Published : 12 May 2016 09:16 AM
Last Updated : 12 May 2016 09:16 AM
தேர்தல் மாநிலங்களில் ஒரு கழுகுப் பார்வை
கேரளம் மாறிவருகிறது என்பதற்கு இரண்டு உதாரணங்கள். சமீபத்தில் தனது வீட்டை மாற்ற திருவனந்தபுரம் சென்றார் ஒரு பத்திரிகையாளர். வேலைக்காரர்கள் எப்போதும்போல 10 மணிக்கு வருவார்கள் என்று இவர் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தபோது, சொன்ன நேரமான 9 மணிக்கு வந்து கதவைத் தட்டினார்களாம். எல்லோரும் அவரவர் வேலையை ஒழுங்காகச் செய்து விட்டு, 5 மணி அளவில் திரும்பச் சென்றார்களாம். திருவனந்தபுரத்தில் இருக்கிறோமா அல்லது கலிஃபோர்னியாவில் இருக்கிறோமா என்று அவருக்குச் சந்தேகம். வேலைக் கலாச்சாரம் நிச்சயம் மாறிவிட்டது என்று அவர் சொல்கிறார்.
இரண்டாவது, அச்சுதானந்தன் ஃபேஸ்புக், ட்விட்டரில் சக்கைப்போடு போடுவதுதான். இப்போது அவர் பெயரில் ஒரு மொபைல் ஆப் வேறு தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்குள் கணினி வராமல் தடை செய்ய இறுதி வரை போராடுவோம் என்று மார்க்ஸிஸ்ட் கட்சி ஒருகாலத்தில் ஓங்கிக் குரல் கொடுத்தது என்பது இன்றைய இளைய தலைமுறைக்குத் தெரியாது. ஆனால், ட்விட்டர் மார்க்ஸியத்தைப் பார்த்து மார்க்ஸ் நிச்சயம் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்! முதலாளித்துவத்தின் தொழில்நுட்பப் பாய்ச்சல்கள் குறித்து மார்க்ஸ் வியந்துதான் எழுதியுள்ளார்.
இளநீரால் இயங்குபவர்
அச்சுதானந்தன் பழம்பெரும் தலைவர். புன்னப்புரா வயலார் போராட்டத்தில் நேரடிப் பங்கேற்றவர். இன்றும் தனது 92-ம் வயதில் இரண்டு இளநீரைக் குடித்துவிட்டுக் கொளுத்தும் வெயிலில் இன்னும் உரத்த குரலில் ‘சகோதரிகளே, சகோதரன்மாரே’ என்று விளித்து, தனது பழைய எதிரியான பினராயி விஜயனுக்கு ஆதரவாகக் கூட்டத்தில் பேசுகிறார். வயதானாலும் பேச்சில் காரம் குறையவில்லை என்கிறார்கள் மக்கள். முன்னாள் முதல்வர் நம்பூதிரிபாட் போல மார்க்ஸியத் தத்துவத்தில் பேரறிஞர் அல்ல இவர். அடிமட்டத்திலிருந்து கட்சிக்கு உழைத்து தலைவராக உயர்ந்தவர். 2006-ல் முதல்வர் ஆன உடனேயே கட்சி மாநிலச் செயலாளரான விஜயனுடன் குத்துச்சண்டை. 2009-ல் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.
தற்போதைய சட்டமன்றத் தேர்தலின் கட்சி போஸ்டர்களில் அச்சுதானந்தன், கொடியேறி பால கிருஷ்ணன், பினராயி விஜயன் என்ற மூன்று முக்கிய தலைவர்களும் மும்மூர்த்திகளாகக் காட்சி தந்தாலும், இந்த முறை விஜயன்தான் மாநிலத்தின் முதல்வர் ஆவார் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
பாஜகவின் வளர்ச்சி
கேரளத்தில் பாஜகவின் வளர்ச்சி நாடு முழுவதும் கூர்மையாகக் கவனிக்கப்படுகிறது. தமிழ்நாடு கூட பாஜகவுக்கு நாடாளுமன்ற உறுப்பினரை அனுப்பிவிட்டது. கேரளத்திலிருந்து இந்த அதிசயம் இதுவரை நிகழவில்லை. 2006 சட்டமன்றத் தேர்தலில் 5% குறைவாக வாக்குகளை வாங்கிய பாஜக 2011 தேர்தலில் 6.3% வாங்கியது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இது 4% உயர்ந்து 10.3 ஆனது.
2014-க்குப் பிறகும் கட்சி வளர்ந்திருக்கிறது என்கிறார்கள். கட்சியின் பெருந்தலைகள் அனைவரும் தேர்தலில் நிற்கிறார்கள். கிரிக்கெட் வீரர்
ஸ்ரீசாந்த்
நிற்கிறார். கட்சிக்கு நாயர் சாதியமைப்பு, ஈழவர் சாதி அமைப்பு மற்றும் சில பழங்குடி மக்களின் அமைப்புகளிடமிருந்து ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆனால், இத்தகைய ஆதரவுகள் அந்தந்தச் சாதி மக்களின் ஆதரவாக மாறும் என்பது சந்தேகமே.
வன்முறை
கேரளத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கும் மார்க்ஸிஸ்ட்டுகளுக்கும் இடையே நடைபெறும் வன்முறை, மாயாஜாலப் படங்களில் வெட்ட வெட்ட வளரும் பாம்பின் தலைபோல வளர்ந்து கொண்டே வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொள்கிறார்கள். கேரளத்தின் அழிக்க முடியாத கறையாக யாருக்கும் பயனில்லாத இந்த வன்முறை இருக்கிறது. இரண்டு கட்சிகளும் அடிமட்டத் தொண்டர்களை ஏவி விட்டு வேடிக்கை பார்க்கும் காரியத்தைச் செய்து கொண்டிருக்கின்றன. இந்த மன்னிக்க முடியாத குற்றத்துக்கு மார்க்ஸிஸ்ட் கட்சி, மாநிலத்தில் பாஜகவை விடப் பெரிய கட்சி என்பதால், கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டும்.
சிறுபான்மையினர் யார் பக்கம்?
இந்துக்களைப் பெரும்பாலும் பாஜக நம்பியிருக்கிறது என்றால், சிறுபான்மையினரின் வாக்குகள் தங்கள் பக்கம் விழாவிட்டால் பதவிக்கு வர முடியாத நிலையில் காங்கிரஸ் கூட்டணியும் இடதுசாரிக் கூட்டணியும் இருக்கின்றன.
கிறிஸ்தவர்கள் கேரள காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுக்கு என்றுமே துணையாக நின்றிருக்கிறார்கள். ஆனால், இந்த முறை கிறிஸ்தவர்களில் ஒரு பகுதியினர் இடதுசாரிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது. மலைப் பகுதிகளில் இருக்கும் கிறிஸ்தவர்கள் இடதுசாரிகளுக்கே வாக்குகளைப் போடுவார்கள் என்கிறார்கள்.
காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீக் இருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்புகளை உறுதியோடு எதிர்க்கும் வலிமையான கட்சி காங்கிரஸாகத்தான் இருக்க முடியும். எனவே, காங்கிரஸ் ஆட்சியே கேரளத்தில் அமைய வேண்டும் என்கிறார் ஒரு முஸ்லிம் லீக் தலைவர். இடதுசாரிகளும் பெரிய வியாபாரிகளைத் தங்கள் வேட்பாளர்களாக இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் நிறுத்தியுள்ளதால், அவர்கள் ஏழைகளின் கட்சி என்று பிரச்சாரம் செய்தால் அது எடுபடாது என்கிறார்கள். ஆனால், இஸ்லாமியர்களுக்குள்ளே இருக்கும் மற்ற சிறு கட்சிகள் வாக்குகளைப் பிரிக்கக் கூடும்.
எப்போதும் போல இப்போதும் இந்த தேர்தல் ஊசிமுனையில் மக்களின் தீர்ப்பு ஊசலாடும் தேர்தல்தான். யார் வெல்வார்கள்?
- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்.
தொடர்புக்கு: tigerclaw@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT