Published : 07 Apr 2022 06:07 AM
Last Updated : 07 Apr 2022 06:07 AM

காலநிலை மாற்றமும் தமிழக அரசும்

நம்பி அப்பாதுரை, பரத் ஜெய்ராஜ்

ஆட்சியமைத்து ஓராண்டு காலமே ஆகியிருக்கும் தமிழ்நாடு அரசு, காலநிலை பாதிப்பைக் குறைக்கும் தகவமைப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றைச் சார்ந்து வெளிப்படுத்தும் உத்வேகம், ஆர்வத்தை 2022-23-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை பிரதிபலித்துள்ளது.

மகாத்மா காந்தி நூறு நாள் ஊரக வேலை உறுதித் திட்டத்துக்குப் (MNREGS) பயன்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 2,800 கோடி ரூபாய் நிதி, தொற்றுநோயின் விளைவுகளைச் சமாளிக்கப் போராடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தை உருவாக்கும். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை மட்டுப்படுத்தும் தகவமைப்புடன் மேற்கண்ட திட்டத்தை இணைத்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிப்பவர்கள் கடந்த ஆண்டில், 100 நாள் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பயன்படுத்தி 1,000 குளங்களை ஒரு மாதத்துக்குள் உருவாக்கினர். 541 கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்களில் உருவாக்கப்பட்ட இந்தக் குளங்கள் மூலம், சுமார் 3.6 லட்சம் லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். ஏற்கெனவே சேமிக்கக்கூடிய 40.69 கோடி லிட்டர் சேமிப்புத் திறனையும் தாண்டிய கூடுதல் அளவு இது.

இந்திய மக்கள்தொகையில் 4 சதவீதமும், இந்திய நிலப்பரப்பில் 6 சதவீதமும் தமிழ்நாட்டில் உள்ளன. ஆனால், நாட்டின் ஒட்டுமொத்த நன்னீரில் 2.5 சதவீதத்தை மட்டுமே தமிழ்நாடு பெறுகிறது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தைத் தவிர்த்து, மொத்த வருடமும் மாநிலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது.

இந்தப் பின்னணியில் திருவண்ணாமலையில் முன்னெடுக்கப்படும் இம்முயற்சி ஆண்டு முழுவதும் விவசாயம், வீட்டுத் தேவைக்குப் போதுமான தண்ணீரை உறுதிசெய்யும். அதே நேரத்தில், எதிர்காலத்தில் நேரக்கூடிய வறட்சி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ளவும் சமூகத்தைத் தயார்ப்படுத்தும். சிறு காடுகளை உருவாக்குதல், குன்றுகளைப் பசுமையாக்குதல், நாற்றங்கால் வளர்ப்பு, காட்டில் மரங்கள் நடுதல், மேய்ச்சல் நில மேம்பாடு போன்ற உள்கட்டமைப்பு சார்ந்த அம்சங்களிலும் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்திவருகிறது. இவை எல்லாமும் ஒன்றிணைந்து, காலநிலை மாற்ற நெருக்கடியின்போது விவசாய வளங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை மட்டுப்படுத்த முடியும்.

இதேபோன்ற ஒருங்கிணைந்த அணுகுமுறையில், கால்வாய், நீர்த்தேக்கத் தூர்வாருதல், நீர்நிலைகளை மீட்பது, அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு சதுப்புநில இயக்கத்தின் மூலம் 100 சதுப்புநிலங்களின் சுற்றுச்சூழலை மறுசீரமைப்பது, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தற்போதைய 24 சதவீதத்திலிருந்து 33% சதவீதத்துக்குக் காடுகளை அதிகரிப்பது என்பது போன்ற இலக்குகளை முன்வைத்துப் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், காலநிலை மாற்ற பாதிப்புகளைத் தணிப்பதற்கான செயல்பாடுகளை வலுவாக மேம்படுத்தலாம்.

அதே நேரம், நகர்ப்புற நிலப்பரப்புகளிலும் எரிசக்தித் துறையிலும் கார்பன் வாயு வெளியிடப்படும் சூழலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனில், காலநிலை மீட்சிக்கான முயற்சி முழுமையடையாது. வேகமாக வளர்ந்துவரும் நகர்ப்புறச் சூழலில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் தகவமைப்புக்குத் தேவையான ஒருங்கிணைந்த அணுகுமுறை கடந்த ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இருந்ததைப் போல், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகளில் இல்லை.

2040-ல் நாட்டின் 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் நகரங்களில் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு நகர்ப்புறம் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி இந்தியா நகர்ந்துகொண்டிருக்கிறது. நகர்ப்புறக் கட்டமைப்புகளில் கார்பன் உமிழ்வை நீக்குவது அவசியம். ஏற்கெனவே உற்பத்தி செய்யப்படும் ஆற்றலில் மூன்றில் ஒரு பங்கை இந்திய நகரங்கள்தான் பயன்படுத்துகின்றன. மேலும், உலகளவிலான ஆற்றலில் 32 சதவீதத்தைக் கட்டிடத் துறையே பயன்படுத்திவிடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு ஏற்கெனவே இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும், ஆறு புதிய மாநகராட்சிகள், 28 புதிய நகராட்சிகளை உருவாக்குவதன் மூலம் கட்டிடங்கள், கட்டுமானத் துறை அடுத்த பத்தாண்டுகளில் பெரிய வளர்ச்சியைக் காணும். இதற்கு வலுசேர்க்கும் வகையில், நடப்பு நிதிநிலை அறிக்கையில், சென்னை வண்டலூர் புறநகர்ப் பகுதியில் 62 கி.மீ. நீளத்துக்கு, ‘வளர்ச்சிப் பாதை’யை அமைக்க அரசு முன்மொழிந்துள்ளது. மெட்ரோ ரயில், தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் உள்ள தரைவெளிக் குறியீடு (கட்டிடத் தளத்தின் தரைப் பகுதிக்கும் கட்டிடத்தின் தரைப்பகுதிக்கும் இடையே இருக்கும் விகிதம்) தளர்த்தப்பட்டுள்ளது.

மேலும், நடைமுறையில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் 60 திட்டங்களை மறுவடிவமைக்கவும் அரசு முடிவுசெய்துள்ளது. வீடற்ற கிராமப்புறக் குடும்பங்களுக்கு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட’த்தின் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான மலிவு விலை வீடுகளை அடுத்த ஐந்தாண்டுகளில் நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆற்றல் திறன் மேம்பாடு, குறைந்த கார்பன் விநியோகச் சங்கிலிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும் அவற்றை உறுதிசெய்வதற்குமான ஒரு முன்னுதாரண வாய்ப்பும் இதில் உருவாகியுள்ளது.

இந்தப் பின்னணியில், கார்பன் உமிழ்வு நீக்க முயற்சிகளில் நகரங்களை அரசு புறக்கணித்துவிட்டது என்று சொல்ல முடியாது. உண்மையில், 2021-22 இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நகர்ப்புற நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கும், பூங்காக்கள் கட்டுவதற்கும், மாநிலம் முழுவதும் மரம் வளர்ப்பதற்கும் அறிவிக்கப்பட்ட ‘நமக்கு நாமே திட்டம்’ போன்ற முயற்சிகள் நகரங்களுக்குள்ளேயே கார்பனை கிரகிக்கும் தீவுகளை உருவாக்கும். 80 லட்சத்துக்கும் அதிகமான தாவரங்கள், மூலிகைகள் ஆகியவற்றைக் கொண்ட லண்டனின் உலகப் புகழ்பெற்ற, யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற 326 ஏக்கர் கியூ ராயல் தாவரவியல் பூங்காவைப் போல் சென்னையிலும் கார்பன் உமிழ்வை உள்வாங்கும் நுரையீரல் போன்றதொரு இடத்தை உருவாக்குவது சார்ந்து நடப்பு நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது. காலநிலை மீட்சி பெரிய அளவில் சாத்தியப்படுவதற்குக் கட்டிடங்களில் கார்பன் உமிழ்வு நீக்கும் முயற்சிகளும் இத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படாத மற்றொரு முக்கியமான துறை எரிசக்தித் துறை. தமிழ்நாடு ஏற்கெனவே புதுப்பிக்கத்தக்க - சூரிய, காற்று ஆற்றல் (RE) உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. ஆனால், உற்பத்தி மாறுபாடு காரணமாக மின் விநியோகக் கட்டமைப்புடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைத்துச் செல்வது சவாலாக உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது முதல் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்து, தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை மின் விநியோகக் கட்டமைப்பில் ஒருங்கிணைக்கத் தவறியதே 2,500 மெகாவாட் நிகர மின்சாரத்தை வாங்க வேண்டிய நிலைக்கு ஆளானதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டினார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி பரந்த அளவில் நிறுவப்பட்டு, சரியாகப் பயன்படுத்தப்படுவதை, மின்கல சேமிப்பகம் கொண்ட விநியோகக் கட்டமைப்பை உறுதிசெய்து, முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு உருவாக முடியும். காலநிலை மீட்சி, காலநிலை மாற்றத் தணிப்பு, கார்பன் உமிழ்வு நீக்கம் ஆகியவை சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனில், கொள்கைகள், நடைமுறைகளைச் செயல்படுத்துவதில் ஒரு முன்னுதாரண மாற்றம் தேவைப்படுகிறது.

- கட்டுரையாளர்கள் இருவரும் உலக ஆதார நிறுவன (WRI) காலநிலை, ஆற்றல் திட்டத்தின் இந்திய இயக்குநர்கள். தமிழில்: ராஜசங்கீதன்

தொடர்புக்கு: nambi.appadurai@wri.org, bharath.jairaj@wri.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon