Published : 01 May 2016 01:34 PM
Last Updated : 01 May 2016 01:34 PM
இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியாகி உலகை உலுக்கிய ‘பனாமா பேப்பர்’ஸின் அதிர்வுகள் இன்றுவரை அடங்கவில்லை. அதிரவைக்க வருகிறது அடுத்த பூகம்பம். முறைகேடு தொடர்பான இரண்டாவது பட்டியல், மே 9-ல் வெளியாகவிருக்கிறது என்று சர்வதேசப் புலனாய்வுப் பத்திரிகையாளர் கூட்டமைப்பு (ஐசிஐஜே) தெரிவித்திருக்கிறது. இந்த முறை வெளியாகவிருக்கும் தகவல் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன், இதுதொடர்பான தகவல்கள் இணையத்தில் எளிதாகக் கிடைக்கும் என்றும் பரபரக்கின்றனர் சர்வதேசப் பத்திரிகையாளர்கள். ஹாங்காங் முதல் அமெரிக்கா வரை சுமார் 2 லட்சம் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் என்று பல நிறுவனங்களின் தலைகள் உருளப்போகின்றன.
தலைக்கு மேல் கத்தி
ஏற்கெனவே, பல நாடுகளை அரசியல் தலைவர்கள், திரைக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்களின் தலைக்கு மேல் கூரிய கத்தியாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது, மொசாக் பொன்சேகா எனும் சட்ட நிறுவனத்திலிருந்து கசிந்த 1.15 கோடிப் பக்கங்கள் அடங்கிய தகவல்களின் தொகுப்பு. பனாமா முதல் அமெரிக்கா வரை எங்கு வேண்டுமானாலும் ஷெல் நிறுவனங்களை வாங்கிப்போடவும், வரி ஏய்ப்பு செய்யவும் உதவ உலகெங்கும் ஏராளமான சட்ட நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் ஒன்றுதான், மொசாக் பொன்சேகா.
“எனக்கும் எனது மனைவி சமந்தாவுக்கும் பனாமாவில் பிளேர்மோர் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட் என்ற நிறுவனத்தில் 5,000 பங்குகள் இருந்தன. 2010-ல் அத்தனை பங்குகளையும் விற்றுவிட்டோம். அதன்மூலம் எனக்கு லாபம் கிடைத்தது உண்மைதான்” என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஒப்புக்கொள்ள நேர்ந்தது.
விவகாரம் முற்றியதைத் தொடர்ந்து, பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஐஸ்லாந்து பிரதமர் சிக்முண்டுர் டேவிட் குன்லாக்ஸன் பதவி விலகிவிட்டார். அவரும் அவரது மனைவியும் கரீபியன் கடலில் உள்ள பிரிட்டிஷ் விர்ஜின் ஐலாண்டில் ‘விண்ட்ரிஸ்’என்ற நிறுவனத்தை நடத்திவந்தது பனாமா பேப்பர்ஸ் மூலம் அம்பலமானது. ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அவர் எழுந்து சென்றதை ஆத்திரத்துடன் பார்த்த ஐஸ்லாந்து மக்கள், அவர் பதவி விலகிய பின்னரே ஆசுவாசமடைந்தனர். பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ரஷ்ய அதிபர் புதின், இது அமெரிக்க சதி என்று குற்றச்சாட்டுகளை அநாயாசமாகப் புறந்தள்ளிவிட்டார்.
மிகச் சமீபமாக, தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடான மால்டாவின் அமைச்சர் கொன்ராடு மிஸ்ஸி தனது அமைச்சரவைப் பொறுப்புகளை இழந்து நிற்கிறார். ஆளும் தொழிலாளர் கட்சியின் துணைத் தலைவராக, பிப்ரவரி மாதம்தான் மிஸ்ஸி பொறுப்பேற்றார். தற்போது கட்சிக்குள் அவருக்கு எதிராகக் கலகம் வெடித்திருக்கிறது. பதவியிலிருந்து அவராகவே விலகிவிட வேண்டும் என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.
இப்பட்டியலில் இடம்பெற்ற அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அனுராக் கேஜ்ரிவால், ஹரிஷ் சால்வே, வினோத் அதானி உள்ளிட்ட 500 இந்தியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பத் தயாராகிவருகிறது வருமான வரித் துறை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அகஸ்தாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேட்டில் கைதுசெய்யப்பட்டிருக்கும் முதல் நபரான கவுதம் கேதான் கூட பனாமா பேப்பர்ஸில் இடம்பெற்றவர்தான்.
இந்தியர்களின் ‘பங்கு’!
இந்தியாவைப் பொறுத்தவரை பட்டியலில் இடம்பெற்றவர்கள் செய்திருக்கும் முறைகேட்டை எப்படி வகைப்படுத்துவது? இந்தியர்கள் வெளிநாடுகளில் தொழில் தொடங்குவது தொடர்பாகக் குழப்பமான நிலையே நீடித்தது. நீண்டகாலமாகவே, இந்தியாவிலிருந்து ரூபாயை டாலராக மாற்றி வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்வது தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், 2004 பிப்ரவரியில் ரிசர்வ் வங்கி ஒரு புதிய நடைமுறையைக் கொண்டுவந்தது. அது வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்புவதில் தாராளமயம் (Liberalised Remittance Scheme) எனும் திட்டம். அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்கள், ஆண்டுக்கு 25,000 டாலர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. மருத்துவச் சிகிச்சை, குழந்தைகளின் கல்வி, அன்பளிப்பு, நன்கொடை என்று எந்த வடிவத்திலும் அந்தத் தொகையைப் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதாவது, இந்தத் தொகையை வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். படிப்படியாக இந்தத் தொகையின் அளவு அதிகரிக்கப்பட்டுவந்து, தற்போது ஒவ்வொரு ஆண்டும் 2.5 லட்சம் டாலரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வெளிநாடுகளுக்கு அனுப்ப அனுமதிக்கப்படுகிறது.
2004-ல் ரிசர்வ் வங்கி அறிவித்த திட்டத்தின்படி, வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளை வாங்கவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.
எனினும், வணிகம் தொடர்பாக, குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது தொடர்பாகச் சில குழப்பங்களும் இருந்தன. இதையடுத்து, தனிப்பட்ட நபர்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு அனுமதி உண்டு. ஆனால், வெளிநாடுகளில் நிறுவனம் தொடங்குவதற்கு அனுமதி இல்லை என்று 2010-ல் ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆனால், இதையும் மீறி வெளிநாடுகளில் முதலீடு செய்வது எப்படி என்று இந்தியக் கோடீஸ்வரர்கள் குழம்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது, ‘வெளிநாடுகளில் நிறுவனங்களைத் தொடங்க முடியாவிட்டால் என்ன? வெளிநாடுகளில் இயங்கிவரும் நிறுவனங்களை வாங்கத் தடை இல்லையே” என்று சார்ட்டட் அக்கவுண்டண்ட்கள் வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். போதாதா? புகுந்து விளையாடியிருக்கிறார்கள் நம்மவர்கள்.
மர்ம ரகசியம்
பனாமா பேப்பர்ஸ் விவகாரம் ஒரு ஹாலிவுட் படத்துக்கு இணையான மர்மங்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. ஜெர்மனியைச் சேர்ந்த ‘சுட்டோச்சி ஸய்ட்டங்’ நாளிதழ், கடந்த ஆண்டு பனாமா பேப்பர்ஸ் தொடர்பாக சங்கேத வார்த்தைகள் கொண்ட தகவல்களை வெளியிட்டது. இந்தத் தகவல்கள் சர்வதேசப் புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பிடம் வந்தன. பத்திரிகையாளர்கள் மேற்கொண்ட ஆய்வில்தான் இத்தனை விவரங்களும் தெரியவந்தன. இதுதொடர்பாக வெளியான ‘இன்சைட் தி பனாமா பேப்பர்ஸ்: டர்ட்டி லிட்டில் சீக்ரெட்ஸ்’எனும் ஆவணப்படத்தில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் கிடைக்கின்றன.
ஓராண்டுக்கு முன்னர், ‘சுட்டோச்சி ஸய்ட்டங்’ நாளிதழுக்கு ஒரு அனாமதேய நபரிடமிருந்து ரகசியத் தகவல் வந்தது. ‘ஹலோ, நான் ஜான் டோ. ரகசியத் தகவல்களைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?’ என்றது அந்தத் தகவல். ஆம் என்று பதிலளித்ததும் ‘இதில் பல நிபந்தனைகள் உண்டு. ஏனெனில், என் உயிருக்கே ஆபத்து இருக்கிறது…’ என்றது எதிர்முனை. டிரில்லியன் டாலர்கள் பரிவர்த்தனை நடக்கும் விவகாரம் இல்லையா, ஆபத்துகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், இந்த மாபெரும் குற்றங்கள் தொடர்பான தகவல்களை எப்படியாவது பகிரங்கமாக்க வேண்டும் என்று விரும்பியதாகவும் அந்தத் தகவல் சொன்னது. இன்று வரை தங்களுக்குத் தகவல் அனுப்பியவர் யார் என்றே தெரியாது என்றே ‘சுட்டோச்சி ஸய்ட்டங்’ இதழ் கூறிவருகிறது.
ரகசியத் தகவல்களை அந்த மர்ம நபரிடமிருந்து பெற்றவர், அந்த நாளிதழின் நிருபர் பிரெடரிக் ஓபர்மேர். பனாமா பேப்பர்ஸ் தொடர்பான தகவல்கள் உலகுக்குப் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னர் தனது லேப்டாப்பையும், மொபைலையும் உடைத்து நொறுக்கிவிட்டாராம். அவரும் சக நிருபர் பாஸ்டியன் ஓபர்மேயரும் பயன்படுத்திய அறையில் இணைய இணைப்பே வைத்துக்கொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, தனது லேப்டாப்பைத் தனக்குத் தெரியாமல் வேறு யாரேனும் பயன்படுத்துவதைக் கண்டுபிடிக்க, புதுவகை நகச் சாயத்தைப் பயன்படுத்த வேண்டிவந்தது என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் பிரடெரிக் ஓபர்மேர். “என்னய்யா இது? என்று என் காதலி கிண்டல் செய்தாள்” என்கிறார் அந்த இளம் பத்திரிகையாளர்.
சும்மா இல்லை, இதுவரை வெளியான ரகசியத் தகவல்களில் இதுதான் அதிகம். இவற்றை மொத்தமாகப் படித்து முடிக்க 25 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள். முதல் பாகமே இப்படியென்றால், இரண்டாவதாக வெளியாகப்போகும் தகவல்களை எந்தக் காலத்தில் படித்து முடிப்பது என்று தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம்.. இதுவரை, பனாமா கால்வாய்க்காகப் புகழ்பெற்றிருந்த அந்த சின்னஞ்சிறிய மத்திய அமெரிக்க நாடு, இனி பனாமா பேப்பர்ஸுக்காகவே காலம் முழுதும் பேசப்படும்!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT