த்தம் தேட வேண்டிய அவசியம் இல்லை!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT