Published : 06 Jun 2014 12:00 AM
Last Updated : 06 Jun 2014 12:00 AM
உலகெங்கும் கிட்டத்தட்ட 7,000 மொழிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. உலக மொழிகளை ஆய்வுசெய்தபோது ஆப்பிரிக்கக் கண்டத்திலும் இந்தியாவிலும்தான் அதிக மொழிகள் பேசப்படுகின்றன எனத் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் சுமார் 1,600 மொழிகள் பேசப்படு கின்றன. அவற்றில் 22 மொழிகளை இந்தியாவின் ஆட்சி மொழிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அவற்றில் சம்ஸ்கிருதமும் தமிழும் அடங்கும்.
சம்ஸ்கிருதத்தின் பழைமை எல்லோரும் அறிந்த ஒன்று. அதில் இந்தியாவின் தொன்மையான பல இலக்கியங்கள் உள்ளன. தமிழின் தொன்மைகுறித்த விவாதம் கடந்த 150 ஆண்டுகளில்தான் விரிவடைந் திருக்கிறது.
அறிஞர் கால்டுவெல் திராவிட மொழிகளை ஒப்பிட்டு 1856-ல் ஒரு ஆங்கில நூலை எழுதினார். அதில் தமிழின் தொன்மையை விளக்கினார். அது உலக அளவில் விவாதிக்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக, பேராசிரியர் பரிதிமாற் கலைஞர் தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என 1902-ல் கோரிக்கை விடுத்தார். அதன் பிறகு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புகளும் அறிஞர்களும் இது தொடர்பாகப் பல முயற்சிகளை எடுத்தனர். அதன் விளைவாக, இந்திய அரசால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட நாள் இன்று.
செம்மொழி என இந்திய அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ்தான். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 - ம் ஆண்டில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தியாவில் தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆட்சிமொழியாகத் தமிழ் இருக்கிறது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இடம்பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT