Published : 16 Jun 2022 08:22 AM
Last Updated : 16 Jun 2022 08:22 AM
இரண்டு நாட்களுக்கு முன்பு எங்கள் மகனை திருவான்மியூரில் உள்ள சென்னை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் (தமிழ் வழிக் கல்வியில்) சேர்த்தோம்.
நேற்று முதல் பள்ளிக்குச் செல்கிறான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூடுவாஞ்சேரியில் அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் சேர்க்கப் போகிறோம் என்றதும் அக்கறையுள்ள நண்பர்களும் உறவினர்களும் அவனுடைய எதிர்காலத்தை முன்னிட்டு அறிவுரை கூறியதுடன் வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்கள்.
என் மனைவியும் நானும் மிகவும் மகிழ்ச்சியுடனும் அச்சமில்லாமலும் தொடக்கப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் சேர்த்தோம். அவனைச் சேர்த்தபோது, அந்தப் பள்ளியில் அவன் மட்டும்தான் தமிழ் வழியில் படிக்கும் மாணவன். கரோனா காரணமாகக் கல்வியில் விழுந்த இடைவெளியைச் சரிசெய்யும் விதத்தில் தமிழ், கணிதம் உள்ளிட்ட பாடங்களை என் மனைவியும் ஆங்கிலத்தை நானும் வீட்டில் தொடர்ந்து சொல்லிக்கொடுத்தோம்.
கூடுவாஞ்சேரியிலிருந்து திருவான்மியூருக்கு வந்ததும் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று பார்வையிட்டோம். நிறைய கட்டிடங்கள், விளையாடுவதற்கு, உட்கார்ந்துகொள்வதற்கு என்று ஏராளமான இடங்கள் என பள்ளி எங்களை மிகவும் ஈர்த்துவிட்டது. மரக்கன்றுகள், பெரிய மரங்கள் என்று எண்ணிக்கையில் ஐம்பதை நெருங்கும். தேர்தல்களின்போது ‘தல’ வாக்களிக்கும் வாக்குச்சாவடியாகப் புகழ்பெற்ற பள்ளிக்கூடம்!
நாங்கள் எங்கள் மகனை யாரிடமாவது அறிமுகப்படுத்தும்போது அவன் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு, தமிழ்வழியில் படிக்கிறான் என்றே அறிமுகப்படுத்துவோம். இதை பிரச்சாரமாகவே தொடர்ந்து நாங்கள் செய்கிறோம்.
அரசுப் பள்ளி, தமிழ்வழிக் கல்வி இரண்டையும் நாங்கள் நாடுவதற்கு என்ன காரணங்கள்?
1. அரசுப் பள்ளிதான் அற்புதங்கள் விளைவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், அந்த அற்புதங்கள் எவ்வளவு குறைவானவை என்றாலும்கூட. இதற்கு அரசுப் பள்ளியின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது முக்கியம்.
ஏன் அரசுப் பள்ளியில் எதிர்பார்த்த அளவுக்கு அற்புதங்கள் நிகழவில்லை என்றால், நம் சமூகம் அதன்மீது வைத்திருக்கும் நம்பிக்கை மிகவும் குறைவு. அந்த நம்பிக்கையை அதிகப்படுத்தினால் எதிர்பார்த்ததைவிட அற்புதங்கள் நிகழும். அதில் நாமும் நம் குழந்தையும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று கருதினோம்.
2. நம்முடைய நம்பிக்கைக்காகவும் கொள்கைக்காகவும் குழந்தையின் எதிர்காலத்தைப் பணயம் வைப்பதா என்றும் சிலர் கேட்டார்கள்/ கேட்கிறார்கள். அரசுப் பள்ளியில் படித்தாலோ, தமிழ்வழியில் படித்தாலோ பொருளாதாரரீதியில் எதிர்காலம் கிடையாது என்ற தவறான நம்பிக்கைதான் இதற்கு அடிப்படைக் காரணம்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளிலும் தொழிற்கல்விகளிலும் 7.5% இடஒதுக்கீடு வழங்குவதற்காகச் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆகவே, வேலைவாய்ப்பு, மேல்படிப்பு போன்றவற்றைப் பொறுத்தவரை முன்பைவிடத் தற்போது ஏராளமான கதவுகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன.
3. கல்வி என்பது சமூகரீதியில் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய பிரிவினருக்கு எந்த அளவுக்குப் பொருளாதாரரீதியில் முன்செலுத்தும் சக்தி என்பது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் கல்வி என்பது வாழ்க்கைக்கானது, சுயமரியாதைக்கானது, சுயஅறிதலுக்கானது, இந்த உலகத்தில் நம் இடம் என்ன என்பதைக் குறித்த அறிதலுக்கானது. இந்தக் கருத்தை முதன்மையாகக் கொண்டு கல்வியை மாணவர்களுக்குக் கொடுத்தால், பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிய பாதையில் அவர்களால் தாங்களாகவே முடிவெடுத்துக்கொள்ள இயலும்.
இங்கே நிலவும் சிக்கல் என்னவென்றால், தங்கள் பிள்ளைகள் பெரியவர்களானாலும் அவர்களுக்கான முடிவைப் பெற்றோர்களே எடுப்பதுதான். அவர்களுக்கென்று சுயமான அறிதலோ அதனால் ஏற்படும் பிழைகள்-வெற்றிகள் என்ற மகத்தான அனுபவமோ இல்லாமல் போய்விடுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளால் ஒருபோதும் சாதனையாளர்களாக ஆக இயலாது. வேண்டுமானால், பெற்றோர் வழிகாட்டலில் கிடைத்த பாதுகாப்பான ஒரு வேலையில் பற்றிக்கொண்டுவிடலாம்.
ஆகவே, முதன்மையான அறிதல், சமூக உறவு போன்ற காரணங்களுக்காகவும் நாங்கள் அரசுப் பள்ளியைத் தேர்ந்தெடுத்தோம். இது முறையாக நிகழுமென்றால், எங்கள் மகன் அவனுக்கான எதிர்காலப் பாதையை அவனே தேர்ந்தெடுத்துக்கொள்வான். எனினும், இதுபோன்ற சொகுசான இடத்தில் மற்ற பெற்றோர் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.
அன்றாடப் பாட்டுக்கு அல்லாடும் பெற்றோர், சாதிய-மத ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுத் தத்தளித்துக்கொண்டிருக்கும் சமூகங்களைச் சேர்ந்த பெற்றோர் ஆகியோருக்கு இதுபோன்ற வசதியான தெரிவுகள் (choices) இல்லை. ஆனால், அந்த இடத்தை, ஆசிரியர்களும் கல்வி அமைப்பும் அரசும் சமூகமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. குழந்தைமையைக் கொன்றுவிட்டுப் புகட்டப்படும் கல்வி உண்மையான கல்வி இல்லை. காலையில் ஆறு மணிக்கே பெரிய புத்தக மூட்டையுடன் தூங்கிவிழும் முகத்துடன் பல கி.மீ. தூரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு அந்தப் பள்ளியின் வாகனத்தில் அனுப்பிவைக்கப்படும் குழந்தைகளையெல்லாம் பார்க்கும்போது, நம் குழந்தைக்கு இந்த நிலையை ஏற்படுத்தக் கூடாது என்று முன்பே முடிவெடுத்துவிட்டோம்.
பெரியவர்களான நமக்கே சில நாட்கள் கொஞ்சம் கூடுதலாகத் தூங்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். பெரியவர்களுக்கே இப்படி என்றால் குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்! எப்போது எழுப்பினாலும் ‘இன்னும் 5 நிமிஷம்ப்பா?’ என்று கெஞ்சும் குழந்தையைப் பார்த்தால் பாவமாகத்தானே இருக்கும்! ஆகவே, வீட்டுக்கு அருகில் இருக்கும் அரசுப் பள்ளி என்று முடிவெடுத்தோம்.
பெரும்பாலும் பெற்றோர்களாகிய நாங்கள் கொண்டுபோய் விட்டாலும் திரும்பி வரும்போது தன் நண்பர்களுடன் வருவதையே குழந்தை விரும்பும். தூரத்துப் பள்ளிகள், வாகனங்கள் எல்லாம் குழந்தைகளின் சாகசத் தேடல் உணர்வை (exploration) கொன்றழித்துவிடுகின்றன.
ஒன்றாம் வகுப்பிலிருந்து சக மாணவர்களுடன் கிட்டத்தட்ட ஒரு கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்கூடம் சென்ற அனுபவம் எனக்கு உண்டு. குறுக்கே அகலமான பாமணி ஆறு ஓடும். ஆற்றில் தண்ணீர் இல்லையென்றாலோ ஆழம் குறைவாக இருந்தாலோ ஆற்றில் இறங்கியே கடந்துசெல்வோம். ஆனால், அந்த தினசரி பயணத்தில் கிடைத்த சந்தோஷமும் அனுபவமும் எத்தகைய மகத்தான கல்வி. அதை ஏன் நம் குழந்தைகளுக்குத் தர மறுக்கிறோம்?
5. சேர்க்கைக்காகச் சென்றபோது ஏற்கெனவே அந்தப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த, வகுப்பில்லாத மாணவர்கள் அங்குள்ள திடலிலும் படிக்கட்டுகளிலும் மர நிழலிலும் விளையாடிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. கிட்டத்தட்ட எந்தத் தனியார் பள்ளியிலும் நான் பார்த்திராத காட்சி இது.
அவ்வளவு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் அந்தக் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். எங்கள் மகனின் வகுப்புக்கு அருகிலேயே இருந்த மழலையர் வகுப்புக்குப் பக்கத்தில் உள்ள சுழல் சறுக்குப் பலகையில் குட்டி தேவதை ஒன்று தனியாகச் சறுக்கிக்கொண்டிருந்தது. ‘உன் பெயர் என்ன பாப்பா? எத்தனையாவது படிக்கிறே?” என்று கேட்டேன். ‘என் பேர் கவிஸ்ரீ. ரெண்டாவது படிக்கிறேன்” என்றாள்.
அவளுடன் எங்கள் மகனும் விளையாடப்போனான். ‘குழந்தைகளுக்கான சறுக்குப் பலகை இது. உடைத்துவிடாதே’ என்று தடுத்தும் கேளாமல், சறுக்கி விளையாடப் போனான். அருகிலிருந்த மரங்களில் திடீரென்று நான்கைந்து தையல் சிட்டுக்கள் ‘ட்டுவ்வீ ட்டுவ்வீ’ என்று சலம்ப ஆரம்பித்தன. எவ்வளவு அருமையான சூழல்!
6. சேர்க்கைப் படிவத்தை வைத்துக்கொண்டு வரிசையில் என் மனைவி நின்றிருந்தபோது, அவருக்குப் பின்னே நாடோடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் வந்து நின்றார்கள். அவர்கள் தங்கள் மொழியில் ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார்கள்.
அங்கே இருந்த மற்றவர்களிடம் காணப்பட்ட தயக்கம் ஏதும் அவர்களிடம் இல்லை. அங்கே நிற்பது தங்களின் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துக்காக என்றாலும் அவ்வளவு இயல்பாக அவர்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தது மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
அவர்களுடன் இரண்டு பிள்ளைகள் வந்திருந்தார்கள். அந்தப் பெண்களிடம் பேச்சுக்கொடுத்து, தேவையான ஆவணங்களைக் கொண்டுவந்திருக்கிறார்களா என்று சரிபார்த்தேன். அந்தப் பிள்ளைகளிடமும் பேசினேன். ‘ஆறாம் வகுப்பு, தமிழ் மீடியம் சேர வந்திருக்கிறோம்’ என்றார்கள். ஆம்! எங்கள் மகனுடன் அவர்கள் படிக்கப்போகிறார்கள். வாழ்க்கையின் மகத்தான பாடமான சமூகநீதிப் பாடத்தை அவர்களின் நண்பனாக இருப்பதன் மூலம் எங்கள் மகன் கற்கப்போகிறான்.
அரசுப் பள்ளியில் எங்கள் மகனைச் சேர்ப்பதற்கு இதைவிட சிறப்பான வேறு காரணம் வேண்டுமா, என்ன?
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT