Last Updated : 02 May, 2022 07:58 PM

24  

Published : 02 May 2022 07:58 PM
Last Updated : 02 May 2022 07:58 PM

காலையில் பெண்கள்... பிற்பகலில் ஆண்கள்... - தமிழக கல்லூரிகளில் ஷிஃப்ட் முறை ஆரோக்கியமா, அபத்தமா?

பிரதிநிதித்துவப் படம்

நமது சமூகத்தை பொறுத்தவரை ஆண் - பெண் இடையேயான உறவுப் புரிதல் எப்போதும் சிக்கல் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. பெண்ணும், ஆணும் சாலையில் நடந்து செல்லும்போதோ, அமர்ந்து பேசுகையிலோ அவர்களை உற்று நோக்கும் குறுகுறு பார்வைகள் இன்னமும் இங்கிருந்து அகலவில்லை. இல்லை, இல்லை அகலாமல் இருப்பதற்கு எந்த முயற்சியையும் ஒரு சமூகமாக நாம் முன்னெடுக்கவில்லை என்று கூறவேண்டும்..

எவ்வளவு பேர் இந்தச் செய்தியை படித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. இல்லை, மற்றுமொரு தற்கொலைச் செய்தி என அதனையும் கடந்திருக்கலாம். கடந்த மாதம் கோவை நீட் பயிற்சி மையத்தில் நடந்த மாணவி ஒருவரின் தற்கொலை இன்னமும் மன ஓட்டத்திலிருந்து அகலவில்லை. கோவை வாரி மெடிக்கல் அகாடமியில் படித்து வந்த மாணவி (வயது 18) ஒருவருக்கு அதே பயிற்சி மையத்தில் படிக்கும் மற்றுமொரு மாணவருடன் (வயது 18) நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறுகிறது. ஓராண்டுக்கு மேலாக இருவரும் தங்கள் காதலைத் தொடர்கிறார்கள். இந்த நிலையில் மாணவரின் பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரியவர, இருவரையும் கண்டிக்கின்றனர். ஒருகட்டத்தில் மாணவரை நீட் பயிற்சி மையத்திலிருந்து விடுவித்து சொந்த ஊர் அழைத்துச் சென்று விடுகின்றனர் பெற்றோர்.

மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார். அவரால் தனது காதலோனோடு பேசாமல் இருக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் நீட் பயிற்சி மைய விடுதியில் தற்கொலை செய்து கொள்கிறார்.

இவ்வாறான தற்கொலைகள் நமது சமூகத்தில் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இவை பொது வெளியில் பெரிதாக விவாதிக்கப்படவில்லை. நம்மைப் பொறுத்தவரை, அது காதல் தற்கொலை... அவ்வளவுதான். இவ்வாறாக ஆண், பெண் இடையேயான உறவைப் புரிந்து கொள்வதில் நமது சமூகம் தொடர்ந்து தவறிழைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில்தான் கடந்த வாரம் கல்லூரிகளில் ஷிஃப்ட் தொடர்பான கேள்விக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் பதிலளிக்கும்போது, ”காலை ஷிஃப்ட்டில் மாணவிகள், பிற்பகல் ஷிஃப்டில் மாணவர்களை வரவழைப்பது குறித்து முதல்வர் உத்தரவின்பேரில் ஆலோசனை நடத்தி வருகிறோம்’’ என்று தெரிவிக்கிறார்.

பெண் கல்வி வளர்ச்சிக்காக இந்த முறையை அறிமுகம் செய்ய ஆலோசனை நடந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது நிச்சயம் ஆரோக்கியமான போக்கு அல்ல, நமது கல்வி முறை பிற்போக்குத்தனமாக மாறுவதற்கு நாம் இடமளிக்க கூடாது என்று பலரும் கருதி வருகின்றனர். அந்த வகையில் நம்மிடம் சிலர் பகிர்ந்தவை:

ஷாலினி, மனநல மருத்துவர் - "நிச்சயம் இது ஆரோக்கியமான செய்தி அல்ல. எடுத்துகாட்டுக்கு கூற வேண்டும் என்றால், ஆரியர்கள் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அந்தப்புர அமைப்பும், பெண்களை புர்காவுக்கு பின்னால் ஒளித்து வைப்பதற்கும், இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இம்முறையானது தலிபான்கள் வழியிலான கல்வி. பிற்போக்குத்தனமான கல்வி.

அரசு கூறி இருப்பதுபோல் இந்த முறை கொண்டு வரப்பட்டால், இணை கல்வி முறையே (co-education) தோல்வியடையும். உலகளாவிய கல்வித் தரத்திற்கு இது எதிரானது. நிச்சயம் இதனை அனுமதிக்கக் கூடாது."

ஷாலின் மரிய லாரன்ஸ் - சமூக செயற்பாட்டாளர்: "இம்மாதிரியான நடவடிக்கைகள் கற்கால முறை போன்றது. ஏற்கெனவே பள்ளிகளில் மாணவர்களிடம் காட்டும் வேறுபாடு காரணமாகத்தான் பாலின வேறுபாடு அதிகமாகிறது. பள்ளிகளிலும் நாம் மாணவ, மாணவிகளை அருகில் அமரவைப்பதில்லை. எதிரெதிரேதான் அமர வைக்கிறோம். இதுபோன்ற செயல்கள் பாலின வேறுபாட்டை அதிகரித்துக் கொண்டேதான் போகும். அதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகளில் இம்மாதிரியான நடவடிக்கைகள் தொடரும்போது மாணவர்களிடம் எந்த நட்புறவு ஏற்பட போவதில்லை. எதிர்பாலினத்துடன் காதல் வயப்படுவார்கள் அல்லது அவர்களை வெறுப்பார்கள் இதுதான் நடக்கும். இதனால் பெண் மாணவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

பள்ளிகளில் பாலியல் கல்வி வேண்டும் என்று வலியுறுத்தும் சூழலில், இம்மாதிரியான அணுகுமுறை ஏமாற்றமளிக்கிறது. மாணவ, மாணவிகள் ஒன்றாக படித்தால்தான் எதிர்பாலினத்தை புரிந்துகொள்ளும் சூழல் உருவாகும். அவ்வாறு செய்யாமல் 100 வருடங்களுக்கு பின்னால் செல்லப் போகிறோமா?

பெண்கல்விக்காக இந்த முயற்சிகள் என்றால் பெண் கல்வி என்பதே சமத்துவத்துக்கானது தானே. பாலின சமத்துவம்தான் முக்கியம். அதனை போதிக்கிற பயிற்சிகள்தான் நமக்கு வேண்டும். அதனைவிடுத்து திராவிட அரசியல் பேசும் அமைச்சரின் இந்தப் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.

இரு பாலினத்தவரை பிரித்து வைப்பது என்பது பார்ப்பனியத்தின் வழி. இதனை திராவிட மாடல் எதிர்க்க வேண்டும். அதனை விடுத்து நீங்களும் அதனைப் பின்பற்றினால் அது திராவிட மாடல் ஆகாதே... நிச்சயம் இந்த முயற்சியை அமைச்சர் கைவிட வேண்டும். தனது வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். பெண் கல்வி ஏன் தடைப்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. அதனைதான் நாம் சரி செய்ய வேண்டும். அதனை சரிசெய்யாமல் இன்னொரு பிற்போக்குத்தனத்துக்கு அரசு தள்ளக் கூடாது.”

அபர்ணா - கல்லூரி மாணவி

”கிராமப்புற கல்லூர்களில் மாணவ, மாணவிகளிடம் நிறைய வேறுபாடு காட்டப்படுகிறது. மாணவர்களுடன் மாணவிகள் பேசக் கூடாது, ஒன்றாக செல்லக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. இதனை ஒப்பிடுகையில் நகரத்தில் அவ்வறான சூழல் இல்லை. இவ்வாறான நிலையில், இந்த தலைமுறையில் ஷிஃப்ட் முறைகள் கொண்டு வந்தால் மாணவ, மாணவிகளிடையேயான வேறுபாடு இன்னும் கூடுதலாக அதிகரிக்கும்.

பள்ளிகளில்தான் இம்மாதிரியான கட்டுப்பாடுகள் இருக்கும். கல்லூரி வந்த பிறகுதான் அத்தகைய கட்டுப்பாடுகள் உடைந்து நட்புறவாக இருப்பார்கள். இந்தச் சூழலில் இம்மாதிரியான ஆலோசனைகள் ஆரோக்கியமான போக்குக்கு வழிவகுக்காது. அரசு நிச்சயம் இதனை கைவிட வேண்டும்.”

சமூகத்தில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதில் கல்வியே முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது சமூகமும், குடும்ப அமைப்புகளும் பாலின சமத்துவதற்காக சூழலை ஏற்படுத்தி தராத சூழலில் பள்ளிகளும், கல்லூரிகளும்தான் அதற்கான பாதையை உருவாக்க முடியும். அதனை உணர்ந்து அரசு மாணவ, மாணவிகளிடம் பிளவை ஏற்படுத்தும் இம்முறையை கைவிட வேண்டும் என்கின்றனர் கல்வி ஆர்வலர்கள்.

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x