Last Updated : 27 Apr, 2016 08:54 AM

 

Published : 27 Apr 2016 08:54 AM
Last Updated : 27 Apr 2016 08:54 AM

எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைகள் எங்கே?

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும்



மத்திய -மாநில அரசுகளால் 1990- ம் ஆண்டிலிருந்து அமல்படுத்தப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கைகளால் வேளாண்துறை பெரும் சரிவைச் சந்தித்தது. நெருக்கடியில் சிக்கி மீள முடியாமல், விவசாயிகள் தற்கொலை எனும் மோசமான முடிவினை மேற்கொண்டனர். கொத்துக்கொத்தாக செத்து மடியும் விவசாயிகளை தற்கொலையிலிருந்து விடுவிப்பது முன்னுரிமைத் தேவையாக இருந்தது.

முதல் தேசிய ஆணையம்

இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் 2004-ல் மத்தியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தபோது, குறைந்தபட்ச செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் முக்கியமான ஒன்று, விவசாயிகள் நிலை குறித்து ஆய்வு செய்ய தேசிய அளவிலான விவசாயிகள் ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பது. அதன்படி, 2004 நவம்பர் 18-ம் தேதி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் ‘தேசிய விவசாயிகள் ஆணையம்’ மத்திய அரசால் அமைக்கப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் விவசாயம் குறித்து பல ஆணையங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், விவசாயி களின் நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தேசிய அளவிலான முதல் ஆணையம் இதுதான். விவசாயிகள், விவசாய அமைப்புகளின் தலைவர்கள், வேளாண் நிபுணர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல தரப்பினரிடமும் இந்த ஆணையம் விரிவான கலந்துரையாடலை நடத்தியது. 2006 அக்டோபர் 4-ம் தேதி மத்திய அரசிடம் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.

சிறந்த பரிந்துரைகள்

அந்த அறிக்கையில் விவசாயிகளின் தற்கொலைக் கான காரணங்கள் ஆராயப்பட்டுள்ளன. வேளாண்மைத் துறைக்கான பொது முதலீட்டை அரசு தொடர்ந்து குறைத்தது, இந்திய நாட்டின் விவசாயத்தைப் பாதிக்கும் வகையில் இறக்குமதிக்கு அனுமதி வழங்கியது, வேளாண் விளை பொருட்களை விற்பதற்கான சந்தைக்கு உத்தரவாதமில்லாத நிலை, போதுமான பாசன வசதிகள், மின்சாரம் உள்ளிட்டவற்றை வழங்காதது, கடன் உதவி கிடைக்காமை, இயற்கைச் சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்பு, வேளாண் விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காதது உள்ளிட்டவைதான் தற்கொலைக்கான காரணங்கள் என்று பட்டியலிட்டது அறிக்கை. இந்தப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பல நல்ல பரிந்துரைகளையும் அந்த ஆணையம் வழங்கியது.

அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச விலையை அரசு தீர்மானிக்க வேண்டும். அந்த விலை, உற்பத்தி செலவுக்கு மேல் குறைந்தபட்சம் 50 சதவீதம் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் 4 சதவீத வட்டியில் கடன் வழங்க வேண்டும். அனைத்துப் பயிர்களுக்கும் பொருந்தும் பயிர் காப்பீட்டு திட்டத்தை கிராமத்தை அளவீடாகப் கொண்டு செயல்படுத்த வேண்டும். விவசாய நிலங்கள் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவது தடுக்கப்பட வேண்டும். உச்சவரம்புக்கு மேற்பட்ட நிலங்கள், உபரி நிலங்கள், அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்கள் நிலமற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். விவசாயப் பிரதிநிதிகளும் இடம் பெறும் வகையில் மாநில அளவிலான விவசாயிகள் ஆணையங்கள் வேண்டும். விவசாய மானியம் அதிகரிக்கப்பட வேண்டும் ஆகியவை பரிந்துரைகளில் முக்கியமானவை.

பிரதமர் தரும் ஏமாற்றம்

மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகப்போகிறது. காங்கிரஸ் அரசு அறிக்கையை அமல்படுத்த முயற்சி எடுக்கவில்லை. இதைச் சுட்டிக்காட்டி 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டம் தவறாமல் மோடி பேசினார். பாஜக ஆட்சி அமைத்தால், சுவாமிநாதன் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும். விவசாயத்தில் 50 சதவீதம் லாபம் உத்தரவாதம், விவசாயிகள் தற்கொலை என்பது அறவே தடுக்கப்படும் என்று முழங்கினார்.

ஆட்சிப்பொறுப்பேற்று 21 மாதங்கள் முடிந்துவிட்டது. மோடியும், மத்திய அரசும் கொடுத்த வாக்குறுதியையே மறந்துவிட்டனர். அரசை நம்பிப் பயனில்லை என்று உச்சநீதிமன்றத்தை நாடினார்கள் விவசாயிகள். வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவுக்கு மேல் 50 சதவீதம் விலை தீர்மானிக்க வேண்டுமென்ற சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டுமென்று அந்த மனு கோருகிறது. ‘இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை’ என்று மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்துவிட்டது. அரசின் இந்த பதில் நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் தங்களை ஏமாற்றிவிட்டார் என்றே விவசாயிகள் கருதுகிறார்கள்.

வராத கடன்கள்

கடன் தொல்லை என்பது விவசாயிகளுடன் ஒட்டிப் பிறந்த ஒன்றாக இருக்கிறது. தேசிய மாதிரி கணக்கெடுப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி கடன் கோருகிற விவசாயிகளில் 30 சதவீதம் பேருக்கு மட்டுமே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் கிடைக்கிறது. மீதமுள்ள 70 சதவீத விவசாயிகள் தனியாரிடமும், வியாபாரிகளிடமும் கூடுதல் வட்டிக்குப் கடன் பெறுகிறார்கள்.

இத்தகைய நிலையில் தான், உற்பத்தி இழப்பு, விலையின்மை, அதனால் வாங்கிய கடனை கட்டமுடியாமல் மானம், மரியாதைக்கு பயந்து விவசாயிகள் தற்கொலை என்ற முடிவை எடுக்கிறார்கள். தனியாரிடம் பெற்ற கடனிலிருந்து விவசாயிகளை விடுவிக்கவும், கடன் தள்ளுபடி செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். முதலாளிகள், தொழிலதிபர்கள் பெற்ற கடனை வாராக்கடன் என்று மத்திய அரசு தொடர்ந்து தள்ளுபடி செய்து வரும் நிலையில் விவசாயிகளின் இந்தக் கோரிக்கையில் நியாயமிருக்கிறது.

27 பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் என்று 2012 முதல் 2015 காலகட்டத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது 1 லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய். 2015-ல் மட்டும் 40,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் 2015 டிசம்பர் 31 முடிய சுமார் ரூபாய் 4 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

விவசாயிகளின் கடன்கள்

வாராக்கடன் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கில் ரூபாய் 500 கோடிக்கு மேல் கடன் பெற்றவர்களின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 499 கோடியை கடன் வாங்கி கட்டவில்லையென்றால் பரவாயில்லையா எனத் தெரியவில்லை. 9000 கோடி கடனை வாங்கிக்கொண்டு வெளிநாட்டுக்குப் தப்பியோடிய மல்லையாவை விட்டுவிட்டு, இரண்டு தவணையை மட்டும் செலுத்தாத தஞ்சை விவசாயி பாலனை போலீஸை வைத்துத்தாக்குகிறது நமது காவல்துறை. அரியலூர் மாவட்டம் ஒரத்தூர் விவசாயி அழகர் தற்கொலை உள்ளிட்ட பிரச்சினைகளால், விவசாயிகள் கடன் பிரச்சினை மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது.

முதலாளிகளிடத்தில் தாராளமாக நடந்து கொள்ளும் நிதி நிறுவனங்கள், விவசாயிகளிடத்தில் ஜப்தி, நகை ஏலம் என்று கெடுபிடி செய்கிறார்கள். ஆந்திர மாநில அரசு, விவசாயிகள் பெற்ற கடன் 82000 கோடியை தள்ளுபடி செய்துள்ளது. தெலங்கானா மாநில அரசு ஒவ்வொரு விவசாயிக்கும் ரூபாய்1 லட்சம் தள்ளுபடி என்ற அடிப்படையில் 17300 கோடியைத் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் கூட கடன் தள்ளுபடி செய்ய மாநில அரசு முன்வரவில்லை.

எனவே, விவசாயிகள் நலன் காக்க, தற்கொலை யிலிருந்து விவசாயிகளைத் தடுக்க எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவது அவசியம். கிடப்பிலே போடப்பட்டுள்ள அந்தப் பரிந்துரைகளை, “எது வேண்டுமானாலும் காத்திருக்கலாம். வேளாண்மையைத் தவிர” என்று ஜவாஹர்லால் நேரு குறிப்பிட்டதைப் போல அவசர உணர்வுடன் செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

- பெ.சண்முகம், கட்டுரையாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர். தொடர்புக்கு: pstribal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x