Published : 18 May 2016 10:50 AM
Last Updated : 18 May 2016 10:50 AM
குழந்தைகள், தோட்டத்தில் உள்ள செடிகள் எப்படி வளர்கின்றன என்று வேர்களுக்கு அடியில் தோண்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ள முயல்வதுபோன்றதுதான் கருத்துக் கணிப்புகள் என்று ஜே.பி. பிரிஸ்ட்லி எனும் ஆங்கில எழுத்தாளர் கிண்டலாகக் குறிப்பிடுவார். ஒரு அரசின் பதவிக்காலம் முடிவடையும் தறுவாயிலிருந்து, அடுத்த தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்ற விவாதங்கள் எழுவது எல்லா நாடுகளில் வழக்கமாக நடக்கும் விஷயம்தான். கள நிலவரம், முந்தைய தேர்தல் முடிவுகள், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள், ஊழல் முறைகேடு புகார்கள், உட்கட்சிக் குழப்பம் என்று பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் அடுத்த தேர்தலில் இந்தக் கட்சிதான் வெற்றி பெறும் என்றும் பல்வேறு நிறுவனங்கள், ஊடகங்களுடன் இணைந்தோ தனிப்பட்ட வகையிலோ ஆய்வுகளை நடத்தி கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடுகின்றன.
அமெரிக்க முன்னுதாரணம்
1824-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில்தான் முதன்முதலில் அதிகாரபூர்வமாகக் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. 1916-ல் நடந்த அதிபர் தேர்தலின்போது ‘லிட்டரரி டைஜஸ்ட்’ எனும் இதழ் அமெரிக்கா முழுவதும் பரவலாகக் கருத்துக் கணிப்பு நடத்தி, அடுத்த அதிபர் வுட்ரோ வில்ஸன்தான் என்று கூறியது. சொன்னதுபோலவே, வுட்ரோ வில்ஸன்தான் வெற்றிபெற்றார். முதன்முதலில் கருத்துக் கணிப்பு நிஜமானது அந்தத் தேர்தலில்தான். அடுத்து நடந்த பல தேர்தல்களிலும் லிட்டரரி டைஜஸ்ட்’ இதழின் கருத்துக் கணிப்புகள் நிதர்சனமாகின. பல நாடுகளில் இந்தப் பழக்கம் பரவத் தொடங்கியது.
இந்தியாவில் கருத்துக் கணிப்புகள் தொடர்பான தெளிவான பார்வையை உருவாக்கியது ஊடகவியலாளர் பிரணாய் ராய். 1980-களில் நடந்த தேர்தல்களின்போது வாக்காளர்களிடம் குறிப்பிட்ட சில கேள்விகளைக் கேட்டு அதன் அடிப்படையில் தேர்தல் முடிவுகளைக் கணிக்கும் வழக்கத்தைக் கொண்டுவந்தார். ‘ஃப்ரண்ட்லைன்’, ‘அவுட்லுக்’, ‘இந்தியா டுடே’ போன்ற இதழ்களில் கருத்துக் கணிப்புகள் நடத்தத் தொடங்கியதையடுத்து, பிரபல நாளிதழ்களும் அதில் ஆர்வத்துடன் இறங்கின. 1990-களில் தொலைக்காட்சி ஊடகங்களின் வளர்ச்சி அதிகரித்ததைத் தொடர்ந்து கருத்துக் கணிப்புகளும் பரவலான மக்களைக் கவரத் தொடங்கின. ‘ஒபீனியன் போல்’ எனப்படும் கருத்துக் கணிப்புகளைப் போலவே, ‘எக்ஸிட் போல்’ எனப்படும் வாக்குக் கணிப்புகளும் பிரபலமடையத் தொடங்கின.
தொடங்கிவைத்த தூர்தர்ஷன்
1996-ல் நடந்த மக்களவைத் தேர்தலின்போது, ‘தூர்தர்ஷன்’ தொலைக்காட்சி அனைத்து இந்திய அளவில் வாக்குக் கணிப்புகளை (எக்ஸிட் போல்) நடத்தியது. தேர்தல் நடந்து முடிந்த அன்று மாலையே, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதுபற்றி குறைந்தபட்ச பார்வையை வாக்காளர்களுக்கு அந்நிகழ்ச்சி கொடுத்தது. தனியார் தொலைக்காட்சிகள் பல்கிப் பெருகிவிட்ட பின்னர், இந்தப் போக்கு கணிசமாக அதிகரித்துவிட்டது. இன்றைக்குத் தேர்தல் பரப்புரைகளின் சலசலப்புக்குச் சமமாக, ஊடகங்களில் நடக்கும் கருத்துக் கணிப்பு விவாதங்கள் பல பரிமாணங்களை அடைந்திருக்கின்றன.
பொதுவாகவே கருத்துக் கணிப்புகளை விடவும், வாக்குக் கணிப்புகளே தேர்தல் முடிவுகளை ஓரளவு சரியாகக் கணிக்கின்றன என்ற எண்ணம் பலருக்கு உண்டு. காரணம், ஓட்டு போடும் முன்பு எடுத்த முடிவு, வாக்குச் சாவடியில் கூட மாறும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஓட்டு போட்ட பின்னர் சாவடியிலிருந்து வெளியில் வரும் வாக்காளர்களிடம் எடுக்கப்படும் ஆய்வுகள் ஓரளவு சரியாகக் கணிப்பதாகக் கருதப்படுகிறது. கருத்துக் கணிப்பு அல்லது வாக்குக் கணிப்பு பலிக்குமா என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும் அன்று தெரிந்துவிடுகிறது.
தவறும் வாய்ப்பு
கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்கும் தேர்தல் தொடர்பாக, சில ஆயிரம் எண்ணிக்கையிலான மக்களிடம் நடத்தப்படும் ஆய்வுகள் பல சமயம் பொருந்தாமல் போகிறது. அப்படியே இன்ன கட்சிதான் வெற்றிபெறும் என்று சரியாகக் கணித்துவிட்டாலும், வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கையைத் துல்லியமாகச் சொல்லிவிட முடிவதில்லை. தவிர உலகின் மற்ற நாடுகளை ஒப்பிட, பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், பிரிவுகள் கொண்ட இந்தியாவில் வாக்காளர் மனதில் இருப்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வது அத்தனை எளிதல்ல.
தவிர, குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் சார்புடைய ஊடகங்கள், நிறுவனங்கள் களநிலவரத்தைத் தெரிந்துகொண்டாலும் அதற்கு மாறான தகவல்களைக் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் வெளியிடுவதும் நடக்கத்தான் செய்கிறது. இதன் மூலம் ‘ஜெயிக்கிற கட்சிக்கே ஓட்டு போடுவோமே’ எனும் எண்ணம் வாக்காளர்களிடம் விதைக்கப்படுவதாக விமர்சனங்களும் எழுகின்றன. கருத்துக் கணிப்பல்ல, கருத்துத் திணிப்பு என்று சிலர் எரிச்சலுடன் குறிப்பிட இந்தப் போக்கு காரணமாகிவிடுகிறது.
இவற்றையெல்லாம் தாண்டி ஓரளவுக்குச் சரியான முடிவுகளைத் தெரிவிக்கும் கருத்து, வாக்குக் கணிப்புகளும் உண்டு. சமீபத்திய உதாரணம் 2014 மக்களவைத் தேர்தலின் வாக்குக் கணிப்பில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 340 தொகுதிகளையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 70 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று ‘நியூஸ்24-டுடேஸ் சாணக்யா’வின் வாக்குக் கணிப்பு தெரிவித்தது. அந்தத் தேர்தலில் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 336 இடங்களும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 60 இடங்களும் கிடைத்தன. ஆனால், தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று எந்தக் கருத்துக் கணிப்பும் வாக்குக் கணிப்பும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதற்கு முந்தைய உதாரணம் என்றால், 2006 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 157 முதல் 167 வரையிலான தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று ’சிஎன்என்-ஐபிஎன்-தி இந்து’ நடத்திய வாக்குக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 163 இடங்கள் கிடைத்தன.
இதோ இந்தத் தேர்தலில் சி-வோட்டரைத் தவிர இந்தியா டுடே ஆக்சிஸ், நியூஸ் நேஷன், ஏபிபி, சாணக்யா, என்டிடிவி என்று ஐந்து நிறுவனங்களின் வாக்குக் கணிப்புகள் திமுகவுக்குச் சாதகமாகத் தேர்தல் முடிவு இருக்கும் என்று சொல்லியிருக்கின்றன. பார்ப்போம்!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT