Last Updated : 23 Apr, 2016 08:41 AM

 

Published : 23 Apr 2016 08:41 AM
Last Updated : 23 Apr 2016 08:41 AM

அழுகும் கழகங்கள்

சென்னை ஔவை சண்முகம் சாலை. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அருகிலுள்ள உணவகத்தில் விழுப்புரம் தொண்டர்கள் கூட்டம் நுழைந்தபோது மணி மதியம் மூன்றைத் தாண்டியிருந்தது. தங்கள் தொகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த வேட்பா ளரின் தகிடுதத்தங்களைப் பற்றி கட்சித் தலைமைக்குப் புகார் அளிக்க வந்தவர்கள். இப்படி ஒவ்வொரு நாளும் ஏராளமான ஊர்களிலிருந்து தொண்டர்கள் வந்து போகிறார்கள். உள்ளூரிலிருந்து மேலே பேசி வேலைக்கு ஆகாத சூழலில், போராடும் நோக்கில் சென்னை வருகிறார்கள். தலைமை அலுவலகத்துக்கும் ஜெயலலிதா வீட்டுக்கும் வருபவர்களை இங்குள்ளவர்கள் அசமடக்குகிறார்கள். கூடுமானவரை பேசிக் கரைக்கிறார்கள். மசியாதவர்களை உள்ளே அழைத்து புகாரை எழுதிக் கொடுத்துவிட்டு போகச் சொல்கிறார்கள். இதையெல்லாம் தாண்டியும் போராட்டங்கள் நடக்கின்றன.

திருச்சி, மதுரை, தென்காசி, உளுந்தூர்பேட்டை, ஈரோடு, பெருந்துறை ஊர்களிலிருந்து வந்தவர்கள் பெரும் அதிருப்தியில் இருந்தார்கள். கள்ளக்குறிச்சியிலிருந்து வந்தவர்கள் தீக்குளிக்கும் போராட்டத்திலேயே இறங்கினார்கள். தி நகர் வேட்பாளர் சத்தியநாராயணா நில அபகரிப்பில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார்கள். திருச்சி தமிழரசி ஒரு போலி மருத்துவர் என்றார்கள். பெருந்துறை வெங்கடாசலம் மீது ஏராளமான முறைகேடு புகார்களுடன் விடுமுறை நாளன்றுகூட அவர் ஒரு சொத்தைப் பதிவுசெய்திருப்பதாகச் சொன்னார்கள். ஒவ்வொருவர் கையிலும் நிரூபிக்க ஏராளமான ஆவணங்களும் இருந்தன.

நாம் பேசிக்கொண்டிருக்கும் கதை, ஜெயலலிதாவே நேரில் வந்து “நான் நிறையத் தவறான முடிவுகளை எடுத்து விட்டேன்” என்று கூறினாலும், “ஐயோ, அம்மா நீங்கள் கடவுள்” என்று மறுக்கும் ரக தொண்டர்களைக் கொண்ட அதிமுகவில் நடப்பது. “தலைவர் ஒரு முடிவெடுத்தால் அதில் ஒரு கணக்கு இருக்கும்” என்ற பேச்சுக்குப் பேர் போன திமுகவும் கடுமையாக அடிவாங்கியிருக்கிறது. கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தைத் தாண்டி, கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளையே முற்றுகையிட வருகிறார்கள். பாளையங்கோட்டை, சீர்காழி, மண்ணச்சநல்லூர், சோழிங்கநல்லூர், குன்னூர் என்று வரிசையாகக் கட்சி அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன.

இதுவரை அதிமுகவில் 26 தொகுதிகளிலும் திமுகவில் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் மாற்றம் நடந்திருக் கிறது. வேட்புமனு தாக்கலுக்கு ஓரிரு நாட்களே இருக்கும் நிலையில், மாற்றங்கள் தொடர்கின்றன. எல்லா மாற்றங்களுக்குமே எதிர்ப்பு மட்டுமே காரணம் இல்லை என்றாலும், ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியைத் தாங்க வல்லவர்கள் இல்லை என்ற முடிவுக்குக் கட்சித் தலைமை வரும்போது, அதன் முந்தைய முடிவு தவறானது என்பது வெளிப்படையாகிறது.

கட்சிக் கட்டுப்பாடு, வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக் கப்பட்ட உள்ளூர் புள்ளிகளின் மிரட்டல், மேலே வேட்பாளர் தேர்வில் பங்கேற்றிருக்கும் நிழல் அதிகார மையங்களின் ‘லாபி’ இவையெல்லாவற்றையும் தாண்டியும் ஒரு கட்சியின் கீழ்நிலை தொண்டர்கள் இப்படிப் போராட்டக் குரலோடு கட்சித் தலைமைகளை நோக்கி வருவது தமிழகத்துக்குப் புதிது; ஜனநாயகத்துக்கு நல்லது. இந்த விஷயத்தில் இதைத் தாண்டி அம்பலத்துக்கு வந்திருக்கும் ஒரு சங்கதி நாம் விவாதிக்க வேண்டியது. அது, இரு கட்சிகளுக்கும் அடிவரை புரையோடியிருக்கும் ஊழல். இந்த ஊழலுக்கு வெளியே இருப்பவர்களை அறிய முடியாத அளவுக்கு தலைமைகள் அந்நியமாகி இருப்பது.

ஒரு தொகுதிக்கு ஒருவர்கூட இல்லையா?

தொகுதிக்கு ஒருவர் என்று மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற 234 பேரைத் தேர்ந்தெடுக்கக்கூடத் திராணியற்றவையாக இரு கட்சித் தலைமைகளும் மாறிவிட்டன என்று சொன்னால், நம்புவதற்குச் சிரமமாக இருக்கலாம். ஒவ்வொரு தொகுதியிலும் அடிமட்டத்தில் தொண்டர்கள் பேசிக்கொள்வதைக் கேட்கும்போது, இரு கட்சிகளும் அவற்றின் தலைமைகள் கைவசம் இல்லை என்றே தோன்றுகிறது.

இரு கட்சிகளுமே வேட்பாளர்கள் தேர்வுக்கு அரசு/ தனியார் உளவு அமைப்புகளைப் பயன்படுத்தியதாகத் தகவல்கள் பரப்பப்பட்டன. தன் கட்சிக்காரர்களின் ஒழுங்கு என்ன, திறன் என்ன என்பதைக்கூட உளவு அமைப்புகளைப் பயன்படுத்தித் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் கட்சித் தலைமைகள் இருப்பது அவலம். இதை நிர்வாகத் திறனாக விதந்தோதுவது இந்தியச் சமூகத்தின் உளவியல் கோளாறு.

நாட்டிலேயே ஒட்டுமொத்த கட்சியையும் தன் சுண்டு விரல் அதிகாரத்தில் வைத்திருப்பதாகச் சொல்லப்படுபவர் ஜெயலலிதா. இது உண்மை என்றால், ஒவ்வொரு கட்சியின் ஒவ்வொரு பிரதிநிதியும் தலைமைக்குப் பயந்து மக்கள் மத்தியில் ஓடிஓடிப் பணியாற்றுபவராக இருந்திருக்க வேண்டும். தவறிழைக்கப் பயப்படுபவராக இருந்திருக்க வேண்டும். மாநிலத்தின் எல்லாப் பிரச்சினைகளையும் விவாதிக்கத் தக்க வகையில், நாளுக்கு நாள் அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்பவர்களாக இருக்க வேண்டும். நாம் நேர் எதிரான காட்சிகளையே பார்க்கிறோம். அப்படியெல்லாம் இல்லை என்றால், ஜெயலலிதா ஏன் ஒரு ஆட்சியில் 24 முறை அமைச்சரவையை மாற்றுகிறார்? ஒரு துறைக்கு வருஷத்துக்கு ஒருவரை அமைச்சராக நியமிக்கிறார்? ஏன் இத்தனை முறை வேட்பாளர்களை மாற்ற வேண்டியிருக்கிறது? ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி, தவறிழைத்தவர்களாகச் சொல்லப்படுபவர்களையே மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் பொது அரங்கின் முன் நிறுத்த வேண்டிய தேவை என்ன?

யாரை ஏமாற்ற இந்த நாடகங்கள்?

இது ஒரு அபத்த நாடகம். ‘நான் அடிப்பதுபோல நடிக்கிறேன்; நீ அழுவதுபோல நடி’ கதை. கரூர் செந்தில் பாலாஜி ஒரு உதாரணம். சாதாரண குடும்பப் பின்னணியில் வந்த செந்தில் பாலாஜி இன்றைக்குக் கோடிகளில் புரளுவதாகச் சொல்கி றார்கள் கட்சிக்காரர்கள். ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது, அடுத்த முதல்வருக்கான தேர்வுப் பட்டியலில் இருந்ததாகச் சொல்லப்பட்ட இவர் மீது ஏராளமான ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன. இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டதுபோல ஜெயலலிதா பாவனை செய்தார். செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கினார். முறைகேடு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இப்போது எப்படி மீண்டும் அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளராக செந்தில் பாலாஜி நிற்கிறார்?

இந்த ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர்களாக இருந்த ‘ஐவர் அணி’ அதிமுகவையே கைப்பற்ற சதித்திட்டம் தீட்டியதாகச் சொல்லப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, பி. பழனியப்பன் ஆகிய ஐவர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன. ஜெயலலிதா அவர்கள் ஐந்து பேரையும் கட்டம் கட்டிவிட்டதாகவும் இனி அவர்கள் அவ்வளவுதான் என்றும் சொன்னார்கள். இப்போது அந்த ஐந்து பேருமே மீண்டும் தேர்தல் களத்தில் நிற்கின்றனரே, எப்படி?

இது அதிமுக நிலை. திமுகவில் கட்சி முழுமை யாகக் கருணாநிதியின் கையை விட்டுப் போய்விட்டதை எல்லோருமே சொல்கிறார்கள். ஸ்டாலின் ஆட்டுவிக்கப் படுகிறார் என்கிறார்கள்.

நான் ராஜா, நீ மந்திரி

இந்தத் தேர்தலில் வாரிசுகளுக்கு மட்டும் குறைந்தது 10% தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது திமுக. கடலூர் மாவட்டத்தைக் கால் நூற்றாண்டாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தன் சொந்தங்களுக்கு மட்டும் மூன்று தொகுதிகளை ஒதுக்கிக்கொண்டிருக்கிறார். குறிஞ்சிப்பாடி அவருக்கு. சிதம்பரம் அவருடைய அக்கா மகன் செந்தில்குமாருக்கு. விருத்தாசலம் செந்தில்குமாரின் சின்ன மாமனாரான ஆனந்தனுக்கு. “தலைவர் குடும்பமே இந்தத் தேர்தலில் இரு தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது, பன்னீர்செல்வத்துக்கு மூன்றா?” என்று உள்ளூர் திமுகவினர் கோபாலபுரத்துக்கு வந்து நின்றபோதே கருணாநிதியின் காதுக்கு இது போய் இருக்கிறது. கையோடு வேட்பாளரை மாற்றியிருக்கிறார்கள்.

அன்று மாலை விருத்தாசலம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் வேட்பாளர் மாற்றம் தெரிந்து பிரச்சாரத்தை ரத்துசெய்திருக்கிறார் ஸ்டாலின். கடலூர் மாவட்டத்தில் ஸ்டாலின் இருக்கும்போதே இந்த மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தன் ஆதரவாளர்களோடு ரகளையில் ஈடுபட்டிருக்கிறார் ஆனந்தன். பன்னீர்செல்வத்துக்குத் தெரியாமலா இவ்வளவும் நடக்கிறது?

குறுநில மன்னர்களின் ராஜ்ஜியம்

திமுகவில் மூத்த மாவட்டச் செயலர்களின் அதிகாரம் எந்த அளவுக்குக் கொடிகட்டிப் பறக்கிறது என்பதற்குத் திருச்சி மாவட்டமும் ஒரு உதாரணம். ஒருகாலத்தில் தனக்கு இணையானவராக இங்கு கருதப்பட்ட செல்வராஜுக்கு அவருக்கான தொகுதிகூடக் கிடைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் மாவட்டச் செயலர் நேரு. கவிஞர் சல்மா தலையெடுத்துவிடக் கூடாது என்பதிலும் காய் நகர்த்தியிருக்கிறார்.

மன்னார்குடியை மீண்டும் டி.ஆர்.பாலுவின் மகன் ராஜாவுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். “இந்த ஊரில் இவ்வளவு நாளாக கஷ்டப்பட்டு கட்சி நடத்திக்கொண்டிருக்கிறோம். சென்னையிலிருந்து பாலு தன் அதிகாரத்தில் மகனை இங்கே நுழைத்துப் போட்டியிட வைத்தார். இந்த முறையும் ஜெயிக்கவைத்து, ஆட்சியும் அமைந்தால், மந்திரியும் ஆக்கிவிடுவார். நாங்கள் சுவர் விளம்பரம் எழுதிக்கொண்டே திரிவதா?” என்கிறார்கள். தஞ்சாவூரில் பழநிமாணிக்கத்தின் செல்வாக்கு ஒழிக்கப்பட்டதிலும் பாலுவின் பெயர் அடிபடுகிறது. தஞ்சாவூர் தொகுதி கேட்டு கிடைக்காமல், ஒரத்தநாடு ஒதுக்கப்பட்டதால், பழநிமாணிக்கத்தின் தம்பி ராஜ்குமார் அங்கு போட்டியிட மறுத்திருக்கிறார். திமுக வரலாற்றிலேயே முதல் முறையாக “வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர் போட்டியிட முன்வராததால், மாற்று வேட்பாளரை அறிவிக்கிறோம்” என்ற அறிவிப்போடு அங்கு வேறு ஒருவரைக் களம் இறக்கியிருக்கிறது கட்சி.

மோசம் x மோசம்

பல இடங்களில் அதிமுகவின் மோசமான வேட்பாளர் களுக்குச் சவால் விடும் அளவுக்கு மேலும் மோசமான வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது திமுக. ஆயிரம்விளக்கு தொகுதியில் அதிமுகவின் வளர்மதியை எதிர்த்து, திமுகவால் நிறுத்தப்பட்டிருப்பவர் கு.க. செல்வம். எல்லா வகையிலும் வளர்மதிக்கு இணையானவர் செல்வம் என்கிறார்கள் தொகுதிக்காரர்கள். திருவொற்றியூரில் அதிமுகவின் பால்ராஜை எதிர்த்து திமுக சார்பில் நிற்பவர் கேபிபி சாமி. இருவருமே கட்டப் பஞ்சாயத்துக்குப் பேர் போனவர்கள். அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை எதிர்த்து திமுக நிறுத்தியிருக்கும் வேட்பாளர் கே.பி.பழனிச்சாமி. செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை ஊழல்களுக்காகக் குற்றஞ்சாட்டப்படுபவர் என்றால், மணல் சுரண்டலுக்காகக் குற்றஞ்சாட்டப்படுபவர் பழனிச்சாமி. தனக்கு இந்தத் தொகுதியை வாங்கியதோடு, கூடவே காங்கிரஸ் துணையோடு தன் போட்டியாளரான சின்னசாமிக்குக் கரூர் தொகுதி கிடைக்காமலும் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக, அதிமுகவின் பழம்பெருச்சாளிகள் இரு காரியங்களில் கவனமாக இருந்திருக்கிறார்கள். முதலாவது, தங்களுக்கும் தங்கள் சுற்றத்துக்கும் தொகுதிகளைக் கைப்பற்றுவது; இரண்டாவது, கட்சியில் தம்மை மீறி வளர்பவர்களை நசுக்கிவிடுவது.

நிழல்களே ஆள்கின்றன

உண்மையில் கட்சி யார் கையில் இருக்கிறது? இரு கட்சிகளுக்குமே இந்தக் கேள்வி பொருந்தும். தாம் தகுதிக்குரிய நடத்தையோடு இல்லாததால் கீழே தார்மிகரீதியாகக் கேள்வி கேட்கும் உரிமையை இழந்து நிற்கின்றன தலைமைகள். கட்சியின் பழைய வரலாற்று நினைவுகளாலும் தலைவர்கள் மீதான கண்மூடித்தனமான அன்பாலும் கீழே உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள் தொண்டர்கள். நடுவில் தரகு வேலையில் தேர்ந்தவர்களே கொழிக்கிறார்கள். நிழல் அதிகார மையங்களே ஆள்கின்றன.

மக்களும் தொண்டர்களும் நெருங்க முடியாத உயரத் தில் கட்சித் தலைமைகள் நிற்பதால், நிழல் அதிகார மையங்களையும் இடைத்தரகர்களையும் தாண்டி அவற் றால், உண்மையான தொண்டர்களை அடையாளம் காண முடியவில்லை. நிழல்களின் தவறுகள் அம்பலமாகும்போது, கட்சித் தலைமைகளால் ‘அடி - அழு’ பாவனைகளைத் தாண்டி ஒன்றும் முடியவில்லை.

ஓரளவுக்கு மேல் இந்த பாவனையை நீடிக்கவும் முடியாது. பாவனைகள் நீண்டு உண்மையாகவே அவர்கள் மீது அடி விழுந்தால், அடி வாங்குபவர்கள் திரும்ப அடிப்பார்கள். பேச ஆரம்பிப்பார்கள். தரகின் பங்குகள் வெளிச்சத்துக்கு வரும். தலைமைகளின் பிம்பங்கள் உடைந்து நொறுங்கும். எப்படியும், புரையை ரொம்பக் காலம் பொத்திவைக்க முடியாது. ஊழல் முடை நாற்றம் அடிக்கும். சீழ் வெளியேறும். அதையே இப்போது வேட்பாளர் அதிருப்திப் போராட்டங்களாகப் பார்க்கிறோம். இரு கழகங்களும் அழுகிக்கொண்டிருக்கின்றன!

- சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x