Published : 26 Apr 2016 09:24 AM
Last Updated : 26 Apr 2016 09:24 AM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலைமகள் தெரு. 1980 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று ஒரு இளைஞர் தேசியக் கொடி ஏற்றிவைத்து இனிப்பு வழங்கிக்கொண்டிருந்தார். அவரோடு பெரிய இளைஞர் பட்டாளமே இருந்தது. எதிர்வீட்டிலிருந்து இதனைக் கவனித்துக்கொண்டிருந்தார் ஆர்.எஸ்.எஸ். முழு நேர ஊழியர் சுந்தர லட்சுமணன். உடனே, ஓடோடி வந்து அந்த இளைஞருக்குப் பாராட்டு தெரிவித்தார்.
ஓராண்டு தொடர் முயற்சிக்குப் பிறகு, அந்த இளைஞரையும் அவருடைய நண்பர்களையும் கொண்டு நாகர்கோவில் சேது லட்சுமிபாய் தொடக்கப் பள்ளியில் ‘வீர சிவாஜி’ பெயரில் புதிய ஷாகாவை (ஆர்.எஸ்.எஸ். தினசரி பயிற்சி வகுப்பு) தொடங்கினார். அந்த இளைஞர்தான் மத்திய கப்பல், நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
காங்கிரஸ் குடும்பத்திலிருந்து..
கன்னியாகுமரி மாவட்டம் அளந்தங்கரை கிராமத்தில் 1952 மார்ச் 1-ல் பிறந்தார் ராதாகிருஷ்ணன். தந்தை பொன்னையா அய்யப்பன். தாயார் தங்ககனி. காமராஜருக்கு நெருக்கமான பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராதாகிருஷ்ணன், விருதுநகரில் பி.ஏ. பட்டப்படிப்பையும், சென்னை அரசு சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டத்தையும் பெற்றார்.
காமராஜரின் மறைவுக்குப் பிறகு, ஜனதா கட்சியில் அவரது குடும்பத்தில் சிலர் இணைந்தனர். ஆனால், ராதாகிருஷ்ணனின் அண்ணன் ராமகிருஷ்ணன் ஜனசங்கத்தில் இணைந்து மாவட்டத் தலைவராகப் பொறுப்பேற்றார். நெருக்கடி நிலைக்குப் பிறகு, 1977-ல் நடந்த தேர்தலில் ராதாகிருஷ்ணனின் சித்தப்பா ஆதிசுவாமி நாடார் ஜனதா கட்சி சார்பில் குளச்சல் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ராதாகிருஷ்ணனையும் அரசியல் விட்டுவைக்கவில்லை. 1981-ல் ஆர்.எஸ்.எஸ். ஷாகாவுக்கு வந்த அவர், பின்னர் அதன் செயலாளர் ஆனார். தினசரி 150 பேர் அந்த ஷாகாவுக்கு வரத் தொடங்கினர். இதே ஆண்டில் இந்து ஒற்றுமை மாநாடு நாகர்கோவிலில் நடந்தது. இந்த மாநாட்டுக்குப் பிறகு விசுவ இந்து பரிஷத் மாவட்டத் தலைவராக ராதாகிருஷ்ணனின் தந்தை பொன்னையா அய்யப்பன் தேர்வு செய்யப்பட்டார். ஆர்.எஸ்.எஸ். முழு நேர ஊழியர்களின் தொடர் முயற்சியால் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம் அப்படியே காவிக் குடும்பமாக மாறியது.
1982-ல் நடந்த மண்டைக்காடு கலவரம் கன்னியாகுமரி மாவட்டத்தையே உலுக்கியது. இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு சமைக்க வீடு வீடாகச் சென்று அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேகரித்தார் ராதாகிருஷ்ணன். செல்வந்தர் குடும்பத்து இளைஞன் தெருவில் இறங்கி அரிசி, பருப்பு சேகரிப்பதைக் கண்டு வியந்த ஆயிரக்கணக்கானோர் அவருடன் இணைந்தனர். இந்தச் சம்பவம் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கையை மட்டுமல்ல, கன்னியாகுமரி மாவட்ட அரசியலையும் மாற்றியமைத்தது.
இந்து முன்னணியின் வளர்ச்சி
1980-ல் தொடங்கப்பட்ட இந்து முன்னணி கன்னியாகுமரி மாவட்டத்தில் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியதும் இதே காலகட்டத்தில் தான். ஒரு முறை நாகர்கோவிலில் இந்து முன்னணி நிறுவனர் இராம கோபாலனின் பேச்சால் கவரப்பட்ட ராதாகிருஷ் ணன், இந்து முன்னணியில் இணைந்தார். இராம.கோபாலனின் உதவியாளராகச் சுமார் ஓராண்டு காலம் அவரோடு தமிழகம் முழுவதும் பயணம் செய்தார். இருவரும் ரயில், பேருந்துகளில் மட்டுமே சுற்றுப் பயணம் செய்தனர். இயக்கத் தொண்டர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் மட்டுமே சாப்பிட்டனர்.
இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளராகப் பொறுப்பேற்ற அவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் 80 சதவீத கிராமங்களில் இந்து முன்னணி கிளையைத் தொடங்கினார்.
பாஜகவில்..
அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து பாஜக மாநில அமைப்புச் செயலாளராகப் பொறுப்பேற்ற இல.கணேசன், ராதாகிருஷ்ணனை பாஜகவில் சேர்க்க முயற்சி மேற்கொண்டார். 1991 தேர்தலில் முதல்முறையாக நாகர்கோவில் மக்களவைத் தேர்தலில் களமிறங்கினார் ராதாகிருஷ்ணன். அப்போது இந்து முன்னணியில் இருந்தாலும் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு, 1 லட்சத்து 2 ஆயிரத்து 29 வாக்குகளைப் பெற்றார். 1989-ல் நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி 39 ஆயிரத்து 164 வாக்குகளைப் பெற்றிருந்தார். ராதாகிருஷ்ணனின் உழைப்பால் இரண்டே ஆண்டுகளில் 3 மடங்கு அதிக வாக்குகளை பாஜக பெற்றது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே முறைப்படி பாஜகவில் இணைந்த அவர், இடதுசாரிகள், காங்கிரஸின் கோட்டையாக இருந்த கன்னியாகுமரியில் பாஜகவை முக்கியக் கட்சியாக வளர்த்தெடுத்தார்.
நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் வென்றே தீர வேண்டும் என்ற லட்சியத்துடன் சளைக்காமல் தேர்தலில் போட்டியிட்டார். 1996-ல் 1 லட்சத்து 69 ஆயிரத்து 885 வாக்குகளைப் பெற்றார். 1998 அதிமுக கூட்டணியில் மிகக் குறைந்த வாக்குகளில் வெற்றிவாய்ப்பை இழந்தார்.
முதல் வெற்றி..
1999 தேர்தலில் திமுக கூட்டணியில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 319 வாக்குகளைப் பெற்று முதல் முறையாக நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். இமயம் முதல் குமரி வரை என பாஜக தலைவர்கள் அடிக்கடி சொல்வது உண்டு. காஷ்மீரில்கூட வென்ற பாஜகவால் குமரியில் வெல்ல முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. இதனால் குமரியில் வென்ற ராதாகிருஷ்ணனுக்கு ராஜமரியாதை காத்திருந்தது. வாஜ்பாயும் அத்வானியும் அவரைக் கட்டியணைத்துப் பாராட்டினர். அதன் பலனாகவே மத்திய அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் மறைவைத் தொடர்ந்து, மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார் ராதாகிருஷ்ணன். அப்போது மத்திய அமைச்சர் பதவிக்குத் தமிழகத்திலிருந்து வேறு சிலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டபோதும் ராதாகிருஷ்ணனையே தேர்வு செய்தார் வாஜ்பாய். 2004 வரை இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலை, சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார்.
2004, 2009 தேர்தல் தோல்விக்குப் பிறகு, பாஜக மிக மோசமான நிலையை அடைந்தது. பல முக்கிய நிர்வாகிகள் கட்சிப் பணியிலிருந்து ஒதுங்கினர். மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உதறிவிட்டு, காங்கிரஸில் இணைந்தார் திருநாவுக்கரசர். இப்படியான சூழலில் 2009-ல் தமிழக பாஜக தலைவராக ராதாகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டார்.
கட்சியை வளர்த்தவர்..
பாஜக அமைப்பு ரீதியாக உள்ள 42 மாவட்டங்களுக்கும் மாவட்டத் தலைவர்களைக்கூட நியமிக்க முடியாத நிலை இருந்தது. இந்த 3 ஆண்டுகளில் கிராமம் கிராமமாக அவர் சுற்றுப் பயணம் செய்து கட்சி அமைப்பை மெல்ல மெல்ல உருவாக்கினார். 2012-ல் மதுரையில் தாமரை சங்கமம் என்ற பெயரில் அவர் நடத்திய மாநில மாநாட்டில் ஒன்றரை லட்சம் பேர் திரண்டனர்.
கட்சிப் பொறுப்பு வேண்டாம் என ஒதுங்கியவர்கள் அதன் பிறகு கட்சிப் பதவிகளுக்குப் போட்டி போட ஆரம்பித்தனர். அந்த அளவுக்கு 3 ஆண்டுகளில் தனது உழைப்பால் நிலைமையை மாற்றினார். இதனால் 2012 டிசம்பரில் 2-வது முறையாக மாநிலத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார்.
2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக இணைந்தன. இந்தக் கூட்டணி அமைந்ததில் அவருக்குப் பெரும்பங்கு உண்டு. அதன் பலனாக கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்று 2-வது முறையாக மத்திய அமைச்சராகியுள்ளார். கட்சி மீது கொண்டிருக்கும் ஈடுபாட்டால் திருமணமே செய்துகொள்ளவில்லை ராதாகிருஷ்ணன். தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் ஒருவரையாவது அவருக்குத் தெரிந்திருக்கும். அதுதான் அவரது பலம்!
தொடர்புக்கு: saravanan.mu@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT