Published : 13 May 2016 09:17 AM
Last Updated : 13 May 2016 09:17 AM
மக்கள் தங்கள் தகுதிக்கேற்ற அரசாங்கத்தையே பெறுகிறார்கள்
மனிதர்களை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் விஷயம் எது என்ற கேள்விக்குப் பெரும்பாலானவர்களிடமிருந்து கிடைக்கும் உடனடி பதில் ‘பகுத்தறிவு’. கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள் ‘மொழி’ என்று சொல்லக்கூடும். ஆனால், நம்மில் எத்தனை பேர் தர்க்கரீதியாகச் சிந்திப்பவர்கள், கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்கிறவர்கள், புதிதாகக் கிடைக்கக்கூடிய வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் பழைய நம்பிக்கைகளை விடுத்து புதிய நம்பிக்கைகளைக் கைக்கொள்கிறவர்கள் என்று பார்த்தால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சும்.
மனிதர்களின் அறிதல் திறன் பற்றிப் பேசுகிறபோது உலகப் புகழ்பெற்ற மொழியியல் மேதை நோம் சாம்ஸ்கி, பிளாட்டோ பிரச்சினை, டேக்கார்ட் பிரச்சினை, ஆர்வெல் பிரச்சினை எனும் மூன்று பிரச்சினைகளைக் குறிப்பிடுகிறார். இவற்றில் டேக்கார்ட் பிரச்சினை, நமது அறிதல் திறனின் எல்லைக்கு அப்பால் இருக்கும் விஷயங்களைப் பற்றியது. பிளாட்டோ பிரச்சினையும் ஆர்வெல் பிரச்சினையும் ஒன்றுக்கொன்று நேரெதிரிடையானவை. மனிதர்கள் தங்களது மிகக் குறைவான அனுபவங்களின் மூலம் பிரபஞ்சத்தைப் பற்றி எப்படி மிகப் பெரிய அளவுக்கு அறிந்துகொள்ள முடிகிறது என்பதைப் பற்றியது பிளாட்டோ பிரச்சினை. அதாவது, உள்ளீடு மிகக் குறைவு. ஆனால் வெளியீடு மிக அதிகம். குழந்தைகள் மொழியைக் கற்கும் விஷயத்திலும் இதுவே நடக்கிறது. முறையாகக் கற்பிக்கப்படுகிறபோதே ஒரு வளர்ந்த மனிதன் எளிய கணிதத்தைக் கற்றுக்கொள்ளச் சிரமப்படுகையில், கணிதத்தைவிடப் பல மடங்கு சிக்கலான மொழியைச் சிறு குழந்தை எந்த முறையான கற்பித்தலும் இல்லாமல் சரளமாகப் பேசுவதற்கான காரணத்தை பிளாட்டோ பிரச்சினை விளக்குகிறது. இதற்கு நேரெதிரிடையான புலப்பாடு ஆர்வெல் பிரச்சினை. நமக்கு முன் ஏராளமான தகவல்கள், ஆதாரங்கள் குவிந்திருந்தும் அரசியல் விவகாரங்களில் நாம் ஏன் இவ்வளவு குறைவான அறிவு கொண்டவர்களாக இருக்கிறோம், தவறான முடிவுகளை எடுக்கிறோம் என்பதைப் பற்றியது ஆர்வெல் பிரச்சினை.
சுதந்திரமான அரசியல் அமைப்புகள் என்று நாம் கருதும் நாடுகளிலும் அரசும் ஊடகங்களும் எப்படி மக்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்துகின்றன, இரட்டை அளவுகோல்களைப் பின்பற்றுகின்றன என்பதை அம்பலப்படுத்திய பிரிட்டிஷ் அறிஞரும் பத்திரிகையாளருமான ஜார்ஜ் ஆர்வெல்லின் பெயரை இந்தப் பிரச்சினைக்குப் பொருத்தமாகச் சூட்டினார் சாம்ஸ்கி.
பக்த மனம்
‘வெள்ளித்திரை’யின் மாயாஜாலங்களையும் வீராவேசமான மேடைப் பேச்சுக்களையும் உண்மை யென்று நம்பி, தங்களை யார் ஆள வேண்டும் என்பதை முடிவுசெய்யும் தமிழக மக்களின் விஷயத்தில் ஆர்வெல் பிரச்சினை மிகத் தீவிரமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஓர் அரசியல் கட்சியை அல்லது தலைவரைச் சில குறிப்பிட்ட கொள்கைகளுக்காக, காரணங்களுக்காக ஆதரிக்கும் ஒரு மனிதர், அந்தக் கட்சி அல்லது தலைவர் அந்தக் கொள்கைகளுக்கு உண்மையாக இல்லை என்று தெரிந்தாலும், தான் உண்மையென்று நம்பிய காரணங்கள் தவறென்று தெரிந்தாலும் தனது ஆதரவை மாற்றிக்கொள்வதில்லை. இது பகுத்தறிவுக்கு உகந்த விஷயமல்ல. ஆனால், நம்மில் 99.9% பேர் அப்படித்தான் நடந்துகொள்கிறோம். நடமாடும் கடவுள் என்று தான் நம்பிய சாமியார் கையும்களவுமாகப் பிடிபட்டு, அயோக்கியன் என்று அம்பலமானாலும் பக்தரின் மனம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. இதைச் சாமியாருடைய எதிரிகளின் சதி என்றே அந்த பக்தரின் மனம் நம்ப முற்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக ஒரு மனிதர், ஒரு தலைவனுக்கோ அமைப்புக்கோ விசுவாசமாகும் பட்சத்தில், அந்தக் காரணம் முற்றிலும் தவறு என்று தெரிந்தாலும் அவர் கொண்ட விசுவாசம் மாறுவதில்லை. தொடர்ந்து விசுவாசமாக இருப்பதற்கு அவர் வேறு காரணங்களைத் தேடிக்கொள்கிறார். மனித மனத்தின் இந்த விந்தையான போக்கின் காரணமாகத்தான் அரசியல்வாதிகள் வெற்றிகரமாக உலா வருகிறார்கள்.
பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற உளவியல் மேதையான டேனியல் கானெமென் குறிப்பிடும் ‘இல்யூஷன் ஆஃப் வேலிடிட்டி’(சரியாக இருப்பதாகக் கருதிக்கொள்ளும் பிரமை) என்ற புலப்பாடு, நாம் ஏன் ஒரு சில கட்சிகளுக்கே மாறி மாறி வாக்களிக்கிறோம் என்பதை ஒரு வகையில் விளக்குகிறது. ஒரு நிகழ்வைப் பற்றி நம்முள் ஏற்படும் வலிமையான மனப்பதிவு தர்க்க அறிவோடு முரண்படுகிறபோது, பெரும்பாலும் மனப்பதிவே நம்முள் முன்னுக்கு வருகிறது என்கிறார் கானெமென். ஒரு கட்சியைப் பற்றி, தலைவரைப் பற்றி நம்முள் உருவாகும் மனப்பதிவு விசுவாசம் நமக்குக் கிடைக்கக் கூடிய (சரியானவை என்று தெரிந்த) தகவல்களுடன் முரண்பட்டாலும் விசுவாசமே வெற்றிபெறுகிறது.
யார் மாற்று?
கடந்த 50 ஆண்டுகளாக இரண்டு திராவிடக் கட்சிகள் மாறி மாறி, ஒன்றையொன்று விஞ்சும் வகையில் ஊழலாட்சி நடத்தியபோதிலும் மாற்று பற்றிய சிந்தனையே தமிழக மக்களிடம் இல்லை என்பது வெட்கக்கேடு. திமுகவா அதிமுகவா.. யார் யாரைவிட மோசம் என்பதை நிரூபிக்க ஒருவர் பெரும் ஆராய்ச்சியையே மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும், தமிழக மக்கள் இவர்கள் இருவருக்கும் மாறி மாறி வாக்களிப்பதில் உவகையடைகிறார்கள். மாற்று வேண்டும் என்ற ஏக்கம் தமிழக மக்களிடம் இருந்திருந்தால் மாற்று நிச்சயம் உருவாகியிருக்கும். அப்படிப்பட்ட ஏக்கம் மக்களிடம் இருப்பதாக இடதுசாரிகள் உண்மையிலேயே நம்பியிருப்பார்கள் என்றால், அவர்கள் விஜயகாந்தின் தலைமையை ஏற்றிருக்க மாட்டார்கள். பெரும் மக்கள் ஆதரவு கிடைத்த பிறகு அர்விந்த் கேஜ்ரிவாலின் உண்மை முகம் அம்பலப்பட்டது என்றால், அத்தகைய ஆதரவு கிடைக்கும் முன்னரே முற்றிலுமாக அம்பலப்பட்டுப் போனவர் விஜயகாந்த்.
படித்தவர்கள் அதிகமுள்ள பகுதி என்று சொல்லப்படும் தென் சென்னையில் திமுக, அதிமுகவை எதிர்த்து 70 ஆண்டு காலப் பொதுவாழ்வில் புடம்போட்ட தங்கமாகத் திகழும் நல்லகண்ணு நின்றாலும் ஜெயிப்பார் என்பதற்கு உத்தரவாதமில்லை. மக்கள் தங்கள் தகுதிக்கேற்ற அரசாங்கத்தையே பெறுகிறார்கள் என்று சொல்லப்படுவது முற்றிலும் உண்மை. வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு.
- க. திருநாவுக்கரசு, சமூக-அரசியல் விமர்சகர்,
தொடர்புக்கு: kthiru1968@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT