Published : 14 May 2016 09:18 AM
Last Updated : 14 May 2016 09:18 AM
“தோழர், என் மச்சான் பொண்ணு.. ரொம்பச் சின்ன வயசு. அவ புருஷன் நல்ல பையன். ஆனா, பாழாப்போன குடிப் பழக்கம் அவனைத் தொத்திக்கிச்சி. பொழுது போனாக் குடிச்சுட்டுத்தான் வருவான். ரெண்டு நாளைக்கு முன்ன பாருங்க.. குடிச்சுப்புட்டு வந்திருக்கான். ‘ஏம்ப்பா.. தினியும் குடிச்சிட்டு வர்ற... இப்படி இருந்தா எப்படி’ன்னு இவளும் சத்தம் போட்டிருக்கா. அவ மாமியார்தான் சமாதானப்படுத்தி வச்சிருங்காங்க. காலையில் எழுந்து பார்த்தா, பையன் தூக்கு மாட்டிக்கிட்டுப் போய்ச் சேந்துட்டான்” என்றார் பொயலக்கட்டை கோவிந்தசாமி. மூத்த மார்க்ஸிஸ்ட் தோழரான கோவிந்தசாமி, ஓய்வுபெற்ற துறைமுகத் தொழிலாளி.
“ரெண்டு பொம்பளப் பிள்ளைங்கள அநாதையாக்கிட்டுப் போய்ட்டான். இந்தப் பாழும் குடிப் பழக்கத்தால இளம்பெண்ணு ஒருத்தி அறுத்துட்டு நிக்கிறாளே, இந்தக் கொடுமை எப்போ தீரும் தோழர்...” என்று குரல் உடைந்து அவர் பேசிய வார்த்தைகள் ரணமாக அறுக்கின்றன மனதை. இதுபோல் எத்தனையோ சம்பவங்கள். இந்தத் தேர்தலுக்குப் பிறகாவது இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவு பிறக்குமா என்ற எதிர்பார்ப்பு மனதில் எழுந்திருக்கிறது.
மதுவிலக்கு எப்போதையும் விட இந்த முறை தேர்தலில் முக்கியப் பேசுபொருள் ஆகியிருக்கிறது. மதுவை ஒழிப்பது சாத்தியமே இல்லை என்று சட்டமன்றத்தில் சத்தியம் செய்தவர்களும், மதுவிலக்கை முன்பு ரத்து செய்தவர்களும்கூட இப்போது மதுவிலக்கை மீண்டும் கொண்டுவருவோம் என்று சொல்ல நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
உடலில் ஆல்கஹால் குடியேறக் குடியேற, கல்லீரல் படும் அவஸ்தைகளைச் சொல்லி மாளாது. அறிவின் விசைகளை அணைத்துப்போடுகிறது மது. உணர்வுகளைப் பாழ்படுத்தி, உடலை நோயாளியாக்கி, உளவியலைச் சீரழித்து, குடும்பப் பொருளாதாரத்தையும் சிதைத்துவிடுகிறது. மனிதத் தன்மையைக் கீழிறக்கி அராஜகத்தின் கொடியைப் பறக்கவிடுகிறது. சமூக விரோதச் செயல்கள் அனைத்துக்கும் காரணமாகிவிடுகிறது.
மதுவினால் அழியும் உயிர்களைப் பற்றி விவாதிக்காமல், போதைக்குப் பழகிய உடலியல், உளவியல் அம்சங்களை எதிர்முனையில் நிற்க வைப்பது சமூகம் பாழானால் என்ன, கஜானா நிரம்பினால் சரி என்ற பார்வையே அன்றி வேறில்லை. ஒரு கோடிக்கும் அதிகமான இளம் வாக்காளர்கள் முதல் வாக்களிப்புக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் இந்தத் தேர்தலில், மதுவிலக்கு தொடர்பான பெரும் விவாதம் மகிழ்ச்சி தருகிறது. போதைப் பழக்கத்துக்கு ஆட்படாத உறுதி மிக்க நெஞ்சினராக இளைஞர்கள் தங்களை வார்த்தெடுத்துக்கொள்ளட்டும். உற்சாகமிக்கக் கொண்டாட்டங்களுக்கான பண்பாட்டு வெளியில் மதுவைத் தவிர, எத்தனையோ நல்ல விஷயங்கள் உண்டு என்ற எண்ணம் இளைஞர்களுக்கு வர வேண்டும். அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள் வெற்று வார்த்தைகளாக அல்லாமல் நடைமுறைச் சாத்தியங்களுடன் இருக்கும் என்றும் நம்புவோம். பார்ப்போம் இவ்விஷயத்தில் புதிய அரசு என்ன செய்கிறது என்று!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT