Published : 27 Apr 2016 09:05 AM
Last Updated : 27 Apr 2016 09:05 AM
வங்காள அறிவுஜீவி ஒருவரிடமும், அஸ்ஸா மிலேயே இந்திய அரசியலைப் பற்றி மிகவும் அதிகம் தெரிந்தவர் ஒருவரிடமும் சில நாட்கள் முன்பு பேசிக் கொண்டிருந்தேன். வங்காளி ஆங்கிலத்தில் கேட்கிறார்: ‘இந்த பிஎம்கே என்பது தலித்துகளின் கட்சிதானே?’
நான் பதில் சொல்வதற்கு முன் அஸ்ஸாமின் அறிவுத்தூண் முந்திக் கொண்டு விட்டார்.
‘இல்லை தலித்துகளின் கட்சி திரு… திரு… பெயர் வாயில் நுழையவில்லை ….. அவர் நடத்தும் கட்சி. புலியோ சிங்கமோ கட்சியின் பெயரில் இருக்கிறது. பிஎம்கே என்பது அந்த சினிமா நடிகர் நடத்தும் கட்சி.’
இருவரும் திமுக, அதிமுக கட்சிகளில் நடப்பவற்றைத் துல்லியமாகத் தெரிந்தவர்கள். ஆனால் தமிழகத்தின் சிறு கட்சிகளைப் பற்றி, தேர்தல் முடிவுகளை சிறிதளவு கூட மாற்றச் சக்தியில்லாதவை என்று அவர்கள் நினைக்கும் கட்சிகளைப் பற்றித் தெரிந்துகொண்டு ஏதும் ஆகப் போவதில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
நாமும் அப்படித்தான். மேற்கு வங்காளத்தில் மம்தாவின் பெயரைத் தவிர வேறு எந்தக் கட்சியினர் பெயராவது நமக்குத் தெரியுமா? அஸ்ஸாமைப் பொறுத்தவரை கோகோய் பெயர் தெரிந்தால் கூட அதிசயம்தான்.
உண்மையிலேயே மேற்கு வங்கத்தில் தலைவர் என்று சொல்லிக்கொள்ளக் கூடியவர் மம்தா ஒருவர்தான். மற்றவர்களின் பெயர்கள் அந்த மாநிலத்திலேயே அதிகம் தெரியாது. எனவே இந்தத் தேர்தல் அந்த ஒரு தலைவரைக் குறித்தே நடைபெறுகிறது என்பது தெளிவு. மம்தா எளிமை யானவர். அவரைக் கண்டால் கட்சியினருக்கு வேர்த்து விறுவிறுப்பதில்லை, அவரைச் சந்திப் பதற்கு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை என்பதெல்லாம் உண்மை. ஜெயலலிதா போல சீரிய சிம்மாசனத்தில் வீற்றிருந்து மற்றவர்களை பைனாகுலர் கொண்டு பார்க்கும் அளவுக்குத் தள்ளிவைக்க மாட்டார். அருகில் அமர்ந்து பேசலாம். அவருக்கு எதிராக அணி திரண்டிருப்பவர்களுக்கும் ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது. மம்தாவின் கட்சியைப் பற்றி அவர்கள் குறை கூறலாமே தவிர அவரை மக்கள் விரோதி என்று குற்றம் சாட்டினால் அது எடுபடாது.
ஆனாலும் ஜெயலலிதா போல கட்சியில் அவர் சொல்வதுதான் சட்டம். அவரில்லையேல் கட்சியில்லை. இதனாலேயே கட்சியின் வெற்றி வாய்ப்பு இந்தத் தேர்தலில் அதிகரித்திருக்கிறது என்று சில பார்வையாளர்கள் நினைக்கின்றனர். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திரிணமூல் வாங்கிய ஓட்டுகளின் சதவீதம் 39.79% இடதுசாரிகளும் காங்கிரஸும் சேர்ந்து வாங்கிய ஓட்டுக்களின் சதவீதம் 39.64%. இரண்டு அணிகளுக்கும் மயிரிழை வித்தியாசம்தான். இருந்தாலும் திரிணமூல் கட்சியின் வெற்றி உறுதி என்று அவர்கள் சொல்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் நாடாளுமன்றத்தில் வீசிய மோடி சூறாவளி இப்போது முழுவதும் அடங்கிவிட்டது. மோடி தென்றல் கூட இன்று இல்லை என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. எனவே மோடிக்காக விழுந்த, பாஜகவுக்காக அல்லாத ஓட்டுகள் இடதுசாரிகள் பக்கம் செல்லச் சாத்தியம் இல்லை. அவை மம்தாவுக்கே விழும். அவரை விடப் பெரியதலைவர் மேற்கு வங்காளத்தில் இல்லை என்பதனால் விழும் என்று சிலர் கருதுகிறார்கள். அத்தகைய ஓட்டுகள் குறைந்தது 5% சதவீதம் என்று வைத்துக் கொண்டாலும், 150, 160 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பது அவர்களின் கணக்கீடு.
ஆனால் முன்னால் விழுந்த ஓட்டுக்கள் கட்சிக்குத் திரும்ப விழும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. 39.79% ஓட்டுகள் பாலம் உடைந்து விழுவதற்கு முன்னால் விழுந்த ஓட்டுக்கள்! நகரங்களில் கட்சியின் மீது வெறுப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. “ஷொத்ததார் பிரதீக்” (நேர்மையின் சின்னம்) என்பது கட்சியின் கோஷம். ‘இதை நான் வெளியில் உரக்கச் சொன்னால் என்னை கல்லால் அடித்தே கொன்று விடுவார்கள்’ என்கிறார் திரிணமூல் ஆதரவாளர் ஒருவர்.
இருப்பினும் கிராமப்புறங்களில் நிலைமை சீராக இருக்கிறது என்று பலர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். பஞ்சாயத்துத் தேர்தல்களில் திரிணமூல் அடைந்த மகத்தான வெற்றியின் அஸ்திவாரம் இன்னும் ஆட்டம் காணவில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.
நமது தமிழக அரசுகள் செய்ததைப் போல பல மக்கள் ஆதரவுத் திட்டங்களை மம்தா கொண்டுவந்திருக்கிறார். பெண் குழந்தைகளுக்கு சைக்கிள் கிடைத்திருக்கிறது. ஏழைகளுக்கு கிலோ இரண்டு ரூபாய்க்கு அரிசியும் கோதுமையும் கிடைக்கிறது. மிக முக்கியமான முயற்சி ஒன்றை திரிணமூல் அரசு எடுத்திருக்கிறது. வங்காள மக்கள் மீனை விரும்பி உண்பவர்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்கு மீன் வெளி மாநிலங்களிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. இதை மாற்றுவதற்காக 20 ஏக்கர்களுக்கு மேல் இருக்கும் 800-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் மீன் வளர்ப்பை அரசு தொடங்கியிருக்கிறது. இதனால் சிலருக்கு வேலையும் பலருக்கு உள்ளூர் மீனும் கிடைக்கும். ஆனால் கிராமங்களில் ஓட்டுகளைச் தங்களுக்கே விழும்படிச் செய்வதற்கு குண்டர்களின் துணையை திரிணமூல் நாடுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.
இது எந்த அளவுக்கு உண்மை என்று இனி பார்க்கலாம்.
- தொடரும்
- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT