Published : 08 Mar 2022 06:07 AM
Last Updated : 08 Mar 2022 06:07 AM
இந்த முறை சென்னை புத்தகக்காட்சிக்குப் போக வாய்க்கவில்லை. ஓர் அலுவலின் பொருட்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்துக்கு வந்துவிட்டேன். என்றாலும் புத்தகக்காட்சியில் வெளியான புதிய நூல்களையும் வருகைதந்த எழுத்தாளர்களையும் சமூக ஊடகங்கள் வாயிலாக நாள்தோறும் காண முடிந்தது. வெள்ளமாய்ப் புது வரவுகள், மறு பதிப்புகள், கிளாஸிக் படைப்புகள், நூற்றுக்கணக்கான அரங்குகள், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாசகர்கள், லட்சக்கணக்கான தலைப்புகள், கோடிக்கணக்கான புத்தகங்கள். பதிப்பாளர்கள் இயன்றவரை கூடுதல் வாசகர்களை எட்ட முயற்சிக்கிறார்கள்.
ஏனெனில், இப்படி ஒரு பெரிய புத்தகக்காட்சிக்கு அவர்கள் இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும். அதாவது, ஆண்டு முழுவதும் கணிசமான புத்தகங்கள் வாசகர்களின் கையெட்டும் தூரத்தில் இருப்பதில்லை. இப்படியான புத்தகக்காட்சிகளில்தான் அது சாத்தியமாகிறது. ஏன் இப்படி நடக்கிறது?
சிட்னியின் மையத்தில் இருக்கும் ஜார்ஜ் தெருவின் பாரம்பரியக் கட்டிடங்களுள் ஒன்றில் இருக்கும் டைமாக்ஸ் புத்தகக் கடைக்குச் சமீபத்தில் நான் போயிருந்தேன். கடை இரண்டு தளங்களில் விரிந்து கிடந்தது. கீழ்த்தளத்தில் புனைவு, மேல்தளத்தில் அபுனைவுப் புத்தகங்கள். இடையில் நகரும் படிக்கட்டுகள். மேல்தளத்தில் படிக்கட்டைச் சுற்றி வளைவான கைப்பிடிச் சுவர். பின்னால் ஒற்றை வரிசையில் மெத்தை வைத்த நாற்காலிகள்.
உள்ளே அமிழ்ந்துகொள்ளலாம், மணிக்கணக்காகப் படிக்கவும் செய்யலாம். மேல்தளத்தில் ஒரு தேநீரகமும் இருந்தது. உணவு மேடைக்கு எதிரில் வரிசையாக சுமார் 20 வார்ப்பிரும்பு மேசைகள், ஒரு மேசைக்கு இரண்டு நாற்காலிகள். உணவகத்தின் பேச்சுச் சத்தம் புத்தகங்களைப் புரட்டுகிறவர்களின் செவிகளை எட்டாத தூரத்தில் உணவு மேசைகள் இருந்தன. உயரமான பீங்கான் கோப்பைகளில் காபியும், வெளிர் நீலப் பூப்போட்ட தட்டுகளில் பலகாரமும் வாங்கிக்கொண்டு மேசைகளில் வந்து அமர்ந்துகொள்ளலாம். புத்தகங்களிடம் பேசலாம். உடன் வந்தவர்களோடும் உரையாடலாம்.
கீழ்த்தளத்தில் ஒரு சின்ன மேடை. சிவப்புக் கம்பளம் விரித்திருந்தது. அதன் மீது ஒரு கருங்காலி மேசை. என் முகத்தில் தோன்றிய கேள்விக்குறியைப் படித்துவிட்டு “இது எழுத்தாளர் மேசை” என்றார் சீருடைப் பெண். புத்தகங்களில் கையொப்பமிட்டுக் கொடுப்பதற்கும், வெளியீட்டு நிகழ்வுகளுக்கும் எழுத்தாளர்கள் வருகிறார்கள். “நாளை மாயா லீ வருகிறார்” என்றார் அதே பெண். லீ எழுதிய புத்தகம் அந்த இடத்திலிருந்து காணக்கூடியதாக இருந்தது.
புத்தகத் தட்டுக்கு வெளியேயும் நிறையப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தப் புத்தகங்களின் உள்ளிருந்து ஒரே அளவிலான அட்டைகள் தலை நீட்டிக்கொண்டிருந்தன. “அவை முகவரி அட்டைகள். நாளை வர முடியாதவர்கள் புத்தகங்களை வாங்கி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆசிரியர் கையொப்பத்துடன் அவர்களுக்குப் புத்தகம் அனுப்பப்படும்” என்று விளக்கினார். அருகிலேயே ஒரு அரங்கமும் ஒரு சிற்றரங்கமும் இருக்கிறது. மார்ச் வரையிலான கூட்டங்கள், வெளியீட்டு நிகழ்வுகள், கையொப்ப வைபவங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றையும் அந்தப் பெண் கொடுத்தார். எழுத்தாளரின் படங்கள், நூல் நயம், நாள், நேரம் எல்லா விவரங்களும் அதில் இருந்தன. நகரில் இப்படிப் பல புத்தகக் கடைகள் இருக்கின்றன.
ஏன் வேண்டும் புத்தகக்காட்சி?
இந்த இடத்தில் எனக்கு ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் நினைவுக்கு வந்தார். அவரை 2020-ம் ஆண்டு சென்னைப் புத்தகக்காட்சியில் ‘க்ரியா’ பதிப்பக அரங்கில் சந்தித்தேன். அதுதான் கடைசிச் சந்திப்பு என்பது அப்போது எனக்குத் தெரியாது. அந்தச் சந்திப்பில் அவர் சொன்னதை மறக்க முடியாது. “இப்படியான புத்தகக்காட்சிகள் வாசகர்களைப் புத்தகத்துக்கு நெருக்கமாக்கும். அவர்கள் புத்தகத்தைக் கையில் எடுக்கிறார்கள், அட்டையை நீவுகிறார்கள், நூலைப் புரட்டுகிறார்கள், அதன் அச்சையும் அமைப்பையும் அவதானிக்கிறார்கள், பின்னட்டைக் குறிப்பைப் படிக்கிறார்கள். அவர்கள் அந்தப் புத்தகத்தைத் திரும்பவும் எடுத்த இடத்தில் வைத்துவிடலாம். பரவாயில்லை. புத்தகம் இப்படித்தான் வாசகர்களுக்கு அணுக்கமாகும். அதற்கான சூழலைப் புத்தகக்காட்சிகள் உருவாக்குகின்றன” என்றார் அவர்.
சிட்னி புத்தகக் கடையில் அவர் சொன்னது எனக்குக் கூடுதலாக விளங்கியது. புத்தகங்களைப் புரட்டுகிறவர்களை, சாவதானமாக வாசிப்பவர்களை, தேநீருக்கு இடையில் அவற்றின் உள்ளடக்கம் குறித்து உரையாடுபவர்களை அங்கே பார்க்க முடிந்தது. ராமகிருஷ்ணன் சொன்னதுபோல் இன்று அவர்கள் புரட்டுகிற புத்தகத்தை வாங்காமல் போய்விடலாம். ஆனால், இந்தக் கடை ஆண்டின் எல்லா நாட்களும் திறந்திருக்கும். அந்த வாசகர்கள் மீண்டும் வருவார்கள். ஒரு கட்டத்தில் அந்த நூல் அவர்களின் உடமையாகக் கூடும். ஆனால், நம்மிடம் இப்படியான புத்தகக் கடைகள் இல்லை. புத்தகக்காட்சிதான் இருக்கிறது. அதுவும் ஆண்டுக்கு ஒரு முறைதான் வருகிறது.
புத்தகசாலை உண்டா?
நமது சமூகத்தில் எழுத்துக்கும் புத்தகங்களுக்கும் உள்ள இடம் சிறப்பானதல்ல. அறிஞர் அண்ணா இதைக் குறித்து எழுதியிருக்கிறார். ‘‘நம் வீடுகளில் படுக்கையறை, பூஜையறை, சமையலறை எல்லாம் இருக்கும். புத்தகம் உள்ள இடம், படிப்பதற்கென்று ஓர் அறை தேடிப் பாருங்கள். மிக மிகக் கஷ்டம். ‘புத்தகசாலை உண்டா?’ என்று கேளுங்கள். பதில் கூற மாட்டார்கள். ஒரு புன்னகை தோன்றும்.”
அண்ணா இப்படி எழுதியும் 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒரு புத்தகசாலைக்கு ஆசைப்பட்டார். புத்தகசாலை போகட்டும், எத்தனை வீடுகளில் புத்தக அலமாரி இருக்கிறது? எல்லா ஊர்களிலும் அறைகலன்களுக்கான கடைகள் இருக்கின்றன. அங்கு படுக்கைகள் கிடைக்கும், பல வண்ண சோபாக்கள் இருக்கும், ஷோகேஸ் கண்ணைப் பறிக்கும், சாப்பாட்டு மேசைகள் வரிசைகட்டி நிற்கும், ஆனால், புத்தக அலமாரி என்றோர் அறைக்கலன் இருக்காது. கொள்வாரில்லை. ஆகவே விற்பாரும் இல்லை. இந்த நிலை மாற வேண்டாமா?
ஏன் வேண்டும் புத்தகங்கள்?
புத்தகங்கள் கற்பனா சக்தியை வளர்க்கும். வாசிக்கும் மூளை இயங்கிக்கொண்டே இருக்கும். நினைவாற்றல் பெருகும். வார்த்தைகள் சேகரமாகும்; அது எழுத்தை, பேச்சை, உரையாடலை, மேம்படுத்தும். தனிமை நீங்கும். பொழுதுபோகும். மன அழுத்தம் குறையும். சமூக அக்கறை மிகும். அறிவு செழுமையுறும். எல்லா மாயத்தையும் இந்த அச்சடித்த புத்தகங்களால் நிகழ்த்த முடியும்.
வீடுதோறும் கலையின் விளக்கமாக விளங்க வேண்டும் என்பது பாரதியின் கனவு. அதன் முதற்கட்டமாக வீடுதோறும் ஒரு புத்தக அலமாரி வேண்டும். அதில் புத்தகங்களை நிறைக்க வேண்டும். அதற்கு இதுபோன்ற புத்தகக்காட்சிகளை சென்னைவாசிகளும் மற்றவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புத்தகங்கள் கூடுதலாக விற்பனையானால், புத்தகக்காட்சிகளும் அதிகமாகும். நாளடைவில் நமது நகரங்களிலும் புத்தகக் கடைகள் அதிகமாகும். அப்போது புத்தகங்களுக்கு மரியாதை உண்டாகும்.
- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT