Published : 06 Jun 2022 07:54 AM
Last Updated : 06 Jun 2022 07:54 AM
‘கேகே’ என அறியப்படும் பிரபல இந்தியத் திரையிசைப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் மரணம், அவரது ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ‘கேகே’வின் இறப்புக்கு மாரடைப்புதான் காரணம் என்று அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உறுதிசெய்துள்ள நிலையில், ‘53 வயது இறப்புக்குள்ள வயதில்லையே’ என்று ரசிகர்களைக் கலங்கவைத்துள்ளது.
அறியாமையும் அலட்சியமும்
பொதுவாக, ஒருவருக்கு நெஞ்சைப் பிடிக்கும் அளவுக்கு மாரடைப்பு வருவதற்கு முன்னால் நெஞ்சு கனமாக இருப்பது, படபடப்பு உண்டாவது, உடல் அசதியாக இருப்பது, கடுமையாக வியர்ப்பது போன்ற சாதுவான அறிகுறிகளை அது அலாரம்போல் அடித்துக் காண்பிக்கும். ஆனால், அவற்றை ‘வாய்வு வலி’/‘அல்சர் வலி’/‘செரிமானம் சரியில்லை’/‘பணிக் களைப்பு’ என்று அவராகவே ‘பொய்க் காரணம் கண்டுபிடித்து’ அலட்சியப்படுத்தியிருப்பார். அதனால், தனக்கு வந்திருக்கும் மாரடைப்பை ஆரம்பத்தில் உணரத் தவறியிருப்பார். அதுதான் அவரை ஆபத்தான மாரடைப்பில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது.
கேகேவுக்கும் அப்படி நிகழ்ந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அவர் வாய்வுத் தொல்லைக்கு மருந்து சாப்பிட்டுள்ளதாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. அவருக்கு ஏற்கெனவே இதயவலி வந்திருந்து, அதை வாய்வு வலி என்று தவறாகக் கருதி மருந்தை எடுத்திருக்க வேண்டும். மேலும், கச்சேரி மேடையில் அவருக்கு நிறைய வியர்த்திருக்கிறது. அது மாரடைப்புக்குரிய முக்கிய அறிகுறி. மேடையில் குளிர்சாதன அமைப்புகள் வேலை செய்யவில்லை என்பதால், தனக்கு வியர்ப்பதாக அவர் நினைத்துக்கொண்டு, நிகழ்ச்சியை இறுதிவரை நடத்திக்கொடுத்திருக்கிறார். இந்த அறியாமை அல்லது அலட்சியம் அவருக்குக் கடுமையான மாரடைப்புக்கு வழி செய்திருக்க அதிக வாய்ப்புண்டு.
மாரடைப்பு விஷயத்தில் பலரும் செய்கிற அடுத்த தவறு, ஓர் அசௌகரியம் உடலை வருத்தும்போது, ‘ஓய்வெடுத்தால் சரியாகிவிடும்’ என்று கருதி, மருத்துவரிடம் செல்வதைத் தாமதப்படுத்துவது. மாரடைப்பைப் பொறுத்தவரை அறிகுறிகள் ஆரம்பித்த முதல் முக்கால் மணி நேரம் பொன்னான நேரம். அந்த நேரத்துக்குள் மருத்துவரிடம் சென்றுவிட்டால், இறப்பைத் தவிர்க்கலாம். கேகேவுக்கும் அன்றைய தினம் உடல் அசதியாக இருந்திருக்கிறது. ஓய்வெடுக்க ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறார்.
அப்படி ஹோட்டலுக்குச் செல்லாமல், விழா மேடையிலிருந்து நேரடியாக மருத்துவ ஆலோசனைக்குச் சென்றிருந்தாலோ, ஹோட்டலில் மயங்கி விழுந்ததும் இதயம் மற்றும் நுரையீரலை மறுபடியும் இயங்கவைக்கும் ‘சி.பி.ஆர்.’ (Cardio pulmonary resuscitation - CPR) எனும் அவசர சிகிச்சையைக் கொடுத்திருந்தாலோ இறப்பைத் தவிர்த்திருக்க முடியும். இந்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை.
மாரடைப்பைப் புரிந்துகொள்ளுங்கள்
மாரடைப்பு என்பது இதயத் தசைகளுக்கு ரத்தம் கொடுக்கும் இதயத் தமனிகள் (Coronary arteries) அடைத்துக்கொள்வதால் ஏற்படும் ஓர் உயிர்ப் பிரச்சினை. நெஞ்சுவலி வந்தால்தான் மாரடைப்பு என்பதில்லை. மாரடைப்பின் ஆரம்பக் கட்டத்தில் இதயத் தசைகளுக்கு ரத்தம் அல்லது ஆக்ஸிஜன் கிடைப்பது குறையும். அப்போது உடல் அசதி, குமட்டல், வாந்தி, மூச்சுமுட்டுவது, வியர்ப்பது இப்படி ஏதாவது ஒரு சாதாரண தொல்லையுடன்கூட அது தொடங்கலாம்.
இதற்கு ‘இதயவலி’ (Angina) என்று பெயர். முக்கியமாக, முதியோருக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இப்படித்தான் அது ஆரம்பிக்கும். அப்போது பலரும் அதைக் கவனிக்க மாட்டார்கள். பாதிப்பின் அடுத்த கட்டத்தில் நெஞ்சுவலி கடுமையாக வரும்போதுதான் பதற்றமடைவார்கள். இன்னும் பலருக்குப் படியில் ஏறினாலோ பளு தூக்கினாலோ வேகமாக நடந்தாலோ உணர்ச்சிவசப்பட்டாலோ நிம்மதி தொலைந்தாலோ நடுங்க வைக்கும் குளிர்க் காற்று பட்டாலோ நெஞ்சு கனமாக இருக்கும். சிலருக்கு வெறும் வயிற்றில் நடக்கும்போது வராத நெஞ்சுவலி வயிறுமுட்டச் சாப்பிட்டுவிட்டு நடக்கும்போது வரும்.
அடுத்து, நெஞ்செரிச்சலும் இந்த வகைப்பாட்டில் சேர்ந்ததுதான். சமீபத்தில் ராஜபாளையம் வழியாக காரில் குற்றாலம் சென்றுகொண்டிருந்த மதுரைப் பயணி ஒருவர், என் மருத்துவமனையைக் கடக்கும்போது, நெஞ்செரிச்சல் ஏற்படவும் என்னிடம் வந்தார். அவருக்குப் பல முறை இப்படி ஏற்பட்டிருக்கிறது என்பதால், அல்சர் மாத்திரை கேட்டார். எனக்கோ அது மாரடைப்பின் அடையாளமாகத் தெரிந்தது. இசிஜி எடுத்துப் பார்த்தேன். அது இயல்பாக இருந்தது. ஆனால், ‘எக்கோ’வில் சந்தேகம் காட்டியது. உடனே, மதுரைக்கு அனுப்பி, ஆஞ்சியோகிராபி செய்ததில் மாரடைப்பு உறுதியானது. இதைச் சொல்வதற்குக் காரணம், நெஞ்செரிச்சலை அல்சரின் அறிகுறியாகப் பார்த்து அலட்சியமாக இருக்காமல், அதன் பிறப்பிடம் இதயமா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
நிலையில்லாத இதயவலி!
திருடுவதற்குச் சமயம் பார்த்து இருட்டில் மறைந்திருக்கும் திருடனைப் போல் சில சமயங்களில் இதயத்தமனியில் சிறு ரத்தக் கட்டி ஒதுங்கி நிற்கும். அவ்வப்போது அது இதயத்தமனியை அடைக்கும். பசித்த வயிறு ஒட்டிக்கொள்வதுபோல் சிலருக்கு இதயத்தமனி திடீர்திடீரென்று உள்ளுக்குள் ஒட்டிக்கொண்டு அடைக்கும். அப்போதெல்லாம் ஏற்படுவது ‘நிலையில்லாத இதயவலி’ (Unstable Angina). இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு நெஞ்சு வலிக்கும்போது இசிஜி எடுத்தால்தான் காரணம் தெரியும். மற்ற நேரங்களில் இசிஜி இயல்பாகவே இருக்கும். ஆகையால், இவர்கள் அலட்சியமாக இருப்பார்கள். சமயங்களில் சிறிதாக இருந்த ரத்தக் கட்டி எதிர்பாராமல் வளர்ந்து, இதயத் தமனியை அதிகமாக அடைத்து, மாரடைப்பை வரவேற்கும்.
அந்த ஆபத்தை எப்படித் தடுப்பது? ஓய்வாக இருக்கும்போதும் நடுநெஞ்சில் வலி வருகிறது; அது 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கிறது; ஒரு மாதத்துக்குள் வலி மறுபடியும் வருகிறது, அடிக்கடி வருகிறது, இன்னும் அதிக நேரம் நீடிக்கிறது, வலி கடுமையாகிறது, நடுராத்திரியில் மூச்சடைத்து உறக்கம் கலைந்து உட்காரவைக்கிறது என்றால், அது நிலையில்லாத இதயவலியாக இருக்கலாம். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து ‘ட்ரோபோனின்’ சோதனை (Troponin test) செய்ய வேண்டும்; தொடர்ச்சியாக 6 மணி நேரத்துக்கு இசிஜி எடுத்துப் பார்க்க வேண்டும். அவற்றில் பாதிப்பு அறியப்படவில்லையென்றால், ‘ட்ரட் மில்’, ‘எக்கோ’, கொரோனரி ஆஞ்சியோகிராபி போன்ற சோதனைகள் தேவைப்படும். அந்த வழிகளில் இதய பாதிப்பை உறுதிசெய்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
ஆபத்தான மாரடைப்பு
இதயவலியை ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தியவர் களுக்குத் திடீரென்று ஒருநாள் நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி இறுக்குவதுபோல மிகக் கடுமையாக வலிக்கும். அந்த வலி தாடை, இடது புஜம், இடது கைக்குப் பரவும். இது மாரடைப்பின் மோசமான முகம். இதை ‘இதயத்தசை அழிவு’ (Myocardial infarction) என்கிறோம். இந்தப் பாதிப்பு உள்ளவரை எவ்வளவு சீக்கிரம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் உயிருக்குப் பாதுகாப்பு கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் பலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சு வலிக்காது. இதை ‘அமைதியான மாரடைப்பு’ (Silent Heart Attack) என்கிறோம். அடுத்து, ‘நெஞ்சைப் பிடிச்சுட்டு வலிக்குதுன்னு சொன்னார். அடுத்த நிமிஷமே மயக்கமாயிட்டார். பேச்சும் மூச்சும் நின்னுபோச்சு!’ என்று இறந்தவர் வீடுகளில் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒழுங்கற்ற இதயத் துடிப்பினால் (Ventricular tachyarrhythmia – VT ) இப்படியான உடனடி மாரடைப்பு உண்டாகிறது.
மறைந்து தாக்கும் இவ்வகை மாரடைப்பிலிருந்தும் தப்பிக்க வழி உண்டு. 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள், குறிப்பாக, வம்சாவளியில் மாரடைப்பு ஏற்பட்ட வரலாறு உள்ளவர்கள் வருடத்துக்கு ஒருமுறை ‘PET MPS’ உள்ளிட்ட இதயப் பரிசோதனைகளை (Cardiac Check-up) முழுவதுமாகச் செய்துகொண்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகளைக் கடைப்பிடித்தால் உயிர் ஆபத்திலிருந்து விடுபடலாம்.
- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com
To Read this in English: Beware! Cardiac arrest may be waiting in ambush
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT