Published : 26 May 2022 06:55 AM
Last Updated : 26 May 2022 06:55 AM
சிறு குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதல்வர் 08.05.22 அன்று சட்டமன்றத்தில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதலாவது, அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்குக் காலை உணவு இலவசமாக வழங்கப்படும். மற்றொன்று, ஆறு வயதுக்குக் குறைவாக உள்ள, ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்ட குழந்தைகளைக் கண்டறிந்து, அந்தப் பிரச்சினையைத் தீர்க்க மருத்துவப் பரிசோதனை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வரவேற்கத்தக்க அறிவிப்புகள் என்றாலும் கீழ்க்கண்ட விஷயங்களைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் திட்டத்தின் நோக்கங்கள் சிறப்புற நிறைவேறும்.
காலை உணவுத் திட்டம்
கண் விழித்தது முதல் சுறுசுறுப்பாக குழந்தைகள் இயங்குவதற்கான சக்தி காலை உணவிலிருந்து கிடைக்கிறது. ஆனால், உணவு உண்பதன் நோக்கம், வயிற்றை நிரப்புவது மட்டும் அல்ல. ஆரோக்கியத்துக்கான கலோரி மற்றும் புரதச்சத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கும் வைட்டமினும் தாதுப்பொருட்களும் நார்ச்சத்தும் உணவிலிருந்து கிடைக்க வேண்டும். நுண்சத்துக்களில் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, ‘போலேட்’, ‘பி 12’ மிக முக்கியமானவை. இரும்புச் சத்து மற்றும் ‘போலேட்’ நம் உடலுக்கான ரத்த உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் ஏ கண் பார்வைக்குத் தேவையானது.
‘பி 12’ நமது டி.என்.ஏ.வில் முக்கியப் பங்குவகிக்கிறது. தேசிய அளவில் குழந்தைகளின் ஊட்டசத்து நிலை குறித்து எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், தமிழ்நாட்டில் 5 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளில் 10% வரை ரத்தசோகையும், வைட்டமின் ஏ பற்றாக்குறையும், 41% பேர் ‘போலேட்’ பற்றாக்குறையும், 7% பேர் ‘பி 12’ பற்றாக்குறையும் உடையவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். இவற்றில் ‘பி 12’ தவிர, இதர சத்துகள் காய்கறி, பழங்களிலிருந்து கிடைக்கின்றன.
ஒரு வேளை உணவில், ஒரு நாளைக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் கிடைக்க வேண்டும். இதன் அடிப்படையில் தற்சமயம் ஆரம்பப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு 450 கலோரியும் 12 கிராம் புரதமும் கொடுக்க வல்லதாக உள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் 50 கிராம் காய்கறியைக் கொடுப்பதற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. சமைப்பதற்குத் தேவையான வைட்டமின் ‘ஏ’ செறிவூட்டப்பட்ட பாமாயிலும், அயோடின், இரும்புச் சத்துடன் கூடிய உப்பும் வழங்கப்படுகிறது.
வாரத்தில் ஐந்து நாட்கள் சனி, ஞாயிறு தவிர உணவு வழங்கப்படுகிறது. முதல் ஐந்து நாட்கள் வெஜிடபிள் பிரியாணி, கருப்புக் கொண்டைக்கடலை புலாவ், தக்காளி சாதம், சாதம் காய்கறிகளுடன் கூடிய சாம்பார், கறிவேப்பிலை சாதம் வழங்கப்படுகிறது. அடுத்த ஐந்து நாட்கள் சாம்பார் சாதம், சோயாவிலிருந்து தயாரிக்கப்பட்ட ‘மீல் மேக்கர்’ சேர்க்கப்பட்ட சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் வழங்கப்படுகிறது. எல்லா நாட்களும் முட்டை வழங்கப்படுகிறது. உணவைத் தயாரிப்பதற்கான செய்முறை விளக்கம் கைதேர்ந்த சமையல் கலை நிபுணர்கள் மூலம் மதிய உணவுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கலோரியும் புரதமும் அளிக்கும் அரிசி, எண்ணெய், முட்டை, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை அரசு தேவையான அளவில் நேரடியாகப் பள்ளிகளுக்கு வழங்கிவிடுகிறது. மற்ற சத்துக்கள் அடங்கிய இதர காய்கறிகளை வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் தினமும் 50 கிராம் காய்கறி கொடுப்பதற்கு ரூ 1.06-ம், தாளிக்க மற்றும் இதர மசாலாப் பொருட்கள் வாங்குவதற்கு 40 பைசாவும், சமையல் எரிவாயுவுக்கு 61 பைசாவும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில், மதிய உணவுப் பணியாளர் காய்கறியையும் மசாலாப் பொருட்களையும் அன்றாடம் வாங்கிக்கொள்ள வேண்டும்.
இந்த நிதி ஒதுக்கீடு மேற்கூறிய பொருட்களை வாங்குவதற்குப் போதாத நிலையில், கூடுதலாக 50 கிராம் காய்கறி வாங்குவது சாத்தியமற்றது. மேலும், பல சமயங்களில் அன்றாடம் ஏற்படும் விலைவாசி உயர்வால் இந்த ஒதுக்கீட்டை வைத்து குழந்தைகளின் காய்கறிக்கான தேவையைப் பூர்த்திசெய்ய முடிவதில்லை. இதனாலேயே பெரும்பாலும் ஒவ்வொரு குழந்தைக்கும் 50 கிராம் காய்கறிக்குப் பதில் சாம்பாரில் போடப்பட்ட ஓரிரு துண்டங்களே கிடைக்கின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும் 50 கிராம் காய்கறி பொரியலாகவோ வேறு வடிவிலோ கிடைக்க வேண்டும். மதிய உணவிலிருந்து கலோரியும் புரதமும் கிடைப்பதைப் போல் நுண்ணூட்டச்சத்து கிடைப்பதில்லை என்பது ஊட்டச்சத்து நிபுணர்களாலும் ஆய்வறிக்கைகளிலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
நுண்சத்துப் பற்றாக்குறையை ஈடுகட்டவும், மாணவர்களுக்குக் காய்கறி வளர்ப்பதற்குப் பயிற்சி அளிக்கவும் 2019-ல் தமிழ்நாடு அரசு சுமார் 10,000 பள்ளி வளாகங்களில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்கான திட்டத்தை ஏற்படுத்தியது. இதன்படி மதிய உணவு வழங்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் காய்கறித் தோட்டம் அமைப்பதற்காக ரூ. 5.000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றாலும், அனைத்துக் குழந்தைகளின் அன்றாட நுண்சத்துத் தேவையைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு எல்லா பள்ளிகளாலும் காய்கறியை உற்பத்தி செய்ய முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஊட்டச்சத்து இலக்கை அடைவது என்பது வேறு; விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது வேறு.
மற்ற உணவுப் பொருட்களை வழங்குவதுபோல அரசே தேவையான காய்கறிகளையும் மையங்களுக்கு நேரடியாக வழங்குவது குறித்துப் பரிசீலனை செய்ய வேண்டும். அந்தந்த நகரங்களிலும் கிராமங்களிலும் இயங்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலமோ, சிறு குறு விவசாய அமைப்புகளின் மூலமாகவோ ஒப்பந்த அடிப்படையில் இம்முயற்சியில் ஈடுபடலாம். காய்கறிகள் தவிர, ஊட்டச்சத்து நிறைந்த கொய்யா, பப்பாளி போன்ற பழங்களையும் குழந்தைகளுக்கு வழங்கலாம். இது பல விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்வதுடன் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சமையல் எரிவாயு மற்றும் மசாலா பொருட்களுக்கான நிதி ஒதுக்கீடு குறிப்பிட்ட கால இடைவெளியில் (உம்) மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டுத் திருத்தப்பட வேண்டும். குழந்தைகளுக்கு வாய்க்கு ருசியான உணவு வழங்குவதில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் போலவே நுண்சத்துக்களும் தேவையான அளவில் கிடைப்பதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும்.
- ரமா நாராயணன், சமூக ஊட்டச்சத்து நல ஆய்வாளர்; நித்யா டி.ஜே., மா.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் அறிவியலராகப் பணிபுரிகிறார்.
தொடர்புக்கு: narayananrama6@gmail.com, djnithya@mssrf.res.in
To Read this in English: Breakfast scheme: Things that merit attention
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment