Last Updated : 22 Mar, 2022 06:37 AM

 

Published : 22 Mar 2022 06:37 AM
Last Updated : 22 Mar 2022 06:37 AM

தெலுங்கில் மு.க.வும்; சு.ரா.வும்

தமிழின் முக்கியமான படைப்புகளை ஆங்கிலத்திலும் தென்னிந்தியாவின் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கும் ‘திசைதோறும் திராவிடம்’ திட்டத்தை வேகமாக முன்னெடுத்துச் செல்கிறது, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம். நடந்து முடிந்த 45-வது சென்னை புத்தகக்காட்சியின் தொடக்க விழாவில், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஆறு நூல்களை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இத்திட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி எழுதிய ‘திருக்குறள் உரை’, எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற நாவலான ‘ஒரு புளியமரத்தின் கதை’ ஆகிய இரண்டு நூல்கள் முறையே பேராசிரியர் ஜெயபிரகாஷ், கெளரி கிருபாநந்தன் ஆகியோரால் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் சேவைகள் கழகமும் ஹைதராபாத் புக் ட்ரஸ்ட்டும் இணைந்து, இந்த நூல்களை வெளியிட்டுள்ளன. இந்த மொழிபெயர்ப்பு நூல்களை தலைமைச் செயலகத்தில் மார்ச் 14 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். ‘திசைதோறும் திராவிடம்’ திட்டத்தின் தெலுங்கு பிராந்திய எடிட்டராக (Telugu Regional Editor) ஹைதராபாத் புக் ட்ரஸ்ட்டின் கீதா ராமஸ்வாமி நியமிக்கப்பட்டுள்ளார். மு.கருணாநிதியின் ‘குறளோவியம்’ (தேர்ந்தெடுக்கப்பட்டவை), அம்பையின் சிறுகதைகள், இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’, சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’, தமிழ்ப்பிரபாவின் ‘பேட்டை’, கார்த்திக் பாலசுப்ரமணியனின் ‘நட்சத்திரவாசிகள்’ ஆகிய நூல்களின் தெலுங்கு மொழிபெயர்ப்பு 2022-ம் ஆண்டுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன.

திசைதோறும் திராவிடம் திட்டத்தின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான சங்கர சரவணன் இது குறித்துப் பேசினார். “மேற்கண்ட நூல்கள் தவிர கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’, பூமணியின் ‘வெக்கை’ ஆகிய நூல்கள் மலையாளத்திலும், தி.ஜானகிராமன் சிறுகதைகள் உள்ளிட்ட நூல்கள் கன்னடத்திலும் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகும். ‘இந்து தமிழ்த் திசை’ வெளியீடான ‘மாபெரும் தமிழ்க் கனவு’ ஆங்கிலத்திலும் தென்னிந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுவருகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x