Published : 26 May 2016 10:06 AM
Last Updated : 26 May 2016 10:06 AM
தமிழகச் சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இருந்த எதிர்க் கட்சிகளில் பெரியதாக இருந்தது 2006-ல் 61 பேரோடு அதிமுக. பத்தாண்டுகளுக்குப் பிறகு 89 உறுப்பினர்களுடன் ஆகப் பெரிய எதிர்க்கட்சியாகத் திமுக. எதிர்க்கட்சித் தலை வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.
ஆளுங்கட்சியைக் கண்காணித்து, குறைகளைச் சுட்டிக்காட்ட, தவறுகளைத் தட்டிக்கேட்க இந்திய ஜனநாயகம் செய்துள்ள ஏற்பாடுதான் எதிர்க்கட்சித் தலைவர். கேபினட் அமைச்சர் அந்தஸ்து, சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட வாகனம், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட சம்பிரதாய மரியாதைகள் இருக்கும்.
1952 ல் 62 இடங்களைப் பெற்றுப் பிரதான எதிர்க்கட்சி யானது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. பிரதான எதிர்க்கட்சித் தலைவர் நாகிரெட்டி. மொழிவாரி மாநிலங்கள் பிரிவினைக்குப் பிறகு நான்காண்டு காலம் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் பி.ராமமூர்த்தி. அடிப்படைப் பிரச்சினைகள் தொடங்கி நிர்வாகச் சிக்கல்கள் வரை சட்டமன்றத்தில் எழுப்பினார். முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர் மட்டுமல்ல, மூத்த அமைச்சர்கள் பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம் ஆகியோரும் எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனைகளை ஏற்றனர். அரசியல் நாகரிகத்துக்கு அழகுசேர்த்தனர்.
கருத்திருமன் காலம்
தேர்தலில் திமுக முதன்முறையாகப் பங்கேற்றபோதே 15 இடங்களைப் பெற்றது. எதிர்க்கட்சியாகும் வாய்ப்பு நூலிழையில் தவறியது. காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டிக்கு 16 உறுப்பினர்களின் ஆதரவு இருந்ததால், வி.கே.ராமசாமி முதலியார் எதிர்க்கட்சித் தலைவரானார். அடுத்து வந்த தேர்தலில் ஐம்பது இடங்களைப் பிடித்துப் பிரதான எதிர்க்கட்சியானது திமுக. அண்ணா இடம்பெறாத அந்தச் சட்டமன்றத்தில் நெடுஞ்செழியன் எதிர்க்கட்சித் தலைவர்.
அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் அதிமுக்கியப் பிரச்சினைகள் குறித்து வெட்டுத் தீர்மானம், கவன ஈர்ப்புத் தீர்மானம், ஒத்திவைப்புத் தீர்மானம் என்று சட்டமன்ற ஜனநாயகம் வழங்கியிருக்கும் அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி, முதல்வர்கள் காமராஜருக்கும் பக்தவத்சலத்துக்கும் பலத்த நெருக்கடியைக் கொடுத்தது திமுக. திமுக ஆளும்கட்சியாக மாறியபோது எதிர்க்கட்சித் தலைவர் காங்கிரஸ் கட்சியின் பி.ஜி. கருத்திருமன். திமுக ஓராண்டு கால ஆட்சியை நிறைவுசெய்த சில மாதங்களில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார் அவர்.பெரும்பான்மையைக் காட்டிலும் அதிக இடங்கள் திமுகவிடம் இருந்தன. ஆட்சி எல்லாம் கவிழாது. இருந்தாலும், ஆட்சியின் மீதான குறைகளையும் விமர்சனங்களையும் கொண்டுவந்து பதிவு செய்ய நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, துடிப்பான எதிர்க்கட்சியாகக் காங்கிரஸை இயங்கச் செய்தார் கருத்திருமன். ஆளுங்கட்சியின் மீதான அவருடைய விமர்சனங்கள் வன்மம் கலவாதவை.
எதிர்க்கட்சித் தலைவருக்கான முன்மாதிரியைக் காங்கிரஸ் கட்சிக்குள் தேடினால், முதல் தேர்வு பி.ஜி. கருத்திருமன்தான். சட்டமன்றப் பதிவேடுகளின் வழியாகப் பி.ஜி.கருத்திருமனின் செயல்பாடுகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்வாங்கலாம்.
கருணாநிதியின் காலம்
எதிர்க்கட்சியின் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தைத் தொட்டது எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில்தான். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து தீவிரமான விமர்சனங்களை முன்வைப்பது, முறைகேடுகள் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கச் சொல்லி அரசை நிர்ப்பந்திப்பது, அரசின் தவறான செயல்பாடுகளுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுவது, அரசின் ஒவ்வொரு அசைவையும் விமர்சிப்பது என்று தீவிரமான அரசியல் செய்தார் கருணாநிதி. திருச்செந்தூர் ஆலய அதிகாரி கொலை தொடர்பான பால் கமிஷன் விசாரணை அறிக்கையை எம்.ஜி.ஆர். அரசு வெளியிடத் தயங்கிய சமயத்தில், அதைப் பகிரங்கமாக வெளியிட்டது சட்டமன்ற வரலாற்றில் அதிர்வுகளை ஏற்படுத்திய நிகழ்வு.
மேஜை தட்டிய காலம்
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் ஜெயலலிதா. அப்போது சட்டமன்றத்துக்குள் நிகழ்ந்த கலவரம் சட்டமன்ற வரலாற்றில் கருப்பு அத்தியாயம்.
ஜெயலலிதா பொறுப்பில் இருந்து விலக, அவருக்குப் பதில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனவர் எஸ்.ஆர். ராதா. பின்னர் அதிமுகவுக்குள் நிகழ்ந்த கட்சித் தாவலால் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரஸ் வசம் சென்றது. எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் ஜி.கே. மூப்பனார். இரண்டே ஆண்டுகளில் மூன்று எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்த்தது தமிழகச் சட்டமன்றம்.
1991 தேர்தலில் அதிமுகவுக்கு அபார வெற்றி. திமுகவில் கருணாநிதி மட்டும்தான் வென்றார். அவரும் ராஜினாமா செய்தார். அதிமுகவோடு கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியே பிரதான எதிர்க்கட்சியானது. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் எதிர்க்கட்சித் தலைவர். ஆளுங்கட்சிக்கு அனுசரணையான எதிர்க்கட்சித் தலைவர். சட்டமன்ற விவாதங்கள் வெப்பமின்றி இருந்தன. எதிர்க்கட்சி மேசை தட்டும் கட்சியாகவும் ஆனது அப்போதுதான்.
1991-ல் நடந்தது 1996-லும் தொடர்ந்து. தேர்தலில் திமுக வென்று ஆட்சியமைத்தது. அதிமுகவுக்கு 4 இடங்களே கிடைத்தன. ஆகவே, திமுகவின் கூட்டணிக் கட்சியான தமாகாவே எதிர்க்கட்சி ஆனது. சோ.பாலகிருஷ்ணன் எதிர்க்கட்சித் தலைவர். சாத்வீகமான குணம் கொண்ட சோ.பா.விடமிருந்து போர்க்குணம் எதுவும் வெளிப்படவில்லை.
தவிர்த்தல்களும் மோதல்களும்
2001 தேர்தலில் திமுக எதிர்க்கட்சி ஆனது. ஆனால் அதற்குத் தலைமையேற்க வேண்டிய கருணாநிதி, அந்தப் பொறுப்பை அன்பழகனிடம் கொடுத்தார். சபைக்கு வருவதைக்கூட கருணாநிதி தவிர்த்துவிட்டார். கருணாநிதி தவிர்த்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பின்னாளில் ஜெயலலிதாவும் தவிர்த்தார்.
2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சி. அதுவும், 61 உறுப்பினர்களைக் கொண்ட வலுவான எதிர்க்கட்சி. ஆனால் அந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஜெயலலிதா ஏற்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவர். மைனாரிட்டி அரசு என்று ஐந்தாண்டுகள் முழுமைக்கும் திமுக அரசை விமர்சித்த ஜெயலலிதா, திமுக ஆட்சிக்கு எதிராக ஒருமுறைகூட நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, தம்முடைய ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தாதது புரியாத புதிர்.
2011 தேர்தலில் திமுகவைக் காட்டிலும் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு ஆறு இடங்கள் அதிகம் கிடைத்தன. ஆகவே, தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர். வெகு விரைவிலேயே அதிமுக தேமுதிக உறவு முறிந்தது. சட்டமன்றத்தில் இருவருக்கும் இடையே மோதல்கள். அதன் பிறகு சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதை விஜயகாந்தும் தவிர்த்தார். கட்சித் தாவல்கள் காரணமாக, சட்டமன்றத்தின் இறுதிக் காலத்தில் அவரது எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து பறிபோனது.
சட்டமன்றம் என்பது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக் குமான அரசியல் உரையாடல் நடக்கும் மேடை. தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் எண்ணிக்கை அளவில் மிகவும் வலுவான எதிர்க்கட்சி உருவாகியுள்ளது. அது செயல்பாடு ரீதியிலான வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுக்க முன்னோடிகளான பி.ராமமூர்த்தி, பி.ஜி.கருத்திருமன் உள்ளிட்டோரிடமிருந்து பாடங்களைக் கற்க வேண்டும். அவர்களின் வழியில் செயல்பட வேண்டும். அத்தகைய எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படவேண்டிய வரலாற்றுத் தருணம் ஸ்டாலினுக்கு உருவாகியிருக்கிறது. பயன்படுத்திக்கொள்வாரா? பார்க்கலாம்!
-ஆர். முத்துக்குமார். எழுத்தாளர். ‘தமிழக அரசியல் வரலாறு' முதலான நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writermuthukumar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT