Published : 27 Mar 2022 11:10 AM
Last Updated : 27 Mar 2022 11:10 AM
எஸ்.வி.ஆர். என்று அழைக்கப்படும்எஸ்.வி.ராஜதுரைக்கு இப்போது வயது 82. ஒரு கண்ணில் பார்வை முழுவதுமாகப் போய்விட்டது. மற்றொரு கண்ணில் அரைப் பார்வைதான். இதற்கிடையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது மூன்று புதிய புத்தகங்கள் – யானிஸ் வருஃபாகிஸின் ‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ (மொழிபெயர்ப்பு), ‘ஸரமாகோ: நாவல்களின் பயணம்’, ‘இரத்தம் கொதிக்கும் போது’ (மொழிபெயர்ப்பு) வந்துள்ளன. மார்க்ஸியம், பெரியாரியம், தலித்தியம் சார்ந்த நூல்களாலும் மனித உரிமைச் செயல்பாடுகளாலும் அறியப்படும் எஸ்.வி.ஆர், தமிழின் முக்கியமான அறிவாளுமைகளில் ஒருவர். இதுவரையில், மொழிபெயர்ப்பு நூல்கள் உட்பட 80 நூல்கள் அவரது பங்களிப்பில் அடங்கும். அவருடன் உரையாடியதிலிருந்து…
நோபல் பரிசு பெற்ற ஸரமாகோவின் 18 நாவல்களையும் பற்றி விரிவாக, தமிழில் ஒரு முன்னோடி முயற்சியாக ஒரு புத்தகம். மோசமான உடல்நிலைக்கு இடையில் இது எப்படிச் சாத்தியமானது?
நான் முதலில் படித்த ஸரமாகோவின் நாவல் ‘குகை’ (The Cave). 2004-ல் வாசித்து வியந்துபோனேன். ஒரு குயவரைக் கதைத் தலைவராகக் கொண்டு அரசியல், சமூகவியல், தத்துவம் என பல தளங்களில் இயங்கும் நாவல் அது. பிறகு அவரது நாவல்களை வரிசையாகப் படிக்கத் தொடங்கினேன். போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சியில் இறுதிநாள் வரை உறுப்பினராக இருந்துகொண்டு, அதே வேளையில் கம்யூனிஸத்தின் பெயரால் இழைக்கப்பட்ட கொடுங்குற்றங்களைக் கண்டனம் செய்துவந்த அவரது அறம், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வழக்கமான ‘சோசலிச யதார்த்தவாத’ சூத்திரங்களுக்குக் கட்டுப்படாத அவரது படைப்புச் சுதந்திரம், உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக ஓயாது ஒலித்துவந்த அவரது குரல், கடைசிவரை உறுதி குலையாதிருந்த அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு ஆகியனவும் என்னை ஈர்த்தன. அவரது நாவல்கள் சிலவற்றைப் பற்றி ‘உயிர் எழுத்து’ இதழில் எழுதிவந்தேன். அப்போதிருந்தே பல வாசகர்கள் ஸரமாகோவின் எல்லா நாவல்களையும் பற்றிய விரிவான நூலை எழுதலாமே என்று கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், நோயின் கடுமையால் என் உடலும் மனமும் சோர்ந்திருந்தன. எனினும் மார்க்ஸ், கிராம்ஷி, காந்தி, அம்பேத்கர், பெரியார் அனுபவிக்காத உடல் உபாதைகளையும் கொடுமைகளையுமா நான் அனுபவித்துவிட்டேன் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டு, சென்ற ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் ஸரமாகோவின் நாவல்களை மறுவாசிப்பு செய்தும், அவரது வாழ்க்கை வரலாறு, நேர்காணல்கள் முதலியவற்றைப் படித்தும் என்னை முற்றிலும் கைவிடாத நினைவாற்றலின் துணையுடன் நாளொன்றுக்கு 12 மணிநேரம் செலவிட்டு மூன்று மாதங்களில் கணினியில் எழுத்துகளைப் பெரிதாக்கித் தட்டச்சுசெய்து இந்தப் புத்தகத்தை முடித்தேன்.
அரசியலும் இலக்கியமும் கலந்தது உங்கள் வாழ்வு. எப்போது வாசிப்புக்குள் நுழைந்தீர்கள்?
13 வயதிலே எனக்கு இலக்கியத்தின் மீதும் அரசியல் மீதும் ஆர்வம் வந்துவிட்டது. என் குடும்பச் சூழலும் என் ஊர்ச் சூழலும் அதற்கு ஒரு முக்கியக் காரணம். என் தந்தை ஒரு காந்தியவாதி என்பதால் எங்கள் வீட்டில் அரசியல் உரையாடல் என்பது அன்றாடமானது. என்னுடைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு வாசிப்பு பழக்கம் அப்போது இயல்பானதாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம், காமராஜர் ஆட்சிக் காலத்தில் நூலகங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அப்போது நூலகங்களில் இருந்த சிறந்த இலக்கிய நூல்கள் எனக்குப் புதிய கதவுகளைத் திறந்துவிட்டன.
பதின்ம வயதில் திராவிட இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தேன். திராவிட இதழ்கள்தான் என்னை அரசியல் வாசிப்பு நோக்கி இழுத்துவந்தன. பெரியார், அறிஞர் அண்ணா நடத்திய பத்திரிகைகளைத் தேடித் தேடி வாசிப்பேன். மார்க்ஸ், எங்கல்ஸ், வோல்தேர், பெர்னாட்ஷா, இங்கர்சால், எமிலி ஜோலா இவர்களையெல்லாம் பற்றி நான் கம்யூனிஸ்ட் பத்திரிகைகள் வழியாக அல்ல, திராவிடப் பத்திரிகைகள் வழியாகவே முதன்முதலாக அறிந்துகொண்டேன். என் தந்தை என் 16-ம் வயதில் காலமான பிறகு பொருளாதார நெருக்கடி காரணமாக என்னால் கல்லூரிப் படிப்பை முடிக்க முடியவில்லை. எனினும், பள்ளிப் படிப்பின் அடிப்படையில் 19 வயதில் ஊட்டியில் எனக்கு அரசு வேலை கிடைத்தது. நீலகிரி மாவட்டப் பொது நூலகமும், நீலகிரி லைப்ரரி என்ற தனியார் நூலகமும் பம்பாயிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘இம்ப்ரிண்ட்’ ஏடும் எனக்குப் பெரும் திறப்புகளாக அமைந்தன.
திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட நீங்கள் எப்போது, ஏன் மார்க்ஸியம் நோக்கி நகர்ந்தீர்கள்? உங்கள் மார்க்ஸியப் பார்வைக்கு அடித்தளம் எங்கு நிகழ்ந்தது?
திராவிட இயக்க ஏடுகள் வழியாக மார்க்ஸியம், கம்யூனிசம் என்பன பெயரளவில் அறிமுகமாகியிருந்தன. 21-ம் வயதில் காசநோய் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்தபோது சக நோயாளிகளில் பெரும்பாலானோர் கோவை நகர ஆலைத் தொழிலாளிகள். அவர்களிடமிருந்து தொழிற்சங்கப் போராட்டம், கம்யூனிஸ்ட் அரசியல் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டேன். கோவையில் வழக்குரைஞர்களாக இருந்த என் உறவினரொருவரும் அவரது நண்பரும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள். அவர்கள் வழியாக உலக கம்யூனிஸ்ட் இயக்கம், சீன, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே இருந்த வேறுபாடு முதலியவற்றைத் தெரிந்துகொண்டேன். 1965-ல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சில மாணவர்களுடன் எனக்கிருந்த தொடர்பால் என் அலுவலகத்தில் என்னைப் பதவியிறக்கம் செய்துவிட்டார்கள். கோபத்தில் ராஜினாமா செய்துவிட்டேன். ஆனால், அவர்கள் என்னுடைய ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவே இல்லை. எனினும், நான் அங்கு வேலைக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டேன். பொள்ளாச்சியில் உர நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போதுதான் நான் சிபிஎம் கட்சியில் உறுப்பினராக இணைந்துகொண்டேன்.
பொள்ளாச்சி நகர கமிட்டியின் செயலாளர் சி.ப.வேலுசாமி இலக்கியத்தில் நல்ல ஆர்வமுடையவர். அவரும் நானும் சேர்ந்து ஏராளமான தமிழ் நூல்களையும் இதழ்களையும் வாசிப்போம். அப்போது எங்களுக்கு ‘தாமரை’ இதழ் ஒரு கொடையாக அமைந்தது. அந்த சமயத்தில்தான் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்தின் அறிமுகமும் கிடைத்தது . அவர் வீட்டில்தான் மணிக்கணக்கில் இலக்கிய விவாதங்கள் நடக்கும். 1966-ல் கலை இலக்கியப் பெருமன்ற மாநாடு நடைபெற்றது. அங்கு எனக்குக் கிடைத்த மாபெரும் அறிவுக் கருவூலகம் ஆர்.கே.கண்ணன். 1965-களில் கோவையில் ‘சிந்தனை மன்றம்’ என்ற அமைப்பு நடத்திவந்த மாதாந்திரக் கூட்டங்களின் வழியாக எஸ்.என். நாகராஜன், கோவை ஞானி போன்ற முக்கியமான ஆளுமைகளின் அறிமுகம் கிடைத்தது. நாகராஜன்தான் மார்க்ஸியத்தின் பல பரிமாணங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர். பின்னர் ஞானியும் நானும் சோவியத் புத்தகங்களோடு அமெரிக்க, பிரிட்டிஷ், பெண்ணிய மார்க்ஸிய அறிஞர்களின் நூல்களையும் படித்து எங்கள் மார்க்ஸிய அறிவை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினோம்.
1980, 1990 காலகட்டத்தை, எழுத்து சார்ந்தும் மனித உரிமைச் செயல்பாடுகள் சார்ந்தும் நீங்கள் தீவிரமாகச் செயல்பட்ட காலகட்டமாகச் சொல்லலாம். அதே காலகட்டத்தில்தான் அந்நிய நிதி பெற்றுச் செயல்பட்டுவரும் ‘ஏகாபத்திய ஏஜெண்ட்’ என்று உங்கள்மீது குற்றச்சாட்டப்பட்டது. இன்று வரை தொடரும் குற்றச்சாட்டின் பின்புலம் என்ன? அந்த 20 ஆண்டுகால உங்கள் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?
உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவு ஏற்படத் தொடங்கியதையடுத்து 1967-ல் நானும் சிபிஎம்-லிருந்து விலகி, மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் (எம்எல்) இயக்கத்துக்கு முன்னோடியாக இருந்த அமைப்புகளில் சேர்ந்தேன். சாரு மஜூம்தாரின் தலைமையில் மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் ஒரு கட்சியாக உருவானபோது, மஜும்தாரின் அழித்தொழிப்புக் கொள்கையில் எனக்குத் துளியும் உடன்பாடு இல்லை. அவரிடமே அது பற்றி விவாதித்திருக்கிறேன்.
நான் அந்த அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்ட மூன்று ஆண்டுகளில் (1967-1970) கசப்புகளும் ஏமாற்றங்களும் எனக்கு ஏற்பட்டன. இந்தச் சூழலில், நான் சம்பந்தப்படாத ஒரு வழக்குக்காக என்னைக் காவல்துறை தேடியது. நற்பெயரால் அந்த வழக்கிலிருந்து நான் தப்பித்தேன். எனினும், ‘கியூ’ பிரிவினர் என்னைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந்தனர். இந்தக் காலகட்டத்தில் என்னுடைய இலக்கிய வாழ்க்கையில் புதிய நட்பு வட்டத்துக்குள் நுழைந்திருந்தேன். 1971-ல் ‘கசடதபற’ இதழ் மூலம் க்ரியா ராமகிருஷ்ணன் எனக்கு அறிமுகமானர். அவர் என் வாழ்வில் மிக முக்கியமானவர். அப்போது தொடங்கிய எங்கள் நட்பு, 2020-ல் அவர் கரோனாவால் இறக்கும் வரையில் தொடர்ந்தது. அவர் வழியாகத்தான் சி.முத்துசாமி, பரிக்ஷா ஞாநி, அம்பை, சி.சு.செல்லப்பா, சிட்டி, கி.அ. சச்சிதானாந்தம், சி.மோகன், வெ.ஸ்ரீராம், ஓவியர்கள் ஆதிமூலம், ட்ராட்ஸ்கி மருது ஆகியோர் அறிமுகமானார்கள். இவர்கள் என் வாழ்வில் முக்கியமானவர்கள். க்ரியா ராமகிருஷ்ணன் என்னை சென்னைக்கு வந்து குடியேறச் சொல்லிக்கொண்டிருந்தார். அவரது முயற்சியால்தான் ஐராவதம் மகாதேவன் 1980-ல் சென்னையில் பொதுத்துறை நிறுவனமொன்றில் என்னை வேலையில் அமர்த்தினார். என் மனைவியுடன் சென்னைக்குக் குடிபுகுந்தேன். ஆனால், ராமகிருஷ்ணனின் எதிர்பார்ப்புக்கு மாறாக மீண்டும் எம்எல் இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அதில் மனித உரிமை, கலாச்சாரப் பணிகளில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டேன். அதன் பொருட்டு, அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றேன்.
காவல் துறையின் ஒடுக்குமுறைகள் தீவிரமாக இருந்த அந்தத் தருணத்தில் என் பாதுகாப்பு கருதி, டெல்லியில் உள்ள சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையத்தின் (சிஎஸ்டிஎஸ்) ‘லோகாயன்’ (மக்களின் உரையாடல்) என்ற திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகச் செயல்படும் வாய்ப்பை மனித உரிமைப் போராளி கிளாட் ஆல்வாரெஸ் ஏற்படுத்தித் தந்தார். அப்போது ‘மக்கள் யுத்தம்’ குழுவுக்கு நெருக்கமாக இருந்த பேராசிரியர் சுப்பா ராவ், அதில் சேர ஒப்புதல் அளித்தார். ரஜ்னி கோத்தாரியால் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் ஒன்றிய அரசின் நிதி உதவியிலும், சில வெளிநாட்டு நிறுவனங்களின் நிதி உதவியிலும் இயங்கிவந்தது/ வருகிறது. அதில் ஆஷிஸ் நந்தி, திருபாய் சேத் உட்பட பல இந்திய அறிவுஜீவிகள் உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்களுடன் சரிக்குச் சமமாக அமர்ந்து வாதிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது என் வாழ்வில் பெரும் திறப்பு.
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அதிலிருந்து விலகி பி.யு.சி.எல். அமைப்பில் மனித உரிமை சார்ந்து களச் செயல்பாடுகளில் பங்கேற்றுவந்தேன். அந்தச் சமயத்தில்தான் என்னை அந்நிய நிதி பெறுபவன் என்றும் ‘ஏகாதிபத்திய ஏஜெண்ட்’ என்றும் என்னையும், என் குடும்பத்தையும் நன்கறிந்தவர்களே கிளப்பிய அவதூறு இன்றுவரை மறுசுழற்சி செய்யப்பட்டு என்னையோ என் பணிகளையோ சிறிதும் அறிந்திராதவர்களால் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கிறது. அந்தக் குற்றச்சாட்டைத் தன்மீதும் சுமத்திவிடுவார்களோ என்று அஞ்சிய மா-லெ இயக்கத் தமிழகத் தலைவர் தனது பிம்பத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக என்னைப் பலிகொடுக்க முடிவுசெய்தபோது எனக்கும் அந்த இயக்கத்துக்குமான இறுதியான முறிவு 1984-ல் நிரந்தரமாக ஏற்பட்டது.
அதன் பிறகு உங்கள் செயல்பாடுகள் எத்திசையில் இருந்தன?
சில காலம் செயலற்று இருந்த பிறகு, க்ரியா ராமகிருஷ்ணன், திலீப் குமார் ஆதரவோடு 1986-ல் ‘இனி’ இதழைத் தொடங்கினேன். உயர்தரமான அச்சில் ‘இனி’ வெளிவந்தது. அப்போதே 4,000 பிரதிகள் அச்சடித்தோம். ஆனால், முகவர்கள் சிலரின் மோசடியால் அந்த இதழைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. அதனால் ஏற்பட்ட பண இழப்பை ராமகிருஷ்ணனின் நண்பர் ஒருவரும் சுந்தர ராமசாமியும் பெருமளவுக்கு ஈடுசெய்தனர். அதன் பிறகு மனித உரிமைச் செயல்பாடுகள், அரசியல் கைதிகளின் விடுதலை இயக்கம், மரண தண்டனை ஒழிப்பு இயக்கம் என நீதிநாயகங்கள் ராஜேந்திர சச்சார், ஹோஸ்பெட் சுரேஷ், வி.ஆர்.கிருஷ்ண ஐயர், கே.பாலகோபால், கே.ஜி.கண்ணபிரான் ஆகியோருடன் இணைந்தும் அவர்கள் வழிகாட்டுதலின்படியும் ஓயாது உழைத்துவந்தேன். அந்தக் களச் செயல்பாடுகள் 2002 வரையில் தொடர்ந்தன.
1988-ல் வ.கீதாவின் அறிமுகம் கிடைத்தது. சாதாரண நடுத்தர வகுப்புப் பெண் கீதா, தன் அறிவுத்திறனால் உதவித்தொகை பெற்று அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு அங்கேயே தங்கிவிடாமல் தாயகம் திரும்பிவந்தார். அடக்க மிகுதியோடும் செறிவொடும் அவர் பேசியவை என்னை மிகவும் கவர்ந்தன. அவர் என்னைவிட 28 வயது இளையவர். என் வாழ்வில் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த, அறிவாழமிக்க தோழமை கிடைத்துவிட்டதாகக் கருதினேன். இன்றுவரை அவரை என் ஆசான்களில் ஒருவராகவே கருதிவருகிறேன். 1990-ம் ஆண்டு முதல் சாதி ஒழிப்பு இயக்கங்களின்மீது நாட்டம் ஏற்பட்டது. நானும் வ.கீதாவும் அயோத்திதாசப் பண்டிதரைப் படித்தோம். பின்னர் பெரியார்மீது எங்கள் ஆர்வமும் ஆய்வும் தொடங்கின. அம்பேத்கரை ஆழமாகக் கற்கத் தொடங்கினோம். ஆனால், அம்பேத்கர் பற்றிய ஆய்வை முழுமையாகச் செய்து முடிக்க வ.கீதாவுக்கு மட்டுமே நேராமும் ஆற்றலும் அறிவும் இருந்தன.
2002-ல் எனக்கும் என் மனைவிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் நாங்கள் சென்னையிலிருந்து மனைவியின் சொந்த ஊரான கோத்தகிரிக்குக் குடிபெயர்ந்தோம். 2007, 2008-ல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையத் தலைவராக இருந்தேன். அப்போதும் தொடர்ச்சியாக எழுதிவந்தேன். 2014-ல் என் வாழ்நாள் கனவுப் புத்தகமான ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யை மொழிபெயர்த்து முடித்தேன். கடந்த பத்தாண்டுகளாக என் உடல்நலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், இன்று வரை என் எழுத்துச் செயல்பாடு தொடர்கிறது. அதுதான் எனக்கு உத்வேகம் அளிப்பதாகவும் இருக்கிறது!
- தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in
எஸ்.வி.ராஜதுரையின் சமீபத்திய நூல்கள்:
ஸரமாகோ:
நாவல்களின் பயணம், எஸ்.வி.ராஜதுரை,
விலை: ரூ.550
ரஷியப் புரட்சி:
இலக்கிய சாட்சியம்,
(விரிவாக்கிய மறுபதிப்பு)
எஸ்.வி.ராஜதுரை,
விலை: ரூ.550
மேற்கண்ட இரண்டு நூல்களையும்
வெளியிட்டவர்கள்:
எதிர் வெளியீடு, பொள்ளாச்சி-642002
தொடர்புக்கு: 9942511302
இரத்தம் கொதிக்கும் போது,
(மொழிபெயர்ப்புக் கவிதைகள்)
தமிழில்: எஸ்.வி. ராஜதுரை,
வம்சி வெளியீடு,
திருவண்ணாமலை-606601, விலை: ரூ.100,
தொடர்புக்கு: 9445870995
பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்
ஆசிரியர்:
யானிஸ் வருஃபாகிஸ்
தமிழில்: எஸ்.வி.ராஜதுரை
வெளியீடு: க்ரியா
விலை:ரூ.275
தொடர்புக்கு: 8939447656
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT