Published : 03 Jun 2022 06:46 AM
Last Updated : 03 Jun 2022 06:46 AM
கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் திருச்சியில் நடைபெற்ற ‘விடியலுக்கான முழக்கம்’ கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏழு உறுதிமொழிகளை அளித்தார். அவற்றில் இரண்டு அம்சங்கள் சுற்றுச்சூழல் சார்ந்தவை. நீர்வளப் பாதுகாப்பு, குடிமக்களுக்குத் தண்ணீர் வழங்குவதை உறுதிசெய்தல், வேளாண்மைக்கு ஊக்கம், பசுமைப் பரப்பளவை 25% உயர்த்துதல், உழவர்கள் மகசூல் பெருக்க உதவி உள்ளிட்டவற்றை அறிவித்திருந்தார். ஆட்சியமைக்க வாய்ப்புள்ள பெரிய கட்சி ஒன்று வெளியிட்ட முக்கியமான அறிவிப்புகளாக அவை அமைந்திருந்தன.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மக்களின் வாழ்வாதாரத்தை ஏற்கெனவே கடுமையாகப் பாதிக்கத் தொடங்கிவிட்டிருந்த நிலையில், முதன்முறையாகக் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சில சுற்றுச்சூழல் பிரச்சினைகள் கவனம் பெற்றன. ஆட்சியமைப்பதற்கு முன்னதாக மீத்தேன், ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை உள்ளிட்ட திட்டங்களை திமுக கடுமையாக எதிர்த்துவந்தது. தேர்தலுக்கு முன்னதாக நீர்வளத்தைப் பாதுகாப்பதற்கும் வேளாண்மைக்கும் முன்னுரிமை வழங்குவதாகக் கூறியிருந்த திமுக அரசின் இன்றைய செயல்பாடுகள் அந்த வகையில் உள்ளனவா?
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்துக்கு ஆதாரமாக இருக்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான கல்லணைக் கால்வாய் முழுக்கக் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மேற்கில் பாய்ந்து வளம் சேர்த்துவரும் கீழ் பவானி கால்வாயின் 200 கி.மீ. தொலைவுக்குக் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி கடும் எதிர்ப்புகளை மீறி நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.
கல்லணைக் கால்வாய்த் திட்டத்துக்கு ரூ.2,639 கோடியும் கீழ் பவானி கால்வாய்த் திட்டத்துக்கு ரூ.933 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட உள்ளதாக 2021 இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அன்றைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். கீழ் பவானி கால்வாய்த் திட்டத்தைப் பிரதமர் மோடி 2021 பிப்ரவரி மாதம் தொடங்கிவைத்தார். இதேபோல் பாசனப் பகுதியை விரிவாக்குதல், புதுப்பித்தல், நவீனப்படுத்துதல் என்கிற திட்டங்கள் காவிரி ஆற்றின் கட்டளைக் கால்வாய், ராஜவாய்க்கால், மேற்கில் நொய்ய லாற்றுப் பகுதி ஆகியவற்றிலும் முன்னெடுக்கப்பட உள்ளன.
சுற்றுச்சூழலுக்கு அடிப்படையாகத் திகழ்பவை ஆறுகளும் வளமான நிலமுமே. நீர் சேகரிப்பு, நீர் வளத்தைப் பராமரிப்பது சார்ந்து நெடிய மரபு நமக்கு இருக்கிறது. அவற்றைப் புறந்தள்ளிவிட்டு வெளிநாட்டுக் கால்வாய்த் திட்டங்களைப் பின்பற்றி, கான்கிரீட் தளம் அமைப்பது சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் எதிரானது. இயற்கை வளம் மிகுந்த ஒரு வெப்பமண்டல நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பருவமழைக் காலத்தில் நமக்குத் தேவையான அளவு நீரை இயற்கை வழங்கிவருகிறது. அந்த நீரை உரிய வகையில் சேகரித்து, புவியியல் அமைப்புக்கு ஏற்ப நீர்நிலைகளைப் பராமரித்தால் வேளாண்மையும் நிலத்தடி நீரும் செழிப்பாக இருக்கும். ஆனால் அவற்றை விடுத்து, கடைமடைக்கும் தண்ணீரைக் கொண்டுசெல்லப் போகிறோம் என்கிற பிரச்சாரத்துடன் ஆற்றுப் பாதை முழு வதும் கான்கிரீட் தளம் அமைப்பது, மனிதர்களை உயிருடன் கல்லறையில் வைத்து சமாதி கட்டுவதற்கு ஒப்பானது.
ஆறு, வாய்க்கால், குளம், ஏரி என எந்த ஒரு நீர்நிலையும் வெறுமனே தண்ணீரை மட்டும் சுமந்துகொண்டிருப்பதில்லை. இந்த நன்னீர் நிலைகளிலும் அவற்றை ஒட்டியும் தாவரங்கள் வாழ்கின்றன. மீன்கள், நீர்-நிலவாழ்விகள், பறவைகள் எனப் பல்வேறு வகை உயிரினங்கள் நீர்நிலைகளைச் சார்ந்து வாழ்கின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு உணவுச் சங்கிலியும் உயிர்ச் சூழல் மண்டலமும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. பல்வேறு உயிர்ச் சுழற்சிகளை இயற்கை நெடுங்காலத்தில் வளர்த்தெடுத்திருக்கிறது.
நீர்நிலைகளின் மூலம் ஒரு பகுதியின் வெப்பநிலை குறைக்கப்படுவது முதல் மீன் உற்பத்தி, வெள்ளத்தடுப்பு உள்ளிட்ட பல்வேறு இயற்கைச் செயல்பாடுகள் மனிதர்களின் பங்கேற்பு இல்லாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக இதையெல்லாம் இலவசமாக நாம் அனுபவித்துவருகிறோம். இவை அனைத்தையும் ஒரேயொரு செயல்பாடு மூலம் கொன்றுவிட முடியும். அதுவே, கான்கிரீட் தளம் அமைப்பது. ஒருபுறம் இயற்கை நமக்கு வழங்கும் சேவைகள் தடுக்கப்படுவதுடன், மற்றொருபுறம் இந்தத் திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான கரையோர மரங்களும் வெட்டப்படுகின்றன.
உள்ளூர் அளவில் நீர்நிலைகளைப் பராமரிப்பது, சிறு தடுப்பணைகள் மூலம் நீரைச் சேமிப்பது போன்றவற்றைத் தவிர்த்தும், ஆறு-வாய்க்கால்களில் இயல்பாகத் தண்ணீர் பாய்வதைத் தடுத்தும், கடைமடைக்குத் தண்ணீர் கொண்டுபோகிறோம் என்கிற பொய்ச்சாக்கு சொல்லி, கான்கிரீட் தளம் அமைக்கும் செயல்பாட்டை நியாயப்படுத்துவது தவறு. ஆறுகளும் வாய்க்கால்களும் வேளாண்மைக்கும் குடிநீர் தேவைகளுக்கும் மட்டுமில்லாமல் பாயும் பகுதிகளில் கசிவுநீர் வழியாகத் தோட்டங்கள், வயல்களை வளப்படுத்துவதுடன் நிலத்தடியில் நீரேற்றம் பெறவும் காரணமாக இருக்கின்றன. கான்கிரீட் தளம் அமைக்கும்போது இந்த ஒட்டுமொத்தச் செயல்பாடுகளும் நிறுத்தப்படுகின்றன.
கான்கிரீட் கால்வாய் மூலம் கடைமடைக்குத் தண்ணீர் கொண்டுசெல்ல இருப்பதாகவும், தண்ணீர் வீணாகாமல் தடுப்பதாகவும் கூறும் மாநில அரசு, கால்வாயிலிருந்து வயல்களுக்கு நீர் பாய்ச்சப்படும்போது, 100% தண்ணீரும் பயன்படுத்தப்படும் என்று உத்தரவாதம் அளிப்பது சாத்தியமில்லை. ஆவியாதல், நீர்க்கசிவு எனப் பல்வேறு இயற்கை நடைமுறைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. மட்டுமில்லாமல், வேதி வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு நெல்லையும் கரும்பு, பருத்தி போன்ற பணப் பயிர்களையும் பயிரிடுவது அதிக நீரை உறிஞ்சுகிறது. இவற்றை முறைப்படுத்தாமல் ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் கான்கிரீட் தளம் அமைப்பதால் மட்டும் எப்படித் தண்ணீரைப் பாதுகாக்க முடியும்?
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தெர்மாகோலால் வைகை அணை நீர் ஆவியாவதைத் தடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது நகைக்கப்பட்டது, மீம்ஸ் வெளியிட்டு விமர்சிக்கப்பட்டது. இன்றைக்குக் கான்கிரீட் தளம் மூலம் தண்ணீர் வீணாவது தடுக்கப்படுகிறது என்று கூறப்படும்போது நகைக்கவோ, இதன் அறிவியல்பூர்வமற்ற தன்மை குறித்து விமர்சிக்கப்படவோ இல்லை. கீழ் பவானி திட்டக் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைப்பதை ‘கீழ் பவானி விவசாயிகள் நலச் சங்கம்’ கடுமையாக எதிர்க்கிறது. திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சேனாதிபதியும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவருகிறார். ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு மாநில அரசு முயற்சி எடுக்கவில்லை. இதுபோன்று கட்டுமானத் திட்டங்களின் பின்னணியில் புரளும் பெரும் பணமே இந்தத் திட்டங்கள் வேகமாகவும் தீவிரமாகவும் நடைமுறைப் படுத்தப்படுத்துவதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
மத்திய மாவட்டங்களில் கல்லணைக் கால்வாய், மேற்கு மாவட்டங்களில் கீழ் பவானி திட்டக் கால்வாய் போன்ற சூழலியலுக்கு எதிரான செயல்பாடுகள் எதிர்ப்பை சந்தித்திருப்பதுபோல், வட மாவட்டமான திருவண்ணாமலையில் சிப்காட் வளாகத்துக்கு விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. மக்களின் வாழ்வாதாரம், ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் குறித்த அக்கறையின் அடிப்படையில் இந்தப் பிரச்சினைகள் மாநிலம் தழுவிய பிரச்சினைகளாகப் பேசப்பட்டிருக்க வேண்டும். இவற்றின் அடிப்படையில் முன்னுதாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த செயல்பாடு என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆழமான கவனம் செலுத்தப்படாத துறையாகவே உள்ளது. மக்கள் நலன், ஒட்டுமொத்த புவியின் நலன், அதை அடுத்த தலைமுறைக்கு நாம் கையளிக்க வேண்டிய பொறுப்பு ஆகியவையே முந்தைய தலைமுறை சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களின் முதன்மைக் குறிக்கோள்களாக இருந்தன. தங்கள் போராட்டங்களில் தோல்வி கிடைக்கும் என்று அறிந்திருந்தபோதிலும்கூட, அதிகாரத்துக்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பை வலுவாகத் தெரிவிக்க அவர்கள் தயங்கியதோ பின்தங்கியதோ இல்லை. ஆனால், இன்றைய சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் சிலரின் அதிகபட்ச நோக்கம் சுற்றுச்சூழல் சார்ந்த அரசுக் குழுக்களில் இடம்பெறுவதாகச் சுருங்கிவிட்டது.
சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளில் தேசிய, சர்வதேச அளவிலான முன்னுதாரண ஆளுமைகளின் ஆலோசனை கள், செயல்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்தத் தலைமுறைக்கு மட்டுமல்லாமல், வருங்காலத் தலைமுறைக்கும் உயிர்ப்புள்ள தமிழ் நிலம் கையளிக்கப்பட வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளாகச் சூழலியல் புரிதலுடன் தமிழ்ச் சமூகம் நிலத்துடன் கொண்டுள்ள ஆரோக்கியமான உறவும், மண்ணைக் காக்கும் செயல்பாடுகளும் தமிழ்நாடு அரசின் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற வேண்டும்.
- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in
To Read this in English: How can a good environment be built up on the tombs of rivers?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT