Last Updated : 17 Jun, 2022 06:55 AM

3  

Published : 17 Jun 2022 06:55 AM
Last Updated : 17 Jun 2022 06:55 AM

பொன்னியின் செல்வர்கள் நாம்! - என்ன செய்யப்போகிறோம்?

உலக வரலாற்றில் மிக நீண்ட நதிநீர் தாவாவாக காவிரிப் பிரச்சினை மாற்றப்படுகிறது. 3,600-க்கும் மேற்பட்ட நதிநீர் ஒப்பந்தங்கள் இதுவரை உலகில் கணக்கிடப்பட்டிருக்கின்றன. 10 ஐரோப்பிய நாடுகள் டான்யூப் ஆற்றின் தண்ணீரைத் தமக்குள் சச்சரவின்றிப் பகிர்ந்துகொள்கின்றன.

ஏன்? இந்தியாவே பாகிஸ்தானுடன் 1960-ல் சிந்து நதி நீர் உடன்படிக்கையின் மூலமும், 1996-ல் வங்கதேசத்துடன் பராக்கா நதிநீர் உடன்படிக்கை மூலமும் பிரச்சினைக்குத் தீர்வுகண்டிருக்கிறது. காவிரிப் பிரச்சினைக்கோ முடிவு தொடுவானமாக விரிகிறது.

இந்த முறை பிரச்சினையின் கர்த்தாவாகக் காவிரி மேலாண்மை ஆணையமே அமைகிறது. 02.06.1990-ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 25.06.1991-ல் அது தன் இடைக்கால உத்தரவை வழங்கியது. 05.02.2007-ல் இறுதி உத்தரவை நல்கியது.

19.09.2013-ல் அது அரசிதழிலும் வெளிவந்தது. 16.02.2018-ல் உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கை முடித்து வைத்தது. இப்போது எழுந்துள்ள பிரச்சினை, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் செயல்படுத்த அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தால் உருவானது எனலாம்.

கீழ்ப் படுகை நாடுகளுக்கான பங்கு உலகெங்கும் குறைக்கப்பட்டதில்லை. ஆனால், சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டுக்கோ 205, 192 டிஎம்சி என்கிற அளவுகள் 177.25 டிஎம்சியாகக் குறைக்கப்பட்டது. (சுதந்திரத்துக்கு முன் தமிழகம் 500-க்கும் அதிகமான அளவு டிஎம்சி தண்ணீரைப் பெற்றுக்கொண்டிருந்தது.) உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் பெங்களூருவின் குடிநீர்த் தேவைக்கு 4.75 டிஎம்சி என்ற அளவில் சில மாற்றங்கள் தீர்ப்பில் செய்யப்பட்டன.

ஆனால், அதற்காக 67.14 டிஎம்சி தண்ணீரைத் தேக்கும் அளவுக்கு ரூ.9,000 கோடி செலவிலான மேகேதாட்டு அணை திட்டத்தை கர்நாடகம் தீட்டும் என்று உச்ச நீதிமன்றம் கனவுகூடக் கண்டிருக்காது. இதற்காக 4,996 ஹெக்டேர் நிலத்தை கர்நாடக அரசு கையகப்படுத்தும் என்றும் அதில் 4,800 ஹெக்டேர் நிலம் வனத் துறையினதும் அடங்கும் என்பதும் திகிலான தகவல்கள். புள்ளிமான்களும் ஏனைய விலங்குகளும் பறவைகளும் தங்கள் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் இழக்கும் நிலையை கர்நாடக அரசு ஏற்படுத்துகிறது.

கர்நாடக அரசின் நிலைப்பாட்டுக்கு கர்நாடகத்திலேயே எதிர்ப்புகள் வருகின்றன. வனமும் வனத்தில் வாழும் உயிர்களும், சுற்றி உள்ள கிராமங்களில் 10,000-த்துக்கும் அதிகமான பழங்குடிகளும் பட்டியலினத்தவரும் தங்கள் வசிப்பிடத்தை இழக்க நேரிடலாம். மாண்டியா மாவட்டத்தின் 5 கிராமங்கள் முற்றிலும் மூழ்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் உயிரிச் சங்கிலியையும் காவிரி ஆற்றையும் கடுமையாகப் பாதிக்கும் இத்திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று சூழலியலாளர் மேதா பட்கர் கூறியுள்ளார்.

குடிநீர்த் தேவை என்பதைக் கணக்கில் கொண்டால், பெங்களூருவின் இப்போதைய மக்கள்தொகை 1.30 கோடி, அங்கு பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு ஒரு நாளைக்கு 145 கோடி லிட்டர் ஆகும். இதே விகிதத்தில் போனால், 2031-ல் பெங்களூருவின் மக்கள்தொகை 2 கோடியாகவும் அப்போதைய தண்ணீர்த் தேவை 4,000 எம்.எல்.டி.யாகவும் அதிகரிக்கும். ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட தமிழகத்துக்கு விட மாட்டோம் என்ற கர்நாடகத்தின் சபதத்தை நிறைவேற்றத்தான் மேகேதாட்டு அணைத் திட்டமோ என்ற ஐயம் எழுகிறது.

சந்தடி சாக்கில் 400 மெகாவாட் மின்னுற்பத்திக்கான பணிகளையும் அங்கே கர்நாடகம் செய்கிறது. கர்நாடகத்தின் திட்டம் சர்வதேச நிறுவனங்களின் மெகா திட்டங்களுக்கு உதவிசெய்வதுதான் என்று மேதா பட்கர் கூறியிருக்கிறார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும், உச்ச நீதிமன்றம் அதனை உறுதிப்படுத்தியதன் அடிப்படையிலும் பாசனத் தேவைகளைப் புறம்தள்ளி, மின்திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தெளிவாக உள்ளது.

மருந்தே வியாதியான கதைதான் காவிரி மேலாண்மை ஆணையம். கர்நாடகத்திலுள்ள ஹேமாவதி, கபினி, ஹேரங்கி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள், தமிழகத்திலுள்ள கீழ் பவானி, அமராவதி, மேட்டூர் மற்றும் கேரளத்தின் பாணாசுர சாகர் அணை ஆகியவற்றின் சாவிகளை வாங்கி தண்ணீர்ப் பங்கீட்டை ஒழுங்குபடுத்தும் என்ற எதிர்பார்ப்பே இருந்தது. காவிரி மேலாண்மை வாரியமோ இந்த திசையில் ஒரு அடிகூட நகரவில்லை.

மாறாக, மேகேதாட்டு என்ற அணைக்கட்டுப் பிரச்சினைக்கு உயிர்கொடுத்துத் தன் கூட்டத்தின் அஜெண்டாவாக ஆக்கி சீவி சிங்காரிக்கிறது. இதற்காக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் சட்ட நிபுணத்துவத்தையும் கேட்டுப்பெற்றுள்ளது.

அவரும் ‘உங்களுக்கு அகண்ட அதிகாரங்கள் உண்டு’ என்று ஒரு வாள் வழங்கிவிட்டார். இச்சூழல், தமிழகத்தை மீண்டும் உச்ச நீதிமன்றக் கதவுகளைத் தட்டவைத்திருக்கிறது. முன்னொரு காலத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் தலைவராக சித்ததேவ் முகர்ஜி இருந்தார்.

அவரின் அணுகுமுறையில் கர்நாடகத்துக்குச் சந்தேகம் வந்தது. இந்தப் பதவியில் சித்ததேவ் முகர்ஜி நீடிக்கக் கூடாது என்று அப்போதைய கர்நாடக முதல்வர் தேவேகவுடா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 1996-ல் முகர்ஜியே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இப்போதைய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருக்கும் எஸ்.கே.ஹல்தார் மேகேதாட்டு அணை விஷயத்தில் காட்டும் அதீத ஆர்வத்தைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தின் விவசாய அமைப்புகள் சந்தேகம் எழுப்புகின்றன. கர்நாடகத்தின் புதிய ஆயுதமாக காவிரி மேலாண்மை வாரியம் ஆடைதரிக்கிறது.

கீழ் மாநிலங்களுக்குத் தண்ணீர் வழங்கும் இடத்தில் கர்நாடகத்தைக் கடவுள் வைத்துள்ளார்; கர்நாடகம் பெரிய அண்ணனாக நடந்துகொள்கிறது என்று காவிரி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெயின் ஒருமுறை கூறினார். ஆந்திரம், மஹாராஷ்டிரம், கோவா ஆகியவற்றோடும் கர்நாடகம் நதிநீர் தாவாக்களில் மோதுகிறது.

கர்நாடகத்தை ஆளும் பாஜகவும், மேகேதாட்டு அணை திட்டத்தை நிறைவேற்றியாக வேண்டும் என 150 கி.மீ. பாதயாத்திரை நடத்தி நிர்ப்பந்திக்கும் காங்கிரஸ் கட்சியும் தமிழகத்துக்கு எதிராக அங்கு ஓரணியில் நிற்கின்றன.

மத்திய அரசிலும் கர்நாடகத்திலும் ஒரே கட்சிதான் ஆளும் கட்சி. ஆனால், பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் முனையவில்லை. 1892 காவிரி ஒப்பந்தப்படி, மேகேதாட்டு அணை போன்ற திட்டங்களுக்குத் தமிழக அரசு அனுமதி மறுக்க முடியாது என்று மத்திய அரசின் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஒருமுறை நாடாளுமன்றத்தில் கூறினார்.

மத்திய அரசின் நீராற்றல் துறை மேகேதாட்டு அணைத் திட்டத்தை உற்சாகப்படுத்துவதாகவே தெரிகிறது. உள்ளபடியே நடுவர் மன்றத் தீர்ப்புப்படி ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் வரையில் கர்நாடகம் தண்ணீர் தருவதில்லை. மாறாக, வானமே கருணை கூர்ந்து மழையைக் கொடையாக அனுப்புகிறது.

இவை ஒருபுறம் இருக்க, தமிழக அரசோ காவிரிப் பிரச்சினையில் போதிய விழிப்பின்றி உள்ளது. மேகேதாட்டு அணைத் திட்டத்துக்கு சென்னை பசுமைத் தீர்ப்பாய அமர்வு தடைவிதித்தது. பசுமைத் தீர்ப்பாயத்தின் டெல்லி அமர்வு அதிகாரம் இல்லாமலே அந்தத் தடையை நீக்கியது.

இதுகுறித்தும் தமிழக அரசின் சட்டபூர்வமான நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லை. (இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் முன்பே கட்டுரைகள் வந்துள்ளன.) இரண்டு மாநிலங்களும் மாறிமாறி சட்டமன்றங்களில் இயற்றும் கண்டனத் தீர்மானங்களை மத்திய அரசு ஒரு பார்வையாளராக இருந்து ரசிப்பதைப் போலவே தெரிகிறது.

கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 9.96 லட்சம் ஹெக்டேரிலிருந்து 38.25 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் அதிகரித்துள்ளது. தமிழகமோ கடந்த 48 ஆண்டுகளில் மொத்தம் 15.87 லட்சம் ஹெக்டேர் நிலம் சாகுபடிப் பரப்பை இழந்துள்ளது. தமிழகத்தில் 1.5 கோடி பேரின் குடிநீர்த் தேவையையும் 28 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தின் தேவையையும் காவிரி இப்போது பூர்த்திசெய்கிறது. எதிர் காலத்தில் என்ன கதியாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நிலத்தை நனைத்த காவிரி நதி, தன் இன்சுவையை இழந்து உப்புகரித்துத் தலை கவிழ்ந்து ஓடுகிறது. 1902-03 முதலிய ஆண்டுகளில் இந்தியாவில் பொன்னி நதிதான் நெற்களஞ்சியமாக இருந்தது என்று ஆங்கில எழுத்தாளர்கள் எழுதுகின்றனர்.

யாரெல்லாம் போதுமான தண்ணீர் இல்லாத இடங்களில் வாழ்கிறார்களோ, எங்கெல்லாம் மாசு படிந்த தண்ணீர் ஓடுகிறதோ அங்கெல்லாம் உலகின் ஏழைகள் வசிக்கின்றனர் என்று கூறுவார்கள். தமிழகம் அந்த நிலைக்குத் தள்ளப்படுவதைப் பொன்னியின் செல்வர்களாகிய நாம் பார்த்துக்கொண்டிருக்கலாமா?

- வெ.ஜீவகுமார், வழக்கறிஞர், விவசாயிகள் உரிமைச் செயற்பாட்டாளர், தொடர்புக்கு:vjeeva63@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x