Published : 24 May 2016 09:29 AM
Last Updated : 24 May 2016 09:29 AM
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்று சாதனை படைத்துள்ளது திரிணமூல் காங்கிரஸ். இதற்குக் காரணம், மம்தா பானர்ஜிக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு, ஈர்ப்பு, ஆற்றல், சோர்வறியாத பண்பு, விரைந்து சிந்திக்கும் திறன் ஆகியவையே. சாரதா சிட் ஃபண்ட் ஊழல் முதல் லஞ்ச பேர வீடியோ விவகாரம் வரையான விவகாரங்களால் கட்சிக்கு அவப் பெயர் ஏற்படும் என்பதால், முதலிலேயே மக்களிடம் அதற்காக மன்னிப்புக் கேட்டார். இனி, இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாது என்று உறுதியளித்தார்.
“என்னுடைய ஆட்சியில் தவறு ஏதேனும் நடந்தால் அதற்கு நான்தான் பொறுப்பு. அதற்காக என்னுடைய கட்சிக்கு ஆதரவு அளிப்பதையும் எனக்கு ஆசி வழங்குவதையும் நிறுத்திவிடாதீர்கள்” என்று வேண்டினார். 2016 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அவருக்கு மிகவும் சாதகமாக வந்த பிறகும், தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற கர்வமோ, பெருமிதமோ, மகிழ்ச்சியோ முகத்தில் தென்படவில்லை. திரிணமூல் கட்சியின் தலைவர்களில் அவர்தான் மக்களிடையே அதிகம் செல்வாக்குள்ளவர் என்பதை அனைவருமே ஒப்புக்கொள்வர்.
எளிமையும் துணிச்சலும்
மேற்கு வங்கத்தின் நகரங்களிலும் கிராமங்களிலும் வாழும் கீழ்நிலை நடுத்தரக் குடும்பங்களுக்கு அவர்தான் தலைவர், ஆதர்சம், பற்றுக்கோடு எல்லாம். இடதுசாரி முன்னணி என்ற அரசியல் இயந்திரத்தையும் அதன் வசமிருந்த அரசையும் ஒற்றை ஆளாகத் துணிவுடன் எதிர்த்து நின்றார். எதிர்க்கட்சியாக இருந்தபோது, அரசின் முடிவுகளை எதிர்த்து அடிக்கடி கொல்கத்தா நகரில் உள்ள தலைமைச் செயலகத்துக்குப் பேரணியாக நடந்து செல்வார். அரசு இயந்திரத்தால் சாமானியர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்ட சிங்கூர், நந்திகிராம் ஆகிய இடங்களுக்கு நேரடியாகச் சென்றார். மாநில அரசின் அடக்குமுறைக்கோ, காவல் துறையினரின் குண்டாந்தடிகளுக்கோ அவர் அஞ்சியதே இல்லை. அவருடைய வாழ்க்கை முறை மிக எளிமையானது. தன்னுடைய ஆதரவாளர்களிடம் பொது மேடைகளில் இலக்கணச் சுத்தமாக அல்ல - கொச்சையான மொழியிலேயே பேசுவார். அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் மக்கள் ஆர்வமாகக் கேட்டு ரசிப்பார்கள். அவருடைய ஆளுமை, எளிமை, துணிச்சல் தவிர, வேறு காரணங்களாலும் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.
காங்கிரஸ் - இடது கூட்டு
காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் இடையிலான கூட்டணி சரியாக வேலை செய்யவில்லை. இடதுசாரிகள் தங்களுடைய வாக்குகளை காங்கிரஸுக்கு சிதறாமல் அளித்தனர். காங்கிரஸ் ஆதரவாளர்களோ, தங்கள் வாக்குகளை திரிணமூல் காங்கிரஸுக்கே அளித்துவிட்டதைப் போலத் தோன்றுகிறது.
இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணிக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையில்தான் போட்டி என்று முதலில் தோன்றியது. ஆனால், பாஜக தீவிரமாகப் பிரச்சாரத்தைத் தொடங்கியது. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 4% வாக்குகள்தான் கிடைத்தன. 2014 மக்களவைப் பொதுத் தேர்தலின்போது அது 17% அளவுக்கு அதிகரித்தது. இந்த முறை அதைவிட அதிகம் பெற வேண்டும் என்று தீவிரமாக பாஜக வேலை செய்தது. அதனால் 3 உறுப்பினர்களும், மாநில அளவில் 10% வாக்குகளும் பாஜகவுக்கு கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு (இடதுகளுடன் கூட்டு வைத்தும்) 12% வாக்குகள்தான் கிடைத்துள்ளன.
மதவாத அரசியல்
பல்வேறு பகுதிகளில் மதரீதியாக வாக்குகள் திரண்டன. மம்தாவின் 5 ஆண்டுகால ஆட்சியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் பரவின. இந்த ஆண்டு ஜனவரி மாதம் காளியா சவுக் என்ற பகுதியில், இந்து மகாசபைத் தலைவர் கமலேஷ் திவாரி இறைத் தூதர் குறித்துத் தெரிவித்த சில கருத்துகளை அடுத்து வகுப்புக் கலவரம் மூண்டது. இந்த வாய்ப்பை பாஜக பயன்படுத்திக்கொள்ளப் பார்த்தது. மேற்கு வங்கத்தில் பாஜக கால் பதிக்கக் காரணமே திரிணமூல் காங்கிரஸ்தான் என்று மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 28% ஆக இருக்கும் முஸ்லிம்களின் ஆதரவைப் பெற மம்தா பானர்ஜி வெளிப்படையாகவே முயன்றார். இமாம்களுக்கு அரசு தரும் உதவித்தொகையை அதிகரித்தார். திரிணமூலுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனால், பல தொகுதிகளில் இந்துக்கள் ஒன்று திரண்டு வாக்களித்தனர். இதன் எதிர் வினையாக திரிணமூல் காங்கிரஸுக்கு முஸ்லிம்களின் ஆதரவு ஒட்டுமொத்தமாகக் கிடைத்தது.
மாற்று அரசியல்
காங்கிரஸ் கட்சி போலிப் பெருமிதத்துடன் இருந்தது. மாநிலத்திலேயே நாங்கள்தான் இரண்டாவது பெரிய கட்சி என்று பீற்றிக்கொண்டது. காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்ததால் தேர்தலில் மிக மோசமான தோல்வியை அடைந்ததற்காக மார்க்ஸிஸ்ட்டுகள் வருத்தப்படுகின்றனர். எங்கே தவறு நடந்தது என்று தேர்தல் முடிவுகள் பற்றிய அனைத்துத் தகவல்களும் கிடைத்த பிறகே தெரியும் என்கின்றனர்.
பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க மம்தா பானர்ஜி கொண்டுவந்த ‘கன்யா’ திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பள்ளிக் குழந்தைகள் படிப்பைத் தொடர்வதற்காக இலவசமாக சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. 18 வயதான பெண்ணுக்கு மேல் படிப்புக்காக ஒரே தவணையில் ரூ.25,000 தரப்படுகிறது. ஏழைகளுக்கு ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. மாநிலச் சாலைகளும் கிராமப்புறச் சாலைகளும் புதிதாகப் போடப்பட்டுள்ளன. இந்த முன்னேற்றங்களால் மகிழ்ந்த மக்கள், இதைவிட நல்ல மாற்று அரசியல் கட்சி இல்லை என்று திரிணமூல் கட்சிக்கு வாக்களித்திருக்கின்றனர்.
திரிணமூல் கட்சியின் வெற்றி உறுதி என்று முடிவுகள் வெளிவரத் தொடங்கிய உடனே, கட்சித் தொண்டர்கள் பச்சை வண்ணத்தை உடலில் பூசிக்கொண்டு கொண்டாடினர். அதே சமயம், அசன்சால் நகருக்கு 200 கி.மீ. தொலைவில் வெற்றி ஊர்வலம் சென்ற திரிணமூல் தொண்டர்கள், உள்ளூர் மார்க்ஸிஸ்ட் கட்சியின் அலுவலகத்தைத் தாக்கிச் சூறையாடினார்கள். மிதமிஞ்சிய இந்த வெற்றிக் களிப்பு மோசமான ஒரு தொடக்கம். ‘தேர்தல் முடிந்துவிட்டது அனைவரும் அமைதி காக்க வேண்டும்’ என்று முதல்வர் மம்தா கேட்டுக்கொண்டாலும் வாக்குப் பதிவுக்கு முன்னால் தேர்தல் ஆணையரின் உத்தரவுக்கிணங்கச் செயல்பட்ட மாநிலக் காவல் துறை அதிகாரிகளை எச்சரித்தவரும் அவர்தான். “தேர்தல் ஆணையம் சில நாட்களுக்குத்தான் அதிகாரத்தில் இருக்கும். அப்புறம் நான்தான் உங்களுக்கு முதல்வராகச் செயல்படுவேன்” என்று எச்சரித்தார் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தமிழில்: சாரி © ‘தி இந்து’ ஆங்கிலம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT