Last Updated : 15 May, 2016 10:28 AM

 

Published : 15 May 2016 10:28 AM
Last Updated : 15 May 2016 10:28 AM

வாக்களிப்பது மட்டும்தான் ஜனநாயகக் கடமையா?

அடுத்து யாருடைய ஆட்சி? இதுதான் இன்று கோடிக்கணக்கான தமிழர்களின் கேள்வி. வெளியில் எவ்வளவுதான் தெம்பாகப் பேசினாலும் பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்களும் நகத்தைக் கடித்தபடி கேட்டுக்கொள்ளும் கேள்வியும் இதுதான். களத்தில் நின்று செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர் ஒருவரிடம் இதைக் கேட்டபோது அவர் தெளிவாக ஒரு கட்சியின் பெயரைச் சொன்னார். அதே மூச்சில் இன்னொன்றையும் சொன்னார்: “இந்த வெற்றி அந்தக் கட்சியின் மீதான அபிமானத்தால் விளையக்கூடியது அல்ல. அதன் பிரதான எதிரிக் கட்சி அல்லது இதர கட்சிகளின் மீதான அதிருப்தியால் வரக்கூடியது” என்றார்.

தமிழகத்தின் ஆகத் துயரமான தேர்தல் என்று இதைச் சொல்லலாம். தனிநபர்கள் சார்ந்த வெறுப்பும் பணப் பட்டுவாடா குறித்த பேச்சும் கோலோச்சும் களம் இது. மெய்யான மாற்றம் கானல் நீராகப் பளபளக்கும் கோடைகாலச் சாலை போல நீண்டு கிடக்கிறது தேர்தல் பாதை. வெற்றி குறித்த கணிப்புகள் பல விதமாக இருந்தாலும் வெற்றிக்கான காரணங்களில் ஒரு கட்சியின் மீதான விருப்பம் அல்லது நம்பிக்கைக்குப் பெரிய பங்கு இருப்பதாகத் தெரியவில்லை. மக்களின் நம்பிக்கையைப் பெறும் கட்சி எது என்பதல்ல கேள்வி. மக்களின் வெறுப்பை அதிகம் பெற்ற கட்சி எது என்பதே முக்கியம். பிற கட்சியின் அல்லது கட்சிகளின் மீதான மக்களின் வெறுப்பை நம்பியே ஒவ்வொரு கட்சியும் களத்தில் நிற்கிறது.

சாதி, மதம், மொழி, இனம், கொள்கை முதலானவை சார்ந்த வெறுப்பின் அடிப்படையில் உருவாகும் அசம்பாவிதங்களையும் வன்முறையையும் நம்மால் எளிதாக இனம்கண்டு ஒதுக்கவோ கண்டிக்கவோ முடிகிறது. ஆனால், அதேபோன்றதொரு வெறுப்புதான் தேர்தல் முடிவையும் தீர்மானிக்கிறது. இந்த வெறுப்பு யார் மீது எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதுதான் இன்று முக்கியம்.

கட்சிகளையும் ஆளுமைகளையும் முன்னிறுத்தும் தேர்தல் நடைமுறைதான் இந்த வெறுப்பின் அடிப்படை. தலைவர் அல்லது கட்சியை முன்னிட்டே இங்கே தேர்தல்கள் நடக்கின்றன; அதனடிப்படையிலேயே வாக்குகள் கோரப்படுகின்றன; அளிக்கப்படுகின்றன. இந்த அணுகுமுறை இந்தியத் தேர்தல் அமைப்பின் அடிபப்டைக் கோட்பாடுகளுக்கே முரணானது. இந்தியத் தேர்தல் அமைப்பின்படி, மக்கள் தத்தமது தொகுதிகளுக்கான பிரதிநிதியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, முதல்வரையோ பிரதமரையோ அல்ல. பிரதமர் வேட்பாளர் என்றோ முதல்வர் வேட்பாளர் என்றோ பகிரங்கமாக ஒருவரை அறிவிப்பது இந்த அமைப்பையே பரிகசிக்கும் நடவடிக்கை. ஆனால், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரேந்திர மோடி ஆகியோர் அப்படித்தான் முன்னிறுத்தப்பட்டார்கள். தமிழகத்தில் பல தேர்தல்களாகவே இதுதான் நடைமுறை. 234 தொகுதிகளிலும் நான்தான் நிற்கிறேன் என்று எம்.ஜி.ஆர். பகிரங்கமாகவே சொல்வார். “எனக்கும் கருணாநிதிக்கும் இடையில்தான் போட்டி” என்று இடைத் தேர்தலின்போதும் அவர் சொல்வார்.

இந்தியத் தேர்தல் அமைப்பின் கோட்பாடு, வேட்பாளரைத் தொகுதியின் பிரதிநிதி என்கிறது. நடைமுறையோ வேட்பாளரை அவர் சார்ந்த அரசியல் கட்சியின், அதன் தலைவரின் பிரதிநிதி என்கிறது. நடைமுறையில், வேட்பாளர் என்பவர் தற்செயலான ஒரு சலனம் மட்டுமே. கட்சி, தலைவர் ஆகியவையே முக்கியம். இந்த நடைமுறைதான் ஒரு சில ஆளுமைகள் மீதான வெறுப்பை அல்லது விசுவாசத்தை அடிப்படையாக வைத்துத் தேர்தல் முடிவையே தீர்மானிக்கிறது.

இந்த நிலையை மாற்றுவது வாக்காளர்கள் கையில்தான் இருக்கிறது. கண்மூடித்தனமான விசுவாச வாக்காளர்களை விட்டுவிடுவோம். பெரிதாகப் பேசப்படும் பணப் பட்டுவாடாவினால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் விட்டுவிடுவோம். இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு வாக்களிப்பவர்கள்தாம் பல தொகுதிகளில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கிறார்கள். இவர்கள் நினைத்தால் மாற்றத்தை உருவாக்கலாம். ஆளுமைகள், கட்சி விசுவாசங்கள், வாக்குக்கு அளிக்கப்படும் விலை ஆகியவற்றைத் தாண்டி, மக்களின் உண்மையான கருத்தைப் பிரதிபலிக்கும் சாதனமாக இந்தத் தேர்தலை இவர்களால் மாற்ற முடியும். அதற்கு ஒரே வழி, இந்தியத் தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படைக்குத் திரும்ப வேண்டியதுதான்.

அதாவது, முதல்வரையோ கட்சியையோ மனதில் கொள்ளாமல் தன் தொகுதிக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்க வேண்டும். நமது அரசியல் சாசனம் வாக்காளரிடம் எதிர்பார்ப்பது இதைத்தான். இதைச் செய்ய ஆரம்பித்தால் நமது தேர்தலின் முகமே மாறிவிடும். இதனால் தேர்தல் கணக்குகள் முற்றிலும் மாறுபட்ட சமன்பாடுகளை உருவாக்கலாம். தனிநபர் சார்ந்த விசுவாசங்களும் விசுவாச அரசியலும் ஆட்டம்காண ஆரம்பிக்கலாம்.

வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்பது மேலோட்டமான பார்வை. இந்தியச் சூழலில், தன் தொகுதியின் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பதே ஆழமான பொருளில் ஒரு வாக்காளரின் கடமை.

இந்தத் தேர்தலில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாமல்போகலாம். ஆனால், தொலைநோக்கிலான மாற்றத்துக்கான முதல் அடி இங்கே தொடங்க முடியும்.

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x