Published : 30 Apr 2016 09:00 AM
Last Updated : 30 Apr 2016 09:00 AM
கடலின் சட்டங்கள் திமிங்கிலங்களை ஒன்றும் செய்ய முடியாது
இது கூட்டணிகளின் காலம். அதிமுக தலைமையிலும் கட்சிகளின் கூட்டணி. இந்தியக் குடியரசுக் கட்சி சார்பாக செ.கு.தமிழரசனும், சமத்துவ மக்கள் கட்சி சார்பாக சரத்குமாரும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பாக தனியரசுவும், தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் ஷேக் தாவூதும், முக்குலத்தோர் புலிப்படை எனும் அமைப்பு சார்பாக நடிகர் கருணாஸ் மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் தமிமுன் அன்சாரி, ஆரூண் ரஷீத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களோடு தமாகா கட்சியும் இருந்தது. எல்லோரையும் அதிமுக சின்னத்தில் நிற்குமாறு அதிமுக தலைமை கேட்டுள்ளது. வாசன் அவரது தென்னந்தோப்பு சின்னத்தைத் தூக்கிக்கொண்டு மக்கள் நலக் கூட்டணிக்கு ஓடிவந்துவிட்டார். மற்றவர்கள் எல்லாம் இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர்.
இரட்டை இலை மயம்
கூட்டணியில் உள்ள அனைத்து வேட்பாளர்களுக்குமே இரட்டை இலைச் சின்னம்தான். போட்டியிடும் ஏழு கட்சிகளுக்கும் ஒரே முகம். மக்களின் பார்வைக்கு அதிமுக தலைமையில் ஏழு வேறுபட்ட முகங்களோடு ஒரு கூட்டணி இருப்பதுபோலத் தோன்றும். அது மாயத் தோற்றமே! உண்மையில், அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. ஏழு முகத்தோடு.. ஒரே உடலோடு அதிமுக உங்கள் முன் நிற்கிறது!
ஒரு கட்சியின் சின்னத்தில் இன்னொரு கட்சிக்காரர் எப்படி நிற்க முடியும் என்ற சந்தேகம் நமக்கு வரலாம். ஒரு கட்சியின் உறுப்பினர் பட்டியலில் இருப்பவர்தான் அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியும் என்பதுதான் தேர்தல் சட்டம். இது தொடர்பான ஒரு நீண்ட சட்டப் போராட்டத்தைச் சுதந்திரப் போராட்ட வீரர் காயிதேமில்லத் பேரனும் முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவருமான தாவூதுமியாகான் நடத்தினார்.
ஏணியும் சூரியனும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ஒருகாலத்தில் தேசியக் கட்சி. அதன் சின்னம் ஏணி. ஆனால், அதன் தமிழகத் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அதைக் கட்சிக்குள்ளிருந்தே மியாகான் எதிர்த்தார். மீறி, பேராசிரியர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். ஆனாலும், சண்டை தேர்தல் ஆணையத்திலும் நாடாளுமன்ற சபாநாயகரிடமும் நீதிமன்றத்திலும் நீண்டது.
ஒரு கட்சி, தனது சின்னத்தை யாருக்கு வேண்டுமானாலும் அளித்து தேர்தலில் நிற்கவைக்கலாம் என்பது சட்டப்படி தவறு என்று வாதாடினார் மியாகான். 1968-ல் இது தொடர்பாக வெளியான அரசு ஆணைக்கு 2000-ல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி (விதி 13- ல் துணைவிதி aa, பக்கம் 10) ஒரு கட்சி தனது உறுப்பினருக்கு மட்டும்தான் தனது கட்சியின் சின்னத்தைத் தர முடியும் என்றும் அவர் விளக்கினார்.
இந்த வழக்கால் தனது கட்சிச் சின்னத்தில் வெற்றிபெற்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பதறியது திமுக. திடீர் திருப்பக் காட்சியாக காதர்மொய்தீன் திமுககாரர்தான் என்று அவரது திமுக உறுப்பினர் அட்டையை எடுத்துக்காட்டியது.முஸ்லிம் லீக் கட்சி திமுகவின் பண்பாட்டுப் பிரிவுதான் என்று வாதாடிய சட்ட விநோதமும் நடந்துள்ளது. அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.
முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் யாராவது தமிழகத்திலிருந்து உள்ளனரா என்று நாடாளுமன்ற சபாநாயகரிடமும் தகவல் உரிமையில் கோரினார் மியாகான்.
பேராசிரியர் காதர் மொய்தீன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்தான் என்று நாடாளுமன்ற அலுவலகமும் உறுதிப்படுத்தியது. அதனால், முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பொறுப்பில் காதர்மொய்தீன் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால், இந்தப் போராட்டத்தில் ஒரு உண்மை தெளிவாக வெளிப்பட்டது. “தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு கட்சிகளிலும் ஒருவரே உறுப்பினராக இருப்பது சட்ட விரோதம்” என்று தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டது.
அப்படியானால், முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக ஒரு நாடாளுமன்றத் தொகுதி கொடுத்தது உண்மையா? இல்லை அது வெளித்தோற்றமே. உண்மையில், முஸ்லிம் லீக் கட்சித் தலைவரையே திமுக தனது (விஐபி) உறுப்பினராக்கிக்கொண்டதுதான் உண்மையான தோற்றம்.
பரிணாம வளர்ச்சி
ஒரு அரசியல் கட்சியைச் சட்டப்படியாகப் பதிவுசெய்யும்போது, அதன் உறுப்பினர்கள் வேறு எந்தக் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் கீழ் 1992-ல் வெளியான அரசு ஆணையின் 29A பிரிவு நிபந்தனை விதிக்கிறது. அதை உறுதியாகக் கடைப்பிடிப்போம் என்று சொல்லித்தான் அரசியல் கட்சிகள் ஆணையத்தில் தங்களைப் பதிவுசெய்துகொள்கின்றன. ஆனால், நடைமுறையில் கட்சிகள் இதனை கடைப்பிடிப்பதில்லை. இது ஒரு பெரிய விதிமீறல்.
திமுகவின் கட்சி அமைப்புச் சட்டம் விதி 5 தனது கட்சி உறுப்பினர் வேறு கட்சியிலோ அல்லது சாதி அமைப்புகளிலோ சேரக் கூடாது என்கிறது. அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் அமைப்புச் சட்டங்களும் இப்படித்தான். ஆனால், சாதிச் சங்கங்களின் தலைவர்களை எந்த விதிகளின்படி தங்களின் கட்சிகளில் உறுப்பினர்கள் ஆக்குகின்றன இவை?
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், மக்கள் தேமுதிகவின் சந்திரகுமார், இந்தியக் குடியரசுக் கட்சியின் செ.கு.தமிழரசன் உள்ளிட்ட இந்த சின்ன கட்சிகளின் தலைவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கூட்டணியின் பெரிய கட்சியாக உள்ள அதிமுகவிலோ திமுகவிலோ உறுப்பினர் அட்டைகளை வாங்கி கட்சி உறுப்பினர்கள் ஆனால்தான், அவர்களைத் தனது கட்சி வேட்பாளர் என்று ஆணையம் முன்பு ஆஜர்படுத்தி, அவருக்குத் தங்களின் சின்னங்களைத் தருவதற்கு அதிமுக, திமுக தலைமைகளால் முடியும். அப்படி அவர்கள் உறுப்பினர்கள் ஆகிவிட்டால், சமத்துவ மக்கள் கட்சியிலும் மக்கள் தேமுதிகவிலும் இந்திய குடியரசு கட்சியிலும் அவர்கள் எப்படி நீடிக்க முடியும்?
தமிழகக் கூட்டணி அரசியலின் தற்போதைய பரிணாம வளர்ச்சி இது! ஒரு பெரிய கட்சி அமைக்கிற கூட்டணியில் உண்மையான கூட்டணிக் கட்சிகளும் இருக்கின்றன. சரத்குமார், செ.கு.தமிழரசன், சந்திரகுமாரைப் போல அந்தக் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்துவிட்டாலும், வெளித் தோற்றத்துக்குக் கூட்டணிக் கட்சிகளாக இருப்பவையும் உள்ளன.
இந்தப் போக்கு தமிழகத்தின் பெரிய கட்சிகளிடம் மட்டுமல்ல.. பாஜக முதல் மதிமுக வரையிலான சின்னக் கட்சிகளிடமும் தற்போது பரவிவிட்டது.
கரையும் கட்சிகள்
கொங்கு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பச்சமுத்து உள்ளிட்ட சிலர், பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டவர்கள்தான்.தற்போது மக்கள்நலக் கூட்டணியில் மதிமுகவின் பம்பரச் சின்னத்தில் தமிழர் முன்னேற்றப்படையின் வீரலட்சுமி போட்டியிடுகிறார். தேர்தல் கடலின் சுழலில் சிக்கிப் பல சின்னக் கட்சிகள் கரைகின்றன.
தேர்தலில் கட்சிகள் செய்கிற சின்னஞ்சிறு தந்திரங்கள் என்று இதைச் சும்மா விட முடியுமா? மக்கள் தேமுதிக வுக்கு வாக்களிப்பதாக நினைக்கும் வாக்காளர் உண்மை யில் திமுகவுக்குத்தான் வாக்களிக்கிறார். சமத்துவ மக்கள் கட்சிக்கும் போட்டி மனிதநேய மக்கள் கட்சிக்கும் வாக்களிப்பவர் உண்மையில் அதிமுகவுக்குத்தான் வாக்களிக்கிறார். சாதிக்காகவும் மதத்துக்காகவும் ஓட்டுப் போடும் மனநிலையில் இருக்கும் மக்களை மொத்த விலைக்கு விற்பனை செய்யும் மறைமுக மோசடி வியாபாரம் இது! மக்களை ஏமாற்றுகிற கண்கட்டு வித்தை இது. இந்த பினாமி அரசியல் சின்னக் கட்சிகளைப் பெரிய கட்சிகள் விழுங்கி ஏப்பம் விடும் ஒருவித சுரண்டல்.
கூட்டணிக் கட்சிகள் என்ற வேடத்தில் இரட்டை இலைச் சின்னத்தில் அதிமுக வேறு கட்சிகளின் உறுப்பினர்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருப்பது தேர்தல் சட்டத்தை மீறிய செயல்! ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கி விளையாடிப் பார்ப்பது. கடலின் சட்டங்கள் திமிங்கிலங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அறிவிக்கின்றன பெரிய கட்சிகள்!
தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT