Published : 22 Mar 2022 07:11 AM
Last Updated : 22 Mar 2022 07:11 AM

பட்ஜெட் விவாதம் திசைமாறலாமா?

அரசியல் ரீதியான முக்கிய விவாதங்கள் எழும்போதெல்லாம் அறிவுத் துறையினரின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்த்து, அவர்களது பாராட்டுதல்களை அள்ளிக்கொள்வதில் திமுகவுக்குத் தனி சாமர்த்தியம் உண்டு. பெருந்தொற்றுக்குப் பிறகு, மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புகளும் அரசிடம் நிதிச் சவால்களின் அழுத்தமும் நிறைந்த காலத்தில் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கை, இவை அனைத்தையும் தாண்டி பெரியாரை முன்னிட்டுக் கவனம் விலகிவிட்டது.

பெரியாரின் சிந்தனைகளை 21 மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு பாராட்டுக்குரிய திட்டம். இனம், மொழி, தேச எல்லைகளைத் தாண்டிய உலகப் பெரும் தலைவரும் சிந்தனையாளருமான பெரியாரின் எழுத்துகளும் பேச்சுகளும் பிற மொழிகளிலும் கொண்டுசேர்க்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. தமிழில், பெரியார் சிந்தனைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருந்தொகுப்பை, 1974-ல் வே.ஆனைமுத்து தொகுத்து வெளியிட்டபோது, அன்றைய பொது நூலகத் துறை 300 பிரதிகளை மட்டுமே பெற்றுக்கொண்டது. மொத்தம் அவர் அச்சடித்த பிரதிகள் 2,500. பெரியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு 1,500 பிரதிகளைப் பொது நூலகத் துறையின் கீழாகப் பெற்றுக்கொள்ளும்வரை அச்சடித்த புத்தகங்களை பைண்டிங் செய்யக்கூட வழியில்லாமல் இருந்தார் வே.ஆனைமுத்து (ஆ.இரா.வேங்கடாசலபதி, ‘தி இந்து’, ஏப்ரல் 10, 2021). ஐம்பது ஆண்டுகளில் எவ்வளவோ மாறியிருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த முன்னெடுப்பு, அமைப்புகளைக் கடந்து அனைத்துப் பெரியாரியர்களாலும் பாராட்டப்படுகிற அதே வேளையில், பெரியாரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என்ற அவர்களது நீண்டகாலக் கோரிக்கையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ‘குடிஅரசு’ காலகட்டத்துக்குப் பிறகான பெரியாரின் பேச்சும் எழுத்தும் இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புகளாகத்தான் கிடைக்கின்றன.

‘நமது முதல்வர், திராவிட வளர்ச்சி மாதிரியின் இலக்கணம்’ என்ற புகழாரத்தோடு தனது பட்ஜெட் உரையைத் தொடங்கியுள்ளார் நிதியமைச்சர். பாஜகவின் குஜராத் மாடல், ஆத் ஆத்மி கட்சியின் டெல்லி மாடல் போல திமுகவும் தேசிய அரசியலில் திராவிட மாடலை முன்னிறுத்துகிறது. அனைத்து சமூகத்தவர்களின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய இந்த முன்மாதிரி பரவலாக வேண்டிய தேவை உள்ளது. தொலைநோக்குப் பார்வையிலான சமூக நலத் திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த வளர்ச்சி மாதிரி, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன (எம்ஐடிஎஸ்) பேராசிரியர்கள் ஆ.கலையரசன், எம்.விஜயபாஸ்கர் ஆகியோர் எழுதிய ஆங்கில நூலின் தலைப்பாகவும் உள்ளடக்கமாகவும் அறிவுத் துறையினரின் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டு அரசியல் பொருளியலுக்குப் பொருள்விளக்கம் காணும் அந்தப் புத்தகம், அண்ணாவுக்குப் பிறகான தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுப் பயணம், அதிமுக ஆட்சிப்பொறுப்பில் இருந்த ஆண்டுகளையும் உள்ளடக்கியது என்பதற்குப் போதிய கவனம் கொடுக்காததன் விளைவு, எல்லாப் புகழும் திமுகவுக்கே என்ற பொது எண்ணத்தை உருவாக்கும்வகையில் அமைந்துவிட்டது. அதே நேரத்தில், திராவிட வளர்ச்சி மாதிரி என்ற கருத்தாக்கம் என்பது பெரிதும் திமுக, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சமூக நலத் திட்டங்களால் உருவாகியுள்ள ஒருங்கிணைந்த வளர்ச்சிப் போக்கைக் குறிப்பிடுவதாக அமைகிறதேயொழிய, திராவிட இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் பொருளாதாரம், வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை குறித்துக் கொண்டிருந்த கருத்துகளை வெளிப்படுத்துவதாக அமையவில்லை.

பொருளாதார வளர்ச்சி என்பது சமூகநீதியின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று பேசுகையில், சமூகநீதிச் சிந்தனையாளரான பெரியார் பொருளியல் குறித்து முன்வைத்த பல கருத்துகள் இன்னும் தொகுத்தும் பகுத்தும் ஆராயப்படாத நிலையில் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். காந்திக்கு ஒரு ஜே.சி.குமரப்பா அமைந்ததைப் போல, பெரியாரின் சிந்தனைகளிலிருந்து அவரது பொருளியல் பார்வைகளைக் கோட்பாட்டாக்கம் செய்ய ஒருவர் இன்னும் முன்வரவில்லை.

தொழிலாளர்கள் தங்களது உழைப்புக்கான மறுபயனை, மூலதனத்தில் ஒரு பங்காகப் பெறுகின்ற நிலை வர வேண்டும் என்று விரும்பியவர் பெரியார். தொழிலாளர்களுக்குக் கூலி குறைவாகக் கொடுப்பதே, அவர்களது குழந்தைகளுக்குத் தரமான கல்வியை மறுக்கும் நோக்கத்தைக் கொண்டதுதான் என்று முதலாளித்துவத்தைச் சாடியவர் அவர். எல்லோருக்கும் தரமான கல்வி என்கிற திராவிட வளர்ச்சி மாதிரியின் ஆணிவேர்களாக இத்தகைய சிந்தனைகள்தான் இருக்கின்றன.

சாதியத் தளைகளை உடைத்து, அனைவரையும் தொழிலாளர் என்ற அடையாளத்துக்குக் கொண்டுவந்ததுதான் திராவிட முன்மாதிரியின் வெற்றி. ஆனால், கூலிச் சமநிலையுடன் நிரந்தரமான வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்க முடியாமல் போனால், இதுவரை எட்டப்பட்ட வளர்ச்சியே கேள்விக்குரியதாக மாறிவிடும் என்பதையும் ‘தி ட்ராவிடியன் மாடல்’ நூலாசிரியர்களில் ஒருவரான ஆ.கலையரசன் சுட்டிக்காட்டுகிறார் (‘தி இந்து’, செப்டம்பர் 22, 2021). கூலிச் சமனின்மைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக அவர் சுட்டிக்காட்டுவது தமிழ்நாட்டில் கடந்த சில பதிற்றாண்டுகளாகத் தொடர்ந்து சரிந்துவரும் உயர்கல்வியின் தரம்.

இந்த சுட்டிக்காட்டல்களும்கூட அரசின் கவனத்தை ஈர்ப்பதாகத்தான் தெரிகிறது. உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கிளைகளைக் கொண்ட அறிவுசார் நகரம் போன்ற திட்டங்களையும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் அதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், இத்திட்டங்கள் குறைந்த எண்ணிக்கையிலான மிகச் சிலருக்கு அந்தக் கல்வி வாய்ப்பை வழங்குமேயொழிய அனைவருக்கும் தரமான கல்வி வழங்கும் இலக்கை எட்ட உதவாது.

கூலிச் சமநிலையுடன் வேலைவாய்ப்பை உருவாக்குவதே திராவிட வளர்ச்சி முன்மாதிரிக்கு வலுசேர்க்கும் என்கிறார் ஆ.கலையரசன். அதற்கான உடனடித் தேவையை முதல்வர் உணர்ந்தே இருக்கிறார். அதற்கான முயற்சிகளும் முழுவீச்சில் நடக்கத்தான் செய்கின்றன. கடந்த மார்ச் 8-ல் தூத்துக்குடியில் அறைக்கலன் பூங்கா திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இத்திட்டத்தால், சுமார் 17,476 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது அப்போது பெருங்கவனத்தை ஈர்த்திருக்க வேண்டிய செய்தி. ஆனால், அந்தப் பயணத்தின்போது அவர் ஆரல்வாய்மொழியில் சாலையோர டீக்கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார் என்ற செய்தியே சமூக ஊடகங்களை நிறைத்துநின்றது. தினந்தோறும் செய்திகளில் முதல்வரை முதன்மைப்படுத்துவது என்னும் சமூக ஊடக மனோபாவம் தேர்தல் நேரத்தில் சரியாக இருக்கலாம். தற்போதும் அது தொடர்வது, சில சமயங்களில் அவரது முக்கியமான பணிகளையே பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.

இப்போது பட்ஜெட் நேரம். பெரியார் 21 மொழிகளுக்குச் செல்லப்போகிறார் என்பதே பேச்சாக இருக்கிறது. சுமார் ரூ.3 லட்சத்து 33 ஆயிரம் கோடியை மொத்தத் திட்டச் செலவாகக் கொண்ட ஒரு நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதங்களை ரூ.5 கோடிக்கான ஒரு திட்டம் திசைதிருப்பிக்கொண்டுவிட்டது. பெரியார் உயிரோடிருந்த காலத்தில் இப்படி நடந்திருந்தால், அவரே இதை விரும்பியிருக்க மாட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x