Published : 11 Mar 2022 08:03 AM
Last Updated : 11 Mar 2022 08:03 AM
உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில், யோகி ஆதித்யநாத்துக்கு அம்மாநில மக்கள் வெற்றிக் கேடயத்தை அளித்திருக்கிறார்கள். முதல்வர் யோகி 260-க்கும் மேற்பட்ட தொகுதிகளுடன் தன் பதவியைத் தக்கவைத்துள்ளார். இரண்டாவது முறை ஆட்சியைத் தொடரும் கட்சிக்கு, முன்பைவிடக் குறைந்த தொகுதிகள் கிடைப்பது வழக்கமே. இந்த வகையில், கடந்த 2017 தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 325 தொகுதிகள் கிடைத்திருந்தன. தற்போது பாஜகவுக்குக் குறைந்துபோன தொகுதிகளையும் சேர்த்து 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி (எஸ்பி), உறுதியான எதிர்க்கட்சியாகிவிட்டது. இதர எதிர்க்கட்சிகளான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) 1 தொகுதி, காங்கிரஸ் 2 தொகுதிகள் என்று எந்த முன்னேற்றமும் அடையவில்லை.
மத்தியிலும் இரண்டாவது முறையாக ஆளும் பாஜகவுக்கு உ.பி. வெற்றி பெரும் சவாலானது. இதன் வெற்றியைப் பொறுத்தே ஜூலையில் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல், 2024 மக்களவைக்கான ‘ஹாட்ரிக்’ வெற்றி ஆகியவை இருந்தன. இதனால், அக்கட்சியின் தலைவர்கள் பெரும் படையுடன் பிரச்சாரக் களத்தில் இறங்கினார்கள். பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், அமைச்சர்கள் எனப் பட்டியல் நீண்டது.
ஆனால், எதிர்க்கட்சிகளான மூன்றிலுமே அகிலேஷ், மாயாவதி, பிரியங்கா வதேரா என ஒற்றைத் தலைவர்கள் மட்டுமே. காங்கிரஸ் தலைவர்களில் சோனியா இணையவழியிலும், ராகுல் நேரடியாகவும் தலா இரண்டு பிரச்சாரங்கள் மட்டும் செய்திருந்தனர்.
கரோனா பரவலால் முதல் ஐந்து கட்டங்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்த நேரடிப் பிரச்சாரப் பாதிப்பு, மற்ற கட்சிகளைப் போல் பாஜகவில் மட்டும் இருக்கவில்லை. 2014 மக்களவைத் தேர்தல் முதல் சமூக ஊடகங்களின் வழி பிரச்சாரத்தில் இறங்கிய பாஜக, அதில் மற்ற கட்சிகளைவிட ஓங்கி நின்றது.
கடந்த 2021-ல் நடைபெற்ற உ.பி. பஞ்சாயத்துத் தேர்தலில் 760 உறுப்பினர்களுடன் சமாஜ்வாதி முதல் இடத்தையும், 750 உறுப்பினர்களுடன் பாஜக இரண்டாவது இடத்தையும் பிடித்தன. இந்த சரிநிகர் போட்டியால், சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வெல்லும் என்பதைக் கணிக்க முடியவில்லை. இதன் காரணமாகச் சிறிதும் கணிக்க முடியாமல் இருந்த உ.பி.யின் முடிவுகளை, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெளிவாக்கிவிட்டன.
தொடக்கக் கட்டங்களில் பாஜக உ.பி.யின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பதிலாக இந்துத்துவக் கொள்கைகளையே பிரச்சாரத்தில் முன்னிறுத்தியது. இதற்கு 2015-ல் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியில் முசாபர்நகரில் ஏற்பட்ட கலவரமும், மேற்குப் பகுதியில் அதிகமுள்ள முஸ்லிம் மற்றும் ஜாட் வாக்காளர்களும்தான் காரணம். ஆனால், சமாஜ்வாதி கட்சிக்கு முஸ்லிம்கள், யாதவர்களின் வாக்குகள் கிடைத்தும் போதிய அளவு வெற்றியைப் பெற அந்தக் கட்சியால் இயலவில்லை. டெல்லியில் ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தில், விவசாயிகளுடன் பாஜகவுக்கும் வெற்றி என்றுதான் கூற வேண்டும். விவசாயிகள் அதிமுள்ள ஜாட் சமூகத்தின் வாக்குகள் பாஜகவிடமிருந்து பெரிய அளவில் விலகியதாகத் தெரியவில்லை.
மூன்று கட்டத் தேர்தலில் இந்துத்துவப் பிரச்சாரத்தால் பாஜக விமர்சனத்துக்கு உள்ளானது. இருப்பினும், பாஜகவின் பிரச்சார வியூகம், தொகுதிகளுக்கு ஏற்ப அவ்வப்போது மாறியது. மத்தியிலும் மாநிலத்திலும் தாங்கள் ஆட்சியில் இருப்பதை வைத்து ‘டபுள் இன்ஜின் அரசு’ என்று பாஜக தன்னை முன்னிறுத்திக்கொண்டது. மத்திய - மாநில அரசுகளின் சாதனைகளைப் பாஜக முன்னிறுத்தியது. இதற்கு முன்னால், அகிலேஷின் பிரச்சாரம் எடுபடவில்லை என்றே தெரிகிறது. எப்போதும் இல்லாத வகையில், அகிலேஷ் இலவசங்கள் குறித்து அளித்த தேர்தல் வாக்குறுதிகளும் எடுபடாமல் போயின. 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதையும் உ.பி.வாசிகள் புறக்கணித்துள்ளனர்.
2017 சட்டமன்றத் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளைப் பெறுவதற்காக பாஜக உறுதியான கூட்டணியை அமைத்திருந்தது. இதில், மத்திய அமைச்சர் அனுபிரியா பட்டேலின் அப்னா தளம் (சோனுலால்), ராஜ்பருடைய சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி ஆகியவை இடம்பெற்றன. இந்த முறை, ராஜ்பரைத் தன்பக்கம் இழுத்துக்கொண்டார் அகிலேஷ். எனினும், பாஜகவுடன் மீனவர் ஆதரவு நிஷாத் கட்சி புதிதாக இணைந்தது. உ.பி.யின் கிழக்குப் பகுதியில் செல்வாக்கான இந்தக் கட்சி, கோரக்பூரில் முதல்வர் யோகி தொடங்கி பல தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவியுள்ளது. இதன்மூலம், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் வாக்குகள் பாஜகவுக்கு மீண்டும் கிடைத்துள்ளன எனலாம்.
உ.பி.யில் அதிக சதவீதத்திலுள்ள தலித் வாக்காளர்கள் மீண்டும் மாயாவதிக்குச் சாதகமாகத் திரும்புவார்கள் என்று பேச்சு எழுந்தது. முதன்முறையாக உ.பி.யில் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் பொறுப்பை ஏற்ற பிரியங்கா வதேராவின் பிரச்சாரங்களில் கூட்டம் நிரம்பிவழிந்தது. இதையெல்லாம் வைத்து, தொங்கு சட்டமன்றத்துக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு பேச்சு எழுந்தது. இவை அனைத்தையும் பொய்யாக்கிவிட்டது பாஜகவின் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சி. நாட்டின் முதல் துறவி முதல்வரான இவரது ஆட்சியில் பெரிய அளவில் ஊழல் புகார் எதுவும் எழவில்லை. உ.பி.யில் குற்றப் பின்னணியாளர்களை முற்றிலும் ஒடுக்காவிட்டாலும் அவர்கள் மீது முதல்வர் யோகி எடுத்த நடவடிக்கைகளுக்கும் இந்தத் தேர்தலில் பலன் கிடைத்துள்ளது.
2014, 2019 மக்களவைத் தேர்தல்களிலும், 2017 உ.பி. சட்டமன்றத் தேர்தலிலும் வீசிய ‘மோடி அலை’ இந்த முறை ஓய்ந்ததாகக் கருதப்பட்டது. இது மோடிக்குக் கெளரவப் பிரச்சினை என்பதால், இதைப் பொய் என்று நிரூபிப்பதற்காகக் கடைசிக் கட்டமாக, பிரதமர் மோடி அதிரடியாகக் களமிறங்கினார். இரவில், ரயில்நிலையத்தில் திடீர் விஜயம் செய்தார் பிரதமர் மோடி. சாலையோரக் கடைகளில் தேநீர் ருசித்தவர், பீடாவையும் சுவைத்தார். வாராணசியில் தனது 7 ஆண்டு கால எம்.பி. பதவியில் இதுவரை போகாத வீதிகளிலும் நுழைந்து பொதுமக்களைச் சந்தித்தார். வழியில், பாமர மக்களுடன் கூட்டம் ஒருபுறம் என்றால், அறிவுஜீவிகளுக்கான தனிக்கூட்டம் இன்னொரு புறம். இதன் தாக்கம், வாராணசி உள்ளிட்ட, அந்த ஏழாவது கட்டத்தின் 54 தொகுதிகளிலும் இருந்தது.
இவை அனைத்தும் சேர்ந்து பாஜகவின் உழைப்பு வீண்போகவில்லை. கடந்த 40 ஆண்டுகளில் உ.பி.யில் எந்தக் கட்சிக்கும் கிடைக்காத, தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சி என்ற பெருமையைப் பாஜக பெற்றுள்ளது. இதன் பலன் பாஜகவுக்கு 2024 மக்களவைத் தேர்தலில் கிடைக்குமா என்பதுதான் நாடு முழுவதிலும் தற்போது எழுந்துள்ள புதிய கேள்வி.
- ஆர்.ஷபிமுன்னா: தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT