Published : 31 Mar 2022 06:27 AM
Last Updated : 31 Mar 2022 06:27 AM

நரசிங்கன்பேட்டை நாகசுரம்: பெருமைமிகு கலைப் பாரம்பரியம்!

சுவாமிமலை சரவணன்,

அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களில் புவிசார் குறியீடு என்பது பாரம்பரியமான நுண்கலை அறிவைத் தனிச்சிறப்பானதாக ஏற்றுக்கொள்ளும் ஒரு சர்வதேச அங்கீகாரம். இதற்கு முன்பு காவிரிக் கரையிலிருந்து சுவாமிமலை உளியின் ஓசையும், திருபுவனத்தின் தறி ஓசையும், நாச்சியார்கோவில் விளக்குகளின் ஒளியும், தஞ்சாவூரின் தலையாட்டி பொம்மைகளும் இன்னும் நெட்டிவேலை, ஓவியம், வீணை, கண்ணாடி வேலைப்பாடுகளும் அடுக்கடுக்காக இம்மண்ணின் அடையாளங்களாக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இப்போது அந்தப் பெருமை நரசிங்கன்பேட்டையின் நாகசுர ஓசைக்கும் கிடைத்திருக்கிறது.

பல ஆண்டுகளாகப் பேசப்பட்டுவந்த கோரிக்கைகளில் ஒன்றுதான் இது. பாரம்பரிய இசைக் கருவிகளை உருவாக்குவதில் தனித்திறமை வாய்ந்த இந்தக் கலைஞர்கள், இதே வேலையை வெளிநாடுகளில் செய்துவந்திருந்தால் எப்படியெல்லாம் பெயரும் புகழும் பெற்றவர்களாக இருந்திருப்பார்கள் என்ற அங்கலாய்ப்புக்குப் புவிசார் குறியீடு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. ஆனாலும், இசையுலகின் விற்பன்னர்கள் நரசிங்கன்பேட்டை நாகசுரத்தைக் காலம்காலமாய்ப் போற்றிவந்திருக்கிறார்கள்.

நாகசுரம் என்ற பெயர் 17-ம் நூற்றாண்டிலிருந்துதான் நமக்குக் காணக் கிடைக்கிறது. மரத்தால் செய்யப்படும் இந்தக் கருவியில் மூன்று பகுதிகள் உள்ளன. ஸ்வரங்கள் வாசிக்க வேண்டிய துளைகளுடன் கூடிய உடற்பகுதியை ‘உலவு’ என்று அழைப்பார்கள். இது ஆச்சா மரத்தால் செய்யப்படுவது. நல்ல நாகசுரத்துக்குப் பழமையான மரமே தேவைப்படுகிறது. இந்தப் பழமையான மரத்தை வெட்டி எடுப்பதில்லை.

பழமையான வீடுகளின் கட்டுமானத்தில் ஆச்சா மரம் பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த வீடுகளில் உள்ள கதவுகள், தூண்கள், உத்திரங்கள் என எல்லாமே ஆச்சா மரத்தில்தான் இருக்குமாம். இது போன்ற 75 ஆண்டுகளுக்கு மேலான மரங்களைக் கொண்டே நாகசுரம் செய்யப்படுகிறது. உலவின் ஒரு முனையில் கூம்பு வடிவிலான ‘அனசு’ ரோஸ்வுட் மரத்திலும், மற்றொரு முனையில் கெண்டையின் துணைகொண்டு ஊதுவதற்கான ‘சீவாளி’யும் இணைக்கப்படும்.

நாகசுரத்தை முதலில் யார் வடிவமைத்திருப்பார்கள் என்ற கேள்விக்குப் பதில் இல்லை. ஆனாலும், அந்தப் பாரம்பரியத் தொடர்ச்சி அறுபட்டுவிடாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 70, 80 வயதைக் கடந்த நாகசுரச் சிற்பிகளும் தங்களது அடுத்த தலைமுறை செய்யக்கூடிய நாகசுரங்களை வாங்கிப் பார்த்து, அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் சொல்லத் தவறுவதில்லை. அதையும் தாண்டி, சிற்பிகள் தாங்கள் செய்த நாகசுரங்களைக் கலைஞர்களை வாசிக்கவைத்து மத்திமம், காந்தாரம் எல்லாம் சரியாகப் பேசுகிறதா என்றும், கலைஞர்களுடைய பக்குவத்துக்கு ஏற்றவாறு இருக்கிறதா என்றும் கேட்டறிந்துகொண்ட பிறகுதான் தருகிறார்கள்.

மத்திம சுருதி நாகசுரம் செய்யப்படுவதற்கு முன்பு, 3, 3-1/2, 4, 4 -1/2, 5, 5 -1/2 கட்டை நாகசுரங்கள் செய்த காலத்தில் வாசிக்கும் கலைஞர்களையே அருகில் உட்கார வைத்து, அந்த சுருதியில் உள்ள ஒத்தை வாசிக்கவைத்து, சரிசெய்து கொடுத்தனர். இன்றும்கூட, நாகசுரக் கலைஞர்கள் தங்களது பக்குவத்துக்கு ஏற்றவாறு செய்யக்கூடிய நாகசுரச் சிற்பியைத் தேர்ந்தெடுத்தே கருவியை வாங்குகிறார்கள்.

நரசிங்கன்பேட்டை நாகசுரச் சிற்பிகளின் பாரம்பரியம் என்பது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருவது. நாகசுரச் சிற்பி ரெங்கநாத ஆசாரியின் குடும்பம், ஐந்தாவது தலைமுறையாக இன்றும் நாகசுரம் செய்துவருகிறது. கோவிந்தஸ்வாமி, நாராயணஸ்வாமி, ரெங்கநாதன், செல்வராஜ், தற்போது சதீஷ் - பிரகாஷ் சகோதரர்கள் ஆகியோர் அந்தப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள். அதுபோல சக்திவேல் ஆசாரியின் பாரம்பரியத்தில் நாராயணஸ்வாமி, லக்ஷ்மண ஆசாரி, கந்தஸ்வாமி, சக்திவேல், செந்தில்குமார், சபரி ஆகியோர் அதைத் தொடர்கின்றனர். கண்ணன் ஆசாரியின் பாரம்பரியத்தில் லக்ஷ்மண ஆசாரி, சிங்காரவேலு, கண்ணன், மணிகண்டன், அர்ஜுன் ஆகியோரும் குணா ஆசாரியின் பாரம்பரியத்தில் குருஸ்வாமி, பழநிஸ்வாமி, சுந்தர்ராஜ், குணா என இன்னும் பலரும் தொடர்கின்றனர்.

நாகசுரக் கருவியில் இருந்து வரும் ஓசையின் அளவை (2 கட்டை, 2 1/2 கட்டை என) சரிபார்த்துத் திருத்தங்கள் செய்யத் தெரிந்த இந்தச் சிற்பிகளுக்கு, நாகசுரத்தில் வாசிக்கப்படும் ராகங்களைப் பற்றி அவ்வளவு நுட்பமாகத் தெரியாது என்பது இன்னும் ஓர் ஆச்சரியம். ஆனால், நாகசுரத்தை வாசித்துப் பார்க்கும் கலைஞர்களின் சிரமத்தையும், மாறிவரும் ஸ்ருதியின் அளவையும் சரியாகக் கணிப்பதில் இவர்கள் வல்லவர்கள்.

நாகசுரச் சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்னம் பிள்ளையின் ஆறரை நிமிடங்கள் மட்டுமே கொண்ட தோடி ராக ஒலிப்பதிவை எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புது அனுபவம்தான். தனக்குச் சாதகமான சங்கதிகளை எந்த இடையூறும் இல்லாமல் வாசிப்பதற்கு இசைக் கலைஞரின் மனநிலையோடு சீவாளியின் தன்மையும் அக்கருவியைச் செய்த கலைஞரின் உழைப்பும்கூடப் பின்னணிக் காரணங்களாக இருக்கின்றன என்று சொல்லலாம். பாரதியின் கவிதை வரிகள்தான் நினைவுக்குவருகின்றன. ‘பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான். குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா? பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா? அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது.’ இப்படி ஒரு நெருக்கமான பந்தம், நாகசுரக் கலைஞருக்கும் அதை உருவாக்கிய சிற்பிக்கும் இருக்கிறது.

பல தலைமுறைகளைக் கடந்தும் நமது இசைப் பாரம்பரியத்தைக் காத்துவரும் நாகசுரச் சிற்பிகளுக்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கலாம். ஆனால், அரசு அங்கீகாரங்கள் எதுவும் அவர்களை இதுவரை எட்டிப்பார்க்கவே இல்லை. இசைக் கலைஞர்களைப் போல, இசைக் கருவிகளை உருவாக்கும் அவர்களுக்கும் கலைமாமணி போன்ற விருதுகளும், கலைஞர்களுக்கான ஓய்வூதியங்களும் வழங்கப்பட வேண்டும். இது அவர்களுக்குச் செய்யும் உபகாரம் மட்டுமல்ல, தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவிகளை இன்னும் பல தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்வதற்கான முயற்சியாகவும் அமையும்.

- சுவாமிமலை சரவணன், தொடர்புக்கு: saravanswa@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x