Published : 26 Apr 2022 06:47 AM
Last Updated : 26 Apr 2022 06:47 AM

தண்ணீர்த் திருட்டைத் தடுக்க வேண்டும்!

சென்னையில் தனியார் தண்ணீர் டேங்கர் ஆபரேட்டர்களும் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் விற்பனையாளா்களும் அக்டோபா் 2015-ல் நடத்திய காலவரையற்ற வேலைநிறுத்தம் நகரின் குடிநீர் விநியோகத்தைக் கிட்டத்தட்ட முடக்கியதை மறக்க முடியாது. இது பெரும்பாலான இந்திய நகரங்களில் செழித்துவரும் சட்டவிரோதத் தண்ணீர் வணிகத்தின் மோசமான சித்திரத்தை நினைவூட்டுகிறது. தண்ணீர் லாரிகளுக்கு முன்னால் மக்கள் கூட்டம்கூட்டமாக மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் காட்சிகள் கோடைக்காலத்தில் மட்டுமல்லாமல், எல்லாக் காலத்திலும் முக்கிய நகரங்களில் வழக்கமான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. நாடு முழுவதும் நீர்ப் பற்றாக்குறை அதிகரித்துவருவதால், வரும் ஆண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாகும்.

மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் சமீபத்திய (2021) அறிக்கைப்படி, இந்தியாவில் மொத்தமாக உள்ள 6,965 வட்டங்களில், 2,529-ல் நிலத்தடி நீர் அளவுக்கதிகமாக உறிஞ்சப்படுகிறது. ஐஐடி குவாஹாட்டி ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில், நாட்டில் உள்ள 22 பெரிய ஆற்றுப் படுகைகளில், 6 மட்டுமே வறட்சியைச் சமாளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. நிதி ஆயோக் தனது ‘கூட்டுநீர் மேலாண்மைக் குறியீட்டு’ (2018) அறிக்கையில், கிட்டத்தட்ட 6 கோடி இந்தியர்கள் கடுமையான நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்றும், பாதுகாப்பான நீர் கிடைக்காத காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,00,000 பேர் இறக்கின்றனர் என்றும் கோடிட்டுக்காட்டியுள்ளது.

பல நூற்றாண்டுப் புறக்கணிப்பாலும், தவறான நிர்வாகத்தாலும் எண்ணற்ற சிறிய நீர்நிலைகளின் நீர் சேமிப்புத் திறன் வேகமாகக் குறைந்துவிட்டது. ‘இந்தியாவின் நீர்ப் பொருளாதாரம்: ஒரு கொந்தளிப்பான எதிர்காலத்தை நோக்கி’ (2006) என்ற உலக வங்கியின் அறிக்கையில், இந்தியாவில் உள்ள அணைகள் சுமார் 30 நாட்கள் மழையை மட்டுமே சேமிக்கும் திறன் கொண்டவை என்கிறது. இவை அனைத்தும் இந்தியாவின் நீர் இருப்பு நிலவரம் போதுமானதாக இல்லை என்பதைக் குறிக்கிறது.

தண்ணீர்த் திருடர்கள்

நாட்டில் வளர்ந்துவரும் தண்ணீர்ப் பற்றாக்குறைக்குப் பரவலான தண்ணீர்த் திருட்டும் ஒரு காரணம். பானங்கள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட தண்ணீர் விற்பனை செய்யும் பன்னாட்டு வணிக நிறுவனங்கள், பல இடங்களில் நிலத்தடி நீரைத் திருடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனம், அனுமதிக்கப்பட்ட வரம்பான 2.4 லட்சம் லிட்டர்களுக்கு மேலாக, ஒரு நாளைக்கு 6.5 லட்சம் முதல் 15 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை எடுப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேகாலயா, ஆந்திரப் பிரதேசம், கேரளம், தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இயங்கும் சில பன்னாட்டு நிறுவனங்கள், கிராம மக்களின் பெரும் எதிர்ப்பால், தண்ணீா் பேக்கேஜ் செய்வதை நிறுத்தியதாகச் செய்திகள் கூறுகின்றன. ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், பொழுதுபோக்குக் கூடங்கள், உற்பத்தி நிறுவனங்கள், கட்டிட ஒப்பந்ததாரர்கள், நகரின் அருகிலுள்ள குளங்கள், ஏரிகளிலிருந்து சட்டவிரோதமாகத் தண்ணீரை இரவு நேரங்களில் அதிகளவில் எடுப்பதால், ஏழைகளுக்கும் கால்நடைகளுக்கும் கோடைக்காலங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை.

மும்பையில் உள்ள ஒரு வீட்டுவசதி சங்கம், எந்தவிதமான அனுமதிச் சான்றிதழும் இல்லாமல், 25 ஆண்டுகளாகக் குழாய்கள் மூலமாகத் தண்ணீரைத் திருடியதற்காக மும்பை மாநகராட்சியால் 2017-ல் பெரும் அபராதம் விதிக்கப்பட்டது. டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னையில் தினசரி அடிப்படையில் சுமார் 2,000 முதல் 10,000 தனியார் தண்ணீர் டேங்கர்கள் சட்டவிரோதமாகத் தொழிற்சாலைகளுக்குப் பெருமளவு தண்ணீரை விநியோகம் செய்கின்றன.

உதாரணமாக, குருகிராமில், டேங்கர் மாஃபியாவால் தினமும் 50 லட்சம் லிட்டர் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானத் தளங்களுக்கு விற்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குருகிராமில் மட்டும் சுமார் 20,000 ஆழ்துளைக் கிணறுகள் சட்டவிரோதமாகத் தோண்டப்பட்டுள்ளதாக டெல்லியிலுள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) கூறியுள்ளது.

2013-ல் வெளியிடப்பட்ட நீர் நிர்வாகம் பற்றிய ஆய்வில், தண்ணீர்த் திருட்டு மற்றும் அங்கீகரிக்கப்படாத தண்ணீர் இணைப்புகளால், டெல்லியில் மட்டும் மொத்த நீரில் ஏறக்குறைய 50% எடுக்கப்படுவதாகக் கூறியுள்ளது. ஹைதராபாத், பெங்களூரு நகரங்களில் இது 35%-40% என இவ்வறிக்கை கூறியுள்ளது. இதே போன்ற நிகழ்வு தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் நடப்பதால், தண்ணீா்ப் பற்றாக்குறை அதிகரிக்கிறது. உலக வங்கியால் வெளியிடப்பட்டுள்ள ‘வளரும் நாடுகளில் வருவாய் அல்லாத தண்ணீரைக் குறைப்பதற்கான சவால்கள்’ (2006) என்ற அறிக்கையில், தொழில்முறை விநியோக வலையமைப்பிலிருந்து தினமும் சுமார் 48 மில்லியன் கன மீட்டர் குடிநீர் காணாமல் போய்விடுவதாகவும், இது 20 கோடி மக்களுக்குத் தண்ணீர் வழங்கப் போதுமானது எனவும் கூறியுள்ளது.

செய்ய வேண்டியவை

இந்தியா முழுவதும் தண்ணீர்த் திருட்டு அதிகரித்துவருவது, நமது நீர் ஆதாரங்களை நாம் எவ்வளவு மோசமாக நிர்வகித்துவருகிறோம் என்பதைக் காட்டுகிறது. இத்தகைய தவறான நீர் மேலாண்மைக்கு ஒரு முக்கியக் காரணம், அதன் விலை. ஆசிய வளர்ச்சி வங்கி 2007-ல் நடத்திய ஆய்வில் தொழில்துறை, வணிக மற்றும் பொது வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்படும் தண்ணீரின் சராசரி விலை ஒரு கன மீட்டருக்கு வெறும் ரூ 4.90 மட்டுமே எனக் கணக்கிட்டுள்ளது. அனல் மின்நிலையங்கள் அவற்றின் முதன்மை மூலப்பொருளான தண்ணீருக்கு மிகக் குறைந்த விலையை வழங்குவதாகவும் இது கூறுகிறது. நீரின் தேவை அதிகரித்துவருவதைக் கருத்தில் கொண்டு, நீா்த் திருட்டைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளைக் கண்டறிவதோடு, நீரின் உபயோகத்திறனை அதிகரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

முதலில், தண்ணீரை ஒரு பொருளாதாரப் பொருளாகக் கருதி, குறைந்தது அதனை விநியோகம் செய்யத் தேவைப்படும் பராமரிப்புச் செலவுகளை மீட்கும் வகையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விலை நிர்ணயத்தில் இரண்டு அடுக்குகள் இருக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளுக்குப் போதுமான தண்ணீர் குறைந்தபட்ச விலையிலோ அல்லது இலவசமாகவோ வழங்க வேண்டும். குறிப்பிட்ட அளவிற்கு மேல், தண்ணீா் உபயோகிப்பாளா்களுக்கு அதன் அளவைக் (volumetric pricing) கணக்கில் கொண்டு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இது இந்தியாவில் சில இடங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக, மஹாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் வாகாட் நீர்ப்பாசனத் திட்டத்தின் பயனாளர்கள் சங்கங்கள் மூலம் இது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

மத்திய நிலத்தடி நீா் வாரியத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலைக் கணக்கில் கொண்டு, அனைத்துத் தொழில் நிறுவனங்களும், நிலத்தடி நீரை எடுப்பதற்குத் தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்த வேண்டும். ஆழ்துளைக் கிணறு, ஆறு, குளங்களிலிருந்து டேங்கா்கள் மூலமாக அனுமதியின்றித் தண்ணீா் எடுத்து அதிக விலைக்கு விற்பதை ஒழுங்குபடுத்த அபராதத்துடன் கூடிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தேவைக்கேற்பத் தண்ணீர் மேலாண்மையைச் சரிசெய்யாவிடில், 2018-ல் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடந்ததுபோல், தண்ணீரை ரேஷனில் பெறும் நிலை நமக்கு ஏற்படலாம்.

- அ.நாராயணமூர்த்தி, மூத்த பேராசிரியர்.

தொடர்புக்கு: narayana64@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x