Published : 26 Jun 2014 10:00 AM
Last Updated : 26 Jun 2014 10:00 AM
சமீப காலமாக அச்சு ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இடப் பிரச்சினை, நேரச் சிக்கனம் போன்றவற்றின் காரணமாக மொழியில் மாற்றங்களும் சிதைவுகளும் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன. ஆங்கிலத்தைப் பொறுத்தவரை சொற்களின் சுருக்கங்களை இயல்பாகப் பயன்படுத்திவருகிறார்கள் என்பதற்கு ஆங்கில நாளேடுகளின் செய்தித் தலைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் டிவிட்டர், ஃபேஸ்புக் பதிவுகளையும் பார்க்கும்போது தெரிகிறது.
ஆங்கிலம் அளவுக்குத் தமிழில் சுருக்கங்கள் உருவாக்கப்படாததால், பெரியதாக இருக்கும் தமிழ்ச் சொற்களுக்குப் பதிலாக, இடப் பற்றாக்குறை காரணமாக, ஆங்கிலச் சொல்லின் எழுத்துப் பெயர்ப்பையே பல சமயங்களில் தமிழில் பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக, 9 எழுத்துக்களைக் கொண்ட ‘உயர் நீதிமன்றம்’ என்ற சொல்லுக்குப் பதிலாக 4 எழுத்துக்களைக் கொண்ட (துணை எழுத்துக்களையும் சேர்த்தால் 6) ஐகோர்ட் என்ற எழுத்துப் பெயர்ப்பைப் பல இடங்களில் பயன்படுத்துகிறார்கள்.
தமிழைச் சுருக்கமாகப் பயன்படுத்துவதால் தமிழ் சிதையும் என்று வாதிட்டுக்கொண்டிருந்தால் அந்த இடத்தை ஆங்கிலம்தான் எடுத்துக்கொள்ளும். தவிர, இந்தச் சுருக்கங்கள் கட்டுரைகள், புத்தகங்கள் போன்ற வற்றில் பயன்படுத்துவதற்காக அல்ல; பத்திரிகைகளின் செய்தித் தலைப்புகள், குறுஞ்செய்திகள், சமூகவலைத்தளங்கள் போன்றவற்றின் வசதிக்காகத்தான்.
கட்சிகள் (தி.மு.க., பா.ஜ.க., காங்.), சில அமைப்புகள் (ஐ.நா.), தலைவர்கள் (மு.க., வைகோ), ஊர்கள் (புதுவை, மயிலை) என்று சுருக்கங்கள் தமிழில் மிகவும் பிரபலம். இவற்றைத் தவிர பெரும்பாலான சுருக்கங்களை ஆங்கிலச் சுருக்கங்களின், ஆங்கிலச் சொற்களின் எழுத்துப் பெயர்ப்பாகத்தான் (சார்க், ஐ.ஏ.எஸ்., எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ஐகோர்ட்) எழுதுகிறார்கள்.
இவற்றையெல்லாம் தவிர்க்க, தமிழின் இயல்பும் அழகும் மாறாமல் நாமும் சில சுருக்கங்களை முயற்சித்துப் பார்க்கலாம். சுருக்கங்களை உருவாக்கும்போது சொற்களின் முதல் எழுத்துக்களைச் சேர்த்து உருவாக்குவது பொது வழக்கு. அதுதவிர, சொற்களைப் பாதியாகவோ, சொற்களிலுள்ள முக்கியமான எழுத்துக் களை மட்டும் எழுதியோ உருவாக்குவது மரபு. சொற்களைக் குறைக்கும்போது சொற்களின் எந்தப் பகுதியில் வெட்டுகிறோமோ அங்கே ஒரு முற்றுப்புள்ளி வைப்பதன்மூலம் அந்தச் சொல் குறுக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தலாம்.
சில பரிந்துரைகள்:
உச்ச நீதிமன்றம் = உச்ச நீதி.
உயர் நீதிமன்றம் = உயர் நீதி.
மக்களவை = ம.அவை
மாநிலங்களவை = மா.அவை
கடன் அட்டை = க. அட்டை
போக்குவரத்து = போ.வரத்து
மூத்த குடிமக்கள் = மூ.கு.மக்கள்
பதவியேற்பு = ப.ஏற்பு
மருத்துவர் = மரு. (எ.கா- மரு. ராமதாஸ்)
ராணுவம் = ராணு.
காவல் துறை = கா.துறை
சுற்றுச்சூழல் = சு.சூழல்
குறுஞ்செய்தி = கு.செய்தி
இணையதளம் = இ.தளம்
இவற்றைப் போல் மேலும் எண்ணற்றச் சுருக்கங்களை உருவாக்க முடியும்.
இந்தச் சுருக்கங்களெல்லாம் ஆரம்பத்தில் சற்று விசித்திரமாகத் தோன்றினாலும் போகப்போகப் பழகிவிடும். பத்திரிகைகள், கைபேசி, சமூகவலைத்தளங்கள் போன்றவற்றில் தமிழின் பயன்பாட்டு மதிப்பை மேலும் அதிகரிக்க இந்தச் சுருக்கங்களும் உதவக்கூடும்.
மறக்கப்பட்ட சொல்: ஓங்கில்
ஓங்கில் என்ற உயிரினத்தைச் தெரியுமா உங்களுக்கு? வேறொன்றுமில்லை, டால்ஃபினின் தமிழ்ப் பெயர்தான் அது. தமிழக மீனவர்களிடையே இப்படி ஒரு அழகான சொல் புழக்கத்தில் இருப்பது தெரியாமல் டால்ஃபின் என்ற ஆங்கிலச் சொல்லையே நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
சொல் தேடல்
போன வாரம் கேட்கப்பட்ட ‘டெக்ஸ்ச்சர்’ (texture) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்: இழைவு.
கோயில் கோபுரத்துக்குப் பின்னாலிருந்து சூரியன் பிரகாசமாக ஒளி வீசும்போது கோபுரத்தின் வடிவம் இருண்டும், வடிவத்தின் வெளிப்புறம் பிரகாசமாகவும் தோன்றும். இது போன்ற உருவங்களுக்கு ஆங்கிலத்தில் சிலுவட் (silhouette) என்று பெயர். இதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
இந்தக் கேள்விக்கான பதிலையும் மொழி குறித்த புதுமையான தகவல் களையும் வாசகர்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT