Published : 25 Mar 2022 06:54 AM
Last Updated : 25 Mar 2022 06:54 AM
கொலைக் குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவர் என்னைச் சந்திக்க வந்தார். தான் ஒரு கவிதை நூல் எழுதியிருப்பதாகவும், அதைச் சிறைச்சாலைக்குள் வந்து வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நான் பயந்துபோய் “நான் எப்படிச் சிறைச்சாலைக்குள் வர முடியும்? எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று கேட்டேன். “சிறை நூலகத்துக்குள் இருந்த உங்களின் ‘கோவேறு கழுதைகள்’ நாவலைப் படித்தேன். அதனால்தான் உங்களைக் கூப்பிடுகிறேன். சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்த இந்த நான்கு நாட்களாக உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்றும் சொன்னார். அச்சிடப்போகிற கவிதை நூலின் நகல் ஒன்றை என்னிடம் தந்தார்.
“கவிதை எழுத வேண்டும் என்று ஏன் தோன்றியது? எப்போதிலிருந்து கவிதை எழுதுகிறீர்கள்?” என்று கேட்டேன்.
“சிறைக்குச் சென்று ஐந்து வருடங்களாகிவிட்டன. அங்கு போவதற்கு முன்பு ஒரு கடிதம்கூட நான் எழுதியது இல்லை. பள்ளியில் நான் சரியாகப் படித்தவன் இல்லை. தமிழைக் கூடச் சரியாக எழுதவும் படிக்கவும் வராது. சிறைச்சாலைக்குள் நேரத்தைப் போக்குவதற்காக ‘இந்து தமிழ்’ நாளிதழில் வரும் நடுப்பக்கக் கட்டுரைகளைப் படிக்க ஆரம்பித்தேன். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யை நண்பர் ஒருவர் வாங்கிக் கொடுத்தார்.
அகராதியைத் தினமும் படிப்பேன். ‘இந்து தமிழ்’ நாளிதழில் வந்த நடுப்பக்கக் கட்டுரைகளும் க்ரியா அகராதியும்தான் என்னைத் தொடர்ந்து படிக்கவைத்தன, எழுதவைத்தன. சிறையிலிருந்து என் மனைவிக்குக் கவிதை வடிவில் எழுதிய கடிதங்களின் தொகுப்புதான் இந்த நூல்” என்று சொன்னார். நான் அந்தக் கவிதை நூலைப் படித்துப் பார்த்தேன். அந்த நூலின் சொற்களில் உணர்ச்சி நிரம்பியிருந்தது. உணர்ச்சியின் தவிப்பிலிருந்து பெருகிய கண்ணீர் நிரம்பியிருந்தது.
சிறைச்சாலையில் உள்ள நூலகம் பற்றியும், கைதிகள் நூலகத்தைப் பயன்படுத்துகிறார்களா என்றும் கேட்டேன். “கடலூர் மத்திய சிறைச்சாலையில் 850-க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கிறார்கள். மாலை 5.00 மணி வரை நூலகத்தில் குறைந்தது 100 பேராவது இருப்பார்கள். இரவில் குறைந்தது 300 பேர் புத்தகத்துடன் செல்லுக்குள் செல்வார்கள். கைதிகளுக்குப் பெரிய பொழுதுபோக்காக இருப்பது புத்தகங்கள் மட்டுமே.
அங்கே, 1,200-க்கும் குறைவான புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன. பெரும்பாலானவை பழைய காலத்தில் அச்சிடப்பட்டவை. 2011-க்குப் பிறகு ஒரு புத்தகம்கூடப் புதிதாகச் சிறைச்சாலை நூலகத்துக்கு வரவே இல்லை. இருக்கிற புத்தகங்களும் பல ரகங்களாக இருக்காது. புதிய புத்தகங்கள் இல்லாததால், இருக்கிற பழைய புத்தகங்களையே திரும்பத்திரும்பப் படிக்கிற நிலை, திரும்பத்திரும்பப் படிக்கப்படுவதால், புத்தகங்கள் நைந்து, கிழிந்துபோய் இருக்கும். ஆனால், வேறு வழியில்லை. இருப்பதைத்தான் படிக்க வேண்டும்” என்று சொன்னார்.
“நான் நான்கு மணிக்குள் சிறைக்குள் சென்றுவிட வேண்டும். தாமதமாகப் போனால், அடுத்த முறை நன்னடத்தை விதியின்படி வெளியே விட மாட்டார்கள். அடுத்து வரும்போது அச்சிட்டப்பட்ட புத்தகத்துடன் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனார்.
அந்தக் கைதி சிறைச்சாலை நூலகம் பற்றிக் கூறியது உண்மைதானா என்ற சந்தேகத்தைப் போக்கிக்கொள்வதற்காக ‘சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் - ஒரு சிறைக் காவலரின் அனுபவப் பதிவுகள்’ என்ற நூலை எழுதியவரும், ஓய்வுபெற்ற சிறைக் காவலருமான மதுரை நம்பியுடன் பேசினேன். அவர் சொன்னது எனக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.
“மதுரை மத்திய சிறைச்சாலைக்குள் 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கிறார்கள். ஆனால், சிறைச்சாலை நூலகத்துக்குள் 1,500 புத்தகங்கள்கூட இருக்காது. இருக்கிற புத்தகங்களையும் பராமரிப்பதற்கு வழி கிடையாது. புத்தகங்களை அடுக்கிவைப்பதற்கு ரேக்குகள் கிடையாது. நூலகத்துக்குள் போதிய வெளிச்சமோ காற்றோட்டமோ இடவசதியோ இருக்காது. பல நேரங்களில் புத்தகங்கள் குப்பை மாதிரி குவியலாகக் கிடக்கும்.
சில நேரங்களில் பழைய காகிதங்கள் மாதிரி கட்டி வைக்கப்பட்டிருக்கும். புத்தகத்தை எடுக்கும்போதே பொடிப்பொடியாகக் கொட்ட ஆரம்பிக்கும். இருக்கிற நூல்களும் தரமானவையாக இருக்காது. சிறைச்சாலை நூலகங்களை நல்ல முறையில் பராமரிக்கவும், நல்ல நூல்களை வாங்கவும் அரசு போதிய நிதியை ஒதுக்குவது இல்லை. நூலகத் துறையிலிருந்தும் போதிய அளவுக்கு நூல்கள் வருவது இல்லை” என்று சொன்னார். ஆயுள் தண்டனைக் கைதியும், ஓய்வுபெற்ற சிறைக் காவலரும் கூறிய தகவல்கள், அரசு படிக்க வைக்க வேண்டியது பள்ளி, கல்லூரி மாணவர்களை மட்டுமல்ல, சிறைக் கைதிகளையும்தான் என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தின.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ் வளர்ச்சிக்கும் நூலகத் துறைக்கும் போதிய நிதியை ஒதுக்கிவருகிறது. நூல்கள் கொள்முதலிலும் வார, மாத இதழ்கள் கொள்முதலிலும் வெளிப்படைத் தன்மையும், பாரபட்சமற்ற தன்மையும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அரசியல் தலையீடுகளை முற்றிலுமாக நீக்கியிருக்கிறது. மதுரையில் கலைஞர் நூலகம், ஒரே இடத்தில் அனைத்து விதமான நூல்களும் கிடைப்பதற்கு ஏற்பாடு என்று நூலகத் துறைக்கு ஊக்கமளித்துவருகிறது இந்த அரசு.
தமிழ் வளர்ச்சித் துறை, நூலகத் துறை, சிறைக்கு வெளியே இருக்கிற நூலகங்களை மேம்படுத்துகிற அதே முனைப்போடு சிறைக்குள் இருக்கிற நூலகங்களையும் மேம்படுத்த வேண்டும். தனிநபர்கள் சிறைக்கு நூல்களை அனுப்புவதற்கு ஊக்குவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். “எனக்கு சால்வை, துண்டு போன்றவற்றைத் தவிர்த்து நூல்களைக் கொடுங்கள்” என்று அறிவித்து, அதன்படி தன்னிடம் கொடுக்கப்படும் நூல்கள் அனைத்தையும் பிரித்து, தமிழகம் முழுவதும் இருக்கும் நூலகங்களுக்குத் தமிழக முதல்வர் அனுப்பி வைப்பதுபோல, சிறைச்சாலையில் உள்ள நூலகங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். சிறைக் கைதிகளில் பெரும்பாலானோர் புத்தகங்களின் வழியாகத்தான் இந்த உலகத்தோடு தொடர்பைப் பராமரிக்கிறார்கள். புத்தகங்கள் மட்டுமே அவர்களை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன.பள்ளி, கல்லூரி நூலகங்களில் இருக்கும் நூல்களுக்கு இணையாகச் சிறைச்சாலைக்குள்ளும் நூல்கள் அதிகமாக இருக்க வேண்டும்.
எழுத்தாளர்களைப் போற்றும் விதமாக இலக்கிய மாமணி விருது, கனவு இல்லம் திட்டம், இலக்கியத் திருவிழாக்கள் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு, எழுத்தாளர்கள் தமிழ் அறிஞர்களின் பிறந்தநாளை அரசு கொண்டாடுதல், மாவட்டம்தோறும் புத்தகக் கண்காட்சி நடத்த ஏற்பாடு, எழுத்தாளர்கள் இறந்தால் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றெல்லாம் அறிவித்து நடைமுறைப்படுத்தியது என்று பல அரிய செயல்களைச் செய்துவருகிற இன்றைய தமிழக அரசும், தமிழக முதல்வரும் சிறைச்சாலை நூலகங்களுக்கு உயிர்கொடுக்க வேண்டும். சிறையிலிருந்து அறிவின் சின்ன மலர்கள் பூக்கட்டும்!
- இமையம், ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: imayam.annamalai@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT