Published : 28 Apr 2022 07:10 AM
Last Updated : 28 Apr 2022 07:10 AM
சமீபத்தில் நண்பர் ஒருவருடன் திருவல்லிக்கேணியில் இருக்கும் 227 ஆண்டு பழமையான வாலாஜா பள்ளிவாசலுக்கு (பெரிய பள்ளிவாசல்) சென்றேன். நான் சென்னைவாசி கிடையாது. வாலாஜா பள்ளிவாசலைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் இப்போதுதான் முதன்முறையாகச் சென்றேன். அங்கு நோன்பு திறக்கும் நிகழ்வு மிகச் சிறப்பான அனுபவமாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.
1795-ம் ஆண்டு முகலாய ஆட்சியின்போது, ஆற்காடு நவாப் முகம்மது அலி கான் வாலாஜா குடும்பத்தால் கட்டப்பட்ட பள்ளிவாசல் இது. தமிழகத்தின் பெரிய பள்ளிவாசல்களில் ஒன்று. தவிர, மதநல்லிணக்கத்துக்கு முன்னுதாரணமாக விளங்கும் பள்ளிவாசல் என்ற பெயரும் அதற்கு உண்டு. ஆற்காடு நவாப் நிர்வாகத்தின்கீழ் வரும் இப்பள்ளிவாசலில் நிர்வாகப் பொறுப்புகளில் இந்துக்களும் அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
திருவல்லிக்கேணியின் நெரிசல் மிகுந்த சாலையில் நடந்து பள்ளிவாசல் நுழைவாயிலுக்குள் நுழைந்தோம். ஆயிரக்கணக்கானோர் குழுமும் பெரிய திடல்போல் இருந்தது அதன் வளாகம். ஆங்காங்கே புறாக்கள் சிறகடித்துக்கொண்டிருந்தன. நுழைவாயிலிலிருந்து சற்றுத் தொலைவில் தரைத்தளத்தில் மேடைபோல் அமைக்கப்பட்டு, அதற்கு மேல் பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்தது.
படியேறி மேலே சென்றோம். முகப்பிலே பிளாஸ்டிக் வாளிகளில் சைவ பிரியாணி, வடை, பேரிச்சம்பழம், வாழைப்பழம், பிஸ்கட் பாக்கெட், ரோஸ் மில்க் எனப் பல வகை உணவுகள் நிரப்பப்பட்டிருந்தன. அவற்றைச் சுற்றி ஏழு, எட்டு நபர்கள் நின்று அந்த உணவு வகைகளை ஒவ்வொன்றாகக் கைமாற்றிவிட்டுக்கொண்டிருந்தனர். பள்ளிவாசலின் முன்பகுதியில் வரிசையாகப் பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. நோன்புதிறக்க வரும் மக்கள் அதில் அமர்ந்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் முன்னால் கொட்டராவில் நோன்புக் கஞ்சி வைக்கப்பட்டிருக்க, வாளிகளிலிருந்து ஏனையவை பரிமாறப்பட்டன.
பரிமாறுபவர்களைக் கவனித்தேன். 22 வயது இளைஞர் முதல் 70 வயதுப் பெரியவர் வரையில் பரிமாறும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். எல்லாரும் தலையில் தொப்பி அணிந்திருந்தனர். சிலரது கையில் பச்சைகுத்தப்பட்டிருந்தது. பள்ளிவாசலின் வலதுபுறப் பகுதியில் பெண்கள் நோன்புதிறக்க வரிசையாக உட்கார்ந்திருந்தனர்.
அவர்களுக்கு பரிமாறிக்கொண்டிருந்த பெண்கள் எவரும் தலையில் முக்காடிட்டிருக்கவில்லை. சற்றுக் குழப்பமாக இருந்தது. ஏனென்றால், முஸ்லிம்கள் பச்சை குத்துவதில்லை. அவர்கள் இந்துக்கள் என்றால், ஏன் முஸ்லிம்கள் அணியும் தொப்பி அணிந்து இங்கு பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்? அதேபோல், முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலினுள் கட்டாயம் முக்காடு அணிந்திருப்பார்கள். ஆனால், பரிமாறும் பெண்கள் எவரும் முக்காடு அணியவில்லை. எனில், யார் இவர்கள்?
அழைத்துச்சென்ற நண்பர் சொன்னார், “என்ன பார்க்கிறீர்கள் தோழர்? அவர்கள் முஸ்லிம்கள் இல்லை. சிந்தி இன இந்துக்கள். ஒவ்வொரு ஆண்டும் நோன்பு மாதத்தில், இங்கு நோன்பு திறப்பவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து, அவர்களே வந்து பரிமாறுவார்கள்.”
எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. முஸ்லிம் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த செல்வந்தர்கள் சிலர், நோன்புக் காலத்தில் பள்ளிவாசல்களுக்கு நிதி வழங்குவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இங்கு நடந்துகொண்டிருக்கும் காட்சி அத்தகையது அல்ல. ஏனென்றால், அந்தச் சிந்தி இன இந்துக்கள் நோன்பாளிகளுக்கு உணவளிக்க விரும்பினால், பள்ளிவாசலுக்கு நிதி அளித்திருக்கலாம். ஆனால், அவர்கள் தாங்களே உணவைத் தயார்செய்து, ஒவ்வொரு நாள் மாலையிலும் வந்து பரிமாறுகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,000 பேர் இப்பள்ளிவாசலுக்கு நோன்புதிறக்க வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் 7 அல்லது 8 உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. சராசரியாக அவற்றின் மதிப்பு 35 ரூபாய் இருக்கும். எனில், ஒரு நாளைக்கு 35,000 ரூபாய். அப்படியென்றால், முப்பது நாளைக்குக் கிட்டத்தட்ட10 லட்சம் ரூபாய். இதில் பணம் அல்ல விஷயம். அவர்கள் பரிமாறும் முறைதான் இதில் கவனிக்கத்தக்கது.
அவ்வளவு பொறுப்புடனும், அவ்வளவு ஈடுபாட்டுடனும் பரிமாறிக்கொண்டிருந்தனர், திருமண நிகழ்வில் சொந்தக்காரர்கள் பரிமாறுவதுபோல. இந்தியாவில் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறையும் வெறுப்பும் தீவிரமடைந்திருக்கும் இக்காலகட்டத்தில், இப்படியான ஒரு காட்சி எனக்குப் பெரும் நெகிழ்ச்சியைத் தந்தது. நோன்புதிறந்து முடிந்து, அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராம் தேவ்நானியைச் சந்தித்தேன். அவர் பேசினார்:
“நாங்கள் சிந்தி இன இந்துக்கள். ஒருவகையில் நாங்கள் அகதிகள். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது சிந்தி, பாகிஸ்தானோடு சென்றது. அப்போது இந்து மதத்தைப் பின்பற்றும் சிந்திகள் பலர் பாகிஸ்தானில் இருக்க விரும்பாமல் வெவ்வேறு இடங்களுக்குக் குடிபெயரத் தொடங்கினார்கள். அப்படியாக தாதா ரத்தன்சந்த் மெட்ராஸை வந்தடைந்தார். அவருடைய வழிகாட்டி ஷாஹன்ஷா பாபா நெப்ராஜ் சாஹிப். அவர் ஒரு சூஃபி ஞானி.
ஆனால், அவர் முஸ்லிம் அல்ல. எல்லா மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டைக் கொண்டவர். சாஹிப்பின் சீடரான பூஜ் தாதா ரத்தன்சந்த் சென்னை வால்டாக்ஸ் சாலையில் சாஹிப்பின் நினைவாகச் சிறிய மடம் ஒன்று கட்டினார். பிறகு, அம்மடம் மயிலாப்பூருக்கு மாற்றப்பட்டது. ‘சூஃபி தர்’ (Sufi Dar) என்று அந்த மடத்துக்குப் பெயர். அந்த மடத்தில் பல்வேறு முஸ்லிம் சூஃபிகள், இந்து சாதுக்களின் புகைப்படங்களும், விநாயகர், ஏசு எனப் பல்வேறு மதக் கடவுள்களின் உருவப்படங்களும் இருக்கும்.
“40 ஆண்டுகளுக்கு முன்பு பூஜ் தாதா ரத்தன்சந்த், ஆற்காடு நவாபைச் சந்தித்து, ஒவ்வொரு நோன்பு மாதமும் இப்பள்ளியில் நோன்புதிறப்பதற்கான ஏற்பாட்டைச் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார். ஆற்காடு நவாபும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். அதுமுதலே ‘சூஃபி தர்’ அமைப்பில் இருக்கும் சிந்திகள், இங்கு நோன்புக் காலத்தில் சேவையாற்றிவருகிறார்கள். 1998 முதல் நானும் இந்தப் பணியில் பங்கேற்றுவருகிறேன். இங்கு சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிந்திகள் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு வேலை செய்கிறார்கள். சிலர் வணிகம், சிலர் ஐடி, சிலர் மருத்துவம். ஒவ்வொரு நோன்பு மாதத்திலும் நாங்கள் ஐம்பது, அறுபது பேர் - கணவன், மனைவி, பிள்ளைகள் என்று இங்கு வருவோம்.
“காலை 7.30 மணிக்கே அன்றைக்கு வழங்கப்பட வேண்டிய உணவுப் பொருட்களுக்கான தயாரிப்பு தொடங்கிவிடும். அவை அனைத்தையும் வேனில் ஏற்றி, மாலை 5.30 மணி போல் இங்கு கொண்டுவந்துவிடுவோம். அதன் பிறகு உணவு வகைகளை லாரியிலிருந்து எடுத்து வைப்பது முதல் நோன்பாளிகளுக்கு உணவு பரிமாறுவது வரையில் ஆளாளுக்கு ஒரு வேலை. நோன்பு திறப்பு முடிந்த பிறகு, ஏழு மணி வாக்கில் அவரவர் வீட்டுக்குச் செல்லத் தொடங்குவோம். மனிதர்களுக்குச் செய்யும் சேவை, கடவுளுக்குச் செய்யும் சேவையாகும் என்று எங்கள் குருஜி பூஜ் தாதா ரத்தன்சந்த் சொல்லியிருக்கிறார்” என்று கூறி, தலையில் இருந்த வலைபோட்ட தொப்பியை மடித்து சட்டைப் பையில் வைத்து வணக்கம் சொல்லி விடைபெற்றுச் சென்றார்.
- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in
To Read this in English: Wallajah Mosque and Sindhi Hindus: Food for thought over religious harmony
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT