

வானகரத்தில் நேற்று ‘நடந்து’ முடிந்த அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமைக்கான ஆதரவு மிகவும் வெளிப்படையாகவே தெரிந்தது.
ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்க ஜூலை 11 அன்று மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடவுள்ள நிலையில், இரட்டைத் தலைமை தொடர வேண்டும் என்று வலியுறுத்திவரும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் வியூகங்கள் வெற்றிபெறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டுமே கட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் இதுபோன்ற அதிரடித் திருப்பங்கள் நிறைந்த உணர்ச்சிமிகு தருணங்களைக் கடந்துவந்திருக்கின்றன. அந்த வரலாற்றின் பக்கங்கள் இன்று அதிமுகவின் தலைமையைக் கைப்பற்ற விரும்பும் தலைவர்கள் பாடமாகக் கொள்ளத்தக்கவை.
1967-ல் திமுகவின் முதலாவது முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணா, அவரது பதவிக்காலம் முடியும் முன்பே 1969-ல் உடல்நலக் குறைவின் காரணமாகக் காலமானார். திமுகவின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான இரா.நெடுஞ்செழியன் தலைமையில் தற்காலிக அமைச்சரவை பதவியேற்றது.
முதல்வராக அவரே தொடர்வார் என்ற எதிர்பார்ப்புகளும்கூட நிலவின. அவரே தொடர வேண்டும் என்று தாமும் தொடக்கத்தில் விரும்பியதாகக் கருணாநிதி தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். ஆனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் அழைப்பை ஒருகட்டத்தில் தம்மால் தட்டிக்கழிக்க முடியவில்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் தவிர்த்த வேறு எந்தப் பதவியையும் ஏற்றுக்கொள்ள நெடுஞ்செழியனும் மறுத்துவிட்டார்.
அப்போது கருணாநிதியும் நெடுஞ்செழியனும் அண்ணா மறைவுக்குத் தனித்தனியாக இரங்கல் கூட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமையிருந்தது. ஆனால், கட்சி உடைந்துவிடக் கூடாது என்பது இருவரின் நோக்கமாகவும் இருந்தது என்பதை அவர்களது சுயசரிதைகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
சட்டமன்ற திமுக உறுப்பினர்களின் கூட்டத்தில் முதல்வர் பதவிக்கான போட்டிக்குக் கருணாநிதியும் நெடுஞ்செழியனும் முன்மொழியப்பட்டபோது, போட்டியிலிருந்து நெடுஞ்செழியன் விலகிக்கொண்டார். பின்பு அவர் சமாதானமாகி அமைச்சரவையில் பங்கேற்றார் எனினும், அதே ஆண்டு நடந்த திமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட மீண்டும் தயாரானார்.
தமிழ்நாட்டு அரசியலின் இரட்டைத் தலைமைப் பிணக்குகளில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அது அமைந்தது. திமுகவில் அதுவரை இல்லாத தலைவர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டு, கருணாநிதி தலைவராகவும் நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராகவும் பொறுப்புகளை ஏற்று சமரசத் திட்டத்துக்கு வந்தனர். ஆனால், நெடுஞ்செழியன் கருணாநிதிக்கு வழிவிட்டு இரண்டாவதாகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களாகப் பயின்ற நாட்களிலிருந்தே திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்தவர்கள் க.அன்பழகனும் நெடுஞ்செழியனும். கருணாநிதி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்பழகன், அது குறித்து வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
தாம் வளர்த்த கட்சி உடைந்துவிடக் கூடாது என்ற அக்கறையே அதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், கட்சி உடைந்துவிடக் கூடாது என்று தொடக்கத்தில் போட்டிகளிலிருந்து விலகி நின்ற நெடுஞ்செழியன் பின்பு தனிக்கட்சி தொடங்கி, மக்களிடம் வரவேற்பு கிடைக்காமல் அரசியல் தோல்வியைத் தழுவினார். எம்ஜிஆரின் அழைப்பை ஏற்று அதிமுகவில் இணைந்த பிறகே, மீண்டும் அவரால் இரண்டாவது இடத்தில் தொடர முடிந்தது.
எம்ஜிஆர் மறைந்தபோதும் நாவலர்தான் தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றார். அந்தப் பொறுப்பில் அவர் தொடரவும் விரும்பினார். ஜானகியை முன்னிறுத்தி ஆர்.எம்.வீரப்பனும் நாவலரை முன்னிறுத்தி ஜெயலலிதாவும் ஒரு அரசியல் சதுரங்க விளையாட்டை அப்போது நடத்தினர்.
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தார் ஜானகி. அதிமுகவின் ஒரு தரப்பினரால் ஜெயலலிதா பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து, போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது. அந்தத் தோல்வியின் பாடத்துக்குப் பிறகு, இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஓர் இணைப்பு முயற்சி தொடங்கியது.
ஜானகி தலைவராகவும் ஜெயலலிதா பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கலந்தாலோசித்தனர். ஆனால், ஜானகி அரசியல் களத்திலிருந்து தான் விலகுவதாக அறிவித்துக் கட்சியை ஒற்றைத் தலைமையின் கீழ் ஒப்படைத்தார்.
திமுக, அதிமுக இரண்டிலுமே கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்கத் தகுதியுள்ள, கட்சியின் சார்பில் முதல்வராகவோ இடைக்கால முதல்வராகவோ தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கட்சியின் நலன் கருதி தங்கள் பதவிகளையும் வாய்ப்புகளையும் தியாகம் செய்திருக்கிறார்கள்.
கட்சியின் நலன் கருதிய தலைவர்களின் தியாகமே இக்கட்சிகளை நெருக்கடியிலிருந்து காப்பாற்றியும் இருக்கிறது.
அண்ணாவின் மறைவின்போது ஆழ்ந்த மௌனத்தையே தனது அணுகுமுறையாகக் கொண்டிருந்தார் அன்பழகன். கல்லூரி நாட்களிலிருந்தே தன்னுடன் இணைந்து அந்தக் கட்சியை வளர்த்தெடுத்த நெடுஞ்செழியனை ஆதரிக்க அவர் தலைப்படவில்லை.
நெடுஞ்செழியனுக்கு அத்தனை தகுதிகளும் உண்டு என்றபோதும் தலைமையை விரும்பவில்லை. அண்ணாவுக்குப் பிறகு கட்சி உடைவதற்குத் தான் காரணமாகிவிடக் கூடாது என்ற எண்ணம் நெடுஞ்செழியனுக்கும் இருந்தது. கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் சக்தி தமக்கு இல்லை, அவர்கள் தன்னை ஒரு தனிப்பெரும் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை என்ற எண்ணம் உறுதியானதுமே கட்சியின் பதவியைக் கைமாற்றிவிட ஜானகியும் தயங்கவில்லை.
திமுகவும் அதிமுகவும் எதிரெதிர்க் கட்சிகளாக இருக்கலாம். அடிப்படையில் ஒரே கொள்கையிலிருந்து கிளை விரித்தவை. அவற்றின் நோக்கிலும் போக்கிலும் ஒப்புமைகள் நிறைய உண்டு. கருணாநிதி என்ற செயல்வீரரின் தலைமையை ஏற்றுக்கொள்ள அன்பழகனும் நெடுஞ்செழியனும் தயங்கவில்லை.
ஜெயலலிதாவிடம் கட்சித் தலைமையை ஒப்படைக்க ஜானகியும் தயங்கவில்லை. தமிழ்நாட்டு அரசியலில் இரட்டைத் தலைமை என்கிற உட்கட்சி ஜனநாயக முயற்சி மீண்டும் ஒருமுறை தோல்வியில் முடிந்திருக்கிறது. இன்று அதிமுகவின் இரட்டைத் தலைமையில் யாரோ ஒருவர் விலகி நின்று மற்றவரை ஆதரிக்க வேண்டும்.
கட்சியின் நலனை முன்னிறுத்தி தனது வாய்ப்பை விட்டுக்கொடுத்தவர்கள் வரலாற்றில் தியாகிகளாக நினைவுகூரப்படுகிறார்கள். விட்டுக்கொடுக்க மறுத்தவர்கள் தோல்வியைத் தழுவியதும் கூடவே நினைவுக்கு வருகிறது.
- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in