Published : 11 May 2022 12:48 PM
Last Updated : 11 May 2022 12:48 PM
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டை நிறைவுச் செய்துள்ளது. இந்த ஓராண்டில் சட்டம் - ஒழுங்கைக் காப்பதில் அரசின் செயல்பாடுகள் எப்படி? நிறை, குறைகள் என்னென்ன? இனி செய்ய வேண்டியவை என்னென்ன? - இது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார் காவல் சித்ரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கத்தின் (JA ACT) ஆலோசகரும், வழக்கறிஞருமான ஹென்றி திபேன்.
" 'ஜெய்பீம்' திரைப்படம் பார்த்துவிட்டு, கண்ணீர் வடித்ததாக கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த சமூகத்தில் தொடர்ந்து காவல்துறையினரின் சித்ரவதைகளுக்கு ஆளாகி வரும் குறவர், இருளர் சமூகங்களுக்கு எதிரான அநீதிகளின்போது நடவடிக்கை எடுக்காதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்ற நாட்களிலிருந்து கல்வித் துறை, பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், விவசாயம், நீர்வளத்துறை, சோலார் எனர்ஜி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய முயற்சிகளையும், திட்டங்களையும் மேற்கொண்டார். அதேவேளையில், முதல்வர் தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் அதுபோன்ற மாற்றங்களைக் கொண்டு வராதது ஏன்? இப்படி பல்வேறு கேள்விகள் எழுகின்றன. காவல்துறையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டாலும் கூட, ஏற்கெனவே காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை மிகச் சரியாக பின்பற்றவாவது உத்தரவிட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பின்னர், தமிழகத்தில், 9 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆட்சிக்கு வருவதற்கு முன் 2021 ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் சென்னை எம்ஜிஆர் நகர் காவல் நிலையம் மற்றும் சேலம் ஆத்தூர் காவல் நிலையங்களில் நடந்த சம்பவங்களுடன் சேர்த்தால், மொத்தம் 2021 ஜனவரி முதல் 2022 ஏப்ரல் வரை மொத்தம் 10 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. காவல் நிலைய மரணங்களின் பட்டியல்:
> 2021 ஜன.7-ம் தேதி சென்னை எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் சூர்யா என்ற வயது இளைஞர் உயிரிழந்தார்.
> 2021 ஏப்.3-ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையத்தில் 68 வயதுடைய ராஜாமணி உயிரிழந்தார்.
> 2021 ஜூலை.7-ம் தேதி கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் 45 வயதுடைய சட்டி இந்திர பிரசாத் உயிரிழந்தார்.
> 2021 ஆக.24-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் மேற்கு காவல் நிலையத்தில் 35 வயதுடைய சத்யவாணன் உயிரிழந்தார்.
> 2021 செப்.4-ம் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் 42 வயதுடைய மணிகண்டன் உயிரிழந்தார்.
> 2021 டிச.12-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல் நிலையத்தில் 19 வயதுடைய மணிகண்டன் உயிரிழந்தார்.
> 2022 ஜன.13-ம் தேதி நாமக்கல் மாவட்டம் கிளைச்சிறை காவல் நிலையத்தில் 45 வயதுடைய பிரபாகரன் உயிரிழந்தார்.
> 2022 பிப்.5-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் ஹை கிரவுண்ட் காவல் நிலையத்தில் 44 வயதுடைய சுலைமான் உயிரிழந்தார்.
> 2022 பிப்.14-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் தாலுகா காவல் நிலையத்தில் 38 வயதுடைய தடிவீரன் உயிரிழந்தார்.
> 2022 ஏப்.18-ம் தேதி சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் 25 வயதுடைய விக்னேஷ் உயிரிழந்தார்.
இத்தகைய சம்பவங்களை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் காவல்துறை உயர் அதிகாரிகள் மறைக்கின்றனர். இதுபோன்ற மரணங்களில் வெறுமனே காவல்துறைக்கு மட்டுமின்றி, சிறைத்துறை, நீதித்துறைக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. குறிப்பாக, இதுபோன்ற காவல் நிலைய மரணங்களில் உடற்கூராய்வு எப்படி செய்யப்பட வேண்டும் என்று சந்தோஷ் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை மிகத் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன் விவரம்:
> ஜூடிசியல் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி, உயிரிழந்தவரின் உடலை அவரது குடும்பத்தினர், உடலின் முன் பின் பகுதிகளை பார்வையிடவும், போட்டோ மற்றும் வீடியோ எடுக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும்.
> உறவினர்கள் இறந்தவரின் உடலை பார்க்காமல் உடற்கூராய்வுக்கு அனுமதிக்கக் கூடாது. ஒருவேளை உறவினர்கள் பார்க்க மறுத்தால் மட்டுமே உடற்கூராய்வுக்கு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அனுமதிக்க வேண்டும்.
> இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வுகளை தடயவியல் மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இரண்டு மருத்துவர்கள் அடங்கிய குழுவினரைக் கொண்டு உடற்கூராய்வு நடத்தப்பட வேண்டும்.
> மேலும், காவல் நிலைய மரணங்களில் இறந்தவர்களின் உடல் முழுவதும் எக்ஸ்ரே செய்ய வேண்டும். ஒருவேளை அதில் எலும்பு முறிவுகள் போன்றவை தென்பட்டால், அந்த உடற்கூராய்வு தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோப் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஆனால், இவையெல்லாம் முறையாக பின்பற்றப்படுவது இல்லை.
அதுபோல காவல் நிலையங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று,பரம்வீர் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அண்மையில் நடந்த மயிலாப்பூர் தம்பதி கொலை வழக்கு வரை, காவல்துறையினர் கண்டுபிடித்த பல்வேறு வழக்குகளில் சிசிடிவி கேமராக்கள் முக்கியப் பங்கு வகித்ததாக கூறுகின்றனர். ஆனால், காவல் நிலையங்களில் நடைபெறும் மரணங்களின்போது, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாமல் போய்விடுகின்றன.
காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பு கொடுப்பது இல்லை என்பதையே காட்டுகின்றன. இவை மட்டுமல்ல, திமுக ஆட்சி பொறுப்பிற்கு வருவதற்கு முன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தேர்தல் சமயத்தில் மிகப்பெரிய பேசுப்பொருளாக இருந்தது. ஆனால், தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு காலம் முடிவடைந்துவிட்டது. ஆனால், அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒரு காவலர்கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை.
இச்சம்பவத்தின் நிலை தொடர்பாக தமிழக முதல்வர் இந்த ஓராண்டில் சிபிஐக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை. ஒரு காவலர் மீதுகூட எப்ஐஆர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. கூடங்குளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை, சிஏஏ உள்ளிட்ட எண்ணற்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான பல வழக்குகள் இன்னும் திரும்ப பெறவில்லை. மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து பிணை பெற்றுத்தந்துள்ளது. எனவே, இதையெல்லாம் கவனக்குறைவாக நடந்துள்ளதா இல்லை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுச் செல்வதில்லையா என்ற சந்தேகம் எழுகின்றன.
புகார் ஆணையம் அமைக்க வேண்டும்: காவல் நிலைய மரணங்களைத் தடுப்பதில் தமிழக அரசுக்கு மிக முக்கிய பங்குண்டு. புகார் ஆணையங்கள் அமைக்கப்பட வேண்டும், காவல்துறை சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மாவட்ட அளவில் அமைக்கப்படும் புகார் ஆணையங்கள் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலும், மாநில அளவில் அமைக்கப்படும் புகார் ஆணையங்கள் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலும் அமைக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தவறுதலாக இந்தப் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன. இதனை மாற்றி முறையாக நீதிபதிகள் தலைமையில் தற்போதைய திமுக ஆட்சியும் செய்யவில்லை.
சிறைச்சாலைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று நாங்கள் வழக்குத் தொடர்ந்த காரணத்தால், 28-ஆக இருந்த கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடங்களில் 10- ஐ நீக்கிவிட்டனர். அதேபோல் சிறைச்சாலைகளில் Non Official Visitors-களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுவதில்லை. இந்த Non Official Visitors-கள், சிறைச்சாலை குறித்த தெளிவான பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளையும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு விசாரணைக் கைதி காயத்துடன் எந்த சிறைச்சாலையிலும் அனுமதிக்கப்படக்கூடாது. அப்படி அனுமதித்ததன் விளைவுதான் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பவம் நிகழ முக்கியமான காரணம்.
இதுபோன்ற சம்பவங்களில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மாநில மனித உரிமை ஆணையங்களுக்கு உண்டு. கடந்த ஏப். 17-ம் தேதியோடு 25 ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் 35 காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. 4000 புகார்களுக்கும் மேல் நம்பராகாமல் உள்ளன. அதேபோல், மாநில எஸ்.சி., எஸ்.டி., ஆணையம். இந்த அமைப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பதிலாக, தமிழக அரசை பாதுகாக்கின்றன.
இதையெல்லாம் விட தமிழக காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பிற்கு ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். கும்பகோணம் தாராசுரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் 2021 ஏப்ரல் மாதம் காவல்துறை விசாரணைக்கு சென்றவர், கண்மாயில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். மறு உடற்கூராய்வு கோரி காவல் சித்ரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கம் (JA ACT) வழக்குத் தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி மாற்றப்பட்டது.
இந்த நிலையில், இறந்த சிலம்பரசனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கும்பகோணத்தில் நினைவேந்தல் கூட்டத்திற்கு, ஒரு அரங்கு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் காவல்துறை இந்தக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்தது. பின்னர், அனுமதி வழங்குவதுபோல் வழங்கிவிட்டு, நிகழ்ச்சி நடந்த 2022 ஏப்.10-ம் தேதி அரங்கிற்குள் வந்த காவல்துறையினர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான சைமன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதில் சைமன் மீது நன்னடத்தை உறுதிப்பத்திர நடவடிக்கைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்து தமிழக காவல்துறை சிறையில் அடைத்துள்ளது. இதற்கு எதிராகவும் வழக்குத் தொடர்ந்து JAACT அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. காவல் சித்ரவதையில் இறந்தவரின் நினைவேந்தல் கூட்டத்தைக்கூட காவல்துறை அனுமதிக்காத நிலையில் தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு உள்ளது” என்றார் ஹென்றி திபேன்.
முதல்வர் உறுதி: சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "2017 ஆம் ஆண்டு எட்டு பேரும், 2018 ஆம் ஆண்டு 12 பேரும், 2019 ஆம் ஆண்டு 11 பேரும், 2020 ஆம் ஆண்டு ஆறு பேரும், 2021 ஆம் ஆண்டு ஐந்து பேரும், 2022 ஆம் ஆண்டு இதுவரை நான்கு பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த மரணங்கள் எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதை நியாயப்படுத்தக் கூடாது, நியாயப்படுத்தவும் முடியாது.
காவல்துறையினர் இதுபோன்ற சம்பவங்களில் விழிப்புடன் இருக்குமாறும், விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படக்கூடிய நபர்களைத் தேவையின்றி மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என்றும், வழக்குகளில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் எதிரிகளைக் காவல் நிலையத்திற்குக் கொண்டுவந்து விசாரிக்கும்போது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்
இந்த அரசு எப்போதும் எதையும் மறைக்க முயலுவதில்லை. எங்களைப் பொறுத்தவரையில் லாக்-அப் குற்றங்கள் இனி நடக்காமல் இருப்பதற்கான உறுதியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன" என்று முதல்வர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 6 Comments )
காவல்நிலைய மரணங்கள் எல்லா ஆட்சி காலங்களிலும் நடைபெறுவது கண்கூடு. எனினும், எதிர்கட்சியாக இருக்கும் போது, வாக்கு வங்கி அரசியலுக்காக ஆர்ப்பாட்ட அரசியல் நடைபெறுகிறது. ஆனால் ஆளும் கட்சியாக மாறும் போது அடக்கி வாசிக்கப்படுகிறது. திமுக வும் அதைத்தான் செய்கிறது.
1
0
Reply
//..திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பின்னர், தமிழகத்தில், 9 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன//.......இந்த வீசியதை நன்றாக விரிவாக தேதி கொண்டு தகவல் இங்கு வந்துள்ளது ...மேலும் சில .Date :29.03.22.....கடலூர் | காதலனுடன் இருந்த இளம்பெண்ணை ஆபாசப் படமெடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்கள் கைது ..........Date :29.03.22..........விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு | 4 பேரை போலீஸ் காவலில் 6 நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.......... Date :23.03.22..........இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: கைதான திமுக பிரமுகர் உள்ளிட்டோர் சிறையில் அடைப்பு.......... Date :17.03.22..........பெண்களை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தும் முகநூல் குழு; டிஜிபி ஆஜராக தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு : என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என விளக்கம் தர வேண்டும்.......... ..........Date :24.03.22..........பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை | வேலூர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு.......... Date :26.03.22....................பிரதமர், நீதிபதிகளை அவதூறாக பேசியதாக கைதான தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளரை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்ற கர்நாடக போலீஸார்.......... Date :10.03.22..........பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக அமைச்சரின் மகள் கர்நாடக அமைச்சருடன் சந்திப்பு.......... Date :02.04.22..........சென்னையில் ரோந்துப் போலீஸாரை மிரட்டிய விவகாரம்: திமுக கவுன்சிலரின் கணவர் மீது வழக்கு.......... Date :04.04.22..........கரூர் | இசைப்பள்ளி ஆசிரியையிடம் பிரபல நாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் அத்துமீறியதாக புகார்: ஆர்டிஓ விசாரணை.......... Date :23.04.22..........நெல்லை பெண் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து: உயர்தர சிகிச்சைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..........இதை எல்லாம் வைத்து சட்டம் ஒழுங்கு இந்த ஓராண்டில் எப்படி என்று புரிந்து கொள்ளலாம் ......
3
0
Reply