Published : 09 May 2016 09:05 AM
Last Updated : 09 May 2016 09:05 AM
தேர்தல் மாநிலங்களில் ஒரு கழுகுப் பார்வை
அதிமுக தலைவர் ஜெயலலிதா முதல்வர் பதவியில் இல்லாத வருடம். டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் சாதாரண வகுப்பில் வந்துகொண்டிருந்தேன். எனக்கு இரு வரிசைகளுக்கு முன்னால் தம்பிதுரை அமர்ந்திருந்தார். எனக்கு ஆச்சரியம். அவர் நாடாளுமன்ற உறுப்பினர். முதல் வகுப்பில் பயணம் செய்யலாம். எளிமை திரும்பி விட்டதா என்று யோசித்துக் கொண்டிருந்தபோதே விமானத்தின் முன் பகுதியில் அமர்க்களம். ஜெயலலிதா வந்து முதல் இருக்கையில் அமர்ந்தார். தனக்கும் அம்மாவுக்கும் எவ்வளவு தூரம் இடைவெளி இருக்க வேண்டும் என்பதை அளந்து தனது இருக்கையைத் தம்பிதுரை தேர்வு செய்திருக்க வேண்டும்.
பல வருடங்களுக்கு முன்னால் டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் வந்தேன். நான் ஜன்னல் அருகில் அமர்ந்திருந்தேன். வயதானவர் ஒருவர், அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு வந்தார். எனக்குப் பக்கத்தில் அமர்ந்தார். புன்னகை செய்தார். விமானம் புறப்பட்டவுடன் நான் புத்தகம் படிக்கத் தொடங்கினேன். பெட்ரண்ட் ரஸ்ஸலின் ‘மேற்கத்தியத் தத்துவத்தின் வரலாறு’. எப்போதும் போல தத்துவம் தூக்கத்தை வரவழைத்தது. ‘‘நான் புத்தகத்தைப் பார்க்கலாமா, இளைஞரே?” என்று அவர் கேட்டார். புத்தகத்தைக் கொடுத்தேன். ஒரு மணி நேரம் தூங்கியிருப்பேன். விழித்து எழுந்து பார்த்தேன். அவர் இன்னும் படித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து புத்தகத்தை என்னிடம் ‘‘நன்றி” என்று சொல்லிக் கொடுத்தார். ‘‘உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே?’’ என்று கேட்டேன். ‘‘இருக்கலாம். என் பெயர் அச்சுத மேனன்’’ என்றார். அவர் 1970- லிருந்து 1977 வரை கேரளாவின் முதல்வராக இருந்தவர். இதே போன்ற அனுபவம் எனக்கு அசாமின் முதல்வரான சரத் சந்திர சின்ஹாவிடம் கிடைத்திருக்கிறது.
எளிமையே அடையாளம்
எளிமை என்பது எந்தக் காலத்திலேயோ இருந்த ஒன்று என்று சொல்பவர்களுக்கு நான் மம்தாவையும் கோகோயையும் நமக்கு மிகவும் அருகில் இருக்கும் கேரளாவின் முதல்வரான உம்மன் சாண்டியையும் காட்ட முடியும். உள்ளே இடம் இல்லை என்பதால் தேவாலயத்தின் வாயிற்படிக்கட்டில் அவர் உட்கார்ந்து கொண்டிருந்த புகைப்படம் வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருந்தது. இது கேரளாவில் இயல்பாக, பாசாங்கில்லாமல் நடைபெறுகிறது 2014-ல் நான் கொச்சியில் இருக்கும்போது ஒரு பேனரைப் பார்த்தேன். அதில் பெரிதாக ஒருவரின் படம் இருந்த்து. புகழ் பெற்ற எழுத்தாளரான எம்.டி. வாசுதேவன் நாயரின் படம் என்று ஞாபகம். ஓரத்தில் சின்னதாகச் சாண்டியின் படம். ‘‘என்ன விஷயம்?’’ என்று கேட்டேன். “ஒரு இலக்கியக் கூட்டம். சாண்டி பேசுகிறாராம்’’ என்றார்கள்.
மனநோய் விடுதிகள்
இதைத் தமிழ்நாட்டில் நினைத்துக் கூடப் பார்க்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் ஆளுபவர்கள், மக்கள் எங்கள் காலடியில் இருப்பவர்கள் என்ற உறுதியோடு இருக்கும் தலைவர்கள் அதிகமாக இருக்கும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடாகத்தான் இருக்க முடியும்.
கேரளாவிலும் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் னால் மக்கள் அடிமையாக இருந்த காலம் உண்டு. விவேகானந்தர் ‘‘இது ஒரு மனநோயாளர்களின் விடுதி’’ என்று சொன்ன காலம். அங்கிருந்து எத்தனை தூரம் கேரளா பயணம் செய்திருக்கிறது என்பதை மாநிலத்தின் மனிதவளப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இது கேரளாவின் மக்கள் உலகெங்கும் சென்றதால் நேர்ந்தது என்று சொல்லலாம். வரும் பணத்தை அதிக விரயம் செய்யாமல் மக்களுக்கான வசதிகளைப் பெருக்கிய மாநிலம் என்ற வகையில் அது ஒரு உதாரணமாக இருக்கிறது.
ஆனாலும் தேர்தல் என்று வரும்போது திரும்ப மனநோய் விடுதிகளுக்குக் கட்சிகள் சென்று விடுகின்றனவோ என்ற சந்தேகத்தை மாநிலம் வரவழைக்கத் தவறுவதில்லை.
கட்சிகளின் வரிசை
கேரள மாநிலத்தில் இந்தத் தேர்தலில் மொத்தம் 140 தொகுதிகளில் கடைசியில் கிடைத்த தகவல்களின் படி 44 கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் காங்கிரஸ் என்ற பெயரை தங்கள் கட்சிக்குள் புகுத்தி கொண்டிருப் பவர்கள் 15. அதே போல கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் பெயர்களை வைத்துக் கொண்டிருப்பவர்கள் 15 இவர்கள் எல்லாக் கூட்டணியிலும் இருக்கிறார்கள். பாஜக கூட்டணியில் கூட. காங்கிரஸ் கூட்டணியில் 7 கட்சிகள். இதில் கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் என்ற கட்சியும் அடக்கம்! மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அல்ல. அவர்களிடமிருந்து 1986-லேயே பிரிந்து வந்தவர்கள். இன்னும் உயிரை விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கும் ஒரு தொகுதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதே போல இடதுசாரிக் கூட்டணியில் 11 கட்சிகள் இருக்கின்றன. இதிலும் கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் என்ற கட்சி இருக்கிறது. ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. ஒரே கட்சி இரண்டு அணிகளிலும் இருந்து புரட்சி படைக்கிறதோ என்று பார்த்தால் காங்கிரஸில் இருக்கும் கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்டுக்கு ‘சிபி ஜான்’ என்ற வால் ஒன்று இருப்பது தெரிய வருகிறது! பாஜக கூட்டணியில் 12 கட்சிகள். யார் வெற்றி பெறுவார்கள் என்பதைப் பார்ப்பதற்கு முன்னால் கேரளாவின் சமீபத்திய வரலாற்றைப் பற்றி நாம் சிறிது புரிந்துகொள்ள வேண்டும்.
பி.ஏ. கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர். தொடர்புக்கு: tigerclaw@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT