Published : 15 May 2016 10:02 AM
Last Updated : 15 May 2016 10:02 AM
திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்து 50-வது ஆண்டு நெருங்கும் சூழலில், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தைத் தாண்டியும் ஒலிக்கின்றன. இதுதொடர்பாக, தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி என்ன நினைக்கிறார்?
தேர்தல் களத்தில் தமிழக மக்களின் நாடித் துடிப்பு எப்படி இருக்கிறது?
தமிழக மக்களின் உணர்வுகளை அறிந்து சொல்வதானால், ஆளும்கட்சிக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பு அலை வீசுகிறது. ஏடுகளிலும் ஊடகங்களிலும் வரும் கருத்துக் கணிப்புகளை வைத்து இதை நான் சொல்லவில்லை. போன தேர்தலுக்கும் இந்தத் தேர்தலுக்கும் மக்கள் எங்களின் உரையைக் கேட்பதில் நிறைய வித்தியாசம் தெரிகிறது. ஜெயலலிதா அம்மையாரின் கூட்டங்களுக்கு மக்களைக் கொட்டடியில் அடைப்பதுபோல் அடைத்து வைத்துக் கூட்டம் காட்டுகிறார்கள். ஆனால், தொகுதிகளில் ஆளும் கட்சி அமைச்சர்களோ எம்எல்ஏக்களோ மக்களைச் சந்தித்து ஓட்டுக் கேட்க முடியவில்லை. எங்கு போனாலும் மக்கள் கேள்வி கேட்டுத் துரத்துகிறார்கள். இதுதான் ஆட்சிக்கு எதிரான மிகப்பெரிய அடையாளம்; துல்லியமான அளவுகோல்.
திமுகவும் அதிமுகவும் இலவசங்களையும் சலுகைகளையும் அறிவித்து மக்களைச் சோம்பேறிகளாக்குவதாக விமர்சிக்கப்படுகிறதே..
கடந்த தேர்தல்களில் இலவசங்களைத் தரும் நிலையில் இருந்த திமுக இப்போது தனது போக்கை மாற்றிக்கொண்டது. அதனால்தான் இந்தத் தேர்தல் அறிக்கையில் அக்கட்சி இலவசங்களைத் தவிர்த்துவிட்டது. கடன் தள்ளுபடி உள்ளிட்ட அம்சங்களை இலவசங்களோடு ஒப்பிட வேண்டியதில்லை. தேர்தலுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் சென்று மக்களைச் சந்தித்த ஸ்டாலின், அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். அந்த மனுக்களில் உள்ள குறைகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் திமுக ஆக்கபூர்வமான முறையில் தேர்தல் அறிக்கையைத் தயாரித்திருக்கிறது. நாம் சொன்ன விஷயங்களுக்கு எல்லாம் தேர்தல் அறிக்கையில் விடிவு இருக்கிறது என்று மக்களும் நம்புகிறார்கள். அதனால்தான் ஓட்டுக்காக மட்டுமே ஜெயலலிதா அறிவித்திருக்கும் இலவசங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. மொத்தத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
234 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னம் போட்டி என்ற ஜெயலலிதாவின் துணிச்சல்பற்றி?
இந்தத் துணிச்சல் முரட்டுத் துணிச்சல்தானே தவிர, கணக்குப் போட்ட துணிச்சல் இல்லை. தான் என்கிற மமதையில் மற்ற கட்சிகளை எல்லாம் உதாசீனப்படுத்தியவர், கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறு கட்சிகளைக்கூட அவரவர் சின்னத்தில் நிற்கவிடவில்லை. ஆரம்பத்தில், தனது கட்சிக்கு இழுபறியான நிலை வந்தால், கூட்டணிக் கட்சிகள் எல்லாம் பேரம் பேசுவார்கள் என்று பயந்தவர், அவர்களையும் இரட்டை இலையில் நிற்க வைத்தார். ஆனால், தற்போதைய களநிலவரம் அவரது திட்டத்தை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டது.
திராவிடக் கட்சிகளின் ஐம்பது ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டதாகப் பரப்புரை செய்யப்படுகிறதே?
தண்டிக்கப்பட்ட ஊழலையும் அனுமானத்தின் பேரில் சொல்லப்பட்ட ஊழலையும் சமமாகப் பார்க்க முடியாது. எனவே, இந்த விஷயத்தில் அதிமுகவையும் திமுகவையும் சமமாக வைத்துப் பார்ப்பதே தவறு. திராவிடக் கட்சிகள் ஆண்டதால்தான் கல்வி வளர்ச்சி, சராசரியான அறிவு வளர்ச்சி, பெண்களுக்கான உரிமைகள், பெண் கல்வி; வேலைவாய்ப்பு இத்தனையும் சாதிக்க முடிந்திருக்கிறது. இன்னமும் குலக்கல்வி முறையே தொடர்ந்திருந்தால், இதையெல்லாம் அடைந்திருக்க முடியுமா என்பதை உணராமல் சிலர் பேசுகிறார்கள். திராவிடக் கட்சிகள் சீரழித்துவிட்டதாகச் சொல்பவர்கள் அனைவருமே திராவிட இயக்கங்களோடு கூட்டணி வைக்க முயற்சிசெய்து, அங்கே உள்ளே நுழைய முடியாமல் போனதால் இப்படிப் பிதற்றுகிறார்கள்.
திமுக, அதிமுகவுக்கு மாற்று வேண்டும். ஆனால், அத்தகைய மாற்றத்தைத் தரும் இயக்கம் கண்ணுக்குத் தெரியவில்லை என்று சொல்லப்படுவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
மாற்று வேண்டும் என்று நினைப்பதில் தவறே இல்லை. ஆனால், அதிமுக, திமுகவுக்கு மாற்று வேண்டும் என்று சொல்லும்போது அத்தகைய மாற்றத்தைத் தருவதற்கு யாரும் தயாராக இல்லையே. ஆளும்கட்சி காட்டுத் தீ போல் எரிந்துகொண்டிருக்கிறது. அதை அணைக்க வேண்டுமானால் தீயை அணைப்பதில் முறையாகப் பயிற்சி பெற்ற, தீயணைப்பு வண்டி வைத்திருக்கின்ற ஒருவர்தான் வர வேண்டும். நாங்கள் வாளியில் கொஞ்சம் தண்ணீர் வைத்திருக்கிறோம், அவர் கொஞ்சம் மணல் வைத்திருக்கிறார் எல்லோருமாகச் சேர்ந்து தீயை அணைக்கப் போகிறோம் என்று சொல்வதெல்லாம் வேலைக்கு ஆகாது. மக்கள் இந்தத் தேர்தலில் காட்டுத் தீயை அணைக்கும் பயிற்சியாளனாக திமுகவைத்தான் பார்க்கிறார்கள்.
இடதுசாரிகளும் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அங்கீகரித்திருப்பது குறித்து?
தமிழக இடதுசாரிகள் வரலாற்றில் இதுபோன்ற கறைபடிந்த முடிவை எடுத்தது இல்லை. அந்தக் கூட்டணியின் பலவீனமே விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததுதான். இடதுசாரிகள் சார்ந்த பல அமைப்புகளின் நிகழ்வுகளில் நாங்கள் தொடர்ந்து கலந்துகொண்டு வருவதால் சொல்கிறேன்.. கம்யூனிஸ்ட் தலைவர்களின் இந்த முடிவை அந்த இயக்கங்களின் தோழர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் சிலர் தேர்தலைவிட்டே ஒதுங்கிவிட்டார்கள்.
ஒருவேளை.. ஜெயலலிதாவோ, விஜயகாந்தோ ஆட்சிக்கு வந்தால்?
அது மாபெரும் விபத்தாக அமையும். தமிழகம் மேலும் குட்டிச்சுவராகும். அத்தகைய விபத்து நடக்க தமிழக மக்கள் விட மாட்டார்கள்.
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என வைகோ எடுத்த முடிவைப் பற்றி..
நகைச்சுவைக்குரிய ஒரு பரிதாபமான முடிவு அது.
கருணாநிதியின் பிரச்சார வேனுக்கு தேங்காய் உடைப்பு, வைகோ தலையில் திடீர் பச்சைத் தலைப்பாகை, கோயில்களில் விஜயகாந்த் சிறப்புப் பூஜைகள், அதிமுக வேட்பாளர் பட்டியல் கோயில் கோயிலாய் எடுத்துச் செல்லப்படுவது.. திராவிடக் கட்சிகளின் இந்தச் செயல்பாடுகள் குறித்து?
அரசியல் என்று வந்துவிட்டால் மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்க நினைப்பவர்கள் அனைத்துத் தரப்பினரின் ஓட்டுகளையும்தான் வாங்கப் பார்ப்பார்கள். இந்தத் தரப்பினர் ஓட்டுகள் எல்லாம் நமக்கு வேண்டாம் என்று ஒதுக்கித்தள்ளும் துணிச்சல் யாருக்கும் வராது. திராவிடக் கட்சிகள் மாத்திரமல்ல.. எல்லாக் கட்சிகளுக்கும் இது பொருந்தும். தேர்தல் களத்தில் பகுத்தறிவுக் கொள்கைகள் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிடும். அதனால்தான் தந்தை பெரியார் தேர்தல் அரசியலுக்கு வரவில்லை. தேர்தலில் வென்றவர்களை வைத்து வேலை மட்டும் வாங்கினார்.
ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க அதிமுக மட்டுமல்லாது திமுகவும் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாகப் புகார்கள் வருகின்றனவே?
பண நாயக அரசியலும் சாதி நாயக அரசியலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஓட்டுக்காக யார் பணம் கொடுத்தாலும் அது தவறுதான். ஆனால், தமிழக மக்களைப் பொறுத்தவரை பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அதிமுகவை ஆதரிக்கத் தயாராக இல்லை.
தொடர்புக்கு: shanmugasundaram.kl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT