Published : 11 Jun 2014 10:00 AM
Last Updated : 11 Jun 2014 10:00 AM
பாரிஸ் நகரின் ரோலண்ட் கேர்ரோஸ் மைதானத்தில் கூடியிருக்கும் கூட்டம் கைதட்டியபடி நிற்கிறது. பிரெஞ்ச் ஒப்பன் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற நோவக் ஜோகோவிச், கண் களில் நீர் கோக்க இறுக்கமான முகத்துடன் கூட்டத்தை நோக்கிக் கைய சைக்கிறார். வெற்றிப் பெருமிதமும் திறமையான வீரரைத் தோற்கடித்துவிட்ட ஆசுவாசமுமாக எதிர்ப்புறம் நின்று கொண் டிருக்கிறார் நாயகன் நடால். தனது பெயர் அறிவிக்கப்பட்டதும் அந்த சிறுமேடையில் மின்னலென நடந்துசெல்லும் நடால், ஜோகோவிக்கின் இடுப்பில் நட்பின் உரிமையுடன் செல்லமாகத் தட்டுகிறார். கைக்குக் கோப்பை வந்ததும் அதைத் தலைக்கு மேல் உயர்த்திக் கூட்டத்துக்குக் காட்டுகிறார். கடைசியில், அவரது கண்களிலும் எட்டிப் பார்க்கிறது நீர். ஒன்பதாவது முறையாக பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தை வென்றிருக்கும் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், அமெரிக்காவின் பீட் சாம்பிராஸின் சாதனையைச் சமன் செய்திருக்கிறார். பாரிஸ் நகரின் களிமண் தரை டென்னிஸ் மைதானங்களில் 67 முறை விளையாடியிருக்கும் நடால், 66 முறை வெற்றிபெற்றிருக்கிறார். ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்றவர் நடால். தற்போதைய வெற்றியின் மூலம் ‘களிமண் தரையின் மன்னன்’ (King of clay) என்ற பட்டப்பெயரைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
ஸ்வீடன் வீரர் மாட்ஸ் விலேண்டருக்குப் பின்னர், கடினத் தரை, புல்தரை மற்றும் களிமண் தரையில் நடந்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் எட்டு முறை சாம்பியன் பட்டம்பெற்ற ஒரே வீரரும் நடால்தான்.
கால்பந்து மீது காதல்கொண்ட சிறுவனாக இருந்த ரஃபேல் நடாலுக்கு, இளம் வயதிலேயே டென்னிஸின் சுவையைக் காட்டி ஈர்த்தவர், அவரது மாமா டோனி நடால். இடதுகையிலும் நன்கு டென்னிஸ் விளையாடுவதைக் கண்ட டோனி, இரண்டு கைகளிலும் சிறப்பாக விளையாட நடாலுக்கு ஊக்கமளித்தார். கால்பந்து, டென்னிஸ் இவற்றில் ஒன்றைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நடாலின் தந்தை சொன்னபோது, அவர் டென்னிஸைத் தேர்ந்தெடுத்தார்.
தற்போது டென்னிஸ் தர வரிசையில் நான்காவது இடத்தை வகிக்கும் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரரைத் தனது 17-வது வயதில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடால் வென்றார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய இளம்வீரர் என்ற பெருமையும் இதன்மூலம் அவருக்குக் கிடைத்தது. 2005-ல் தனது 19-வது வயதில், முதல்முறையாக பிரெஞ்ச் ஓப்பன் போட்டியில் விளையாடிய நடால் அப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். அதுதான் அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றி. 2008-ல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் அரையிறுதிப் போட்டியிலும் அவர் நோவக் ஜோவிக்கை வென்றுதான் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப் போட்டியில் சிலியின் ஃபெர்னாண்டோ கோன்ஸாலேசை வென்று தங்கப்பதக்கம் பெற்றார். டென்னிஸ் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ள வீரர்களில் முதல்முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரும் நடால்தான்.
பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான நடால், இந்தப் போட்டியில் வென்றிருக்க வேண்டியவர் நோவக் ஜோகோவிச்தான் என்று கூறியிருப்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. சாதனைகள் தொடர வாழ்த்துவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT