Published : 11 Apr 2016 08:33 AM
Last Updated : 11 Apr 2016 08:33 AM
சிறு கட்சிகளின் கூட்டணி வாக்குகளை வழங்கும், வெற்றியைத் தராது என்ற முடிவுக்கு வந்திருந்தது பாமக. அப்போது வெற்றிக்கான வழியாக அதிமுகவுடன் அணியமைக்க அழைப்பு விடுத்தார், தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி. அதன்படி 1998 மக்களவைத் தேர்தலில் அதிமுக அணியில் இணைந்தது பாமக. அந்தக் கட்சிக்கு 5 தொகுதிகள் தரப்பட்டன. மேலும், பாஜக, மதிமுக, தராகா உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக அணியில் இணைந்தன.
தேர்தலின் முடிவில் அதிமுக அணி வெற்றிபெற்றது. நான்கு இடங்களைப் பிடித்த பாமக, வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பெற்றது. தலித் எழில்மலை சுகாதாரத் துறை இணை அமைச்சரானார். ஆனால், அந்த ஆட்சி வெறும் 13 மாதங்களில் கவிழ்ந்தது. உபயம்: அதிமுக.
விளைவு, பாஜகவின் தேசிய ஜனநாயக அணியில் அதிமுக காலி செய்த இடத்துக்கு திமுக வந்தது. ஆனாலும் பாமக தேசிய ஜனநாயக அணியில் நீடித்தது.
1999 மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கும், தராகாவுக்கும் 9 தொகுதிகளை ஒதுக்கிய திமுக, அவற்றை இருவரும் பகிர்ந்துகொள்ளச் சொன்னது. வாழப்பாடியார் விரும்பியது 2 தொகுதிகள். ஆனால், ராமதாஸோ ஒரு தொகுதியை நீட்டினார். சேலத்தில் போட்டியிட்ட வாழப்பாடியார் தோற்றுப்போனார். மாறாக, பாமக 5 இடங்களை வென்றது. என்.டி.சண்முகமும் பொன்னுசாமியும் மத்திய இணை அமைச்சர்களானார்கள்.
தொடர் வெற்றியின் உற்சாகத்தில், ‘பாமக இடம்பெறும் அணியே வெற்றிக் கூட்டணி’ என்றார் ராமதாஸ். குறிப்பாக, 2001 சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அணியிலிருந்து விலகி, அதிமுக பக்கம் நகர்ந்தார். அப்போது ராமதாஸ் உதிர்த்த வாசகம் பிரபலமானது. “முடிவுகள் அனைத்தையும் என் அன்பு சகோதரியிடம் (ஜெயலலிதா) விட்டுவிட்டேன். கருணாநிதி பெரிய அண்ணன் தோரணையுடன் நடந்துகொண்டு, எங்களை அழிக்கப்பார்க்கிறார். ஆனால், அன்பு சகோதரியோ எங்கள் மீது நட்பு பாராட்ட விரும்புகிறார்.”
அப்போது அதிமுக, பாமக இடையே விநோத உடன்பாடு உருவானது. தமிழகத்தில் 27 தொகுதிகளும் புதுச்சேரியில் 10 தொகுதிகளும் பாமகவுக்குத் தரப்பட்டன. மேலும், அதிமுக - பாமக அணி புதுச்சேரியில் வெற்றிபெற்றால், அதிமுகவும் பாமகவும் தலா இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்று உடன்பாடானது. ஆனால், தேர்தலின் முடிவில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றது. பாமகவுக்கு 20 இடங்கள் கிடைத்தன. ஆனால் புதுச்சேரியில் படுதோல்வி. விளைவு, அதிமுக - பாமக அணியில் விரிசல் ஏற்பட்டது.
மீண்டும் பாஜக அணியில் இணைய விரும்பியது பாமக. அப்போது, “தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் மீண்டும் பாமக வருவது அந்தக் கட்சிக்கும் பெருமையில்லை, எங்கள் கூட்டணிக்கும் பெருமை சேர்க்காது” என்றார் பாஜக தலைவர் இல.கணேசன். “இஷ்டத்துக்கு ஏறிக்கொள்ளவும், இறங்கிக்கொள்ளவும் எங்கள் கூட்டணி ஒன்றும் ரயில் பெட்டி அல்ல” என்றார் ஜனா. கிருஷ்ணமூர்த்தி. அதன் பிறகும் பாஜக அணியில் பாமக சேர்ந்தது. அதுவும்கூடக் குறைந்த காலத்துக்கே. மக்களவைத் தேர்தல் வந்தபோது மீண்டும் அணி மாறியது பாமக. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அமைந்த ஜனநாயக முற் போக்குக் கூட்டணியில் திமுகவோடு அணி சேர்ந்தது பாமக!
கட்டுரையாளர் ‘இந்தியத் தேர்தல் வரலாறு’முதலான நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writermuthukumar@gmail.com)
(கோஷம் போடுவோம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT