Published : 21 May 2016 09:21 AM
Last Updated : 21 May 2016 09:21 AM
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய 6 கட்சிகளை ஆதரித்து தமிழ்நாட்டு வாக்காளர்கள் பதவியில் அமர்த்தவில்லை என்பதால் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.வைத் தவிர மற்றொன்றைத் தமிழர்கள் சிந்திக்கத் தயாராக இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாமா? கூடவே கூடாது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் உண்மையில் தமிழ்நாட்டை மீட்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அத்துடன் அவர்களுடைய பாணியில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத, தி.மு.க. அல்லாத, அ.இ.அ.தி.மு.க. அல்லாத கட்சிகளைத் தேடிப்பிடித்து அணியில் சேர்க்க விரும்பினார்கள். அதற்கும் முன்னதாக அவர்களோடு ஒத்திசைவாகச் செயல்பட்டு வந்த, முற்போக்கு எண்ணம் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் சேர்த்துக் கொண்டார்கள். ம.தி.மு.க. கட்சிக்கு, குறிப்பாக அதன் தலைவர் வைகோவுக்கு அளித்த முக்கியத்துவம்தான் அவர்களைத் தவறான முடிவுகளுக்கு இட்டுச் சென்றிருக்கிறது.
மக்களவை பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. என்ற இரண்டும் ம.தி.மு.க.வும் இடம் பெற்றிருந்தன. அதே அணியைத் தொடர பாஜக விரும்பியது. இலங்கை அதிபரைப் பதவியேற்பு விழாவுக்கு அழைத்ததால் மோடிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துவிட்டு கூட்டணியிலிருந்து முதலில் வெளிநடப்பு செய்தார் வைகோ. அன்புமணியை மத்திய அமைச்சரவையில் சேர்க்காததுடன் அவர் மீதான வழக்கிலும் ஆதரவாக நடந்துகொள்ளவில்லை என்ற மனக் கசப்பில் கூட்டணியிலிருந்து அடுத்து விலகியது பா.ம.க.. முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை ஏற்று அவருடைய தலைமையில் செயல்படுவதாக இருந்தால் கூட்டணியில் தொடருவோம் என்று உறுதியாகக் கூறிவிட்டது தே.மு.தி.க. எனவே பாஜக அதைவிட வேறு சில சில்லறைக் கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு போட்டியிட நேரிட்டது. பாஜகவுடன் கூட்டு சேர்ந்தால் சிறுபான்மைச் சமூக மக்களின் ஆதரவு கிடைக்காது என்பதால் அதை நெருங்கக்கூட அதிமுக நினைக்கவில்லை.
அன்புமணிதான் முதல்வர், பாமகவே ஆளும் கட்சி, பூரண மதுவிலக்குதான் முதல் உத்தரவு என்று அதிரடியாக அறிவித்து தனித்துக் களம் கண்டது பா.ம.க. இந் நிலையில்தான் வைகோ, மக்கள் நலக் கூட்டணிக்கு ம.தி.மு.க. தலைவர் கேப்டன் விஜயகாந்தை அழைத்துச் சென்றார். அவரையே கூட்டணியின் தலைவராகவும் முதல்வர் வேட்பாளராகவும் மற்றவர்களை ஏற்கவைத்து அறிவித்தார். அதிகம் ஏமாற்றத்தை வெளியிட்டவர் தி.மு.க. தலைவர் கருணாநிதிதான். அவருக்குத் தெரியும் விஜயகாந்த் தனித்து நின்றாலும் பெரிய திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து வேறு யாருடன் சேர்ந்தாலும் அந்தக் கட்சிக்கும் பலனிருக்காது, விஜயகாந்துக்கும் பலனிருக்காது என்று. விதி யாரை விட்டது?
இதற்கிடையே, அ.இ.அ.தி.மு.க. அணியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட உறுதியாக மறுத்த ஜி.கே. வாசனைத் தங்கள் அணிக்கு இழுத்து அதை அறுவர் கூட்டணியாக்கினார் சூத்திரதாரி வைகோ. மக்கள் நலக்கூட்டணி + தேமுதிக +தமாகா கூட்டணியாக மூன்றாவது அணி உருவெடுத்தது.
ஆனால் விஜயகாந்த் நிருபர்களைச் சந்தித்தபோதும் பிரச்சாரத்தைத் தொடங்கிய போதும் பேசிய பேச்சுகளை மற்றவர்களைப் போல மநகூ தலைவர்களும் நிச்சயம் கேட்டிருப்பார்கள். அப்போதே அவரிடம் அது தவறு என்று சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். செய்திப் பத்திரிகைகளைப் படிக்க மாட்டேன், ஊரில் இல்லாததால் உள்ளூர் அரசியல் நிலவரம் தெரியாது என்றெல்லாம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியவரை முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். ஒரு மணி நேரம் பேசுவேன் என்று கூட்டத்தில் அறிவித்துவிட்டு ஓரிரு நிமிஷங்களில் பேச்சை முடித்துக்கொண்டதால் பொதுமக்கள் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்ததை அவர்களுடைய முகங்களைப் பார்க்கும்போதே தெரிந்தது.
வைகோவைப் பற்றி ஊடகங்களில் எழுப்பப்பட்ட கேள்விகள் உண்மையோ என்று சந்தேகப்படும் அளவுக்கு அவருடைய நடவடிக்கைகள் தொடர்ந்தன. அணியின் ஒருங்கிணைப்பாளரான அவர் கோவில்பட்டி தொகுதியில் தன்னை வேட்பாளராக அறிவித்துக் கொண்டதே நாடக பாணியில் இருந்தது. அப்படி அறிவித்தவர், ஏற்க முடியாத ஒரு காரணத்தைக் கூறி போட்டியிடுவதிலிருந்தும் பின்வாங்கினார். இவற்றுக்கெல்லாம் பிறகும் மக்களுக்கு எப்படி அந்த அணி மீது நம்பிக்கை வரும். விஜயகாந்தின் துணைவியாருடைய தேர்தல் பிரச்சாரம் தொடக்கம் முதலே ஜெயலலிதா, கருணாநிதி இருவரையும் சகட்டு மேனிக்கு தாக்குவதாகவே இருந்தது. அரசியல் களத்தில் முதல் முறை களம் இறங்கியவர் ஊழலை விமர்சிப் பதாகக் கூறிவிட்டு கிட்டத்தட்ட தனிப்பட்ட முறையிலேயே தாக்கிப் பேசியது மக்களிடம் எடுபடவில்லை. அ.இ.அ.தி.மு.க. பிளவுபடப் போகிறது என்று வேறு உண்மைக்கு மாறான தகவல்களையெல்லாம் பொது மேடைகளில் கசியவிட்டனர். மக்களுக்குச் செய்யப்போகும் நன்மைகளையும் திட்டங்களையும் விட தாக்குதல்கள்தான் அதிகம் இருந்தது. எனவே மக்கள் விலகத் தொடங்கினர். இந்த கசப்பான உண்மைகளை மறைத்து அல்லது மறந்து தோல்விக்கான காரணங்களை மக்கள் நலக் கூட்டணியினர் வெளியே தேடினால் அது செயற்கையான தேடலாகத்தான் இருக்கும். கூட்டணியின் தலைமையை விஜயகாந்துக்கும் வழிநடத்தலை வைகோவுக்கும் அளித்ததைவிடப் பெரிய தவறு வேறு ஏதும் இல்லை என்றே சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT