Published : 25 Mar 2022 06:49 AM
Last Updated : 25 Mar 2022 06:49 AM

பட்ஜெட்: சுற்றுச்சூழல் கரிசனம் நடைமுறைக்கு வரட்டும்

நிதிநிலை அறிக்கைகளில் சுற்றுச்சூழல் துறை கவனம் பெறுவது அரிது. ஆனால், அது காலத்தின் தேவை. அநேகமாக முதன்முறையாக 2022-23-க்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத் துறை சார்ந்து சற்றே கூடுதல் கவனம் கொடுக்கப்பட்டுள்ளது; ரூ.849 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது சாத்தியமாகியுள்ள தனி வேளாண் நிதிநிலை அறிக்கைபோல், எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் துறைக்கும் தனி நிதிநிலை அறிக்கை உருவாக வேண்டிய அவசியத்தின் தொடக்கமாக இதைக் கொள்ளலாம்.

முன்னோடி முயற்சி

ஒருபுறம் காலநிலை மாற்றம் தீவிரமடைந்துகொண்டிருக்க, மறுபுறம் இயற்கைச் சீற்றங்கள் தமிழ்நாட்டை அதிகமாக பாதிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டின் வடகிழக்குப் பருவமழைக் காலத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் நவ.6 நள்ளிரவு, டிச.30 ஆகிய இரண்டு நாட்களில் அதிதீவிர கனமழைப் பொழிவுகள் குறித்து எச்சரிக்க முடியாமல் சென்னை வானிலை ஆய்வு மையம் திணறியது. சென்னை திடீர் வெள்ளக்காடாக மாறித் தள்ளாடியது. இதற்குத் தீர்வுகாணும் முகமாகப் பேரிடர் தாக்கும் முன் உரிய வகையில் வானிலையைக் கணிக்கவும், எச்சரிக்கை விடுக்கவும் வானிலை பலூன் அமைப்பு, இரண்டு வானிலை டாப்ளர் ரேடார், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், அதிவேகக் கணினிகள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான முதற்கட்டப் பணிகளுக்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை துறைமுகம், காரைக்காலில் வானிலை கணிப்பு டாப்ளர் ரேடார்கள் ஏற்கெனவே உள்ளன; காரைக்கால் ரேடார் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. உரிய இடங்களில் புதிய ரேடார்கள் நிறுவப்பட்டால், தமிழ்நாட்டின் வானிலையை முழுமையாகக் கணிப்பதற்கான சாத்தியம் உருவாகும். தென் தமிழகம், மேற்குத் தமிழகப் பகுதிகள் இதன்மூலம் பயன்பெறும். மத்திய அரசின் வானிலை ஆய்வு மையத்துக்கு வெளியே ஒரு மாநில அரசு மேற்கொண்டுள்ள முதல் முயற்சி இது. காலநிலை மாற்றம் என்பது புதுப்புது பிரச்சினைகளுக்குக் காரணமாகவிருக்கும் நிலையில், இதுபோன்ற முன்னெடுப்புகள் பல மாநிலங்கள் பின்பற்றக்கூடியவையாக மாறும்.

வெள்ளத் தடுப்பும் நீர்நிலை மீட்டெடுப்பும்

மாநில அளவிலான வானிலை எச்சரிக்கை அமைப்பு தவிர, சென்னை வெள்ளப் பாதிப்பைக் கட்டுப்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக மழைநீர் வடிகால்களைக் கட்டுவது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் நீர்நிலைகளை மீட்டெடுப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். சென்னை வெள்ளக் கட்டுப்பாடு சார்ந்த நடவடிக்கைகளில் நீர்நிலைகளைப் பாதுகாப்பது, அவற்றை இணைப்பது, அவற்றின் நீர்ப்பிடிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

வெள்ளக் காலத்தில் நீரை உறிஞ்சிக்கொண்டு, கோடைக் காலத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பள்ளிக்கரணை போன்ற மாபெரும் சதுப்புநிலங்களின் பெரும் பகுதி ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டது. 1965 நிலஅளவையின்போது 5,500 ஹெக்டேர் பரப்புக்கு விரிந்திருந்த பள்ளிக்கரணை, அதில் 10-ல் ஒரு பங்காகத் தற்போது சுருக்கப்பட்டுவிட்டது. 2005 சென்னை வெள்ளத்தின்போது, பள்ளிக்கரணை மீட்டெடுக்கப்படும் என அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அது அறிவிப்பாக மட்டுமே தொடர்கிறது. அந்தக் காலத்தில், சென்னையில் இருந்த வேறு பல ஏரிகள், நீர்நிலைகளும் கடந்த 15 ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிட்டன.

எஞ்சியுள்ள நீர்நிலைகளை மீட்டெடுப்பதிலும், ஏற்கெனவே நீர்நிலைகள் இருந்த பகுதிகளில் நீரைச் சேகரிப்பதற்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். நீர்நிலைகள், அரசு நில மீட்டெடுப்புக்குச் சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை, அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்து இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இதுபோன்ற நேரடிக் களம் சார்ந்த திட்டங்களுடன் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கும் கையாள்வதற்கும் நிதி திரட்டும் நோக்கத்துடன் ‘தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதிய’த்தை உருவாக்கத் தமிழ்நாடு அரசு எடுக்கவுள்ள நடவடிக்கையும் பாராட்டத்தக்க முயற்சி. இதன் மூலம் வளர்ச்சி நிதி நிறுவனங்கள், பன்னாட்டு காலநிலை மாற்ற நிதியங்களிடமிருந்து நிதி திரட்டுவதற்கான சாத்தியம் உருவாகும்.

மனித – உயிரின எதிர்கொள்ளல்

காட்டுப் பாதுகாப்பு, காட்டுப் பரப்பை அதிகரித்தல், காடு மேலாண்மையில் பழங்குடிகளை ஈடுபடுத்துதல், மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் இடையிலான எதிர்கொள்ளல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், வனத் துறை திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொண்டு, ‘வன ஆணையம்’ அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் இன்றைய மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று மனித – உயிரின எதிர்கொள்ளல். சுற்றுச்சூழல் சார்ந்த அணுகுமுறை, காடுகளைப் பாதுகாப்பது போன்றவற்றைக் கடந்த நூற்றாண்டுப் புரிதல்களுடன் இனியும் தொடர்வது சாத்தியமில்லை. அந்த வகையில் புதிய புரிதலை ஆணையம் உருவாக்கும் என நம்பலாம். அதே நேரம் காடு, பழங்குடிகள், உயிரினங்கள் குறித்த முழுமையான புரிதல் கொண்ட துறை சார்ந்த நிபுணர்கள், நேரடிக் கள அனுபவம் கொண்டவர்கள், ஆய்வு அனுபவம் கொண்டவர்கள் இந்தக் குழுவில் நியமிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்களுக்குத் துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டுச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வரவேற்கத்தக்கது. அதே வேளையில். ‘ஆர்வலர்கள்’ என்கிற பெயரில், துறை சார்ந்த ஆய்வுப் பின்புலமோ-நேரடிக் கள அனுபவமோ இல்லாத ஒருசிலரும் இடம்பெற்றுவிடுகிறார்கள். காடு, உயிரினங்கள், மனித உயிர் போன்ற எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய அம்சங்கள் சார்ந்த பரிந்துரைகளை வழங்கவுள்ள ஆணையங்கள், குழுக்களில் அதுபோன்ற தவறான முன்னுதாரணங்கள் ஏற்படுத்தப்பட்டுவிடக் கூடாது.

புல்வெளிகள் காக்கப்படுமா?

தமிழ்நாட்டின் மாநில உயிரினம் குறிஞ்சி நிலத்தின் மலைமுகடுகளில் வாழும் வரையாடு என்பது பரவலாக அறியப்படாத ஒன்று. மேற்கு மலைத் தொடரின் தென்பகுதியில் தமிழ்நாட்டின் நீலமலைப் பகுதி, கேரளத்தில் மட்டுமே வரையாடு வாழ்கிறது. கடந்த நூற்றாண்டில் வேட்டை காரணமாகப் பெருமளவு அழிக்கப்பட்டுவிட்ட இந்த உயிரினம் தற்போது 3,000 என்கிற எண்ணிக்கையிலேயே உள்ளது.

அவற்றைப் பாதுகாத்து, எண்ணிக்யை அதிகரிக்கும் நோக்கத்துடன் ‘வரையாடு பாதுகாப்புத் திட்ட’த்துக்கு முதற்கட்டமாக ரூ.10 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது என்பது, காட்டைப் பாதுகாக்கும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதிதான். வரையாடு பாதுகாப்பு, அவற்றின் வாழிடத்தை விரிவுபடுத்துவது என்பது காட்டையும் சோலைப் புல்வெளிகளையும் பாதுகாப்பதோடு பின்னிப் பிணைந்தது. சோலைக்காடுகளையும் சோலைப் புல்வெளிகளையும் மீட்டெடுப்பதாக இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

மனிதர்களால் வாழிடம் அழிக்கப்பட்டதாலும் மனிதத் தொந்தரவுகளாலும் வரையாடு வாழும் காட்டுப் பகுதிகள் துண்டுதுண்டாக்கப்பட்டுவிட்டன. காட்டின் நடுவிலும் எல்லையிலும் உள்ள தனியார் பயிர்த்தோட்டங்கள், குடியிருப்புகளே இந்த நிலைக்குக் காரணம். இதன் விளைவாக ஒரு பகுதிக் காட்டிலிருந்து மற்றொரு பகுதிக்கு வரையாடுகள் செல்வது சாத்தியமற்றதாக இருக்கிறது. எனவே, துண்டான காட்டுப் பகுதிகளை இணைப்பது, ஒட்டுமொத்தக் காடுகளை மீட்டெடுப்பதன் மூலமே வரையாடுகளைப் பாதுகாக்க முடியும்.

வரையாட்டு மந்தைகளிடையே இயல்பான மரபணுக் கலப்பு நடைபெறுவதற்கான சாத்தியம் தடுக்கப்பட்டுவிட்டதால், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வாழ்ந்துவரும் வரையாடுகளிடையே உள்ளினப் பெருக்கம் தொடர்ச்சியாக நிகழ்கிறது. இதனால் அவற்றின் மரபணு வளம் குறைந்து, ஆரோக்கியமான வரையாடுகளின் எண்ணிக்கை குறைகிறது. இந்தப் புரிதல்களுடன் வரையாடு பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். வரையாட்டைப் பாதுகாக்கும் இந்தத் திட்டம் மூலம், காடுகள் மீட்டெடுக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அது நிகழ்ந்து சோலைப் புல்வெளிகள் காக்கப்பட்டால், உலகுக்கு உயிரூட்டும் காட்டோடைகள், ஆறுகளின் நீர்வளமும் சேர்ந்தே பாதுகாக்கப்படும்.

- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x